சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு முன் இலைகளின் சருகுகளும் குச்சிகளும் கொட்டிக் கிடக்கின்றன. மரங்களும் புதர்களும் பராமரிப்பின்றி மண்டிக் கிடக்கின்றன. அங்கே பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள். சிலர் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள், சிலர் குளித்துக் கொண்டிருக்கிறார்கள், சிலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

யாருமே சும்மா உட்கார்ந்திருக்கவில்லை, ஏதோ ஒரு வேலையை – ஒவ்வொருவரும் நிதானமாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். இரவில் அங்கு சென்றிருந்தால் நிச்சயம் பயம் நம்மைத் தொற்றியிருக்கும். ஆனால், இப்போது பகல் 12 மணி. அது மாதவரம் பால் பண்ணை வளாகம்.

அங்கு இருந்தவர்கள் யாரும் பார்த்துப் பழக்கப்பட்ட முகங்கள் இல்லை. வட இந்தியர்கள் போல் (நமக்கு வடக்கே உள்ளவர்கள் அனைவரையும் அப்படித்தானே அழைக்கிறோம்) தெரிந்தார்கள்.

யார் அவர்கள்? தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

நீண்ட நாட்களாக திறக்கப்படாத வாயிற்கதவு. அந்த வளாகத்தைப் பாதுகாக்க ஒரு காவலாளி. “நீங்க தமிழா?” என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தோம். இவர்களிடம் எப்படி பேச்சு கொடுப்பது? யோசித்துக் கொண்டிருக்கும்போதே வேன் ஒன்று உள்ளே நுழைந்தது. வேன் ஓட்டுநரிடம் விசாரித்தோம்.

“இவர்கள் மெட்ரோ ரயில் வேலைக்காக ரோடு அமைத்தல், மண் பரிசோதித்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். தற்போது தசரா பண்டிகைக்கு (அது முடிந்து 4 மாதங்கள் ஆகிறது) ஊருக்குச் செல்ல இருக்கிறார்கள்” என்று தனக்குத் தெரிந்த ஹிந்தி மூலம் நமக்கு மொழி பெயர்த்தார். தொழிலாளிகளிடம் பேசுவதற்கு மொழி ஒரு தடையா என்ன?

மத்திய பிரதேசம் சிங்ரோலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் கும்ஹியா (Kumhia). ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இங்கு வாழ்கிறார்கள். விவசாயத்தில் பின்தங்கியுள்ள இக்கிராம மக்களில் சரிபாதி பேர் ஆதிவாசிகள். ஊரில் வேலை இல்லை. போதிய படிப்பறிவு இல்லை (45 சதவீதத்திற்கும் குறைவு). ஆகையால், எங்கேனும் சென்று ஏதேனும் ஒரு வேலையை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி விடலாம் என்று எண்ணி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

தற்போது, காங்கிரசு கைப்பற்றியிருக்கும் மத்திய பிரதேசத்தை இதற்கு முன்பு கிட்டத்தட்ட 14 வருடங்கள் (டிசம்.2003-லிருந்து டிசம்.2018 வரை) பாஜக-வே ஆண்டு வந்தது. மோடியின் ‘வல்லரசு’ இந்தியாவில் ஒரு கிராமத்தின் மொத்த இளைஞர்களையும் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்குத் துரத்தியிருப்பது பாஜக-வின் மிகப்பெரிய ‘சாதனை’தான்.

இந்தக் குழுவில் உள்ள அனில் நம்மிடம் பேசும்போது,

தொழிலாளி அனில், பி.ஏ. (ஹிந்தி)

“கும்ஹியா கிராமத்தச் சேர்ந்த 22 பேர் இங்கே இருக்கோம். சீகான்ல காண்டிராக்ட் வேல. (SECON – பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்றவற்றை எடுத்துச் செல்ல பூமிக்கடியில் ராட்சத குழாய்களை பதிக்கும் பன்னாட்டுக் கம்பெனி) மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பள்ளம் தோண்டி மண்ணெடுத்து சோதனைக்கு அனுப்புறதுதான் நாங்க செய்யிற வேல.

எனக்கு மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. என்னோட குடும்பத்த அண்ணன்தான் பாத்துக்கிறாரு. அவரு ஒரு தனியார் பள்ளியில ஐயாயிரம் சம்பளத்துக்கு ஆசிரியரா வேலை செய்யிறாரு. நானும் பி.ஏ ஹிந்தி படிச்சிருக்கேன். ஆனா வேலையேதும் கெடக்கல. அதனால இங்கே வந்துட்டேன்.

ஒரு நாளைக்கு 300 ரூபா சம்பளம். எட்டு மணி நேரம் வேலை. மூணு வேளை சாப்பாடு. அப்புறம் வேலை செய்யிற எடத்துலயே கொட்டகை போட்டு தங்க ஏற்பாடும் செஞ்சிருக்காங்க. வேலை முடிஞ்சதும் அப்படியே ஒரு துண்ட விரிச்சு, அங்கேயே தூங்கிடுவோம்” – என்றார்.

தொழிலாளி திலீப்

பேசிக்கொண்டிருக்கும்போதே இளைஞன் திலீப் ஓடி வந்தான். படிய வாரப்பட்ட முடியை மீண்டும் சரி செய்தான். கேமராவைப் பார்த்து புன்னகைத்தான். அவன் மட்டுமல்ல, அங்கிருந்த தொழிலாளர்கள் பலரும் அப்படித்தான், ஏதோவொரு இனம்புரியா மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார்கள்.

அடுத்த மூன்று வேளைக்கான சப்பாத்தி தயாராகி விட்டது. ரயிலைப் பிடிக்க இன்னும் இரண்டு மணிநேரம்தான் இருக்கிறது. பத்து நாட்கள் விடுமுறை. ஹோலிப் பண்டிகை. மகிழ்ச்சி வராமலா இருக்கும்! பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தாலும், கும்ஹியா கிராமத்தின் மண் வாசனை இவர்களது மனங்களை வாரி எடுத்திருக்க வேண்டும்.

ஊருக்குச் செல்லவிருக்கும் மத்தியப் பிரதேசத் தொழிலாளர்கள், தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள சீகான் (பன்னாட்டு நிறுவனம்) ஒதுக்கித் தந்திருக்கும் ‘ஓய்வு’ வளாகம்.

மோடியின் ‘தூய்மை இந்தியா’ மக்களுக்குத்தான்; கார்ப்பரேட் நிறுவனங்கள் மதிக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன?

வீண் அரட்டையில்லை, எவ்வித ஓய்வுமில்லை. சொந்த வேலையையும் பொது வேலைகளையும் திட்டமிட்டாற்போல செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள்.

தொழிலாளரும் இயந்திரமும் ஒன்றுதானோ. பயன்பாடு இல்லாததால் குப்பைகளுக்கிடையே நிறுத்தப்பட்டிருக்கும் குழிவெட்டும் இயந்திரம்.

சோறு அள்ளவும், தோசை புரட்டவும், சப்பாத்தி – பூரி எடுக்கவும் இந்தக் கொழம்புக் கரண்டி ஒன்றுதான்.

தேவைக்கப்பால் ஒரு சிறு பொருளைக்கூட பார்க்க முடியவில்லை. பைக் கண்ணாடியில் தலை வாரும் இளைஞர்.

குப்பையில் வீசப்பட்ட சோலார் பேனலை சீர்படுத்தி தங்களது செல்பேசிகளுக்கு உயிர் ஊட்டுகிறார்கள் தொழிலாளிகள்.


படம், செய்தி: வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க