இந்தியாவில் அனைத்து உயிர்களுக்கும் முக்கியத்துவம் உள்ளதா?

மினியாபோலிசில் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலகின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அமெரிக்காவில் இனவெறி மற்றும் போலீசு மிருகத்தனத்தை கண்டிக்க அனைத்து தரப்பு அமெரிக்கர்களும் இன – நிற பேதமில்லாமல் பெரிய அளவில் எதிர்ப்பு பேரணிகளில் பங்கெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது சில கொள்ளை மற்றும் வன்முறை போன்ற விரும்பத் தகாத நிகழ்வுகள் இருந்தன. ஆனால் பெருமளவில் போராட்டங்கள் அமைதியாகவே நடத்தப்பட்டன. மேலும் அந்நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள இனவெறி மீது கவனம் செலுத்தி விவாதம் தூண்டப்பட்டது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் 47 வயதான ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவர் போலீசு காவலில் இறந்தார். போலீசு அதிகாரி டெரிக் சவுவின்  ஃபிளாய்டின் கழுத்தில் சுமார் ஒன்பது நிமிடங்கள் முழங்காலில் மண்டியிட்டு அழுத்திய போதும், ஃப்ளாய்ட் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என தன்னை விடுவிக்குமாறு அதிகாரியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். டெரிக் சவுவின் கைகளில் சிக்கி, மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி தருணம், உலகெங்கிலும் உள்ள மக்களின் சமூக மற்றும் தார்மீக உள்ளுணர்வை உலுக்கியுள்ளது. போலீசு மிருகத்தனத்திற்கும், அதிகப்படியான  அதிகாரத்தனத்துக்கும் எதிராக கண்டனங்களையும் போலீசு சீர்திருத்தங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் வரலாற்று ரீதியாக நீண்டகாலமாக உள்ள இனத்தை அடிப்படையாகக் கொண்ட இழிவை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் ஒவ்வொரு நாட்டிலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை குறிவைக்கும் போலீசு மிருகத்தனங்கள் குறித்த உரையாடலைத் தூண்டியுள்ளது. உலகளவில்  ‘ஜார்ஜ் ஃபிளாய்ட் தருணங்களுக்கு’ இணைகள் உள்ளன.

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம், இந்தியாவில் மத சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான ஒரு பக்கச் சார்பான போலீசு நடவடிக்கையை ஒத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தப்பெண்ணம் ஆதிக்க சித்தாந்தத்தால் ஆதரிக்கப்படுகிறது. அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்திய அரசின் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

போராட்டக்காரர்களால் அமெரிக்காவில் ஏற்பட்ட சீற்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக, போலீசு மிருகத்தனத்தை குறைக்க அரசு பல திட்டங்களை முன்வைத்துள்ளது. அதில் விவாதிக்கப்படும் மிக முக்கியமான இரண்டு எதிர்வினைகள்.. முதலாவதாக மினியாபோலிஸ் காவல்துறையில்  நிதி ஆதாரத்தை வெட்டுவது, இரண்டாவதாக போலீசு படையை கலைத்துவிட்டு, புதிதாக விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு படையை உருவாக்குவது.

மினியாபோலிஸ் நகர சபை போலீசு படை கலைக்கப்படும் எனக் கூறியது, இன்று பாதுகாப்பு என்ற பெயரில் ஆபத்தான ஆயுதமேந்திய போலீசுடன் இணக்கமாக உள்ள பல நாடுகளில் சிந்திக்க முடியாத ஒன்றாகும்.  அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்தியாவில் நிலைமை உள்ளது. போலீசின் அதீத அதிகாரம், மற்றும் சலுகை என்ற நிலையில், கட்டாய ஆதாரங்களை எதிர்கொள்வதில்கூட சிக்கல் உள்ளது.

மிகச் சமீபத்திய உதாரணம் வாஜா யூனுஸ் என்ற 27 வயது இளைஞர்,  2003-ல் போலீஸ் காவலில் இறந்தார். அவர் மகாராஷ்டிராவில் உள்ள பர்பானியில் வசித்தவர், டிசம்பர் 2, 2002 அன்று கட்கோபர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நால்வருடன் கைது செய்யப்பட்டார். யூனுஸ் காவலில் இருந்து தப்பித்ததாக போலீசார் கூறினாலும், ஜனவரி மாதம் விசாரணை நீதிமன்றத்தின் முன் முதல் வழக்கு சாட்சியாக அவருடன் கைதான டாக்டர் முகமது மாடின், ஜனவரி 6, 2003 அன்று யூனுஸ் தாக்கப்பட்டதைக் கண்டதாக சாட்சி கூறினார்.

அதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. 2003 ல் யூனுஸ் உடன் குற்றம் சாட்டப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. நான்கு காவல்  அதிகாரிகள் முதன்மையான குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் எதிராக உயர் நீதிமன்றம் 2004 ல் ஒழுங்கு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணை ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை, அதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மாறாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

அப்பாவி வாஜா யூனுஸ் மீதான மோசமான தாக்குதல் மற்றும் சித்திரவதை ஒரு தவறி நிகழ்ந்த சம்பவம் அல்ல. பயங்கரவாத தாக்குதல்களில் முஸ்லிம் இளைஞர்கள் “இயற்கை” சந்தேக நபர்களாக கருதப்படுவது இந்தியாவில் ஒரு இயல்பான நடவடிக்கையாக, அந்த சமூகத்தை களங்கப்படுத்தும் நடவடிக்கையாக ஆகிவிட்டது,. பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் UAPA அல்லது POTA போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைதாகி, பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காத போதும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் விடுவிக்கப்படுகிறார்கள்.

ஒரு இயந்திர பொறியாளரான முகமது சலீம் அன்சாரி, 2016 ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பயங்கரவாத தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ், 23 ஆண்டுகள் சிறையில் இருந்த அவரை, உச்ச நீதிமன்றம் விடுவித்தது. அன்சாரி, மற்ற மூன்று முஸ்லீம்களுடன், மே 17 அன்று ஜெய்ப்பூர் சிறையிலிருந்து வெளியேறினார், மே 11 அன்று உச்சநீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுவித்தது, அவர்களின் ஆயுள் தண்டனையை ஒதுக்கி வைத்து, உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. பாபர் மஸ்ஜித் இடிப்பின் முதல் ஆண்டு நினைவு நாளில் ரயில்களில் ஐந்து குண்டுவெடிப்புகளைத்  தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 16 பேரில் அவர்கள் அடங்குவர், இந்த குண்டுவெடிப்பு இரண்டு பயணிகளைக் கொன்றது; எட்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், ஹிங்கோலியைச் சேர்ந்த ஷோயப் கான் (28), யவத்மாலைச் சேர்ந்த மவுலானா முஜீப்-உர்-ரஹ்மான் (30), மற்றும் பூசாத் பகுதியைச் சேர்ந்த அப்துல் மாலிக் (23) ஆகியோரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்து, அவர்களின் வழக்குகள் மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு மாற்றப்பட்டன. ஜூன் 2019-இல், அவர்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்; சிறையிலிருந்து ஒரு கொடூரமான காலகட்டத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

ஊடகங்களும் காவல்துறையும் இந்தியாவில் முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாத சித்திரத்தை தீட்டி, மூவரும் “ஜிஹாதி” பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினர். தங்களுக்கு சாதகமான அறிக்கையை பெற வேண்டும் என்பதற்காக, போலீசு காவலில் தனக்கு நேர்ந்த சித்திரவதைகளில் ஒரு மோசமான கதையை கான் விவரித்தார். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸின் 2012 ஆய்வில், மகாராஷ்டிரா மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 10.6 விழுக்காடாக இருந்தாலும், அவர்கள் சிறைகளில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு எதிரான காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் சார்புத்தன்மையான நடவடிக்கையால் TADA மற்றும் MCOC சட்டங்களின் கீழ் காவல்துறை பல கைதுகளைச் செய்தது,  அரசு ரகசியங்கள் சட்டத்தின் கீழ்கூட கைதுகள் அரங்கேறின.

இந்த எல்லா நிகழ்வுகளிலும் இயங்கும் பொதுவான இழை அதன் மத அடையாளத்தின் காரணமாக சமூகம் எதிர்கொள்ளும் அவமானமும் களங்கமும் ஆகும். தாங்கமுடியாத சித்திரவதைக்குப் பின்னர் போலீசு அல்லது நீதித்துறை காவலில் இழந்த ஆண்டுகள் ஒருபோதும் மீட்கப்படாது, அவை எப்போதும் வீணடிக்கப்படுகின்றன. சித்திரவதை மற்றும் களங்கம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வாழ்நாள் முழுவதும் பயமுறுத்துகிறது. போலீசு காவலில் முஸ்லீம் இளைஞர்கள் பலியிடப்படுவது தற்செயல் நிகழ்வு அல்ல, ஆனால் முஸ்லீம் சமூகத்துடன் போலீசு  நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நன்கு நிறுவப்பட்ட வடிவத்தை காண முடியும். வகுப்புவாத கலவரம் மற்றும் கும்பல் கொலை ஆகியவற்றின் பின்னணியில் இது தெளிவாகிறது. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை குறிவைத்து வகுப்புவாத கலவரங்களின் போது காவல்துறையின் பக்கச்சார்பான தன்மையை சுட்டிக்காட்டும் ஏராளமான ஆய்வுகள் மற்றும் ஆணைய அறிக்கைகள் உள்ளன.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை (1998) பம்பாய்  போலீசு படை கலவரத்தை ‘சார்புத்தன்மையுடன் கட்டப்பட்டது’ என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது 1992 ல் பம்பாயில் நடந்த கலவரத்திலும் மகாராஷ்டிராவின் பிற இடங்களிலும் வெளிப்பட்டது. நீதிபதி டி.பி.மடோனின் கமிஷன் பிவாண்டி கலவர(1970)த்தில் காவல்துறையின் பங்கு குறித்து கடுமையான கட்டுப்பாடுகளை நிறைவேற்றியது.

சீக்கிய எதிர்ப்பு கலவரத்தில், மூன்று விசாரணை கமிஷன்கள் – நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் (1987), நீதிபதி ஜெயின்-டி.கே. அகர்வால் கமிட்டி (1990), மற்றும் நீதிபதி ஆர்.எஸ். நருலா பனல் (1994) தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தார்கள். அனைத்து விசாரணை கமிஷன்களும் ஒருமனதாக 72 போலீசு அதிகாரிகளை குற்றஞ் சாட்டியுள்ளன, மேலும் காவல்துறையின் பாரபட்சமான பங்கை தெளிவாக கோடிட்டுக் காட்டின. இதேபோல், 20021 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் காவல்துறையின் பாகுபாடான பங்கைப் பற்றி பயங்கரமான அதிர்ச்சிகளைத் தரும் பல அறிக்கைகள் உண்மை அறியும் குழுக்களால் பகிரப்பட்டுள்ளன.

2014க்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட கும்பல் கொலை வழக்குகளில், காவல்துறையினர்  பல மட்டங்களில் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களை இரத்தவெறி கொண்ட கும்பலிலிருந்து பாதுகாப்பதில் இருந்து, குற்றவாளிகள் தண்டனையின்றி சுதந்திரமாக விலகிச் செல்ல அனுமதிக்கும் மோசமான விசாரணைகள் மற்றும் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே கடுமையான குற்றத்துக்கு ஆளாகுதல் ஆகியவற்றில் போலீசின் பங்கு இருந்தது. உதவியற்ற நிலையில் இரத்தம் வழிந்து கொண்டிருந்த முகமது காசிம் மற்றும் சாமியுதீன் ஆகியோரை அவசரமாக இழுத்துச் செல்லும் குற்றவாளிகளுக்கு ஹப்பூர் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்ததை நினைவிலிருந்து யாராலும் அழிக்க முடியாது.

ஆல்வாரில் உள்ள ரக்பர் கான் மூன்று மணிநேரம் காவல்துறை தாமதமாக வந்ததால் உயிரை இழந்தார், அந்த நேரத்தில் ரக்பர் கான் கும்பலால் தாக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ரத்தம் வழிய உயிரை விட்டார். அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், நீதி வழங்குவதற்கும் காவல்துறை ஒரு தடையாக இருந்ததை நிரூபிக்கப்பட்ட இதுபோன்ற பல சம்பவங்கள் கூறுகின்றன.

இந்த சம்பவங்கள் நிச்சயமாக அதிர்வுகளை ஏற்படுத்திய போதிலும், இந்தியாவில் ஏன்  பெரிய அளவில் ‘ஜார்ஜ் ஃபிளாய்ட் தருணம்’ வரவில்லை என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதாவது கருப்பினத்தாரின் உயிர்கள் முக்கியத்துவம் உள்ளவை என்கிற வரிசையில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் அல்லது இயக்கம் ஏன் இங்கே ஏற்படவில்லை? அரசியல் அறிவியலாளர் சுஹாஸ் பால்ஷிகரின் புத்திசாலித்தனமான நுண்ணறிவால் இதற்கு விளக்கம் கிடைக்கிறது. இதுபோன்ற எந்தவொரு எதிர்ப்பும் அல்லது கருத்து வேறுபாடுகளும் வளர்ந்து வரும் ஜனநாயகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார்.

விளிம்பு மக்களின் உரிமைகளுக்கான அக்கறை அல்லது குரல்களை, ஒழுங்கு அல்லது தேசத்திற்கு அச்சுறுத்தலாகக் காட்டுவதன் மூலம் அரசு சீராக செய்து வருகிறது. கவனமாக கட்டமைக்கப்பட்ட இந்த விவரிப்பு, விளிம்பு மக்களின் அவலங்கள் எவ்வளவு கொடூரமாக மீறப்பட்டாலும் பெரிய சமூகத்தில் பச்சாத்தாபத்தை உருவாக்குவதற்கான ஒரு தடையை உருவாக்கியுள்ளது. இந்த கொள்கை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் போன்ற இரண்டாம் தர குடிமக்களின் சமூகத்தை உருவாக்குவதற்கான மைய யோசனையுடன் இணைந்திருக்கும் மேலாதிக்க சித்தாந்தத்துடன் ஒத்துப்போகிறது; ஆகவே, அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பாளர்களின் சீற்றமும் வேதனையும் எதிரொலித்தன, சில இடங்களில் காவல்துறையினர் போலீசு மிதமிஞ்சி நடந்துகொண்டதை அடையாளமாக ஒப்புக் கொள்ள மண்டியிட்டார்கள். மன்னிப்பு கேட்க இது அவர்களின் வழி. ஆனால் இந்திய அரசோ எதிர்ப்பாளர்களை மிகவும் மோசமாக நடத்தியது.

சமீபத்திய உதாரணம் காவல்துறையினர் குடியுரிமை எதிர்ப்பு சட்ட எதிர்ப்பு போராட்டங்களை கையாண்ட முறை. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் அப்பாவி மாணவர்கள் மீது காவல்துறையினர் கையெறி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். இது பார்வை இழப்பு மற்றும் சில மாணவர்களின் மூட்டு இழப்பு போன்ற கடுமையான காயங்களுக்கு வழிவகுத்தது. போர்ட்லேண்ட் மற்றும் சியாட்டில் தற்காலிகமாக எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பயன்பாட்டை தடைசெய்துள்ள நிலையில் இதுவும் உள்ளது.

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறை நடந்தது, இதற்காக காவல்துறை விமர்சனத்திற்கு உள்ளானது. பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் எடுத்துக் கொள்ளப்படும் என்று எச்சரிக்கும் சுவரொட்டிகளையும் பெயர்களையும் வெளியிட்டது உத்தரபிரதேச போலீசு.  உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டது மற்றும் அரசாங்கம் “தனியுரிமை, மரியாதை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கிறது” என்பதைக் கண்டறிந்து அதை “சட்டவிரோத நடவடிக்கை” என்று அழைத்தது.

சஃபூரா சர்கார்

ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவி சஃபூரா ஸர்கர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் காவல்துறையினர் எவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய முடியும். அவர் மற்ற மாணவர்களுடன் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.ஆர்.பி) ஆகியவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்குப் பிறகு, கலிபோர்னியாவின் ஆளுநர் கழுத்தில் அழுத்தி பிடிக்கும் வழிமுறையை கைவிடுமாறு மாநில காவல்துறை பயிற்சித் திட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். கொடிய  மோதல் கொலைகளின் அபாயத்தைக் குறைக்க சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான புதிய கொள்கைகள் குறித்து பிற அரசாங்கங்கள் விவாதித்தன. போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீசு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு காயங்கள் அல்லது இறப்புகளைக் குறைப்பதே இந்த நடவடிக்கைகள். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக, உத்தரபிரதேசத்தில் மோதல் கொலைகள் அல்லது கூடுதல் நீதித்துறை கொலைகள் மாநில கொள்கையாக பயன்படுத்தப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் கட்டாய தலையீட்டின் காரணமாக, இரண்டு வருட காலப்பகுதியில் 3,500 க்கும் மேற்பட்ட போலீசு மோதல் கொலைகளும் குற்றவாளிகள் கிட்டத்தட்ட 80 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்புகள் பெரும்பாலும் முஸ்லீம் இளைஞர்களை குறிவைத்து முஸ்லீம் சமூகத்தை அவர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்காக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலே முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த சிக்கல்கள் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நிறுவனங்கள் செழித்து, நியாயத்துடன் செயல்பட, ஒருபுறம் பங்கேற்பு ஜனநாயகம் இருக்க வேண்டும், அங்கு மக்களுக்கு அச்சமின்றி பங்கேற்கவும் சுதந்திரம் உள்ளது. மறுபுறம் நிறுவன உள்கட்டமைப்பை உருவாக்கி, முதலீடு செய்து ஊக்குவிக்கும் ஒரு அரசு. சமூகத்தின் விளிம்புநிலை பிரிவுகளின் உரிமைகள் மீறப்படுவதில் தங்கள் பச்சாதாபத்தையும் சீற்றத்தையும் வெளிப்படுத்த தனிநபர்கள் பொது இடங்களை குடிமக்களாக மீட்டெடுக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டங்கள் அல்லது குரல்களை அரசால் ஒடுக்க முடியாது. பொறுப்புக் கூறலுக்காக ஜனநாயக நிறுவனங்களை அரசு தீவிரமாக வளர்த்து வலுப்படுத்த வேண்டும். உலகெங்கிலும் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தின் நினைவுச் சின்னங்களை அகற்றுவதற்கான போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோட்சே மற்றும் மனு சிலைகள் தற்போதைய சித்தாந்தத்தின் கீழ் வழிபடப்படுகின்றன. மேலும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் என்று புகழப்படும்போது இது கவலைக்குரிய விடயமாகும். இந்தியாவும் ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு அளித்த ஆதரவிலிருந்து உத்வேகம் பெற்று சுதந்திரம், நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கு ஆதரவாக தனது சொந்த அரசையும் மக்களையும் மீட்டுக் கொள்ளும் என்று நம்புவோம்.

கட்டுரை: நேஹா தப்பாடே
தமிழாக்கம்: கலைமதி
நன்றி: சப்ரங் இந்தியா

1 மறுமொழி

  1. உங்கள் தளம் மொழிபெயர்ப்புக்கு என்றே சிறப்பாக அமைக்கப்பட்ட தளம் என்று நினைக்கிறேன். அனைத்து நல்ல கட்டுரைகளையும் எல்லா இடங்களில் இருந்தும் தேடி தேடி எடுத்து பதிவிட்டு வருகிறீர்கள். மற்றவர்களின் கட்டுரைகளை, கருத்துக்களை, மொழிபெயர்ப்புகளை வெளியிட்டாலும் உங்கள் முயற்சி போற்றத்தக்கது. அருமை வாழ்த்துகள் !!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க