Saturday, June 15, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்ராஜீவுக்கு போஃபர்ஸ் ! மோடிக்கு ரபேல் !!

ராஜீவுக்கு போஃபர்ஸ் ! மோடிக்கு ரபேல் !!

-

714-ஐ விட 1611 அதிகமென்பதை ஐந்தாம் வகுப்பு மாணவன்கூடச் சொல்லிவிடுவான். ஆனால், இது ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வரும் கணக்கல்ல. ரபேல் போர் விமான பேரம் தொடர்பான கணக்கு. அதனால் 1611 குறைவானது எனப் பாரதப் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டு பா.ஜ.க.வைச் சேர்ந்த அனைவரும் சாதிக்கிறார்கள்.

மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதியாண்டுகளில் பிரெஞ்சு நிறுவனமான தஸ்ஸால்டிடம் இருந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 126 மத்திய ரக பல்நோக்குப் போர் விமானங்கள் (MMRCA – Medium Multi-Role Combat Aircraft) வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பொதுத்துறை இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு விமானத் தொழில்நுட்பங்களை மாற்றித் தருவது, 108 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்வது ஆகிய விதிகள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன.

ரபேல் போர்விமானங்களை வாங்குவது தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிராண்டு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)

பிரான்சு நாட்டைத் தவிர, பிற நாட்டு விமானப் படைகள் ரஃபேல் விமானங்களைச் சீந்தாத காரணத்தால், தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டுப் பல்வேறு தரப்பிலிருந்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக விமரிசனங்கள் எழுந்தன.

நியாயமாகப் பார்த்தால், பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பிறகு இந்த ஒப்பந்தத்தைக் கைகழுவியிருக்க வேண்டும். ஆனால் மோடி, 2012-இல் 126 விமானங்களை வாங்க காங்கிரசு அரசு செய்திருந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டு,  36 விமானங்களை வாங்குவதற்கு ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பேசி முடித்தார். பழைய ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களின் விலை 90 ஆயிரம் கோடி ரூபாய். இதன்படி ஒரு விமானத்தின் விலை 714 கோடி ரூபாய். மோடியின் புதிய ஒப்பந்தத்தின்படி 36 விமானங்களுக்கான விலை 58 ஆயிரம் கோடி, ஒரு விமானத்தின் விலை 1611 கோடி ரூபாய்.

சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு 2ஜி அலைக்கற்றைகளை விற்றது காங்கிரசு கூட்டணி அரசு. சந்தை விலையைவிடக் கூடுதல் விலைக்குப் போர் விமானங்களை வாங்குகிறது மோடி அரசு. முன்னது ஊழல் என்றால், பின்னது..? அப்படி யாரும் விமரிசிக்கக் கூடாதென்ற முன்னெச்சரிக்கையோடு, “இந்தப் பேரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது, நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு ஒப்பானது” என ஒரே போடாகப் போட்டுவிட்டார், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். மாமிக்கு வாய்த்த இந்த வாய்த்திறமை, ஆ.ராசாவுக்கு இல்லாமல் போய்விட்டது.

விலை போகாத சரக்கை அதிக விலை கொடுத்து வாங்கியதோடு மட்டும் இந்தப் புதிய பேரம் நின்றுவிடவில்லை. பழைய ஒப்பந்தப்படி, பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்சுடன் இணைந்து 108 விமானங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனத்துக்கு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொடுக்கவும் இசைந்திருந்த தஸ்ஸால்ட், இப்பொழுது, தனது தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு மாற்றித் தர முடியாதென்றும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிக்கும் விமானங்களில் கோளாறுகளோ, விபத்துக்களோ ஏற்பட்டால், அதற்குத் தஸ்ஸால்ட் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளாது என்றும் புதுப்புது நிபந்தனைகளை விதித்து வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்சு அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே இடையே ரபேல் பேர ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பாரீஸ் நகரில் நடந்த பேச்சுவார்த்தை.(கோப்புப் படம்)

இந்த ஒப்பந்தம் வியாபாரமின்றிக் காத்துவாங்கி வரும் தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, உள்ளூர் தரகு முதலாளிகளுக்கும் அடித்திருக்கும் பம்பர் பரிசாகும். காங்கிரசு ஆட்சியில் தஸ்ஸால்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், அனில் அம்பானியின் அனில் திருபாய் அம்பானி குழுமமும் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன.

நரேந்திர மோடி காங்கிரசு அரசு போட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டாலும், அம்பானிகளைக் கைவிடவில்லை. தஸ்ஸால்டுடன் புதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிப்பதற்கு மோடி பாரீஸ் சென்றபோது, அம்பானியையும் கையோடு அழைத்துச் சென்றார். இப்புதிய ஒப்பந்தப்படி, அம்பானியின் நிறுவனங்களுக்கு 22,000 கோடி ரூபாய் பெறுமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஆர்டர்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அம்பானிகளுக்கு, மோடி படைத்திருக்கும் கறி விருந்து இது.

அரசுத் துறை கொள்முதல்களில் வழக்கமாக பின்பற்றப்படும் டெண்டர் விதிமுறைகளின் படி, விற்பனைக்கான உத்தேச கோரிக்கையின் (Request for Proposal – RFP) அடிப்படையில் விலை, விற்பனைப் பொருளின் இறுதிக் கட்டமைப்பு (configuration), பொருட்களின் எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை ஒப்பந்தம் கையெழுத்தான பின் மாற்றக்கூடாது. இவற்றுள் ஏதாவது ஒன்றை மாற்றினாலும், புதிதாக டெண்டர் விடவேண்டும். இந்த விதியைக் கடாசிவிட்டு புதிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறார், மோடி. தஸ்ஸால்ட் நிறுவனமோ முந்தைய ஒப்பந்தத்தில் தான் ஒப்புக்கொண்ட  நிபந்தனைகளை நிறைவேற்ற மறுத்துவருகிறது.

அலைக்கற்றை விற்பனையில் ஏல நடைமுறையை மீறினார் என்பது ஆ.ராசாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. யோக்கியர் மோடி டெண்டர் விதிமுறைகளை மீறி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்துப் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். அம்பிகளுக்கு அது ஊழலாம், இது தேசத் தொண்டாம்!

***

தஸ்ஸால்ட் நிறுவனத்தோடு கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அம்பானி சகோதரர்கள்.

இந்திய இராணுவத்திற்கு 126 விமானங்கள் வாங்குவதற்குக் கையெழுத்தான ஒப்பந்தத்தை மோடி கைவிட்டதற்குக் காரணம் சுவாரசியமானது. அம்பானிகளின் நிறுவனங்கள் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்திருப்பதைப் போல, டாடா குழுமம் எப்.16 இரக போர் விமானங்களைத் தயாரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்டின் நிறுவனத்துடனும், அதானி குழுமம் கிரிப்பென் ரக போர் விமானங்களைத் தயாரிக்கும் இன்னொரு அமெரிக்க நிறுவனமான சாப் உடனும் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளன. தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் 126-க்குப் பதிலாக  36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கும் மோடி அரசு, மீதி விமானங்களை டாடாவும் அதானியும் கூட்டுச் சேர்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்களிலிருந்து வாங்கும் முடிவை எடுத்திருக்கிறது.  அவ்விரு நிறுவனங்களுக்குப் புதிய போர் விமானங்களை வாங்குவதற்கான தகவல் கோரும் ஆவணங்களை (RFI – Request for Information) அனுப்பி வைத்துள்ளது இந்திய அரசு.

ஆக, விமானப் படைக்குத் தேவையான 126 விமானங்களை பிரான்சு மற்றும் அமெரிக்க கம்பெனிகளுக்கும்; அம்பானி, அதானி மற்றும் டாடா குழுமங்களுக்கும் பங்கு வைத்திருக்கிறார் மோடி. வேறு தரகு முதலாளிகள் யாரேனும் தேசப் பாதுகாப்பில் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்த விரும்புவார்களாயின், அவர்களுக்குரிய பங்கையும் வழங்குவதன் மூலம் தனது ஜனநாயக மாண்பினை அவர் நிரூபிப்பார்.

2ஜி அலைக்கற்றையைத் தனக்கு வேண்டப்பட்ட உப்புமா கம்பெனிகளுக்கு ஆ.ராசா தூக்கிக் கொடுத்தார் என்பது அவ்வழக்கில் ஒரு குற்றச்சாட்டு. 126 போர் விமானங்களை வாங்குவதற்கு காங்கிரசு அரசு சர்வதேச டெண்டர் கோரியபோது, அதில் கலந்துகொண்ட மேற்படி இரு அமெரிக்க நிறுவனங்களும் தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன. அப்படி நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மோடி அரசு போர் விமானங்களை வாங்க முயற்சிக்கிறது. பனை மரத்தடியின் கீழ் உட்கார்ந்துகொண்டு மோடி பாலைத்தான் அருந்துகிறார் என நம்புவோமாக!

***

ரபேல் பேரத்தில் நடந்துள்ள முறைகேடுகள், விலை உயர்வு ஆகியவற்றை நியாயப்படுத்த மோடி பக்தர்கள் அடுக்கும் வாதங்களனைத்தும் எருமை ஏரோப்பிளேன் ஓட்டிய ரகத்தைச் சேர்ந்தவை. இந்தியாவுக்கு தொழிநுட்பங்களை மாற்றித் தர தஸ்ஸால்ட் மறுப்பதைப் பற்றிக் கேட்டால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தகுதியற்றது என்று தஸ்ஸால்ட் முடிவு செய்தால் நாம் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். விமானத் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த அப்பொதுத்துறை நிறுவனத்தைப் புறக்கணித்து விட்டு, எந்த முன்னனுபவமும் இல்லாத அம்பானியோடு மட்டும் எதனடிப்படையில் தஸ்ஸால்ட் ஒப்பந்தம் மேற்கொண்டது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

பழைய ஒப்பந்தப்படி நமக்குக் கிடைக்கவிருந்த விமானங்கள் அடிப்படை மாடல்கள் எனவும், தற்போது வாங்க முடிவு செய்துள்ள விமானங்களில் கூடுதல் ஆயுதங்கள் பொருத்தும் வசதியிருப்பதால், விலை அதிகம் என்கிறார்கள். துப்பாக்கியைவிடத் தோட்டாக்களுக்கு அதிக விலை என்கிற மோசடியான தர்க்கத்துக்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். விமானத்தில் பொருத்தப்படவுள்ள மெட்டியார் இரக ஏவுகணையின் சந்தை விலையே 12.6 கோடிதான். அதே போல் H.D.M.S. எனப்படும் ஹெல்மெட்டில் பொருத்தப்படும் வழிகாட்டும் அமைப்பின் விலை 2.4 கோடி. இவ்வாறு தனித்தனியே விமானத்தில் பொருத்தப்பட உள்ளதாகச் சொல்லப்படும் ஆயுதங்களின் சந்தை விலையைக் கூட்டினால், ஒரு விமானத்திற்கு 60 கோடி அதிகரிக்கலாம். ஆனால், தற்போது ஊதிப் பெருக்கப்பட்டுள்ள விலையோ 100 சதவீதத்துக்கும் அதிகம்

அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ள அதானி(இடது) மற்றும் ரத்தன் டாடா

அடுத்து, மோடி வாங்கவுள்ள விமானம் இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதால் விலை அதிகமாவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள். ஆனால், 2012ம் ஆண்டின் டெண்டர் கோரும் ஆவணங்களிலேயே விமானங்கள் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுதான் 126 விமானங்களுக்கான பழைய விலையை தஸ்ஸால்ட் நிர்ணயித்தது. மேலும், விமான ஓட்டிகளுக்கான பயிற்சி, பயிற்சிக் கையேடு, விமானத்திற்கான தர உத்திரவாதம் என அனைத்துமே பழைய டெண்டர் ஆவணங்களில் நிபந்தனையாகச் சேர்க்கப்பட்டு, அவற்றையும்  கணக்கில்கொண்டுதான் தஸ்ஸால்ட் நிறுவனம் விலையை நிர்ணயித்தது.

ராஜீவ் காந்தி ஆட்சியின்போது போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழலை நியாயப்படுத்துவதற்கு, அந்தப் பீரங்கிதான் கார்கில் போரில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடிக்கப் பயன்பட்டது என்றொரு வாதம் இப்பொழுது காங்கிரசு அடிவருடிகளால் முன்வைக்கப்படுகிறது. மோடி, தனது ஆட்சியில் சந்தி சிரிக்கும் இந்த போர் விமான பேர ஊழலை நியாயப்படுத்த, ஓர் அதிரடிப் போரை நடத்தவும்கூடும். ஊழல், முறைகேடுகளை நியாயப்படுத்த தேசபக்தியைவிட வேறு சிறந்த கவசம் எதுவும் கிடையாது என்பதைப் பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.

–     சாக்கியன்

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

  1. அது ஊழல் …இது ஊழலாே ஊழல் …. ! பாவமய்யா நம் மக்கள் … ! .கிழிந்து தாெங்குகிற காேமணத்தையும் உருவி விடுவார்களாே என்று அதை காப்பாற்றவே அவர்களுக்கு நேரம் இல்லாமல் அல்லாடுகிறார்கள் ……!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க