பேல் விமான ஒப்பந்தம் குறித்த விவரங்களைக் கோரி தொடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கு, உச்சநீதிமன்றத்தில் கடந்த 14-ம் தேதி (14.11.2018) விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணைகளின் போது இதுவரை ரபேல் ஒப்பந்தம் குறித்து அரசு தரப்பில் சொல்லப்பட்டு வந்த பொய்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தின்பால் தனக்கு இருந்த பொறுப்புகளைக் கைகழுவியது குறித்த செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம். ரபேல் ஒப்பந்தமானது அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதால் அதன் விவரங்களை வெளியிட முடியாது என பா.ஜ.க அமைச்சர்கள் கூறி வந்த பொய் அதன் மூலம் அம்பலமானது.

சுதான்சு மொகந்தி

இந்நிலையில் இது குறித்து மேலும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாதுகாப்புத் துறைக்கான முன்னாள் ஆலோசகர் சுதான்சு மொகந்தியின் காலத்தில் (அக்டோபர் 2015 – மே 2016) தஸ்ஸால்ட் மற்றும் பிரான்சு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. பிரெஞ்சு அரசின் தரப்பில் இறையாண்மைப் பூர்வமான உத்திரவாதத்திற்கு ( sovereign guarantee ) பதிலாக வழங்கப்பட்ட “ஆறுதல் கடிதமானது” (letter of comfort) எந்த வகையான ஆறுதலையும் வழங்கப் போவதில்லை என்கிறார் சுதான்சு மொகந்தி. உச்சநீதிமன்ற விசாரணைக்கு மறுநாள் ‘எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையிடம் பேசிய மொகந்தி, இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பறக்கும் நிலையிலான 36 விமானங்கள் வாங்க மோடி அரசால் போடப்பட்ட ஒப்பந்தம் பேச்சு வார்த்தையின் துவக்கத்தில் இருந்த நிலையில் அவற்றின் அடிப்படை விலையாக 5.2 பில்லியன் யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், பின்னர் அது 8.2 பில்லியன் யூரோக்களாக உயர்த்தப்பட்டதாகவும் அதே பேட்டியில் தெரிவித்துள்ளார் மொகந்தி. இதைக் குறித்து பேட்டியில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை மொகந்தியின் வார்த்தைகளிலேயே பார்ப்போம் :

”விலை பேரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த எங்கள் குழுவின் முன் அடிப்படை விலையை அமைச்சகம் மாற்றியமைத்த விவகாரம் வந்தது. அடிப்படை விலை குறித்து நான் ஏதும் சொல்வதற்கில்லை. ஆனால், இதில் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி என்னவென்றால், எந்த அடிப்படையில் அடிப்படை விலை மாற்றப்பட்டது? என்பதுதான். அமைச்சகத்தின் சார்பில் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய உயரதிகாரிகள் எந்த தர்க்கத்தின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் அடிப்படை விலையை மாற்றினர்?

படிக்க:
♦ சிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ அஜித் தோவலும் புதுவரவு !
♦ மோடி ஒரு திருடன் – சொல்வது பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள்

மேலும், பொது ஊடகங்களில் கிடைக்கும் தகவல்களின்படி பார்த்தால், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் அதன் உயரதிகாரிகளால் தலைமை தாங்கப்படும் ’பாதுகாப்புத்துறை கொள்முதலுக்கான கவுன்சிலா’னது விலை மாற்றத்தை பரிந்துரைக்கவில்லை. அந்த கவுன்சில் விலை விவகாரத்தை பாதுகாப்புக்கான கேபினெட் கமிட்டியிடம் விட்டது ஏன்? இதைத்தான் நாம் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். எனது அனுபவத்தில் இவ்வாறு நடப்பது பெரிய புதிரான விசயம்” என்று மொகந்தி தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தின்படி, பாதுகாப்புத்துறை கொள்முதல் நெறிமுறை 2013 (Defence Procurement Procedure (DPP) 2013) முழுமையாக பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்படி நெறிமுறையைப் பின்பற்றியிருந்தால், பாதுகாப்புத்துறை கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council ) கருத்தே ஏற்கப்பட்டிருக்க வேண்டும்; மாறாக கேபினெட் கமிட்டியிடம் முடிவெடுக்க விட்டிருக்கக் கூடாது.

நிர்மலா சீதாராமன் மற்றும் மோடி

உச்சநீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலேயே இந்த முரண்பாடு பளிச்சென்று தெரிகிறது. அதன் 25-ம் பத்தியில் பாதுகாப்புத்துறை சார்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு விலையை 5.2 பில்லியன் யூரோ என நிர்ணயித்ததாக உள்ளது. அடுத்து, கேபினெட் கமிட்டியின் முடிவின் படி விமானங்களின் அடிப்படை விலை உயர்த்தப்பட்டது என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பாதுகாப்புத்துறை வல்லுநர்களால் எடுக்கப்பட்ட முடிவை, கேபினெட் கமிட்டி மாற்றியுள்ளது.

இந்த கேபினெட் கமிட்டியில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர், ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா சுவராஜ் போன்றோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பாதுகாப்புத் துறை குறித்தோ ஆயுதங்கள் குறித்தோ ஆயுதங்கள் கொள்முதல் செய்வது குறித்தோ எவ்விதமான தொழில்நுட்ப அறிவும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் கேபினெட் கமிட்டியால் உயர்த்தப்பட்ட அடிப்படை விலைக்கு ஆட்சேபம் தெரிவித்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ராஜீவ் வர்மா (இணைச் செயலாளர்), ஏ.ஆர். சூலே (நிதி மேலாளர்) எம்.பி சிங் ஆகியோர் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் ’பிசினஸ் ஸ்டேண்டர்ட்’ பத்திரிகையில் அஜய் சுக்லா எழுதிய கட்டுரையின்படி பார்த்தால், மோடி அரசு வாங்கும் விமானங்களில் பொருத்தப்படும் ஆயுதங்களிலும் முந்தைய மன்மோகன் சிங் அரசின் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான விமானங்களில் பொறுத்தப்படும் ஆயுதங்களிலும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. ஆனால் விலை மட்டும் கூடுதல்.

ரபேல் ஒப்பந்த ஊழலை மற்றுமொரு ஊழல் என கடந்து செல்ல முடியாது என்பதை அது குறித்து அம்பலமாகி வரும் தகவல்களே உறுதிப்படுத்துகின்றன. காங்கிரசோ முந்தைய அரசுகளோ தாங்கள் போடும் ஒப்பந்தங்கள் அல்லது திட்டங்களில் கமிஷன் அடிப்பதோடு திருப்தி கொண்டு விடும். ஆனால், பா.ஜ.க அரசோ ஊழலுக்காகவும் தமது புரவலர்களான தரகுமுதலாளிகளின் லாபத்துக்காகவுமே இந்த ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க