ழக்கமான நடைமுறைகளை பொருட்படுத்தாமல், ரபேல் ரக விமானங்கள் வாங்கும் பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் ஈடுபட்டதும், சம்பந்தப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதை எதிர்த்ததும் தற்போது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது.

மோடி அரசு பிரான்சிலிருந்து ரபேல் ரக விமானங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் கடந்த பல மாதங்களாக ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தபடியே உள்ளன. முன்னதாக, பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமலேயே, 36 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் தன்னிச்சையாக மோடி கையெழுத்திட்ட வகையில் விதி மீறல் நடந்திருப்பது வெளியானது.

படிக்க:
♦ ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !
♦ மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !

அடுத்து, பாதுகாப்புத் துறையில் முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக்கொண்டது பற்றிய உண்மை அம்பலமானது. ரிலையன்ஸை பங்குதாரராக சேர்த்துக்கொள்ள இந்தியா நிர்பந்தித்தது எனவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரான்ஸ் அதிபர் தெரிவித்தார்.

அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஒரு விமானத்தின் விலை ரூ.715 கோடி என ஊடகங்களிடம் பேட்டியளித்திருந்த நிலையில், மோடி பிரான்சுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் விமானத்தின் விலை ரூ. 1650 கோடியாகியிருந்தது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த முறைகேட்டை விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அரசு தரப்பிலிருந்து சீல் வைக்கப்பட்ட உறையில் கொடுக்கப்பட்ட ‘ஆதாரங்கள்’ அடிப்படையில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு மறுத்தது. மனுவை தள்ளுபடி செய்தது.

அதே சமயம், ரபேல் விமானங்களின் விலை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்வி, தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தேசத்தின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விலையை வெளியிட முடியாது’ என்றார். அதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக பிரான்ஸ் அரசின் ஆயுதப்படை அமைச்சகமே முன்வந்து விலை விவரங்களையும் விமானத்தில் செய்யப்படவிருக்கும் சிறப்பம்சங்கள் குறித்தும் விலாவாரியாக புட்டுவைத்தது.

ஆனாலும் மோடியும் நிர்மலாவும் செல்லுமிடமெல்லாம் தாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என சொல்லிக்கொண்டார்கள். இந்த நிலையில் இந்த ஊழலுக்கு மற்றொரு ஆதாரமாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் போர் விமானங்களை வாங்க பிரான்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அதே சமயத்தில் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களும் பிரான்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு எழுதிய கடிதத்தை ‘தி இந்து’ வெளியிட்டுள்ளது. அதில், தாங்கள் பேரத்தில் ஈடுபட்டிருக்கும்போது, பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களும் பேரம் செய்வது,  தங்களுடைய பேர வலிமையை குறைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

படிக்க:
♦ கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !
♦ பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !

இந்தியாவின் பேரம் பேசும் குழுவில் இடம்பெறாத அதிகாரிகள் எவராவது பிரெஞ்சு அரசுடன் பேரத்தில் ஈடுபட்டிருந்தால் விலகிக் கொள்ளும்படியும் ஒருவேளை தங்களுடைய பேரத்தின் மீது திருப்தி இல்லாதபட்சத்தில் பிரதமர் அலுவலகம் சொல்லும் யோசனைகளை கேட்பதாகவும் பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புத்துறை செயலர் ஜி. மோகன் குமார் எழுதிய குறிப்பில், எங்களுடைய பேரத்தை பிரதமர் அலுவலகம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது. இதுபோன்ற விவாதங்களை பிரதமர் அலுவலகம் தவிர்த்திருக்க வேண்டும்’ என தெரிவிக்கிறார். இந்தக் குறிப்பு பாதுகாப்புத் துறை துணை செயலர் எஸ்.கே. சர்மா-வால் தயாரிக்கப்பட்டு, இணை செயலர், கொள்முதல் மேலாளர், கொள்முதல் இயக்குனரால் ஆதரிக்கப்பட்டிருக்கிறது.

ஏர் மார்ஷல் சின்ஹா தலைமையிலான பாதுகாப்புத்துறை குழு பேரத்தில் ஈடுபட்டிருக்கும்போது, பிரதமர் அலுவலக இணை செயலர் ஜாவேத் அஸ்ரப், பிரான்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். இதை தன்னிடம் அஸ்ரப் ஒப்புக்கொண்டதாக சின்ஹா தெரிவிக்கிறார்.

முன்னதாக, சட்டரீதியாக இத்தகைய பேரங்களில் ஈடுபடுவதற்கான அதிகாரங்கள் அற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரான்சு அரசுடன் ரபேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.  அஜித் தோவல் பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரமும் வெளியாகியுள்ளது.

அடுக்கடுக்காக இத்தனை ஆதாரங்கள் வெளியான பின்பும், தான் ஊழலை ஒழிக்க வந்த மகான் என தனது 56 இன்ச் மார்பை நிமிர்த்தி பேசுகிறார் மோடி. சாதாரண பிரச்சினைகளுக்கெல்லாம் “சுவோ மோட்டோ” (Suo-Motto) வழக்காக எடுத்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம், இத்தனை ஆதாரங்கள் அடுக்கடுக்காக வந்தும் மவுனம் சாதிக்கிறது. தேசியம் பேசும் இந்துத்துவக் கும்பல்களோ அம்பானியையே தேசமாக வழிபட்டுக் கொண்டிருக்கிறது

அனிதா
அனிதா
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க