அரசு மகளிர் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறை: தனியார்மயத்தால் நசுக்கப்படும் பெண்களின் கல்வி உரிமை!

அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத இந்த நிலைமை, கல்விபுலத்தில் இருந்து பெண்களை வெளியேற்றவே செய்யும். பெயரளவிலான முன்னேற்றம் கூட இல்லாமல் மீண்டும் பெண்களை பழைய ஆணாதிக்க குடும்ப நிலைக்கு இந்த நிலைமை தள்ளும்.

11.06.2026

அரசு மகளிர் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறை:
தனியார்மயத்தால் நசுக்கப்படும் பெண்களின் கல்வி உரிமை!

பத்திரிகைச் செய்தி

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை (UG) முதலாமாண்டு சேர்க்கைக்காக, மொத்தம் 1,176 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 1,176 இடங்களுக்கு 5,900-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆன்லைன் (TNGASA) வழியாக விண்ணப்பித்துள்ளனர்.

ஒரு இடத்திற்குச் சராசரியாக 5 மாணவிகள் வரை போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் இந்த பழமையான அரசு கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதால், ஒவ்வொரு ஆண்டும் இங்கு சேர்க்கைக்கான போட்டி மிகக் கடுமையாக நிலவி வருகிறது.

ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டில், மொத்தமுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 29 கல்லூரிகள் மட்டுமே பெண்கள் பயிலும் (women’s college) கல்லூரியாக உள்ளது. ஒவ்வொரு கல்லூரிகளிலும் சராசரியாக 1300 சேர்க்கை இடங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் அதில் விண்ணப்பிக்கும் மாணவிகளின் எண்ணிக்கையோ அதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது.

பொதுவாக அரசு கல்லூரியில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் உழைக்கும் வர்க்க பின்னணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பின்தங்கிய சூழலில் இருந்து படிக்க வருகின்றவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டியது அரசின் முதன்மையான கடமையாகும்.

அரசு மகளிர் கல்லூரி மதுரை, அதன் பின்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, சாத்தான்குளம் இப்படியாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் கூட இல்லாத நிலை தான் உள்ளது.

பொருளாதார நெருக்கடி, பாதுகாப்பின்மை, தூரம் அதிகமாக இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால் பெண்கள் மேற்கொண்டு படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

தொடர்ந்து பல காலமாக பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக, பெண்களின் கல்விக்கான உரிமை என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்த கல்வி உரிமையானது போராட்டங்கள் மூலமாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, உழைக்கும் வர்க்க பின்னணிக் கொண்ட மாணவிகளின் நிலை நெருக்கடியாகவே தொடர்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழலில் முதலில் காவு வாங்கப்படுவது பெண்களின் கல்வியாகத்தான் இருக்கும். ஆகவே அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத இந்த நிலைமை, கல்விபுலத்தில் இருந்து பெண்களை வெளியேற்றவே செய்யும். பெயரளவிலான முன்னேற்றம் கூட இல்லாமல் மீண்டும் பெண்களை பழைய ஆணாதிக்க குடும்ப நிலைக்கு இந்த நிலைமை தள்ளும்.

1990 -களுக்கு பிறகு அரசின் செயல்பாடு என்பது மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதிலிருந்து மாறி, தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்த தொடங்கிய பின், கல்வியும் சேவை என்கிற நிலைமையிலிருந்து, சந்தையில் விற்கப்படும் பண்டமாக மாற்றப்பட்டுள்ளது. அரசானது மக்கள் நல அரசு என்கிற முகமூடியைத் துறந்து கார்ப்பரேட் நல அரசாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் நீட்சியாகவே அரசு பொதுத்துறை (public sector) நிறுவனங்களின் தரத்தை தாழ்த்தி, மக்களை தனியாரை நோக்கி தள்ளும் கட்டாயத்தையும் உருவாக்கியது. இதன் விளைவாக பல உழைக்கும் வர்க்கப் பின்னணியை கொண்ட, ஒடுக்கப்பட்ட மாணவிகள் தங்களின் கல்வியை கடன் வாங்கி தனியார் கல்லூரிகளில் பயிலும் நிலை ஏற்படுகிறது.

இந்த தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கையை முறியடிப்பதன் மூலமே கல்வி உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட்க முடியும்.

உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கல்வி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்!

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க