மீண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் – பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை இதுதான்!

பாசிச மோடி அரசின் சதித்தனங்களை போராடும் விவசாயிகள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். தேர்தலை எதிர்பார்க்காமல், இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே எழுச்சிகரமான, விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.

பிப்ரவரி 13 அன்று டெல்லியில் மீண்டும் ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லியில் 2020-இல் தொடங்கி ஓராண்டு நடைபெற்ற கோடிக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் போராட்டத்தைப் பார்த்து அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை மட்டும் ரத்து செய்தது. ஆனால் விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் எதையும் இன்றுவரை நிறைவேற்றவில்லை.

குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்குதல், அனைத்து பயிர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கொள்முதல் விலை, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரத்துறையில் தனியார்மயமாக்கலை நிறுத்துதல், பயிர்க்காப்பீட்டை உறுதி செய்தல், லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலையின் முக்கிய குற்றவாளியான அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்து வழக்கு தொடர்வது உள்ளிட்ட எந்த கோரிக்கைகளையும் பாசிச மோடி அரசு நிறைவேற்றாமல் திமிராக நடந்து கொண்டது.

தொடர்ச்சியாக இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வந்தனர். ஆனாலும் இதையெல்லாம் பாசிச மோடி கும்பல் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.


படிக்க: பாசிச யோகி அரசை அடிபணிய வைத்த உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டம்!


கடந்த ஜனவரி 26 அன்று கூட நாடு முழுவதும் மாபெரும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த பேரணியில் நாடு முழுவதும் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் நாளை (பிப்ரவரி 13) டெல்லியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வளவு நாட்கள் போராட்டங்களை பொருட்டாகவே மதிக்காமல் இருந்த பாசிச மோடி கும்பல், விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தவுடன் யோக்கியவான்களைப் போல பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, மத்திய உணவு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் தங்களை ஏமாற்றும் வேலை என்பதை உணராதவர்கள் அல்லர் விவசாயிகள். திட்டமிட்டபடி பிப் 13 அன்று டெல்லி எல்லையை முற்றுகையிட தயாராகி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மூலம் டெல்லி எல்லையை முற்றுகையிட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இதையடுத்து போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை பாசிச மோடி அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் ஆகிய இடங்களில் இணையம் மற்றும் குறுந்தகவல் சேவைகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.


படிக்க: நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!


மேலும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநில எல்லைகளில் கூடுவதற்கு டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு போட்டுள்ளது.

கார்ப்பரேட்களின் அடிமையான மோடி அரசு விவசாயத்தை முழுக்க கார்ப்பரேட்மயமாக்குவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் மூலம் அதானி, அம்பானி மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்து வருகின்றது. அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் இதை நோக்கித்தான் முன்னேறி வருகிறது. மோடி ஆட்சியில் அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள் இதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

பாசிச மோடி அரசின் சதித்தனங்களை போராடும் விவசாயிகள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். தேர்தலை எதிர்பார்க்காமல், இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே எழுச்சிகரமான, விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.

பாசிச மோடி கும்பலையும், அம்பானி, அதானி கார்ப்பரேட் கும்பலையும் வீழ்த்துவதற்கான பாதையை விவசாயிகள் நமக்கு காட்டுகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை உறுதியோடு ஆதரிப்பதன் மூலம் அதனை நோக்கி வேகமாக முன்னேறுவோம்!


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க