Saturday, August 20, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் !

அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் !

-

லகின் மிகப்பெரிய சுகாதார நலத்திட்டதால் ஏழைகள் ஏன் பயன்பெற மாட்டார்கள்.  தனியார் துறை மூலமாக சுகாதார அமைப்பை வீடுகளுக்கே கொண்டுவருவதாய் இந்த அரசு பீற்றுகிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல

நடப்பாண்டின் (2018) வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு தான் அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பதாக விதந்தோதப்படுகிறது. ஆனால் புள்ளிவிவரங்களை மேம்போக்காக பார்த்தாலே வரவு செலவு திட்டத்தில் கொண்டாடத்தக்க அம்சம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. உண்மையில் “அனைவருக்கும் சுகாதாரம்” என்பதில் எவ்விதத் தெளிவான பார்வையும் அரசுக்கு இல்லாததையே இந்த வரவு செலவு திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நிதியமைச்சரின் உரையில் இரண்டு முதன்மையான அம்சங்கள் குறிப்பிடப்பட்டன – சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூலமாக சுகாதார அமைப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவது மற்றும் முதன்மையான தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு (50 கோடி நபர்கள்) இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு வழங்குவது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி – 2018 பட்ஜெட்

அந்த இரண்டாவது அம்சம் சுகாதாரத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இன்றைய தலைப்பு செய்திகளாகிவிட்டது. ஆனால் இது ஒன்றும் புது முயற்சியல்ல. இது சுகாதார வசதிகளை மேம்படுத்தவோ அல்லது கைச்செலவை (out-of-pocket expenditure) குறைக்கவோ செய்யாது.

தனியார் துறைக்கு இத்திட்டம் பெரிய உந்துதலா?

சுகாதாரத்துறைக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற கூச்சலை ஒருவர் கேட்டால் ஏதோ வரவு செலவு திட்டத்தில் இதற்கு அதிகமாக [நிதி] ஒதுக்கப்பட்டுள்ளதோ என்று நம்பி விடுவார். மாறாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 2018-19-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 52,800 கோடி ரூபாய். 2017-18-ம் நிதியாண்டில் 51,550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதாவது ஒப்பீட்டளவில் வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே அதிகம்.

ஆகையால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும் போது உண்மையில் சுகாதாரத்துறைக்கு வரவு செலவு திட்டத்தில் சரிவு தான் ஏற்பட்டிருக்கிறது.
இத்தலையாய திட்டத்தின்(flagship programme) கீழ் புதிதாக 1.5 இலட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை உருவாக்கும் பொருட்டு சுமார் 1,200 கோடி ரூபாயை தாரளமாக வழங்கியிருக்கிறார் நிதியமைச்சர். அதாவது ஒவ்வொரு மையத்திற்கு தலா 80,000 ருபாய் கொடுக்கப்படும். எப்படி இருப்பினும் இது ஏற்கனவே 2017-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் இடம் பெற்றிருப்பதால் இது ஒன்றும் புதிய அறிவிப்புமல்ல. சென்ற ஆண்டின் இந்த அனுபவத்தைப் பற்றி எதுவுமே அறிக்கைகளில் இல்லை அல்லது உண்மையில் இது என்ன என்றும் தெளிவாக தெரியவில்லை.

10 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு.

மோசமான உட்கட்டமைப்பு வசதிகள், பற்றாக்குறையான ஊழியர்கள், போதிய உபகரணங்கள் மற்றும் மருத்துகள் இல்லாததாலேயே துணை மையங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் 31, 2012 அன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஊரக சுகாதார புள்ளிவிவரங்களின்படி, 1,56,231 துணை மையங்களில் 17,204 (11%) மட்டுமே இந்திய பொது சுகாதாரத் தரநிலைகளை பின்பற்றுகின்றன. 20 விழுக்காட்டு மையங்களில் போதுமான தண்ணீரும் 23 விழுக்காடு மையங்களில் போதுமான மின்சாரமும் கிடையாது. 6,000-க்கும் அதிகமான மையங்களில் பெண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 1,00,000-க்கும் அதிகமான மையங்களில் ஆண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 4,243 மையங்களில் இருவருமே கிடையாது. குறைந்தது இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இவற்றை சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக ஒருவர் கருத முடியும். இந்த அற்ப நிதியை வைத்துக்கொண்டு எப்படி இதை சாதிக்க முடியும் என்று புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.

இப்பொழுது இரண்டாவது அறிவிப்பான “அரசு உதவி பெரும் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை” பார்க்கலாம். இந்த அறிவிப்பு இதே நிதியமைச்சரால் 2016-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் கூறப்பட்டது கண்டிப்பாக நினைவுக்கூறப்பட வேண்டும். “புதிய சுகாதார பாதுகாப்பு திட்டம் ஒன்றை அரசு தொடங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாய் காப்பீடு அளிக்கும்” என்று 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னும் இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY) திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை 30,000 ரூபாயாகவே உள்ள நிலையில் தற்போது அதை ஐந்து இலட்சமாக்க வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் காப்பீடு வளங்கப்படுவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 1,500 கோடி ரூபாய் மட்டுமே.

இது ஒருப்போதும் செலவிடப்படவில்லை மாறாக வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டது. திட்டத்தின் தொடக்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50 விழுக்காட்டை விட குறைவாகவே சென்ற ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது அது சிறு அளவு அதிகரிக்கப்பட்டு 2,000 கோடி ரூபாயாக திருத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளின் யோக்கியதையை இந்த புள்ளிவிவரங்கள் சந்தேகங்கொள்ள செய்கின்றன.

இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY)

மறுபுறம் கல்வி வரி (education cess) 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்றும் இதன்மூலம் 11,000 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றும் வரவு செலவு திட்டம் கூறுகிறது. ஒருவேளை இக்கூடுதல் வருவாயில் 25 விழுக்காட்டை சுகாதாரத்துறைக்கு கொடுப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட 2,750 கோடி ரூபாய் கூடுதலாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிடைத்ததோ வெறும் 1,250 கோடி ரூபாய் மட்டுமே. இந்த வரவு செலவு திட்டம் என்ன செய்வது போல் தோன்றுகிறது? ஏழை மக்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு பொதுமக்களிடம் கூடுதலான பணத்தை பறித்து தனியார் சுகாதாரத்துறைக்கு கொடுக்கிறது. இச்சூழலில் [தனியார்] சுகாதார மற்றும் காப்பீடு நிறுவன பங்குகளின் விலை உயர்வானது இத்திட்டங்களின் உண்மையான பயனாளிகள் யார் என்று கட்டியங்கூறுகிறது.

ஏழைகளுக்கான சுகாதாரமா இல்லை பெருநிறுவனுங்களுக்கான ஆதாயமா?

கைச்செலவை குறைப்பதை அடிப்படையாக கொண்டு, தனியார் மருத்துவ காப்பீட்டின் மூலம் மருத்துவத்தை அனைவருக்கும் வழங்குவதற்கு தனியார் சுகாதாரத்துறையை நம்பி இருப்பது என்பது ஒட்டுமொத்த மருத்துவ செலவினங்களையும் அதிகரிக்கிறது மேலும் இது பெரும்பான்மையான மக்களை தவிர்க்கிறது மற்றும் சரியான முறையான [மருத்துவ] நடைமுறைகளை சிதைக்கிறது என்பது உலகம் முழுதுமான அன்பவங்களாக இருக்கிறது. மக்களுக்கு உடல்நலத்தை வழங்க முயற்சிகள் செய்தால் கூட அதை தனியார் துறை மூலமாக செய்யவே இந்த அரசு நினைக்கிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல.

கைச்செலவை குறைப்பதற்கு காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் இந்தியாவில் ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதற்கு நம்மிடம் போதுமான சான்றுகள் உள்ளன. இத்திட்டம் கைச்செலவையும் குறைக்கவில்லை மருத்துவத்தையும் ஏழைகளிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பதை RSBY-யைப் பற்றிய பல்வேறு தனிப்பட்ட ஆய்வுகள் நிறுவுகின்றன. RSBY-யோ அல்லது புதிய தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமோ உள்நோயாளிகளுக்கான காப்பீடை மட்டுமே அளிக்கின்றன. அடிப்படை மருத்துவத்திற்கோ மக்கள் பொது சுகாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அவை போதுமானவையல்ல மேலும் அதிக வசதிகள் தேவைப்படுகிறன. இது கைச்செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதார செலவினங்களில் 67 விழுக்காடு கைச்செலவின் மூலமாகவே செய்யப்படுகிறது அதிலும் குறிப்பாக 63 விழுக்காடு வெளிநோயாளிக்கான பராமரிப்பு செலவாகவே இருக்கிறது.

RSBY (மற்றும் ஆந்திர மாநில ஆரோக்யஸ்ரீ உள்ளிட்ட மாநில திட்டங்கள்) போன்ற காப்பீட்டுத் திட்டங்களைப் பாத்தாண்டுகளாக ஊக்குவித்து வந்த போதும் கைச்செலவு அதிகரித்துக் கொண்டிருப்பதை தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National Sample Survey) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மருத்துவமனையில் சேரும் கிராமப்புறத்தைச் சேர்ந்த 1.2 விழுக்காட்டினருக்கும் நகர்புறத்தை சேர்ந்த 6.2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே செலவு ஈடு (Reimbursement) செய்யப்பட்டிருப்பதாக 2014-ம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு தகவல்களை ஆய்வு செய்த சுந்தரராமனும் முரளீதரனும் நிறுவுகின்றனர். காப்பீடு திட்டத்தை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் இருந்தாலும் ஒன்று அவை ஏழை மக்களை சேரவில்லை அல்லது போதுமான நிதி பாதுகாப்பை அளிக்கவில்லை என்பதற்கு சான்று இருக்கிறது. உள்நோயாளிக்கான கைச்செலவை குறைக்கவோ அல்லது உள்நோயாளிக்கான செலவின் அளவிலோ RSBY எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதை அனுப் கரன் மற்றும் ஏனையவர்களின் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.

காப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு ( 40% மக்கள்) மட்டுமே அதுவும், உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.

பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தாமல் காப்பீட்டின் மீதான அரசின் அக்கறையானது ஒருபுறம் சுகாதாரத்திற்கு அரசு குறைந்த நிதியை ஒதுக்குவதற்கும் மறுபுறம் தனியார் துறை ஏழைகளின் உடல் நலப்பிரச்சினைகளை காசாக்குவதற்கும் இசைவளிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பெரும்பாலும் நகர்ப்புறப் பகுதியிலேயே மொய்த்துள்ளதால் காப்பீடு திட்டங்கள் யாவும் கிராமப்புற ஏழைகளை சேர்வதில்லை என்று மாநில காப்பீடு திட்டம் மற்றும் RSBY திட்டம் ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆய்வொன்று கூறுகிறது.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு இல்லை:

உடல்நலத்திற்கான கைச்செலவானது இந்திய மக்களை கவ்வியிருக்கும் முதன்மையான சிக்கல் என்பது பலரால் சரியாக உணரப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான கடுமையான செலவுகள் மக்களை ஏழ்மையில் தள்ளும் (உடல்நலத்திற்கான கைச்செலவினால் 7 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே விழுகின்றனர்) முதன்மையான காரணி என்பதை ஏராளமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இப்புதிய திட்டமானது எந்த அளவுகோலின் படி பார்த்தாலும் உலகாளாவிய உடல்நலப்பாதுகாப்பை (universal health coverage) நமக்கு வழங்கப்போவதில்லை. உலகளாவிய உடல்நலப்பாதுகாப்பு அதன் உள்ளார்ந்த பொருளில் அனைத்து விதமான மருத்துவ செலவுகளையும் உள்ளடக்குகிறது. இக்காப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு (10 கோடி அல்லது 40% மக்கள்) மட்டுமே அதுவும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக குறைந்தது 2.5 – 3 விழுக்காடாக நிதியை அதிகரிக்க வேண்டும் என்று ஏரளமான பல்கலைக்கழக கட்டுரைகள், அரசாங்க குழுக்களின் பரிந்துரைகள், தேசிய சுகாதார கொள்கை மற்றும் இன்ன பிற அனைத்தும் கூறுகின்றன. ஆயினும் ஆண்டாண்டுகளாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வெறும் 1.1-1.2 விழுக்காடாகவே இருக்கிறது. தலைப்புச்செய்திகள் தவறாக கூறுகின்றன – இந்த வரவு செலவு திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் இல்லை. இது குழந்தைகள் இறப்பிலும் பேறுகால மரணங்களிலும் உலகில் முன்னிலையாக இருக்கும் ஒரு நாடு தன்னுடைய சொந்த மக்களின் உடல்நலத்திற்காக ஏனைய நாடுகள் செலவிடுவதில் பாதி மட்டுமே செலவு செய்வதைப் பற்றியது – அரசாங்கம் மாறி அரசாங்கம் வந்தாலும் இது தன்னுடைய சொந்த மக்களுக்கான உடல்நலத்திற்கு எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.

– தீபா சிங்
அம்பேத்கர் பல்கலைகழக தாராளவாத ஆய்வுகள் பள்ளி, டெல்லி.
தமிழாக்கம்: சுந்தரம்
நன்றி: The Wire

 

 1. அருண் ஜேட்லியின் வார்த்தைகளிலேயே சொல்வது என்றால்…..

  நடுத்தர வர்கத்தை பொருத்தவரைக்கும் இது ஒரு குப்பை பட்ஜெட்….

  விவசாயிகளுக்கு துரமாக மிதக்கும் கானல் நீர்…..

  கீழ் நடுத்தரவர்கத்துக்கு இது ஒரு எட்டாக்கனி…..

  கார்போரேட்டுக்ளுக்கு மடை திறந்து ஓடும் மூலதனம் சார்ந்த பண முதலீடு…

  இது போன்ற பட்ஜெட் போட கண்டிப்பாக கார்பொரேட் அடிவருடிகள் அருண் ஜெட்லி மற்றும் சிதம்பரம் போன்ற பொருளாதார மொக்கைகள் தேவை தான் கண்டிப்பாக தேவை தான்…

  அடித்தட்டு மக்களை மறைமுக வரிமூலம் சுரண்டி அந்த வருவாயை வழக்கம் போல பெருமுதலாளிகளுக்கு கார்பொரேட் வரிகளை குறைப்பதன் மூலமும், கடனை தள்ளுபடி செய்வதன் மூலமும் அள்ளிக்கொடுகின்றார்கள் இந்த பிஜேபியும் அந்த காங்கிரசும்…

  என்ன செய்யப்போகிறோம் நாம்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க