“ரஃபேல் ஒப்பந்தம் அரசுக்கும் அரசுக்கும் இடையிலானது. ஒப்பந்தத்தின் போது நான் பதவியில் இல்லை”: பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சொல்கிறார்.

ஃபேல் ஒப்பந்த ஊழல் உலக நாடுகள் பேசும் அளவுக்கு ‘பிரபலமாகி’யுள்ளது. அதனால்தான் சர்வதேச நாடுகள் பங்கேற்கும் ஐநாவின் பொது சபை அமர்வில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் சர்வதேச செய்தியாளர்களிடன் விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் மெக்ரான்

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டு ஊடகம் ஒன்று, ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேட்டை ஆதாரங்களுடன் எழுதியிருந்தது. முன்பே ஊழல் விவகாரங்கள் விவரமாக வெளியானபோது, பிரான்ஸ் ஊடகம் கூடுதலாக வெளியிட்ட விவரங்களை சில இந்திய ஊடகங்கள் வெளியிட்டு மோடி அரசின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தின.  அதாவது, பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவிருக்கும் இந்திய நிறுவனத்தை (ரிலையன்ஸ்) இந்திய அரசுதான் தேர்ந்தெடுத்தது என சொன்னது அந்த செய்தி.

இந்த நிலையில்தான் ரஃபேல் ஊழல் சர்வதேச கவனத்துக்கு வந்தது. அதன் விளைவாகவே பிரான்ஸ் அதிபரின் ‘விளக்கம்’ அமைந்திருக்கிறது. செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மெக்ரான், “இது அரசுக்கும் அரசுக்குமான ஒப்பந்தம். இது இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தொலைநோக்கு ஒப்பந்தம்” என சொல்கிறார்.

பிரான்ஸ் அதிபராக இருந்த ஹோலாண்டே ஆட்சி காலத்தின் போது, 2015, ஏப்ரல் 10-ஆம் தேதி 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் கொள்முதல் செய்யவிருப்பதாக பாரீஸில் அறிவித்தார் மோடி.  அறிவிப்பு வெளியான ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ. 58,000 கோடி மதிப்பிலான 36 ரஃபேல் ஜெட் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 2019 செப்டம்பர் மாதம் முதல் ஜெட் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என அந்த ஒப்பந்தம் சொன்னது.

மெக்ரான் ஆட்சிக்கு வந்தது 2017ல். எனவே தனக்கும் அந்த ஒப்பந்ததுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது மெக்ரானின் வாதம். பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தை தேர்ந்தெடுத்ததும் இந்தியா அரசே என்பதையும் மெக்ரான் தெளிவுபடுத்தியுள்ளார்.

“இது குறித்து மேற்கொண்டு சொல்ல எதுவுமில்லை. அந்த நேரத்தில் நான் பொறுப்பில் இல்லை. ஆனால் நாங்கள் விதிப்படியே செயல்பட்டோம் என்பது மட்டும் எனக்குத் தெரியும்” என்கிறார் மெக்ரான்.

“இது தொழில்நிறுவனங்களின் ஒப்பந்தம் என்பது மட்டுமல்ல, என்னைப் பொறுத்தவரை இது இராணுவம் தொடர்பான ஒரு ஒப்பந்தம்.” என்றவர், (இந்த விவகாரம் குறித்து இதுவரை வாயைத் திறக்காத) இந்திய பிரதமர் மோடி என்ன சொன்னாரோ அதுதான் தனது கருத்தும்” என வேகமாக நழுவுகிறார்.

மேக்ரானின் கருத்து இந்தியாவில் கடும் எதிர்வினையை உருவாக்கின. விமானத் துறையில் எந்தவித அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு எப்படி இவ்வளவு பெரிய ஒப்பந்தம் தரப்பட்டது என கேள்வி எழுப்பினர். மோடி அரசு தனது தொழிலதிபர் நண்பர்களுக்காக செயல்படுவதாக குற்றம்சாட்டியது காங்கிரஸ்.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற பா.ஜ.க.வினர் ஆரம்பத்தில் தேசபக்தி, நாட்டின் பாதுகாப்பு என ஜீ பூம்பா காட்டினர். தற்போது அதுவும் முடியாத நிலையில் எல்லாம் முறைப்படி நடந்ததாக கண்ணை மூடிக் கொண்டு உளறுகின்றனர். பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாண்டேவின் பெண் நண்பர் நடித்த படத்திற்கு ரிலையன்ஸ் அனில் அம்பானி புரவலராக நிதி அளித்திருக்கிறார். இப்படி வண்டவாளங்கள் அனைத்தும் தண்டவாளங்கள் ஏறிய நிலையில் ஊழல் நாற்றத்தை மறைக்க முடியாமல் அலைகிறது பா.ஜ.க.

இந்நிலையில் இன்று 28.09.2018 திருவாளர் மோடி அரசு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் சமயத்தில் நடந்தது என ஒரு தெளிவற்ற வீடியோவை வெளியிட்டு தனது குற்றத்தை மறைக்க பார்க்கிறது. எதற்கு சுற்றி வளைத்து சமாளிக்க வேண்டும்? தேசத்தின் பாதுகாப்பு, நலனுக்காக ஊழலும் செய்யலாம் என்று பேசிவிட்டால் என்ன?

மேலும்: Rafale deal ‘govt-to-govt’ discussion, wasn’t in-charge when agreement made: French President Macron

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க