ஐரோப்பாவின் நாஸ்திக – முஸ்லிம் நாடு! அல்பேனியா பயணக்கதை – 2

முதல் பாகம்

Avatar
கலையரசன்

ரோப்பாவில் உள்ள முஸ்லிம் நாடு எது? அல்பேனியா!
உலகின் முதலாவது நாத்திக நாடு எது? அல்பேனியா!

இவை அல்பேனியா பற்றி பெரும்பாலானோர் அறிந்திராத தகவல்கள். அந்த நாட்டில் எழுபது சதவீதமானோர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகிறவர்கள். குறைந்த பட்சம் பெயரளவிலாவது. ஐரோப்பாவில் பல நாடுகளில் மசூதிகள் இருந்த போதிலும், தொழுகை நேரம் ஒலிபெருக்கியில் குரான் ஓதி அழைப்பு விடுப்பதை அல்பேனியாவில் தான் கண்டேன். ஒவ்வொரு தடவையும் மசூதி ஒலிபெருக்கியின் ஊடாக காற்றில் தவழ்ந்து வரும் அரபி வசனங்களை கேட்கும் பொழுது மத்திய கிழக்கில் உள்ள அரபி- முஸ்லிம் நாடொன்றுக்கு வந்து விட்ட பிரமை உண்டாகிறது.

கவலைப்படாதீர்கள், இது ஐரோப்பா தான். நம்மைப் போலவே, பெரும்பாலான அல்பேனிய முஸ்லிம்களுக்கும் அரபி மொழி தெரியாது. அத்துடன் தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்பதற்காக விழுந்தடித்துக் கொண்டு மசூதிக்கு விரையும் யாரையும் நான் காணவில்லை. பொது இடங்களில் எல்லோரும் தத்தமது வேலைகளில் ஆர்வமாக இருக்கிறார்களே தவிர மதக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்தளவுக்கு மத நம்பிக்கை கொண்டவர்களை காண்பது அரிது.

அல்பேனியா குறைந்தது இரண்டு தசாப்த காலமாக உலகில் ஒரேயொரு நாத்திக நாடாக இருந்தது. கவனிக்கவும்: “ஒரேயொரு”. அதாவது உலகில் வேறெந்த நாட்டிலும் மதம் முற்றாகத் தடைசெய்யப் பட்டு, அனைத்து மத வழிபாட்டுஸ்தலங்களும் மூடப்படவில்லை. புரட்சி நடந்த காலங்கள் விதிவிலக்கு. பிரெஞ்சுப் புரட்சி முதல் ரஷ்யப் புரட்சி வரையில் மத நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக உண்டான விளைவுகள் வேறு விடயம்.

ஒரு தேசத்தின் அரசாங்கமே அரசமைப்பு சட்டம் மூலம் மதங்களை தடைசெய்தமை அல்பேனியாவில் மட்டுமே நடந்துள்ளது. சீனாவின் கலாச்சாரப் புரட்சி பாணியில் அல்பேனிய இளைஞர்கள் தான் தீவிரமான நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்கு தாராளமாக சுதந்திரம் வழங்கப்பட்டது. தேவாலயங்கள், மசூதிகள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. சில இடித்து நொறுக்கப்பட்டன. எஞ்சியவை மியூசியம், ஹோட்டல், ரெஸ்டாரன்ட், இளைஞர் விடுதி, உள்ளரங்க விளையாட்டுத் திடல் என பொது மக்களின் கேளிக்கை நிலையங்களாக மாற்றப் பட்டன. குறிப்பிட்ட அளவு பாதிரிகள், இமாம்கள் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

படிக்க:
♦ என்ன நடக்கிறது சிரியாவில் ?
♦ நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை

தொண்ணூறுகளுக்கு பிறகு அல்பேனியாவில் மீண்டும் மதச் சுதந்திரம் உள்ளது. மசூதிகள், தேவாலயங்கள் புதிது புதிதாக முளைக்கின்றன. இருப்பினும் மக்கள் மத்தியில் மத நம்பிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. அதற்குக் காரணம், இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பொருளாதார குறிக்கோள் மட்டுமே மேலோங்கிக் காணப் படுகின்றது. அதற்குக் காரணம் “என்வர் ஹோஷாவின் சர்வாதிகாரமா அல்லது அல்பேனியர்களின் அலட்சியமா?” என்று பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காலம் மாறி விட்டது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சமுதாயம் இன்று இல்லை. அது காலவோட்டத்தில் பல்வேறு கலாச்சார மாற்றங்களுக்கு உட்பட்டு விட்டது.

அல்பேனியா ஏன், எவ்வாறு உலகின் ஒரேயொரு நாத்திக நாடானது?

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக அறுபதுகளில் குருஷேவின் சோவியத் யூனியனுடனான அனைத்து தொடர்புகளையும் முறித்துக் கொண்ட அல்பேனியா, மாவோவின் சீனாவை மட்டும் நட்பு நாடாக்கிக் கொண்டது. அந்தக் காலகட்டத்தில் சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் தாக்கம் அல்பேனியாவில் எதிரொலித்தது. இரண்டாவது காரணம் அன்னை தெரேசா!

உலகப் புகழ் பெற்ற கத்தோலிக்க பெண் துறவியான தெரேசா மாசிடோனியாவில் பிறந்தவர். ஆனால் அவரது சிறுவயதில் பெற்றோருடன் அல்பேனியாவுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தார். தெரேசா கன்னியாஸ்திரியான பின்னர் இந்தியா சென்று தங்கிவிட்ட போதிலும், அவரது தாயாரும் பிற குடும்ப உறுப்பினர்களும் அல்பேனியாவில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவரது தாயார் மரணப் படுக்கையில் இருந்த நேரம் தெரேசா விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்தக் காலத்தில் எந்த நாட்டுடனும் சேராமல் தனிமைப் படுத்தப் பட்டிருந்த அல்பேனியா யாரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அதே போல யாரையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. (விதிவிலக்குகள் இருந்தன.) அதனால் தெரேசா அம்மையாருக்கும் உள்நுழையும் விசா கிடைக்கவில்லை, அவரது அம்மாவுக்கும் வெளியேற அனுமதி கொடுக்கவில்லை.

இருந்தாலும் தெரேசா விவகாரம் என்வர் ஹோஷாவின் கவனத்தை திசைதிருப்பியது. அதுவரை காலமும் தெரேசா என்றால் யார் என்று தெரியாமல் இருந்தது. தற்போது அவர் ஒரு “மேற்குலக ஏகாதித்திய ஏவலாளி” என்று சந்தேகப் பட வைத்தது. பாரிசில் இருந்த அல்பேனிய தூதரகத்தில் தெரெசாவுக்கு விசா பெற்றுக் கொடுப்பதில் பிரெஞ்சு ஜனாதிபதியின் அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டது. அதனால், மேற்குலக ஏகாதிபத்தியம் தெரேசாவை பகடைக் காயாக பயன்படுத்தி அல்பேனிய உள்விவகாரங்களில் தலையிட முனைவதாக சந்தேகிக்க வைத்தது.

அன்னை தெரேசா விசா பிரச்சினையின் எதிர்விளைவாக புதிய அரசமைப்பு சட்டம் மூலம் “நாத்திக நாடு” பிரகடனப் படுத்தப் பட்டிருக்கலாம். (சில வருடங்களின் பின்னர் போப்பாண்டவராக தெரிவான போலிஷ்காரர் ஜோன் போல் மூலம் போலந்து கம்யூனிச ஆட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டமை இங்கே குறிப்பிடத் தக்கது.) மதம் என்பது மக்களின் உணர்வுபூர்வமான விடயம் தான். அந்தக் காலத்திலும் பெரும்பாலான அல்பேனியர்கள் தீவிர மத நம்பிக்கையாளர்கள் தான். ஆனால், அல்பேனியாவில் குறைந்தது இருபது வருட காலமாவது மதத்தை மக்களிடம் இருந்து பிரித்து வைத்திருந்தமை மிகப் பெரிய சாதனை தான்.

படிக்க:
♦ லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !
♦ “ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்

அல்பேனியா ஒரு “முஸ்லிம் நாடு” தான். ஆனால், தற்கால அரசின் அமெரிக்க சார்புத்தன்மை காரணமாக இஸ்ரேலுடனும் நட்புறவு பேணத் தயங்கவில்லை. ஜனவரி (2020) மாதம் நான் அல்பேனியா பயணம் சென்றிருந்த சமயம், ஒரு சர்வதேச இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டிருந்தது. திரானாவில் இருந்த ஈரானிய தூதுவரலாயம் மூடப்பட்டு அதன் தூதுவரும் ஊழியர்களும் நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்டிருந்தனர். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான கெடுபிடிப் போரின் விளைவு என்பது தெளிவானது.

அந்த சம்பவத்தை அடுத்து, அமெரிக்காவுக்கு விசுவாசமான அல்பேனிய அரசு, பிற உலக நாடுகள் எதுவும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்தது. ஈரானுக்கு எதிரான கிளர்ச்சிக்குழுவான முஜாஹிதீன் கால்க் (MEK) இயக்கம் தளம் அமைப்பதற்கு பூரண ஒத்துழைப்புக் கொடுத்தது. ஆயுதபாணிகளான மூவாயிரம் முஜாஹிதீன் போராளிகள் இரகசிய தளம் ஒன்றில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் முன்பு ஈராக்கில் முகாமிட்டு இருந்தனர். பின்னர் ஈராக் அரசின் நெருக்குவாரம் காரணமாக வெளியேற்றப் பட்டனர்.

அல்பேனிய தேசிய இனம் மொழி அடிப்படையில் உருவானது. ஒரே மொழி (அதிலும் இரண்டு பிரிவுகள்) மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கிறது. அல்பேனியர்களை மத அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை. கிறிஸ்தவர்கள் சிறுபான்மை. ஆனால், கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்கள், (கிரேக்க) ஒர்தொடக்ஸ் என இரண்டாகப் பிரிந்துள்ளனர். துருக்கி ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு முன்னர் அனைத்து அல்பேனியர்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். ஓட்டோமான் ஆட்சியில் பதவிகள், வசதி வாய்ப்புகள், மற்றும் வரிச்சலுகைகள் காரணமாக பெரும்பாலானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

ஓட்டோமான் ஆட்சியாளர்கள் மொழியையோ அல்லது இனத்தையோ அங்கீகரிக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் அல்பேனியாவில் மூன்று இனப் பிரிவுகள் (உண்மையில் மதப் பிரிவுகள்) இருந்தன. துருக்கியர்கள், இலத்தீனியர்கள், கிரேக்கர்கள். உண்மையில் அங்கு மிகச் சிறுபான்மையான துருக்கி மொழி பேசுவோர் இருந்த போதிலும், இஸ்லாமியர் அனைவரும் “துருக்கியர்” என அழைக்கப் பட்டனர். அதே போன்று கிரேக்க மொழி பேசும் சிறுபான்மையினர் இன்னமும் அங்கிருந்த போதிலும், ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவத்தை பின்பற்றிய எல்லோரும் “கிரேக்கர்கள்” என அழைக்கப் பட்டனர். அதே போன்று கத்தோலிக்கர்கள் லத்தீனியர்கள் (அல்லது இத்தாலியர்?) என அழைக்கப் பட்டனர்.

மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தரவு ஓர் உண்மையை உரைக்கிறது. உண்மையில் இன்றுள்ள தேசிய இனங்கள் யாவும் கலப்பினங்கள் தான். அன்று மதத்தை மட்டும் முக்கியமாகக் கருதிய காலத்தில் இருந்து இன்று மொழியை முக்கியமாகக் கருதும் காலத்திற்கு வந்திருக்கிறோம். ஆனால், ஒரே மொழி பேசும் அனைவரும் ஒரே இனம் எனும் கோட்பாடு சரியானதா? நிச்சயமாக இல்லை. அல்பேனியா சுதந்திரம் அடைந்த காலத்திலும் துருக்கியர் என்ற சிறுபான்மை இனம் இருந்தது. ஆனால், அவர்கள் எல்லோரும் இனத்தால் துருக்கியர் அல்ல. ஓட்டோமான் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் பட்டம், பதவிகளுக்கு ஆசைப்பட்டு, துருக்கி மொழியை தாய்மொழியாக ஆக்கிக் கொண்ட அல்பேனியர் ஏராளம் பேர் இருந்தனர். தற்காலத்தில் தமிழர்களில் சிலர் ஆங்கிலத்தை முதன் மொழியாக கொண்டிருக்கவில்லையா? அது போலத் தான் இதுவும்.

படிக்க:
♦ நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !
வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை

பயணத்தின் போது நான் நேரில் கண்ட அனுபவம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஜீரோகாஸ்டர் மாவட்டம் தெற்குப் பகுதியில் கிரேக்க நாட்டு எல்லைக்கு அருகில் உள்ளது. ஒரு காலத்தில் கிரீஸ் அதற்கு உரிமை கோரியிருந்தது. அங்கு கிரேக்க மொழி பேசும் சிறுபான்மையின மக்கள் வசிப்பது உண்மை தான். கிரேக்கர்கள் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள். ஆனால் அந்த மத நம்பிக்கை கொண்ட அனைவரும் கிரேக்கர்கள் அல்ல. அல்பேனிய மொழி பேசும் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்களும் உண்டு.

நான் ஒரு மலைப் பகுதி கிராமத்தில் ஒரு குடும்பம் நடத்தும் விடுதியில் தங்கியிருந்தேன். அன்று நான் மட்டுமே ஒரேயொரு விருந்தாளி என்பதால் காலை உணவு சாப்பிட அழைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களது மகன் மட்டுமே ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்த படியால், அந்தப் பகுதி மக்களின் இனம், மதம் பற்றி விசாரித்தேன். அந்தக் குடும்பத்தினர் மதத்தால் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள், மொழியால் அல்பேனியர்கள். கிரேக்க மொழி பேசும் மக்களும் அங்கு வாழ்கிறார்களாம். அவர்கள் பரம்பரை பரம்பரையாக அல்பேனியாவில் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக் காலமாக சிலர் கிரேக்க பாஸ்போர்ட் எடுத்து வைத்திருக்கிரார்களாம். அதன் மூலம் ஐரோப்பாவுக்கு இலகுவாக பயணம் செய்ய முடியும்.

அது சரி, கத்தோலிக்கர்கள் எவ்வாறு இத்தாலியர் (லத்தீனியர்) ஆவார்கள் என்று நீங்கள் கேட்கலாம். கத்தோலிக்க மதத்தவர்கள் கரையோரப் பகுதிகளில் பெருமளவில் வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு டூரேஸ் (Durres) பட்டினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது தலைநகர் திரானாவில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைப் பட்டினம். எனது பயணத்தின் கடைசி நாள் அங்கு தங்கியிருந்து தான் விமான நிலையத்திற்கு சென்றேன்.

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, திரானா இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய நகரம். ஆனால் டூரேஸ் இரண்டாயிரம் வருடங்களாக நகரமாக இருந்து வருகின்றது! இன்றைக்கும் அங்கே ரோமர் காலத்தில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானம் (Amphitheatre) உள்ளது. பெருமளவு இடிபாடடைந்து விட்டாலும் அதன் வடிவம் மாறாமல் உள்ளது. அதற்கு எதிர்ப் புறத்தில் பைசாந்தின் கிரேக்கர்கள் (அவர்களும் தம்மை ரோமர்கள் என்றே அழைத்துக் கொண்டனர்.) கட்டிய Forum எனும் சந்தை மைதானம் உள்ளது. ஒன்றிரண்டு தூண்களும் பளிங்குக்கல் தரையும் இன்னமும் அங்குள்ளன.

இன்னும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமென்றால் கடற்கரைப் பக்கம் சென்று பாருங்கள். அங்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வெனிஸ் நாட்டவர் கட்டிய காவற்கோபுரம் இன்னமும் உருக்குலையாமல் அங்கே உள்ளது. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் இத்தாலி என்ற தேசம் இருக்கவில்லை. ஆனால், வெனிஸ் என்ற நாடு இருந்தது. அதனை பிற்காலத்திய ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளின் முன்னோடி எனலாம். மத்தியக் கடல் கரையோரத்தில் பல பகுதிகளில் வெனிஸ் வணிகக் காலனிகள் இருந்தன. ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு பின்னர் அவை மறைந்து விட்டன. இருப்பினும் பல நூறு வருடங்களாக அங்கு வாழ்ந்த மக்கள் இத்தாலிய(வெனிஸ்) வம்சாவளியினராக அல்லது இத்தாலிய கலப்பாக இருக்கலாம் அல்லவா?

இன்றைய டூரேஸ் நகரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பங்கினர் இத்தாலியர் என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அங்குள்ள ரெஸ்டாரன்ட் வணிகம் பெரும்பாலும் இத்தாலிய பயணிகளை குறிவைத்தே இயங்கி வருகின்றது. காணும் இடமெங்கும் பீட்சா கடைகள். உண்மையில் அங்கே மிகவும் மலிவான, தரமான பீட்சா உணவு கிடைக்கிறது. நான் அங்கு சென்றிருந்த நேரம் கடற்கரையில் திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. புதிதாக நடைபாதைகள் கட்டப் பட்டுக் கொண்டிருந்தன. கடற்கரை மணல் கூட இனிமேல் தான் கொண்டு வந்து தான் கொட்டுவார்கள் போலிருந்தது. அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் அல்ல. அநேகமாக கடற்கரையில் பொழுதுபோக்க வந்தவர்கள் அனைவரும் உள்நாட்டவர் தான்.

டூரேஸ் கடற்கரையோரமாக அல்பேனிய விடுதலைப்போர் தியாகிகளை நினைவுகூரும் சிலை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அது அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் கட்டியது என்பது வடிவத்தை பார்த்தாலே தெரிகிறது. அல்பேனியாவை தற்போது கம்யூனிச விரோத அரசியல்வாதிகள் ஆண்டு வந்தாலும், இது போன்ற நினைவுச்சின்னங்களை அப்படியே வைத்திருக்கிறார்கள். லெனின், ஸ்டாலின், ஹோஷா சிலைகள் ஏற்கனவே அகற்றப் பட்டு விட்டன. அதனால், தற்போது அந்நாட்டுக்கு செல்லும் யாருக்கும் முன்னொரு காலத்தில் அது ஒரு கம்யூனிச நாடாக இருந்தது என்ற எண்ணம் தோன்றாது. ஆனாலும், அல்பேனிய விடுதலைப் போரில் கம்யூனிசப் போராளிகளின் பங்களிப்பை யாராலும் அழிக்க முடியவில்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க