“உங்களோட ரொம்ப நாள் ஆசை எது?”
“நல்லா தூங்கனும் சார்”
நேற்று ஒரு OLA ஓட்டுநரிடம் கேட்டபோது இப்படி சொன்னார். அதற்கு முன்பு ஒரு ஸ்விக்கி இளைஞரும் இதையேதான் சொன்னார். அதை சொல்லும்போதே அவர்களின் கண்களில் வழிந்தோடிய தூக்கத்தையும், குரலில் அதற்கான ஏக்கத்தையும் கண்டேன்.
“நேத்து மதுரவாயல் சவாரி முடிச்சுட்டு மடிப்பாக்கம் வீட்டுக்குப் போய் சேரும்போது மணி 1.30. இன்னிக்கு காலையில 7 மணிக்கு ‘ஆப்’ ஆன் பண்ணினேன். 7.10-க்கு முதல் சவாரி. இப்போ நைட் 9 மணியாச்சு. இன்செண்டீவ் பாய்ண்ட் ரீச் பண்ண இன்னும் ஒரு சவாரி எடுத்தாதான் முடியும்’’ என்று அந்த ‘ஓலா’ ஓட்டுனர் சொன்னபோது அவர் என்னை சாலிகிராமத்தில் இறக்கிவிட்டார்.
“ஒரே ஒரு ஹெல்ப் சார். நீங்க ட்ராப் பாய்ண்ட் கிண்டி வரைக்கும் மாத்தி போட முடியுமா? அமவுண்ட் இப்போ என்ன வருதோ அதை குடுங்க. ட்ராப் பாய்ண்ட் மட்டும் மாத்தி போட முடியுமா?”
அப்படி மாற்றி போட்ட பிறகு, ‘ஏன் அப்படி?’ என்று கேட்டேன்.
“வழக்கமான சவாரில நீங்க குடுக்குற ரூபாய்ல பெருசா ஒண்ணும் மிஞ்சாது. 100 ரூபாவ் சவாரில கிடைச்சா, 30 ரூபாய் அவங்களுக்கு கமிஷன். (இது தொடக்கத்தில் 5% ஆகவும், பின்னர் 10%-ஆகவும் இருந்தது) மீதிதான் எங்களுக்கு. OLA Money-ன்னா, அது கைக்கு வந்து சேர ஒரு மாசமாயிடும். மத்தபடி இன்செண்டீவ்ல கிடைக்கிற அமவுண்ட்தான் எங்களுக்கு மிச்சம்’’
“அது என்ன இன்செண்டீவ்?”
“ஒவ்வொரு நாளும் மார்னிங் பீக் ஹவர்ல ரெண்டு சவாரி, ஈவினிங் பீக் ஹவர்ல ரெண்டு சவாரி எடுக்கனும். இது எடுத்தாதான் இன்செண்டீவ் கிடைக்கும். பீக் ஹவர் இல்லாத நேரத்துல எத்தனை சவாரி எடுத்தாலும் இன்செண்டீவ் கிடைக்காது. ஒவ்வொரு சவாரிக்கும் எங்க கணக்குல பாய்ண்ட் போட்டுக்கிட்டே வருவாங்க. இந்த பீக் ஹவர் சவாரி-யை முடிச்சு, ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாயையும் ரீச் பண்ணிட்டா இன்செண்டீவ் கிடைக்கும். அதுலயும் கம்பெனி கமிஷன் பிடிச்சுக்குவாங்க.
படிக்க :
♦ வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
♦ ரோலக்ஸ் வாட்ச் – தூக்கக் கலக்கம் : ஓலாவில் இருவேறு அனுபவங்கள் !
இப்போ நீங்க ட்ராப் பாய்ண்டை மாத்தி போட்டுட்டதால, நான் ஸ்ட்ரைட்டா கிண்டி வழியா வீட்டுக்குப் போயிடுவேன். இன்செண்டீவ் பாய்ண்ட்டையும், அதுக்கான அமவுண்டையும் ரீச் பண்ணிருவேன். இல்லேன்னா, மிச்சம் இருக்கிற சின்ன அமவுண்டுக்காக இன்னொரு சவாரி எடுக்கனும். அது எங்க விழும்னு தெரியாது. எங்கயாவது அம்பத்தூர், ஆவடின்னு விழுந்துச்சுன்னா.. அப்புறம் வெறும் வண்டியை ஓட்டிக்கிட்டு வீடு போய் சேர மறுபடியும் நடு ராத்திரி ஆயிடும். இப்பவே உடம்பெல்லாம் அடிச்சுப் போட்டா மாதிரி வலிக்குது. கொஞ்சம் தூங்கிக்குவேன். அதான் சார்..’’
இத்தனை திட்டமிட்டு இதை செய்வதால் அவர் அடையப்போகும் ஆதாயம் மிக சொற்பம். ‘இன்றைக்காவது தூங்கிட முடியுமா?’ என்ற பரிதவிப்பே அதில் தெரிந்தது. அதற்கும் முந்தைய தினம், கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ஒன்றும் முடியாமல் போக, காட்டாங்கொளத்தூர் அருகே சாலையோரம் காரை நிறுத்தி ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகே ஓட்டியதாக சொன்னார். “தூங்கலை.. சும்மா ஒரு மணி நேரம் அப்படியே ஸ்ட்டியரிங்கில தலவெச்சு படுத்திருந்தேன்’’ என்றார்.
ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது, 16 மணி நேரம் ஓட்டுகின்றனர். அப்படி ஓட்டினால்தான் அவர்களால் காருக்கான தவணை கட்டியதுபோக வீட்டுக்கு கொஞ்சம் கொண்டுபோக முடியும். ஆறு லட்சம், எட்டு லட்சம் கொடுத்து கார் வாங்கி, அதை ஓலா, ஊபர் உடன் இணைத்து ஓட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் தவணை கட்டுகிறார். பெரும்பாலும் 50 மாத தவணை.
“அஞ்சு வருஷம் கண்ண மூடிக்கிட்டு சமாளிச்சுட்டா, அதுக்குப் பிறகு தவணைக்காசு மிஞ்சும்’’ என்பது இவர்கள் போடும் கணக்கு. யதார்த்தம் என்னவெனில், பல மாதங்களில் இவர்கள் உரிய தேதிக்கு தவணை கட்ட முடியாமல் போகும். அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். எப்படியோ சமாளித்து ஐந்து ஆண்டுகளை ஓட்டினால், முடிவில் அந்த கார் காயலாங்கடை கண்டிஷனில்தான் இருக்கும். மேற்கொண்டும் இரண்டு ஆண்டுகள் ஓட்டலாம். விற்க சென்றால் டி-போர்டு வண்டிகளின் விலை அடிமாட்டு ரேட்டுக்குப் போகும். அப்புறம் இன்னொரு புது வண்டி, புது தவணை.. இதே சுற்று.
“நம்ம வண்டி… தொழில் நம்ம கைக்குள்ள இருக்கு…. நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.
சேர்ந்தா மாதிரி 8 மணி நேரம் தூங்கி மாசக்கணக்காயிடுச்சு. பீக் ஹவர் சவாரி எடுத்தாதான் நாலு காசு பார்க்க முடியும். அதனால காலையிலயும் தூக்கம் இருக்காது, நைட்டுலயும் தூக்கம் இருக்காது. மதிய நேரத்துல எங்காவது ரெண்டு மணி நேரம் அப்படியே படுத்துக்குறது. சாப்பாடு எல்லாம் வண்டிலேயேதான். இதுல எவனாவது வந்து மோதிட்டா, இல்ல நம்ம மோதி வண்டிக்கு டேமேஜ் ஆயிட்டா அது தனி செலவு.
புலி வால் புடிச்ச கதையா இருக்கு. ஏழெட்டு லட்சம் கடன்ல கார் வாங்கியிருக்கோம். நடுவுல விட்டா, பேங்க்காரன் வண்டியை தூக்கிருவான். இத்தனை வருஷம் உழைச்சதெல்லாம் போயிடும். மீதி கிணறை எப்படியாச்சும் தாண்டிரலாம்’னு ஓட்டுறோம். தாண்டி முடிக்கும்போது வெறும் நடைபொணமாயிடுறோம். இதுக்கு பேசாம ஊர்லயே கழனி வேலை பார்த்துக்கிட்டு இருந்திருக்கலாம் போலருக்கு.’’
சவாரி அல்லது டெலிவரி-க்கு அடிப்படை தேவையான டூ-வீலர் அல்லது காருக்கான மூலதனத்தையும் தொழிலாளியின் சொந்த உழைப்பில் இருந்தே அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
படிக்க :
♦ தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !
♦ ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா ?
ஓலா மற்றும் ஊபர் இரண்டு நிறுவனங்களில் மட்டும் இந்தியாவில் 15 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுனர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் இந்திய சந்தையில் உள்ளே நுழையும்போது, ‘ஒரு ஓட்டுனர் மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக சம்பாதிக்கலாம்’ என்று விளம்பரப்படுத்தினார்கள் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
“நாலஞ்சு நாள் சேர்ந்தா மாதிரி வேலை செஞ்சுட்டு ஒரு நாள் போன்.. கீன் எல்லாத்தையும் ஆஃப் பண்ணி போட்டுட்டு தூங்குவேன் பாருங்க, பேய் மாதிரி தூங்குவேன். நடுவுல எழுந்திருச்சு சாப்பிட போனா தூக்கம் போயிரும்னு ஒரு பிரியாணி பொட்டலத்தை வாங்கி வெச்சுக்கிட்டு தூங்குவேன். எழுந்திருச்சு சாப்பிட்டு அப்படியே படுத்துக்குறது. இப்போ எனக்கு கல்யாணம் ஆகலை. ஆனுச்சுன்னா, இன்னும் கொடுமையா இருக்கும்ல..’’
ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களின் நிலையும் இதுதான். “நினைச்சா வேலை பார்க்கலாம். நினைச்சா லீவு எடுத்துக்கலாம்’’ என்பதை இந்த வேலையின் நேர்மறை அம்சமாக இவர்கள் கருதுகின்றனர். அதுதான் இந்த வேலைக்கு நிச்சயமற்ற தன்மையை வழங்குகிறது. வேலை தருபவர், தன் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய மிக குறைந்த உரிமைகளும் இதில் அகற்றப்படுகின்றன. இவர்கள் ஒப்பந்த கூலிகளை விட மோசம். மாத ஊதியம், வரையறுக்கப்பட்ட வேலைநேரம் மற்றும் வேலை என எதுவுமின்றி, இலக்கு நிர்ணயித்து துரத்தப்படுகின்றனர்.
ஓர் ஒழுங்குப்படுத்தட்ட நிறுவன வரம்புகளின் கீழ் பணிபுரியும் மனோநிலை இவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல அகற்றப்படுகிறது. சொந்த வாழ்வின் உதிரித்தன்மையும், இந்த பணிவாழ்வின் உதிரித்தன்மையும் இணையும்போது, அது ‘இந்த கணத்தை வாழ்ந்து பார்க்கும்’ பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இடம், வலம் கவலை இல்லை. மேல் கீழ் கவலை இல்லை. உரிமை, உரிமை மறுப்பு கவலை இல்லை. மோடி, எடப்பாடி கவலை இல்லை. அக்கவுண்டில் பணம் கிரெடிட் ஆனால், நான் ராஜா. இல்லைன்னா? “அதுக்கு யார் என்னா பண்ண முடியும்? நம்ம உழைச்சாதான் துட்டு. சும்மா உட்கார்ந்துருந்தா துட்டு வருமா?”
தொழிலாளி வர்க்கம் உதிரி மனோபாவத்தில் இருப்பதன் ஆகப்பெரிய பலன், அவர்களே முதலாளிகளின் மனசாட்சியாய் மாறிவிடுவதுதான். வேறுமாதிரி சொல்வதானால், நிச்சயமற்ற தன்மையுடன் இருக்கும் தனது இருப்பை நீட்டித்துக்கொள்ள வேண்டுமானால் முதலாளிகளுக்கு தொழிலாளியும் நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வேண்டும். அல்லது சமூகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதை ஊக்கப்படுத்த வேண்டும். “எல்லாரும் படிச்சுட்டு வேற வேலைக்குப் போயிட்டா ஊர்வேலை எல்லாம் யார் பார்க்குறது?’’ என்று ஆண்ட சாதி பீத்தைகள் பேசுவதைப் போன்றது இது.
ஆனால், நம்முடைய தொழிலாளிகளின் உடல்கள் சாறு எடுக்க பிழியப்படும் கரும்பைப் போல ஆகக்கடைசி சொட்டு வரையிலும் பிழியப்படுகிறது.
நன்றி : முகநூலில் பாரதி தம்பி
ஒலாவை ஒழுங்கு முறை படுத்தும் ஆணையம் தேவை