“உங்கள் முகவரியைக் கண்டுபிடிக்க தாமதமாகிறது. கூகிள் மேப் சரியான வழியைக் காட்டவில்லை. வேண்டுமென்றால் பதிவு செய்திருப்பதை இரத்து செய்யுங்கள் அல்லது பத்து பதினைந்து நிமிடம் காத்திருங்கள்” என்பதை அவர் உடைந்த ஆங்கிலத்தில் உரைக்க வெகுவாக சிரத்தை எடுத்துக் கொண்டார். நான் தமிழில் பேசிய போதும் பிடிவாதமாக ஆங்கிலத்தில் பேச முயற்சித்தது வினோதமாக இருந்தது. ‘ஒருவேளை தமிழரல்லாதவராக இருப்பாரோ’ என நினைத்துக் கொண்டு வேறு வழியின்றிக் காத்திருக்கத் துவங்கினேன்.

ஓலா ஓட்டுநர்களோடு எப்போதுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமிருப்பதில்லை. ஆட்டோ ஓட்டநர்களும் அப்படித்தான் என்றாலும், மேட்டுக்குடியினரின் அல்பத்தனங்களை ஓலா ஓட்டுநர்கள் போல் அவ்வளவு தத்ரூபமாக விவரிக்கும் ‘திறன்’, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாய்ப்பதில்லை. பெரும்பாலும் வாடிக்கையாளரோடு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இல்லை என்பதால் மேட்டுக்குடி ’மேன்மக்களை’ அவர்கள் ‘வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு’ கணக்கில் இடது கையாலேயே ’டீல்’ செய்து விடுகிறார்கள் என்பது எனது துணிபு.

அரிதான சந்தர்ப்பங்களில் வாய்க்கும் ‘சுவாரசியத்தை’ தவற விட விரும்பாததால் காத்திருக்கத் தீர்மானித்தேன். இருபது நிமிடங்கள் கழித்து வண்டி வந்தது – சுசுகி டிசையர். “தம்பி, நான் செடான் புக் செய்யலையே. மினி தானே கேட்டிருந்தேன்” என்றேன்.

“அதெல்லாம் ஆட்டோ அப்கிரேடு ஆயிருக்கும். நீங்க மினிக்கான வாடகையே கொடுத்தால் போதும்” பதிலளித்தவர் இருபதுகளின் துவக்கத்தில் இருந்தார். தலையின் இருபக்கங்களிலும் பின்புறத்திலும் கேசத்தை ஒட்ட வெட்டிருந்தவர் உச்சி மண்டையில் நீளமாக விட்டு அதை பின்புறக் குடுமியாக்கி இருந்தார். கட்டம் போட்ட பருத்திச் சட்டையின் பித்தான்கள் பாதி வரை அவிழ்த்து விட்டு உள்ளே அணிந்திருந்த டீ சர்ட்டின் எழுத்துக்களின் ஒரு பகுதி மட்டும் தெரியுமாறு விட்டிருந்தார்; ஏதோ ஆங்கிலக் கெட்ட வார்த்தை எனப் புரிந்தது. இடக் கையில் ரோலக்ஸ் கடிகாரம்; வலக் கையில் பல வண்ணக் கயிறுகள்.

எனக்குக் கடிகாரங்களின் மேல் கொஞ்சம் கிறுக்கு உண்டு. மட்டுமின்றி பேச்சுக் கொடுக்க அப்போதைக்கு அதில் தான் வாய்ப்பிருந்தது என்பதால் மெல்லத் துவங்கினேன், “தம்பி, இது ஒரிஜினல் ரோலக்சா?”“ஆமா ப்ரோ.. ஒரிஜினல்”

“விலை அதிகமா இருக்குமே?”

“ஒன்றரை லட்சம்”

“இல்லையே இன்னும் கூட இருக்குமே. எங்கே வாங்கினீங்க?”

“ம்ம்… இது ரிஃபர்பிஷ்டு. ஆன்லைன்லே வாங்கினேன். இதே மாடல் புத்தம் புதுசுன்னா மூனு லட்சம்” சாலையில் கவனம் செலுத்தத் துவங்கினார்.

ஓலாவில் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும் எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கு நேரங்காலம் பார்க்காமல் டூட்டி பார்க்க வேண்டும். இவரைப் பார்த்தால் அப்படி உழைப்பவர் போலவும் தெரியவில்லை. இருந்தாலும், “ஒன்றரை லட்சம் சேர்க்க எத்தனை மாசம் டூட்டி பார்த்திருப்பீங்க?” என்றேன்.

”ச்சேச்சே.. இது சொந்த வண்டி ப்ரோ. ட்ரைவர் லீவ்ல போயிருக்கார் அதான் நான் டூட்டி பார்த்திட்டு இருக்கேன்”

“சொந்த வண்டின்னா தவணையா இல்லை முழுசும் சொந்தமா?”

“சொந்த வண்டின்னா.. அப்படியே சொந்த வண்டி இல்லே இது மம்மியோடது. மம்மிக்கு மொத்தம் பதினோரு வண்டி ஓடுது. எல்லாமே ஓலாவில் அட்டாச் பண்ணிருக்காங்க.. நான் சினிமாவுல சான்சுக்காக ட்ரை பண்ணிட்டு இருக்கேன். மம்மி கிட்டே ’கே.டி.எம் ட்யூக் 390’ வாங்கித்தரக் கேட்டேன். அவங்க ட்ரைவருங்க லீவ்ல போகும் போது டூட்டி பார்த்தா ஒரு லட்சம் டவுன் பேமண்ட் தருவேன்னு சொல்லிருக்காங்க.. அதான்”

“அம்மா தான் வசதியாச்சே.. முழு காசையும் கூட தரலாமே”

“ம்ஹூம்… அப்டிலாம் தரமாட்டாங்க. அப்பப்ப டூட்டி பாத்தா ட்யூ கட்றதுக்கு காசு தர்றேன்னு சொல்லிட்டாங்க. எனக்கும் சினிமால சான்ஸ் வந்துட்டு இருக்கு…” என்றவர், தான் திரையின் ஓரங்களில் இடம்பிடித்த சில படங்களின் பெயர்களைச் சொன்னார் – அதில் ஒன்றைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. உப்புமா படங்கள்.

தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. சிறுவயதிலேயே கணவரை இழந்த இவரது தாயார் தன்னந்தனியாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்தக் காலத்தில் சாப்பாட்டுக்கே சிரமப்படும் ஏழைக் குடும்பமாக இருந்துள்ளது. கணவரின் மரணத்திற்குப் பின் முதலில் தெரிந்தவர்களிடம் சீட்டுப் பிடித்து பின் வட்டிக்கு கடன் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை மேலேற்றி இருக்கிறார். இவரது தாயார். ஓலா அறிமுகமான போது பழைய கார் ஒன்றை வாங்கி ஓலாவில் இணைத்து ஆள் போட்டு ஓட்டியிருக்கிறார். பின் வெகு சில ஆண்டுகளிலேயே பத்து கார்களுக்கு மேல் வாங்கி விட்டுள்ளார். கார்கள் ஒவ்வொன்றுக்கும் மாற்று ஓட்டுனர்கள் போட்டு இரவு பகலாக ஓடிக் கொண்டிருந்தாலும் வட்டித் தொழிலை இன்னும் விடவில்லை. ஒரே பிள்ளை என்பதால் செல்லம் அதிகம் என்பதை இவரோடு பேசியதில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

இறங்கும் இடம் வந்தது. “இங்கேருந்து திரும்பிப் போக உங்களுக்கு சவாரி கிடைக்கும் தானே?”

“ப்ரோ மணி எட்டு ஆயிடிச்சி. இதுக்கு மேல எவன் ஓட்டுவான்? பிரண்டுக்கு இன்னிக்கு பர்த்டே பார்டி.. அப்டியே போயிட்டு அங்கேயே தங்கிடுவேன்”

வாடகையைக் கொடுத்து விட்டு இறங்கினேன்.

0o0o0o0

வேலை முடிந்து திரும்பும் போதும் ’ஓலா’தான். இந்த முறை நடுத்தர வயதுக்காரர். மோடியில் ஆரம்பித்து டொனால்ட் ட்ரம்ப் வரை போகிற போக்கில் துவைத்துக் காயப் போட்டுக் கொண்டே வந்தார். என்னுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சடார் சடாரென பேச்சின் பொருளை மாற்றிக் கொண்டே வந்தார். குறுக்கிட்டுப் பேச வாய்ப்பே இல்லாத கடுப்பில் கொஞ்சம் கண்ணயரலாம் என இருக்கையை பின்னுக்கு இழுத்து சாய்ந்தேன். திரும்பிப் பார்த்தவர்,

“சார் தப்பா நினைச்சிக்காதீங்க.. மணி பதினொன்னு ஆயிடிச்சி… நீங்க தூங்கறத பார்த்தா எனக்கும் தூக்கம் வந்துடும்.. கொஞ்சம் பேசிட்டே வாங்களேன் ” என்றார்

ஒருவழியாக பேச வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கையை மீண்டும் முன்னுக்கு இழுத்துக் கொண்டே, “பதினொன்னு தானே ஆச்சி.. அதுக்குள்ளே தூக்கமா?” என்றேன்.

”நேத்திக்கு காலைல வண்டில ஏறுனேன். இப்ப வரைக்கும் சாப்பிடவும் கக்கூசும் தான் இறங்கியிருக்கேன். தொடர்ந்து சவாரி ஓடிட்டு இருக்கு.. இனிமே ஏர்போர்ட் சவாரி மாட்டும்.. எப்படியும் விடியற வரைக்கும் ஓட வேண்டியிருக்கும்” என்றார்.

48 மணி நேரம். எப்படி ஒரு மனிதனால் தூங்காமல் வேலை பார்க்க முடிகிறதென்று ஆச்சர்யமானேன். “உடம்புக்கு எதுனா ஆயிடப் போகுதுங்க.. இடையில ரெஸ்ட் எடுத்துட்டு ஓட்டலாமே”

“ரெஸ்ட்டெல்லாம் எடுக்கிற நிலைமைல இல்ல சார்.. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே ரெண்டு  லட்சம் சேர்க்க வேண்டியிருக்கு.. என்னா பன்றதுன்னே தெரியலை” என்றார்.

”ஏன் வண்டி வாங்கின கடனை அடைக்கிறதுக்கா”

“இல்லைங்க.. அதெல்லாம் ரெண்டு மாசம் முன்னவே அடைச்சிட்டேன்.. இது வேற விசயத்துக்காக” என்றவர் விவரங்களைச் சொன்னார்.

இவர் ஊட்டியைச் சேர்ந்தவர். இவரின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியில் ஆசிரியப் பணி கிடைத்துள்ளது. முதலில் மேட்டுப்பாளையத்தில் பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை வாங்கவே சில லட்சங்களை வட்டிக்கு வாங்கி லஞ்சமாக கொடுத்துள்ளார். அந்தக் கடனை அடைப்பதற்கே மனைவியின் நகைகளும், ஊட்டியில் இருந்த சிறிய வீட்டையும் விற்றுள்ளனர். அதில் எஞ்சிய சொற்ப தொகையைக் கொண்டு தவணையில் கார் ஒன்றை வாங்கி மேட்டுப்பாளையத்தில் ஓட்டி வந்துள்ளார்.

அந்தக் கடன் அடைந்து கொண்டிருந்த போதே திடீரென கும்மிடிப்பூண்டிக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றுக்கு இவரது மனைவியை பணியிட மாற்றம் செய்துள்ளனர். படித்துக் கொண்டிருந்த பிள்ளைகளை  மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் பொறுப்பில் விட்டுவிட்டு மனைவியோடு சென்னை வந்துள்ளார். மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கே பணியிட மாற்றம் வேண்டுமென்றால் இரண்டு லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர் அதிகாரிகள். அதற்காகவே நேரங்காலம் தெரியாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

”சரி பிள்ளைகளையும் சென்னைக்கே கூட்டி வந்திருக்கலாமே”

“இந்த ஊரு செலவு நமக்கு கட்டுப்படி ஆகாதுங்க. பசங்க படிப்பு… வீட்டு வாடகை எல்லாம் கொடுத்த பின்னே கையில் சல்லிக்காசு மிஞ்சாது. ரெண்டும் பொட்டைப் பிள்ளைங்க.. மூத்தது வேற வயசுக்கு வந்துடிச்சி.. நாளை பின்னே ஒரு நகை நட்டு சேர்க்க வேண்டாமா? இங்கே பத்தாயிரம் கொடுத்தா கிடைக்கிற அதே வீடு எங்க ஊர்ல மூவாயிரம் கொடுத்தாலே கிடைக்கும். சாப்பாட்டு செலவுக்கு இங்கே மாசம் பத்தாயிரம்னா ஊர்லே நாலஞ்சாயிரத்துல முடியும். அதும் போக அலைச்சல். எல்லா சொந்தமும் ஊர்ல இருக்காங்க. ஒரு நல்லது கெட்டதுக்கு குடும்பத்தோட போயி வரணும்னா பத்தாயிரம் காலி ஆவுது. இந்த ஊரு நமக்கு சரிப்படாதுங்க.” என்றார்.

இறங்கும் இடம் வந்தது. வாடகையைக் கொடுத்து விட்டு இறங்கினேன்.

– தமிழ்  கார்க்கி
( உண்மைச் சம்பவம்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க