திருப்பரங்குன்றம் ஆவணப்படம் திரையிடத் தடை: உணர்த்துவது என்ன?

திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் ஆவணப்படமானது, திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக, கலவரக் காடாக மாற்ற வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. பாசிச கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் காரணத்தினாலேயே திரையிடலை போலீசு தடுத்து நிறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் கடந்த மே 31-ஆம் வீதி, “வீதி கலை இலக்கியக் களம்” அமைப்பினர் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அறக்கலகம் ஊடகவியலாளர் தவம் மற்றும் பண்பாட்டு சூழலியலாளர் தமிழ்தாசன் இருவரும் இணைந்து தயாரித்து இயக்கிய “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” என்ற ஆவணப்படம் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.

அந்நிகழ்ச்சி நடைபெறவிருந்த தனியார் மண்டபத்திற்கு வந்த போலீசு, ஆவணப்படத்தை திரையிடக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் வீதி கலை இலக்கியக் களம் அமைப்பினர் நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கிற்கு மாற்றியிருக்கின்றனர். அவ்விடத்திற்கும் வந்த போலீசு “மேலிட உத்தரவு” என்று கூறி ஆவணப்படத் திரையிடலை தடுத்து நிறுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் ஆவணப்படம் ஏற்கெனவே வெளியிடப்பட்ட படம்தான்; யூடியூப் சமூக வலைத்தளத்தில் 60,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய போதிலும் அதை ஏற்க மறுத்து ஆவணப்பட திரையிடலை போலீசு தடுத்து நிறுத்தியுள்ளது. போலீசினுடைய இந்த அராஜக நடவடிக்கையானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் ஆவணப்படமானது, திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக, கலவரக் காடாக மாற்ற வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் காரணத்தினாலேயே திரையிடலை போலீசு தடுத்து நிறுத்தியுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியிலும் போலீசு இவ்வாறே செயல்பட்டு வந்துள்ளது. சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமிய மக்கள் ஆடு, கோழி பலியிட்டு வணங்கும் மரபைத் தடுத்து நிறுத்தி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமாக பிரச்சினையைத் தொடங்கி வைத்தது, திருப்பரங்குன்றம் போலீசு ஆய்வாளர் மதுரைவீரனே ஆவார்.

மேலும், இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பல்களின் மதவெறியூட்டும் பிரச்சாரம், ஆர்ப்பாட்டங்களுக்கு மதுரை போலீசு அனுமதி வழங்கியது.  ஆனால், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் கலவர நோக்கத்தை அம்பலப்படுத்தியும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் மற்றும் மதநல்லிணக்க கூட்டமைப்பைச் சார்ந்த ஜனநாயக சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சார, ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கு போலீசு அனுமதி மறுத்தது. பல சமயங்களில் சட்ட – களப் போராட்டங்களுக்குப் பிறகே அனுமதி வழங்கப்பட்டது.


படிக்க: திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படும் நீ்தித்துறை | தோழர் ரவி


முன்னதாக, மதுரையின் மதநல்லிணக்க வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் மக்கள் அதிகாரக் கழகம், ம.க.இ.க., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளால் “பரமசிவமும் பாஷாவும்” என்ற ஆவணப்படம் கடந்தாண்டில் தயாரிக்கப்பட்டது. இது, சிக்கந்தர் தர்காவில் ஆடு – கோழி பலியிட்டு வணங்கியதன் சாட்சியாக விளங்கும் தர்கா நிர்வாகி பாஷாவையும், தர்காவில் ஆடு வெட்டி வந்தவரான பரமசிவத்தையும் ஆவணப்படுத்துவதாகவும், அதன் மூலம் சங்கிகளின் திரைக்கதையைக் கிழித்தெறிவதாகவும் அமைந்தது. ஆனால், இந்த ஆவணப்படத்தை திரையிடவும் வெளியிடவும் விடாமல் மதுரை போலீசு தடுத்து நிறுத்தியது.

இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கு திருப்பரங்குன்றம் மக்கள் மத்தியில் அடித்தளம் இல்லாத போதிலும், போலீசு, வருவாய்துறை அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடன் திருப்பரங்குன்றம் பிரச்சினையை தொடங்கி, இன்று வரை அதன் துணையுடனே செயல்பட்டு வருகிறது.

பா.ஜ.க. எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு பேசும் தி.மு.க. அரசு தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் அனுமதித்து வந்தது. மதுரை மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பையடுத்தே, சங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் துணையுடன் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற முயன்ற சங்கிக் கும்பலை தி.மு.க. அரசு தடுத்தது. இருப்பினும், திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை கட்டவிழ்த்துவிடும் திட்டத்தை சங்க பரிவாரக் கும்பல் கைவிடவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்திருப்பதை சங்கி கும்பல் தங்களின் கலவர சதித்திட்டத்தை செயல்படுத்துவதற்கு சாதகமானதாகவே கருதுகிறது. அதற்கேற்ப, த.வெ.க. அரசிலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு பார்ப்பனர் ரமேஷ் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்; ஆர்.எஸ்.எஸ்-காரரும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பேசியவருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் தொகுதியிலேயே சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, சட்டத்துறை அமைச்சராகியுள்ளார்.

முக்கியமாக, திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் ஆவணப்பட திரையிடல் தடுக்கப்பட்டது குறித்தும் த.வெ.க. எம்.எல்.ஏ-க்களோ அமைச்சர்களோ முதலமைச்சர் விஜயோ தற்போதுவரை வாய்திறக்காமல் கள்ளமௌனம் காத்து வருகின்றனர். இத்தகைய தொடர் நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டு மக்களை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் பாசிசத்திற்கு பழக்கப்படுத்தும் ஆட்சியாகவே த.வெ.க. ஆட்சி உள்ளது.

ஆகவே, த.வெ.க-வின் இந்த சதித்தனமான அணுகுமுறைக்கு எதிராக புரட்சிகர – ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும். தமிழ்நாட்டை கலவர காடாக மாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். சங்கி கும்பலுக்கு சேவை செய்யும் அதிகார வர்க்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குரலெழுப்ப வேண்டும். திருப்பரங்குன்றத்தில் சங்கிகளின் கலவர சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் ஆவணப்படங்களை தமிழ்நாட்டின் வீதிகள் தோறும் திரையிட வேண்டும்!


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க