டந்த வாரம் மத்திய அரசின் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவராக இருந்த பி.சி. மோகனன் தனது பதவியிலிருந்து விலகினார். மோடி அரசின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் பதவி விலகுவதாக அவர் அறிவித்தார். அவருடன் புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சியும் தனது பதவியை விட்டு விலகினார்.

இவர்கள் வைத்த முக்கியமான குற்றச்சாட்டு, வெளியிடத் தயாராக உள்ள வேலைவாய்ப்பு குறித்த 2017-18-ம் ஆண்டின் ஆய்வறிக்கையை மோடி அரசு தனது இலாபத்துக்காக நிறுத்தி வைத்தது என்பதே. பதவி விலகலுக்கான இவர்களுடைய காரணம் இந்திய அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், மோடி அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்புக்கான ஆய்வறிக்கை பிஸினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகையில் அதி தீவிர புயலாக வெளியானது.

மோடி பரிந்துரைக்கும் சுய தொழில் / வேலைவாய்ப்பு

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18 ஆண்டுக்கான வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உள்ளதை தெரிவித்துள்ளது, அந்த ஆய்வறிக்கை. மோடியின் பொருளாதார பேரழிவு திட்டங்களான பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையிழப்புகள் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், வேலையிழப்பு பிரச்சினை தங்களுக்கு எதிராக முடியும் என கருதிய மோடி அரசு, புள்ளியியல் ஆணையத்தால் சரிபார்க்கப்பட்டு, வெளியிடத் தயாராக இருந்த ஆய்வறிக்கையை ‘வரைவு அறிக்கை’தான் என நிதி ஆயோக் மூலம் சொன்னது.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ள நிலையில், இருக்கும் வேலைகளை பறித்துக்கொண்டன மோடியின் சர்வாதிகாரத்தனமான அறிவிப்புகளும் திட்டங்களும்.

படிக்க:
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப் 23
♦ கொல்கத்தா சிபிஐ திருவிளையாடல்கள் : இதுதாண்டா இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் !

இந்த நிலையில், வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமத்தினாலேயேதான் அதை எதிர்த்து பதவி விலகியதாக திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் பி.சி. மோகனன் (63). முப்பதாண்டுகாலம் புள்ளியியல் துறையில் அனுபவம் உள்ளவர் இவர்.

புள்ளியியல் ஆய்வறிக்கை வெளியாகும் முன் அதற்கு முழுமையான பொறுப்பும் தேசிய புள்ளியியல் ஆணையத்தினுடையதே என்கிற மோகனன், “கடந்த சில மாதங்களாக மத்திய அரசு திரும்பத் திரும்ப ஆணையத்தை ஒதுக்கிக் கொண்டிருந்தது. இறுதியாக வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையையும் தாமதப்படுத்தியது”  என்கிறார்

“உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ குறிப்பிட்ட காலத்துக்குள் ஆய்வறிக்கை வந்தாக வேண்டும். அப்படியில்லையெனில், இந்த அமைப்பின் நம்பகத்தன்மையின் நிலை என்னவாகும்?” என கேட்கிறார் மோகனன்.

பிஸினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகையில் வெளியான அறிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என மறுக்கும் மோகனன், தனக்கு அரசியல் சார்பு எதுவுமில்லை என்கிறார்.  அதோடு, தேசிய புள்ளியியல் ஆணையம் ‘வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை’க்கு கடந்த டிசம்பர் 5-ம் தேதியே ஒப்புதல் அளித்துவிட்டதை அழுத்தமாகச் சொல்கிறார்.

விரைவில் வெளியாகும் என காத்திருந்த நிலையில், ஆய்வறிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க ஆணையத்தின் தலைமை புள்ளியியலாளர் பிரவீன் ஸ்ரீவத்சவாவை சந்திக்க டெல்லிக்கு நேரிலும் சென்றிருக்கிறார். “கால தாமத்துக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை” என்கிறார் மோகனன்.  அப்போதும் அறிக்கை வெளியிடப்படாத நிலையில் மோகனனும் மீனாட்சியும் பதவியை விட்டு விலகியிருக்கிறார்கள்.

இந்த அமைப்பின் மதிப்பு காப்பாற்றப்படுவது அவசியம் என்பதை உணர்ந்ததாலேயே இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார் மோகனன். தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தில் தன்னுடைய பணியைத் தொடங்கிய இவர், அந்தப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற இரண்டாண்டுகள் கழித்து 2017-ம் ஆண்டு தேசிய புள்ளியியல் ஆணையத்தில் உறுப்பினராக இணைந்தார்.

படிக்க:
♦ 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி : ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை !
♦ மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !

2018-ம் ஆண்டு செயல் தலைவர் பதவிக்கு வந்த பிறகு, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல்பாட்டை மோடி அரசு குறைத்துவிட்டதை உணர்ந்ததாக தெரிவிக்கிறார்.  மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த அமைப்பில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் வைக்கப்பட்டதோடு, பெரிய அளவிலான புள்ளியல் ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கிறார்.

ஊடகங்களில் அறிக்கை வெளியானது குறித்து மோடி அரசின் சார்பாக பேசிய மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான, நிதி ஆயோக்கின் அதிகாரிகள், தங்கள் இருவரையும் போலியானவர்கள் என பேசியது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக மோகனன் குறிப்பிடுகிறார்.

கடந்த வாரம் தனக்கு மன அழுத்ததை கொடுப்பதாக அமைந்தாலும் தனது அரசு பணியின் முடிவாக இது இருக்கும் என்கிற மோகனன், தான் வளர்ந்த கேரள கிராமத்தில் தனது ஓய்வு வாழ்க்கையை கழிக்க இருப்பதாக சொல்கிறார்.

இறுதியாக, தேசிய புள்ளியியல் ஆணையமும் இந்திய புள்ளியியல் குழுவும் தற்போது மரியாதைக்குரிய வகையில் பார்க்கப்படும்  என மோகனன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

வெளிப்படையான நிர்வாகம் என வாய்ச்சவடால் அடித்த மோடியின் யோக்கியதை இதுதான். நிர்வாகத் திறனும், உண்மையை எதிர்கொள்ள தைரியமும் இல்லாத, கும்பல் வன்முறையாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால், அத்தனை அமைப்புகளும் சீரழிந்து நாறும் என்பதற்கு மோடி அரசு ஒரு உதாரணம்.  மோடி அரசின் இத்தகைய இழி சாதனைகளை வரலாறு நின்று பேசும்.

நன்றி: சிஎன்பிசி18
தமிழாக்கம் : கலைமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க