Avatar
கலையரசன்

“அன்னை தெரேசா விமான நிலையம் உங்களை வரவேற்கிறது!” அல்பேனியாவின் தலைநகர் திரானாவின் நவீன சர்வதேச விமான நிலையத்திற்கு அன்னை தெரேசா பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்தியாவில் அநாதை சிறுவர்களுக்கு தொண்டு செய்து உலகப் புகழ் பெற்ற அன்னை தெரேசா இனத்தால் அல்பேனியர். ஆனால் அவர் மாசிடோனியா தலைநகர் ஸ்கோப்யேவில் பிறந்து வளர்ந்தவர். இனத்தால் அல்பேனியர் என்றாலும் இன்றைய அல்பேனிய தேசத்துடன் சம்பந்தம் அற்றவர். ஆனாலும் என்ன? அல்பேனிய தேசியவாதிகள் போற்றுவதற்கு ஒரு பிரபலமான புள்ளி தேவை. அவ்வளவு தான்.

அல்பேனியாவின் உண்மையான பெயர் ஷ்கிபேரிசே (Shqipërisë)! அவர்கள் பேசும் மொழியும் அப்படித்தான் அழைக்கப்படுகிறது. ஆனால் வெளியுலகில் பிற மொழியினர் அல்பேனியா என அழைத்து வந்தனர். ரோம சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இலிரியர் என அழைக்கப் பட்டனர். அவர்கள் பேசிய இலிரி மொழி அழிந்து விட்டது. இன்றைய அல்பேனியர் தாமே பண்டைய இலிரிய இனத்தின் வம்சாவளியினர் என உரிமை கோருகின்றனர். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், இன்றைய அல்பேனியர்கள் ஒரு கலப்பினமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அல்பேனியா ஓர் ஐரோப்பிய நாடாக இருந்த போதிலும், வெளியுலகில் அதைப் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் மிகக் குறைவு. அது திரானா விமான நிலையத்தை பார்த்தாலே புரிந்து விடுகிறது. வான்வழிப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் அங்கு வரும் பயணிகளினதும், விமானங்களினதும் எண்ணிக்கை மிகக் குறைவு. அதனால் ஓர் உள்ளூர் விமான நிலையம் போல காட்சியளிக்கிறது. ஐரோப்பியக் கண்டத்தில், லக்ஸம்பேர்க்கிற்கு அடுத்த படியாக அல்பேனியா தான் பரப்பளவில் சிறிய நாடு. (அதாவது சுயாதீனமாக இயங்கக் கூடிய இறைமையுள்ள நாடு. மொனாக்கோ, வாட்டிகன் போன்ற சிறிய “தேசங்கள்” பிற நாடுகளில் தங்கியுள்ளன.)

அல்பேனிய நாணயத்தின் பெயர் லெக் (Lek). அண்ணளவாக 1 யூரோவுக்கு 120 லெக் மாற்றிக் கொடுக்கிறார்கள். நாணய மாற்று சேவையில் யூரோ சில்லறையாக கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் நாடு முழுவதும் ஜெர்மன், கிரேக்க வங்கிகளின் கிளைகள் உள்ளன. அவற்றின் ATM ல் ஐரோப்பிய வங்கி அட்டையை போட்டு பணம் எடுக்கலாம். அல்பேனியா இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. ஆனால், பல துறைகளில் ஐரோப்பிய முதலீடுகள் வந்து குவிகின்றன. விமான நிலையத்திற்கு அருகில் பன்னாட்டு நிறுவனங்களின் சுதந்திர வர்த்தக வலையம் உள்ளது.

அல்பேனியா ஒரு காலத்தில் இத்தாலியின் காலனி போன்று கருதப் பட்டது. முதலாம் உலகப்போருக்கு பின்னர் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி அல்பேனியாவுக்கு உரிமை கோரினார். அதை செயலில் காட்டுவதற்காக இராணுவத்தை அனுப்பி அல்பேனியாவை ஆக்கிரமித்து இத்தாலியுடன் இணைத்துக் கொண்டார். அன்று எந்த நாடும் இத்தாலியின் அடாத்தான செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பனிப்போரின் முடிவில் அல்பேனியாவில் முதலிட்ட முதலாவது மேற்குலக நாடும் இத்தாலி தான். இத்தாலியின் வணிக நிறுவனங்கள் அல்பேனியாவின் மலிவு விலைக் கூலி உழைப்பை பயன்படுத்திக் கொண்டன. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இத்தாலியர்கள்.

படிக்க:
♦ ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்
♦ ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

அல்பேனியாவில் சிறிய அளவில் எண்ணை வளம் உள்ளது! ஏற்கனவே பெட்ரோலிய தொழிற்துறை சிறப்பாக இயங்கி வருகின்றது. நெதர்லாந்தின் ஷெல் நிறுவனம் இன்னும் பல இடங்களில் எண்ணை எடுக்கலாமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அல்பேனியாவின் பொருளாதார முக்கியத்துவம், அதனால் ஏற்பட்டு வரும் அபிவிருத்தி பற்றி ஓரளவு புரிந்து கொள்ளலாம். அங்கு முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையை விட நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் என்ன? அல்பேனியா இன்னமும் ஐரோப்பாவில் மிகவும் வறுமையான நாடாக கணிப்பிடப் படுகின்றது. அத்துடன் கிரிமினல் குற்றங்கள் மலிந்த நாடாகவும் வெளியுலகில் கருதப்படுகின்றது.

விமான நிலையத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திரானா நகருக்கு செல்வதற்கு தனியார் மினி பஸ் சேவை உள்ளது. பயணக் கட்டணம் முன்னூறு லெக்(2,5 யூரோ) மட்டுமே. இந்த நாட்டில் யாருக்கும் சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றிய விழிப்புணர்வு இல்லைப் போலிருக்கிறது. போகும் வழி எங்கும் ஓடைகளிலும், ஆறுகளிலும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடந்தன. இதை நாடு முழுவதும் கண்டிருக்கிறேன்.

அதே போல இன்னொரு எதிர்மறையான அம்சத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். நகரத் தெருக்களில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் வாகனம் ஓட்டுகிறார்கள். இதை ஏற்கனவே சென்னைத் தெருக்களில் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு வித்தியாசம். சென்னையில் பாதசாரிகள் பச்சை விளக்கில் பாதையை கடக்கும் நேரத்திலும் வாகனத்தை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு வருவார்கள். ஆனால் அல்பேனியாவில் பாதசாரிகளுக்கு வழிவிட்டு மெதுவாக ஓடுகிறார்கள். மற்றும்படி இரண்டு நாடுகளிலும் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் பண்பு ஒரே மாதிரியாக உள்ளது. திரானாவில் நிறையப் பேர் சைக்கிள் பாவிக்கிறார்கள். சைக்கிள் ஓடுவதற்கு தனியான பாதை ஒதுக்கி இருக்கிறார்கள்.

எயர்போர்ட் பஸ் நேராக திரானா நகர மத்திக்கு வருகின்றது. ஏற்கனவே இணையம் மூலம் அருகில் இருந்த ஹொஸ்டல் பதிவு செய்திருந்த படியால் அதிக தூரம் நடக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களும் நகர மத்திக்கு அருகிலேயே உள்ளன. எல்லாவற்றையும் நடந்து சென்றே பார்க்கலாம். Google map பார்த்தே தெருக்களை கண்டுபிடிக்கலாம்.

அல்பேனிய மொழி லத்தீன் எழுத்துக்களை பயன்படுத்துவதால் இடங்களின் பெயர்களை வாசித்து அறிவதில் சிரமம் இல்லை. (சில எழுத்துக்களின் உச்சரிப்பு வித்தியாசம்.) இடம் தெரியாவிட்டால் யாரையாவது கேட்கலாம். அல்பேனியாவில் பரவலாக ஆங்கிலம் பேசுகிறார்கள். எல்லோரும் அல்ல. பெரும்பாலும் இளைஞர்களுக்கு ஓரளவேனும் ஆங்கிலம் தெரிகிறது. வயதானவர்கள் அல்பேனிய மொழி மட்டுமே பேசுவார்கள். ஆனாலும், தம்மால் முடிந்த அளவுக்கு சைகை மொழியில் காட்டி உதவுகிறார்கள். தெருவில் போகும் போலீஸ்காரரை கேட்டாலும் உதவுவார்கள். அநேகமாக எல்லாப் போலீஸ்காரர்களுக்கும் ஆங்கிலம் தெரியும்.

படிக்க:
♦ “ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்
♦ யானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் | படக்கட்டுரை

அல்பேனியா ஒரு செலவு குறைந்த நாடு. ஆகவே, நாடு முழுவதும் எட்டு யூரோவில் இருந்து இருபது யூரோக்குள் ஒரு ஹொஸ்டலில் தங்கலாம். அதை விட பணக்கார வாடிக்கையாளர்களுக்கான ஆடம்பர ஹோட்டல்கள் நிறைய உள்ளன. நாடு முழுவதும் சிறிய நகரங்களில் கூட புதிதாக ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. அதைத் தவிர கரையோர பகுதிகளில் நிறைய ரிசொர்ட்கள் முளைக்கின்றன. சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்த அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் அல்பேனியா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. எதிர்காலத்தில் அது மாறலாம்.

பிற ஐரோப்பிய நகரங்களை பார்த்தவர்களுக்கு திரானா ஏமாற்றம் அளிக்கலாம். அது மத்தியதரைக் கடலோர நகரங்களின் தோற்றத்தைக் கொடுக்கிறது. அங்கு குளிரை விட வெயில் கடுமையாக இருக்கும். அதனால் எல்லாக் கட்டிடங்களிலும் ஏசி பொருத்தி இருக்கிறார்கள். நான் தங்கியிருந்த எந்த விடுதியிலும் வெப்பமூட்டும் சாதனத்தைக் காணவில்லை. உண்மையில் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அல்பேனியாவில் குளிர் குறைவு தான்.

திரானா இத்தாலிய காலனிய காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகரம். அங்குள்ள அழகான கண்ணைக் கவரும் அமைச்சு அலுவலக கட்டிடங்களும் இத்தாலியர் கட்டியவை தான். நகர மத்தியில் ஸ்கந்தர்பேர்க் சதுக்கம் உள்ளது. அதன் தொடக்கத்தில் அல்பேனிய தேசிய நாயகன் ஸ்கந்தர்பேர்க் சிலை உள்ளது. அதன் அருகில் ஒரு பழைய மசூதி உள்ளது. அதற்கும் அருகில் ஒபெராவும், புத்தகக் கடையும் உள்ளது. அந்தக் கடையில் அல்பேனியா பற்றி எழுதப்பட்ட அனைத்து ஆங்கில நூல்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. அத்துடன் இத்தாலி மொழி நூல்களும் உள்ளன.

விசாலமான ஸ்கந்தர்பேக் (Skanderbeg) சதுக்கத்திற்கு அருகில் முன்பொரு காலத்தில் பெரியதொரு ஸ்டாலின் சிலை இருந்தது. அதை அகற்றி விட்டார்கள். அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் ஒன்றுகூடும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன.

அந்தக் காலத்தை நினைவுகூருவதற்கு எஞ்சியுள்ளது ஒரு மியூசியம் மட்டுமே. சதுக்கத்தின் மறு முனையில் தேசிய சரித்திர அருங்காட்சியகம் உள்ளது. அதில் சோஷலிச நாடாக இருந்த காலத்தில் எடுத்த படங்களும் வைக்கப் பட்டிருந்தன. நான் சென்றிருந்த நேரம் மியூசியத்தை பூட்டி திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன். மியூசிய கட்டிடத்தின் முன்புற வாசலுக்கு மேலே ஒரு பிரமாண்டமான ஓவியம் வரையப் பட்டுள்ளது. சோஷலிச யதார்த்தவாத ஓவியம் என்று சொல்லும் தரத்தில், அல்பேனிய கலாச்சார உடையில் ஆயுதமேந்திய மனிதர்கள் காணப்படுகின்றனர். அது அல்பேனிய விடுதலைப் போராட்டத்தை குறிப்பதால் இன்னமும் அப்படியே அங்குள்ளது.

ஸ்கந்தர்பேக், ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஓட்டோமான் துருக்கியருக்கு எதிராக அல்பேனிய இனக்குழுக்களை ஒன்று திரட்டி போராடினார். ஸ்கந்தர்பேக் விடுதலை பெற்றுத் தந்த அல்பேனிய இராச்சியம் சில தசாப்த காலமே நீடித்தது. அதற்குப் பின்னர் ஓட்டோமான் சாம்ராஜ்ய ஆளுகையின் கீழ் வந்து விட்டது. இருப்பினும், ஆயிரமாயிரம் வருடங்களாக அயலில் உள்ள வல்லரசுகளால் மாறி மாறி ஆளப் பட்டு வந்த அல்பேனியா, ஸ்கந்தர்பேக் காலத்தில் தான் தனித்துவமான தனிநாடாக அடையாளப் படுத்திக் கொண்டது. அதனால் இன்றைய அல்பேனிய தேசியவாதிகள் ஸ்கந்தர்பேக்கை உயர்த்திப் பிடிக்கின்றனர்.

சிவப்பு நிற பின்னணியில், இரட்டைத்தலைகளை உடைய கழுகு சின்னம் பொறித்த அல்பேனிய தேசியக் கொடி, முதன்முதலாக ஸ்கந்தர்பேக் காலத்தில் பயன்பாட்டில் இருந்தது. இடையில் நாற்பது வருட காலம் சோஷலிச நாடாக இருந்த போதும் இதே கொடியைத் தான் கழுகின் தலையில் மஞ்சள் நட்சத்திரத்தை சேர்த்து பயன்படுத்தி வந்தனர். தற்கால அரசு சின்னங்களில் மஞ்சள் நட்சத்திரத்தை அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக ஸ்கந்தர்பேர்க் முடியை சேர்த்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அல்பேனியா முதலில் இத்தாலி பாசிசப் படைகளாலும், பிற்காலத்தில் ஜெர்மன் நாஸிப் படைகளாலும் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறுவதற்காக பல ஆயுதபாணி இயக்கங்கள் போராடி வந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கது என்வர் ஹோஷா தலைமையிலான அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி. ஆரம்ப காலங்களில் அல்பேனிய கம்யூனிஸ்டுகள் தம்மை வெளிப்படையாக இனங்காட்டிக் கொள்ளவில்லை. ஒரு பழமைவாத சமூகத்தில் பரந்தளவு ஆதரவை பெற்றுக் கொள்வது கடினம் என்பதால், மற்றைய ஆயுதக்குழுக்களையும் இணைத்து அல்பேனிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இருந்தனர். இருப்பினும் அதில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அளவுக்கதிகமாக இருந்தது. இதைத்தவிர அல்பேனிய தேசியவாதிகளின் இயக்கம் தனியாக போராடிக் கொண்டிருந்தது.

படிக்க:
♦ ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !
♦ என்ன நடக்கிறது சிரியாவில் ?

1944 ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத இயக்கத்தில் இருந்தவர்களை கைது செய்த படியால் அதன் முக்கிய தலைவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்று பிரிட்டிஷ்படையினருடன் சேர்ந்து கொண்டனர். பிற்காலத்தில், அதாவது பனிப்போர் காலத்தில், பிரிட்டனும், அமெரிக்காவும் புலம்பெயர்ந்த அல்பேனிய தேசியவாதிகளை ஊடுருவ விட்டு கிளர்ச்சியை உண்டாக்க நினைத்து தோற்றுப் போனமை வரலாறு.

அல்பேனியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதற்கு பல காரணிகள் சாதகமாக அமைந்திருந்தன. முதலாவதாக அல்பேனிய விடுதலை முன்னணி என்ற பெயரில் இயங்கியதால், நேச நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் ஆதரவு கிடைத்து வந்தது. அதற்காக பிரிட்டிஷாருக்கு அல்பேனிய உள்விவகாரம் தெரியாது என்று அர்த்தம் அல்ல. என்வர் கோஷா ஒரு கம்யூனிஸ்ட் என்பது ஏற்கனவே தெரிந்திருக்கும். இருப்பினும் அவர் சோவியத் யூனியனுடன் தொடர்பில் இருந்தமைக்கான எந்த ஆதாரமும் இருக்கவில்லை. அத்துடன் அவர் பிரான்சில் கல்வி கற்றவர் என்பதால் ஒரு இடதுசாரி ஜனநாயகவாதி என்று எடை போட்டிருக்கலாம். மறுபக்கத்தில் ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படையினர் அல்பேனியாவை முக்கியமாகக் கருதவில்லை. அவர்களது கவனம் முழுவதும் யூகோஸ்லேவிய யுத்தகளத்தில் இருந்தது. இந்த குழப்பரகமான சூழ்நிலையை பயன்படுத்தி என்வர் ஹோஷா தலைமையிலான கம்யூனிச போராளிகள் அல்பேனியா முழுவதையும் தமது சொந்த பலத்தில் விடுதலை செய்து விட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட திரானாவில் என்வர் ஹோஷாவும் பிற கம்யூனிஸ்ட் தலைவர்களும் வருகை தந்த நேரம் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். இன்று வரையிலான அல்பேனிய வரலாற்றில் வேறெந்த அரசியல் தலைவருக்கும் அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை என்பதை ஹோஷாவின் எதிரிகளே ஒத்துக் கொள்கின்றனர். இத்தாலி, ஜெர்மன் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற்றுத் தந்த படியால் அன்றிருந்த மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு (அப்படி காட்டிக் கொள்ளா விட்டாலும்) பெருமளவு ஆதரவு இருந்தமை புரிந்து கொள்ளத் தக்கதே.

அல்பேனியா நாற்பது வருட காலமாக ஹோஷாவின் ஆட்சியின் கீழ் ஒரு தீவிரமான கம்யூனிச நாடாக இருந்தது. அவரது மரணத்தின் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் மீண்டும் முதலாளித்துவத்தை கொண்டு வந்து விட்டனர். 1991 இல் இருந்து அல்பேனியா ஒரு முதலாளித்துவ நாடு. பல கட்சித் தேர்தல் முறை கொண்டு வரப் பட்டது. முன்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்கள், கட்சியை கலைத்து விட்டு சமூக ஜனநாயகக் கட்சி என்ற புதிய அவதாரம் எடுத்தனர். லிபரல்கள் ஒன்று சேர்ந்து ஜனநாயகக் கட்சி அமைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை நடக்கும் பொதுத் தேர்தல்களில் சோஷலிசக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் மாறி மாறி அரசாங்கம் அமைத்த போதிலும் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை.

நான் தங்கியிருந்த ஹொஸ்டல் வரவேற்பாளரிடம் நாட்டு நடப்புகள் பற்றி விசாரித்தேன். அந்த இளைஞன் தான் தொண்ணூறுகளுக்கு பிறகு பிறந்த படியால், முன்பிருந்த சோஷலிச ஆட்சி பற்றி எதுவும் தெரியாது என்றான். தற்போதைய காலத்தில் எந்தக் கட்சியிடமும் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை என்றான். அவை தங்களுக்குள் அடிபடுவதற்கே நேரம் சரியாக இருப்பதாகவும் நாட்டைக் கவனிப்பதில்லை என்றும் சொன்னான். அல்பேனியாவில் மிகக் குறைந்த சம்பளம் ஏறத்தாள இருநூறு யூரோக்கள். அதே நேரம் படித்த பட்டதாரிகள் கூட அதிகம் சம்பாதிக்க முடியாது. மாபியாக் கிரிமினல் கும்பல்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமே பெருமளவு பணம் சம்பாதிக்க முடிகிறது.

அல்பேனியாவில் Tirana Times, Albanian Daily News என்று இரண்டு ஆங்கில வாரப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இரண்டிலும் வரும் செய்திகளில் பெரியளவு வித்தியாசம் இல்லை. அந்த நேரத்தில் ஒரு மாபியா குழு செய்த கொலை பற்றிய செய்தி முக்கிய இடம் பிடித்திருந்தது.

Albanian Daily News இல் உள்நாட்டு அரசியல் பற்றிய கட்டுரை ஒன்று கவனத்தைக் கவர்ந்தது. 2008 ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மீளுயிர்த்துள்ள கம்யூனிச அல்லது மார்க்சிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருவதாகவும், அதற்கு அல்பேனியாவும் தப்பவில்லை என்றும் எழுதியுள்ளது. குறிப்பாக இளைஞர் குழுக்கள், NGO க்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்துவதாக “கவலைப்” படுகிறது. மேலும் அல்பேனியா முன்னொரு காலத்தில் கொடூரமான கம்யூனிச சர்வாதிகார ஆட்சியின் கீழ் துன்பப் பட்டதாகவும், எதிர்ப்பாளர்கள் படுகொலை செய்யப் பட்டதுடன், தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டதாகவும் நினைவுகூருகின்றது.

கம்யூனிச கடந்த காலத்தில் நடந்த குற்றங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் பட்டு வருவதாகவும், அதையெல்லாம் நமது இளைய தலைமுறையினர் மறந்து விட்டார்களா என்றும் கேட்கிறது. கம்யூனிசகால குற்றங்கள் பற்றிய கற்கைகள் நிலையத்தின் தலைவரும், பிரபல இலக்கியவாதியுமான Agron Tufa, முன்னாள் இந்நாள் கம்யூனிச ஆதரவாளர்களின் மிரட்டல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி விட்டாராம். ஆகவே, “எப்படி அல்பேனியாவில் மீண்டும் அந்தக் கொடிய கம்யூனிசத்தை கொண்டு வர முடியும்?” என்று அந்தப் பத்திரிகை நீலிக்கண்ணீர் வடிக்கிறது. (Something in Common between Arben Kraja and Agron Tufa, Albanian Daily News, January 31, 2020)

அச்சச்ச்சோ!

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க