புலிட்சர் விருது பெற்ற புகைப்படக் கலைஞரான யானிஸ் பெராக்கீஸ் 02.03.2019 அன்று புற்றுநோயால் மறைந்தார்.

ஒரு புகைப்படக் கலைஞனுடைய பணி எத்தகையதாய் இருக்க வேண்டும் என்பதற்கு யானிஸ் பெராக்கீஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் நம் முன் வாழ்ந்து சென்றுள்ளார்.

58 வயதான யானிஸ் பெராக்கீஸ் சுமார் 30 வருடங்களாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 1960-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் பிறந்த இவர், ஒரு தனியார் பள்ளியில் புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். அப்போதிருந்தே புகைப்படக் கலையில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்திருக்கிறார்.

யானிஸ் பெராக்கீஸ்

1987-ம் ஆண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு தன் உயிரையும் பொருட்படுத்தாமல், உலகின் பல்வேறு இடங்களில் நடந்த அடக்குமுறைகளையும், மனித உரிமை மீறல்களையும், இயற்கைச் சீற்றங்களையும் புகைப்படம் பிடித்துள்ளார்.

இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கிரீஸ் நாட்டின் வெளிநாட்டு பத்திரிகைகள் சங்கம், “இந்தத் தலைமுறையின் குறிப்பிடத்தக்க புகைப்படக் கலைஞர்களில் யானிசும் ஒருவர்.  இவருடைய புகைப்படங்களின் சிறப்பு என்னவென்றால், ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் போது அதில் புதைந்து கிடக்கும் அவலங்கள் நம் கண்முன்னே வந்துநிற்கும்” என்று கூறுகிறது.

ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர், செசன்யா நாட்டில் நடந்த பயங்கரவாத நிகழ்வுகள், காஷ்மீரில் நடந்த பூகம்பம், எகிப்து நாட்டில் 2011-ம் ஆண்டு நடந்த அரச பயங்கரவாதத்திற்கெதிரான பேரெழுச்சி போன்ற இடங்களுக்குச் சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். இவரின் அசட்டுத் துணிச்சலைக் கண்டு எதிரிகளும் கூட இவர் மீது மரியாதை வைத்திருந்தனர்.

2000-ம்  ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனி-ல் போராளிக் குழுவினர் நடத்திய தாக்குதலில் இருந்து தன் சக ஃபோட்டோகிராபருடன் காயம்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். துரதிஷ்டவசமாக மற்ற இரு கலைஞர்கள் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஐரோப்பாவில் அகதிகளின் நிலை குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் 2016-ம் ஆண்டு இவருக்கு புலிட்சர் விருதைப் பெற்றுத் தந்தன. கிரீஸ் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் சிரிய நாட்டு அகதி ஒருவர் தன் மகளை முத்தமிட்டபடியே சூறாவளிக்காற்றுடன் கூடிய மழையில் தூக்கிச்செல்லும் காட்சி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும்.

இந்தப் படம் குறித்து யானிஸ் கூறுகையில் “உலகில் பல வெற்றிக் கதாநாயகர்கள் உள்ளனர். சினிமாவில் காண்பதைப்போல் இவர் ஸ்பைடர்மேன் ஹீரோவாக இல்லை; மாறாக கந்தலான பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கருப்பு அங்கியையே அணிந்திருந்தார். என்னைப் பொருத்தவரை தந்தை என்பதற்கு இதைவிட வேறு ஒரு தகுதியான நபரைப் பார்க்கமுடியாது” என்றார்.

30 வருடங்கள் இவருடன் இணைந்து வேலை செய்த தயாரிப்பாளரான வாசிலிஸ் என்பவர் கூறுகையில் ‘ சூறாவளிக் காற்று போல சுழன்று சுழன்று இரவு பகல் பாராமல் உழைப்பார்; பல அரிய புகைப்படங்களை உயிரைப் பணயம் வைத்துப் பிடிக்கவும் தயங்க மாட்டார்’.

உலகத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளார். இப்படியொரு விசயம் நடந்ததே எனக்குத் தெரியாதே என யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதே தன்னுடைய புகைப்படங்களின் குறிக்கோள் எனக்கூறிய யானிஸ், அதற்காகவே வாழ்ந்து மடிந்துள்ளார்.

சிரிய நாட்டு அகதி ஒருவர் தன் மகளை முத்தமிட்டபடியே சூறாவளிக்காற்றுடன் கூடிய மழையில் தூக்கிச்செல்லும் காட்சி

குர்தீஸ் இன அகதிகள் ரொட்டித்துண்டுகளுக்காகக் கையேந்தி நிற்கும் காட்சி – ஏப்ரல் 5, 1991

துப்பாக்கி ஏந்தி நிற்கும் அமெரிக்கக் கப்பற்படை வீரர்களை நோக்கி தன் குழந்தையைத் தூக்கிச் செல்லும் அல்பேனியர்.

சிரிய நாட்டு அகதி ஒருவர் துருக்கி வழியாகயிலிருந்து கிரீஸ் நாட்டில் ஒரு தீவில் தன்னுடைய பிஞ்சுக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு தோனியிலிருந்து இறங்குகிறார்.

லிபிய நாட்டில் போராளிகள் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க ஓடுகின்றனர் – ஏப்ரல் 21, 2011.

சோமாலிய நாட்டில் மீட்புப் பணி ஊழியர் ஒருவர் இறந்த குழந்தை ஒன்றைப் புதைப்பதற்காக எடுத்துச்செல்கிறார் – டிசம்பர் 15, 1992.

ஏதென்ஸ் நகரத் தொழிலாளிகளின் 24 மணி நேர போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள் வெடித்ததில் சிக்கிக்கொண்ட காவலர்கள் – செப்டம்பர் 26, 2012.

குரோஷிய நாட்டுச் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முசுலீம் அகதிகள் எலும்பும் தோலுமாய் மதிய உணவிற்காக ஏங்கி நிற்கும் காட்சி – செப்டம்பர் 10, 1993

போலீசிடம் கெஞ்சி நிற்கும் அகதிகள், தங்களை கிரீஸ் நாட்டு எல்லை வழியாகக் கடந்து செல்ல அனுமதிக்கக் கோரும் காட்சி – செப்டம்பர் 10, 2015.

துருக்கி நாட்டில் அரச பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடும் இளைஞர் ஒருவர் கண்டெயினர் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக உதவி கோரி கத்தும் காட்சி

செசன்ய நாட்டுப் போராளிகள் வான்வழித் தாக்குதலுக்கு அஞ்சி ஓடி ஒளியும் காட்சி – ஜனவரி 9, 1995.


தமிழாக்கம்: வரதன்
நன்றி: அல்ஜசீரா


படிக்க:
இயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் ! – படக் கட்டுரை
சோறு, சப்பாத்தி, புரோட்டா, பூரி, தால் எல்லாத்துக்கும் ஒரே கரண்டிதான் | கும்ஹியா தொழிலாளிகள் படக்கட்டுரை
♦ வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : கோடையும் தண்ணீரும் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க