அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீழ்த்திய வியட்நாம் – போராளிகளின் தேசம்…

“உலகின் மிக நீண்ட
போரை தன்
மார்பில் சுமந்து
தன்னை
தொலைக்காமல்
மீட்டு எடுத்திருக்கும்
இயற்கையின் பொக்கிஷம்
வியட்நாம்”

அமெரிக்கா நிலவில் கால் தடம் பதித்த 50 ஆண்டுக்கால கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்தருணத்தில் மனித விடுதலைக்காக போராடிய வியட்நாமை நினைவு கூற மறந்து விட்டோம். “மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். வரலாறு மக்களுக்கானது, மக்களே அதன் விதைகள்.”

பயணம் என் வாழ்வில் ஒரு அங்கமாய் மாற சே குவேராவின் “மோட்டார் சைக்கிள் டைரீஸ்” ஒரு முக்கிய காரணம். ஆனால் அது என் வாழ்வில் தொடர என் மூத்த சகோதரருக்கும் ஒரு பங்கு உண்டு. இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் சென்று இருக்கிறேன். ஆனால், இதுதான் இரண்டரை மாத கால நீண்ட வெளிநாட்டு பயணம். ஆறு நாடுகள் அறுபது நாட்கள் என என்னை நான் மறந்த நாட்கள். இவற்றில் எல்லா நாடுகளும் பிடித்து இருந்தாலும் வியட்நாம் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

அதற்கு காரணம் உலகின் மிக நீண்ட போரை தன் மார்பில் சுமந்து தன்னை தொலைக்காமல் மீட்டு எடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷம் வியட்நாம்! அதனால் அதைப் பற்றி எழுத கடமைப்பட்டிருகிறேன். உலகில் இயற்கை காதலர்கள் அதிகம் படையெடுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாமிற்கு தனி இடம் உண்டு. அந்த நாட்டின் பெயரை சொல்லும் போது எப்படி ஒரு உத்வேகம் இருக்கிறதோ அதை போன்றே அழகானதொரு நாடு.

வியட்நாமிய போராளிகள் உலகின் ஏகாதிபத்திய அமெரிக்காவை வீழ்த்தி விடுதலை வேட்கையில் இன்று தனக்கென ஒரு இடத்தை தடம் பதித்து இருக்கிறனர். அதில் சாதித்துக் காட்டியிருக்கிறனர் என்றுதான் சொல்லவேண்டும்.

வியட்நாமும் வாழ்வியலும்

வியட்நாம் தென்கிழக்காசியாவின் இந்தோ சீனாவின் கிழக்கில் உள்ள நாடு. இதன் வரைபடம் ஆங்கிலத்தில் “S” வடிவிலான உருவம் கொண்டது. இந்நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லையாக உள்ளது.

2012-ம் ஆண்டு கணக்கீட்டின்படி 9.30 கோடி ஜனத்தொகையை கொண்டுள்ளது. உலகின் மக்கள் தொகை அடிப்படையில் 13 -வது இடத்திலும், ஆசியாவில் 8 வது இடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் ஹனோய். வியட்நாமின் இன்னொரு முக்கிய நகரம் ஹோ சி மின் சிட்டி (சைக்கான்).

இந்த நாடு சீனா, ஜப்பான், பிரெஞ்சு என பலரின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது, அதன் நீட்சி அதன் கலச்சாரத்திலும் தொடர்கிறது. மொத்த மக்கள் தொகையில் 81% பேர் மதமற்றவர்களாகவும், 9% பேர் புத்த மதத்தையும், 7% பேர் கிறிஸ்துவ மதத்தையும், 3% பேர் பிற மதத்தையும் பின்பற்றுகிறார்கள்.

இங்கு ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின், மத்திய ஆட்சிமன்ற குழுவே அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இந்த நாட்டின் அதிபர் பாதுகாப்பு படையின் தலைவராவார். பிரதமர் அமைச்சரவையின் தலைவராக உள்ளார். நாட்டின் தலைமை நீதிபதி தேசிய சபையால் நியமிக்கப்படுகிறார்.

இங்கு விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நாட்டின் நாணயத்தின் பெயர் டாங். வியட்நாமில் காபி மிகவும் பிரபலம். உலகில் காபி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாட்டின் இன்றைய நிலைமை ஒரு குறிப்பிடதக்க அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. வாருங்கள் வரலாற்றை புரட்டிப் பார்ப்போம்.

போர் வரலாற்றில் வியட்நாம்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்தோ சீனா என்று அழைக்கப்பட்ட கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளடக்கிய பிராந்தியத்தை பிரான்ஸ் மீண்டும் தன் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி வியட்நாமின் கூட்டுப்படைகள் 1946 முதல் 1954 வரை பத்து ஆண்டுகள் சண்டையிட்டன.

படிக்க:
“ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !
♦ காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்

வியட்நாமின் விடுதலைக்காக, பிரான்ஸ் அரசுக்கு எதிராக (Battle of Dien Bien Phu) வியட்நாமிய கம்யூனிச படைகள் போரிட்டது. 1955 -ம் ஆண்டு ஜெனிவா மாநாட்டின் மூலம் வியட்நாம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த போரின் முடிவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் வட வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின் தலைமையில் ஆட்சி அமைத்தது.

HO_CHI_MINH
வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின்

மேற்கத்திய நாடுகளின் ஆதரவில் பிரதமராக Ngo Dinh Diem (ங்கோ டின் டிஎம்) தெற்கு வியட்நாமில் ஆட்சி அமைத்தார். ஆனால் தெற்கு வியட்நாம் மேற்கத்திய பார்வையில் செயல்படும் கைப்பாவை அரசாக செயல்பட்டதன் காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

“ஒருங்கிணைந்த வியட்நாம் ஒன்றே தீர்வு” என்றார் புரட்சியாளர் ஹோ சி மின். பின் 1960-களில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜான் கென்னடி, கிழக்காசிய கம்யூனிச செல்வாக்கை குறைப்பதற்காக நேரடியாக உள்நாட்டு போரில் தலையிட்டார் .

இதில் வட வியட்நாம் படை சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் பிற கம்யூனிச நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. தெற்கு வியட்நாமியப் படை அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிற கம்யூனிச எதிர்ப்பு அணியால் ஆதரிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகள் பேரழிவு ஆயுதங்களையும், பாஸ்பரஸ் குண்டுகளையும், பாரம்பரிய போர் யுத்திகளையும் கையாண்டபோது கம்யூனிச படைகள் கெரில்லா தாக்குதலைக் கையாண்டன.

கெரில்லா தாக்குதலால் மேற்கத்திய அமெரிக்கப்படை பின்வாங்கியது. இதை அடுத்து 1968-ம் ஆண்டு சோன் மை என்ற கிராமத்தில் குண்டுவீசி பெண்கள், குழந்தைகள், முதியவர்களை என ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது அமெரிக்கப்படை. 1968-ம் ஆண்டில் வியட்நாம் முழுவதும் கடும் குண்டுவீச்சுத் தாக்குதலைச் சந்தித்தது. இதற்கு அடுத்த ஆண்டு இந்த விவரம் வெளிவந்தபோது உலகமே கண்ணீரில் முழ்கியது.

உலக நாடுகள் பலவும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், அமெரிக்காவிலும் எதிர்ப்பு தொடங்கியது. வியட்நாமிற்கு அமெரிக்க படைகளை அனுப்பியது தவறு என்பது மூன்றில் இருபங்கு அமெரிக்கர்களின் கருத்தாக இருந்தது. வேறு வழியின்றி 1973-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வியட்நாமிலிருந்து வெளியேறின. அதன் பின்னும் இரண்டு ஆண்டுகள் போர் நீண்டது.

1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு வியட்நாமின் தலைநகரை கம்யூனிச அரசு கைபற்றியது. அதன்பின் போர் முடிவுக்கு வந்தது. போரில் மொத்தம் வியட்நாமிய போராளிகள், பொது மக்கள் என 38,00,000 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின் 1976-ல் ஒருகிணைந்த வியட்நாமாக விடுதலை பெற்றது.

நாங்கள் எங்கள் பயணத்தை ஹோ சி மின் நகரத்தில் தொடங்கினோம். முதல் நாள் போர் நினைவு அருங்காட்சியம்; போரின் அவலங்களை எங்கள் கண் முன் கொண்டு வந்தது. அந்த அருங்காட்சியகம் சென்றவுடன் முதலில் பார்த்தது அமெரிக்க இராணுவப் படைகள் விட்டு சென்ற போர்க் கருவிகள், ஆயுதங்கள், ஹெலிகாப்ட்டர்கள். போரை நினைவுப்படுத்திய அவற்றைப் பார்த்தபடியே உள்ளே சென்றோம்.

போர் எவ்வளவு கொடூரமானது என்பதை அங்கிருக்கும் புகைப்படங்கள் என் விழிகளில் வழிந்தோடும் கண்ணீரில் சொன்னது. மனதில் பல கேள்விகள் கேட்டவாரே வெளியில் வந்தோம். பின் மறுநாள் கு-ச்சி சுரங்கபாதை (Cu Chi Tunnel) சென்றோம். ஒன்றிணைந்த வியட்நாம் உருவாக்கப்பட இந்த சுரங்கம்தான் பெரும் பங்கு வகித்தது.

கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel)

இந்த சுரங்கமானது தற்போதைய ஹோ சி மின் நகரத்திலுள்ள (சைகான்) நதிக்கரை ஓரத்தில் உள்ள கு-ச்சி என்னும் ஊரில் உள்ளது. இந்த கு-ச்சி சுரங்கபாதையானது சுமார் 75 மைல் (121 கி.மீ) நீளம் கொண்ட மிக நீண்ட போர் சுரங்கம். இங்குதான் தெற்கு (Viet Cong ) மற்றும் வடக்கு வியட்நாமிய கூட்டுப்படை தங்களின் தாக்குதலுக்கான இராணுவ அமைப்பை நிறுவியிருந்தது. வியட்நாமிய போராளிகளின் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel). இதுதான் தெற்கு மற்றும் வட வியட்நாமிய படைகள் தங்குவதற்கும், ஒளிந்திருந்து தாக்கவும், ஆயுதம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இதை அமெரிக்க ராணுவம் “Black Echo” என்கிறார்கள்.

நாங்கள் இதில் செல்லும் போது எங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த சுரங்கமானது மனிதன் தவழ்ந்து செல்லகூடிய மிகவும் சிறிய பாதை, அருகில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாத இருட்டு, தேள், பூரன் என பயமுறுத்த; மறுபுறம் பசி, நீர் பற்றாக்குறை என நாள் முழுவதும் சுரங்கப்பாதையில் உள்ளிருந்த (Viet Cong) வியட்நாமியர்கள் எவ்வளவு மெலிந்த உடலமைப்பைக் கொண்ட வலிமைமிக்கவர்கள் என தெரிந்தது.

போரில் இறந்தவர்களை அடுத்து சுரங்கத்தில் மலேரியா காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தவர்கள் பலர். பகல் முழுவதும் சுரங்கத்திலிருந்து போர் யுத்திகள் வகுப்பது, இரவில் தாக்குதலை மேற்கொள்வது; ஆயுதங்கள் தயாரித்தல் போன்றவற்றை மேற்கொண்டனர். அமெரிக்க ராணுவ படையால் இந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஜனவரி 7 ,1966 -ம் ஆண்டு Operation Crimp மற்றும் Operation Cedar Falls என்ற இரண்டு மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டது. இதில் B-52 Bombers மூலம் 30 டன் வெடிகுண்டுகள் கு-ச்சி ஊர் முழுவதும் குண்டு மழையை பொழிந்தது. மொத்தம் 38,000 அமெரிக்க ராணுவ படைகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் அந்த பச்சை வனம் பாலை நிலமானது. ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவிற்கு பெரும் தோல்வியை தந்தது. இதற்கு வியட்நாமின் போர்ப்படை கையாண்ட போர் யுத்தியும், MACV (Military Assistance Command Vietnam) கொடுத்த பயிற்சியே காரணம் என்றது அன்றைய பெரிய நாளிதழ் ஒன்று. வியட்நாம் வரலாற்றில் அமெரிக்கர்களுக்கு மிகவும் சவாலான இருந்தது இந்த கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunel). சுரங்கத்திலிருந்து வெளிவந்தபோது வியட்நாமிய படை தன் நாட்டின் விடுதைலைக்கு எப்படி போராடியுள்ளனர் என்பதை கண்டு வியந்த இடம் கு-ச்சி சுரங்கம். இந்த இடம் தற்போது போர் நினைவு பூங்காவாக அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போரில் கு-ச்சி சுரங்கம் போன்றே மற்றொரு இடம் Ho Chi Minh Trial.

ஹோ சி மின் பாதை (Ho Chi Minh Trial)

எப்படி இப்படி ஒரு உழைப்பாளர் நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதில் தோழர் ஹோவிற்கு மிகப் பெரிய பங்கு உண்டோ, அதை போன்றே உலகின் மிக நீண்ட போரை வென்றதில் இந்த ஹோ சி மின் பாதை ஒரு மிகப்பெரிய ஆயுதம். இந்த வழியேதான் வட வியட்நாமிய கூட்டுப்படை தெற்கு வியட்நாமுக்கு தனது இராணுவத்தையும், ஆயுதங்களையும் லாவோஸ், கம்போடியா வழியாக கு-சி சுரங்கத்திற்கு எடுத்து சென்றனர். இதனை தொடர்ந்தே தெற்கு வியட்நாமியப்படை (Viet Cong) போரை முன்னெடுத்தது.

படிக்க:
எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!
♦ வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் !

இதை அறிந்த அமெரிக்கப்படை இந்த பாதைக்கு இப்பெயரை வைத்தது. இந்த பாதையில் லாவோஸ் பெரும் பகுதியை கொண்டுள்ளது. இங்கு தான் வட கம்யூனிஸ்ட் கூட்டுப்படை தனது போர் யுத்திகளை (Strategic Supply Route) வகுத்தனர். அதை அறிந்த அமெரிக்கப்படை லாவோஸ் மீது குண்டுகளை வீசியது. உலகிலேயே மிக அதிக குண்டுகள் வீசப்பட்ட நாடு லாவோஸ்.

1964 முதல் 1973 வரை சுமார் பத்து ஆண்டுகள் 2.1 மில்லியன் டன் வெடிகுண்டுகள் இன்றும் அந்த மண்ணில் புதைந்து மக்களை கொன்று கொண்டுதான் இருக்கிறது. இந்த பாதையை அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (National Security Agency ) ஆவணத்தில் (“One of the great achievements of Military Engineering of the 20th Century”) இருபதாம் நுற்றாண்டின் போர் வரலாற்றில் மிக உயர்ந்த ராணுவ பொறியியல் கட்டமைப்பு என்றது. இதன் காரணமாகத்தான் போரை வெல்லமுடியவில்லை என்று பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டது

கம்பீரமான கல்லறையில் ஒரு புரட்சியாளரின் உறக்கம்

வியட்நாமின் தேசத்தந்தை, புரட்சியாளர், தொழிலாளர் கட்சியின் தலைவர் என பன்முகம் கொண்ட தோழர் ஹோ சி மினின் சமாதி.

வியட்நாமின் தலைநகரமான ஹனாயில் உள்ள (Ba Dinh Square) பா தின் சதுக்கத்தின் நடுவில் மிக கம்பீரமான கல்லறை உள்ள கட்டிடத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் பிரதமராக, அதிபராக 1954 முதல் 1965 வரை பதவி வகித்தார். பின் உடல் நலக் குறைவால் பதவி விலகினார். ஒருங்கிணைந்த வியட்நாம் உருவாக வித்திட்டவர் ஹோ சி மின். “தன் வரலாறு தெரியாத ஒருவன் பிணத்திற்கு சமமானவன்” என்ற விடுதலை வேட்கையை மக்களின் மனதில் கொண்டு சேர்த்த மாபெரும் மனிதரின் உடல் அங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு சென்றதும் என்னை அறியாமல் என் கைகள் உயர்ந்து லால் சலாம் சொன்னது. அந்த இடத்தை விட்டு வர மனம் இல்லாமல் தவித்தது என் மனது.

வியட்நாம் நிலவியல் அதிசயங்கள்

இந்த பயணத்தில் மிக நீண்ட நாட்கள் பயணித்தது வியட்நாமில் தான். தெற்கு வியட்நாமில் ஹோ சி மின் சிட்டி, ஹோய் அன், கு-சி டனல், ஹேவே, நேத்ரங், டனங் போன்ற பல இடங்களும் சென்றோம். ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது வட வியட்நாம் மலைகளும், வனங்களும், கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிகள்தான்.

நின் பின், போங்கனா குகை, சபா விவசாயம், ஹனோய் மானுட உலகின் சொர்க்கம் அது. என் வாழ்வில் இன்னொரு முறை செல்ல வேண்டும் என்று நினைத்த இடம் வியட்நாம். வியட்நாமில் மிக பெரிய சிகரம் பான்சிபன் மலைதான். இந்தோ சீன தீபகற்பத்தில் (வியட்நாம், லாவோஸ், கம்போடியா உள்ளடக்கிய நாடுகளில்) உயர்ந்த மலைப்பகுதி. இங்கு நாள்தோறும் 1,000 மலையேறிகள் அதன் அழகைக் காண செல்லுகிறார்கள்.

vietnam
சபா விவசாயம்

இந்த மலையேற்றம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும். இதன் உயரம் சுமார் 3,143 மீட்டர் (10,326 ft) கொண்டது. இங்கு ஆண்டு தோறும் பூக்கும் பல்வேறு வகை பூக்கள், தாவரங்கள், விலங்குகள் வாழ்வதால் அதை பாதுகாக்கும் நோக்குடன் அந்த நாடு அப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து உள்ளது. அந்த நாட்டின் இன்னொரு அதிசயம் ஹா லாங் பே (காலங் விரிகுடா). இது UNESCO-வினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் மற்றொரு அதிசயம் சபா.

சபா விவசாயம் மலையில் பயிர்விக்கும் முறை அந்த நிலத்தின் அடையாளம். இதைக் காண சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். உலகின் மிக பெரிய குகையும் இங்குதான் உள்ளது. அதன் பெயர் ஹாங் சன் டூங் (Hang Son Doong) இப்படி சொல்லிகொண்டே போக இயற்கையின் அதிசயங்கள் அங்கே கொட்டிக் கிடக்கிறது.

பயணம் சொன்னது

வியட்நாமியர்களிடம் உரையாடியபோது அவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும் இயற்கையை பெரிதும் நேசிப்பவர்களாக உள்ளனர். ஆண் – பெண் என்று வேறுபாடு மிகவும் குறைவு.

சமநிலையில் ஒரு சமூகம் பயணிக்கும்போது குடும்ப அமைப்பு உடைகிறது என்பதை பொய்யாக்குகிறது வியட்நாம். அங்கு மக்கள் குடும்ப அமைப்புடனே பெரிதும் வாழ்கின்றனர். எல்லோரும் வாழ்வதற்கான நிலத்தை அரசாங்கம் சமமாக பிரித்து வழங்கி இருக்கிறது. மக்கள் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இலவச கல்வி, சுகாதாரத்தை அரசு உறுதி படுத்தியுள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு சென்றோம் அங்கு ஒரு மாணவனிடம் உரையாடிய போது ஆங்கிலம் தெரியவில்லை. பின் எப்படியோ மொழிபெயர்ப்பளர் உதவி கொண்டு பேசியதில் அவனுக்கு அவனது சமூகம் மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்கள் நன்றாக தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது. ஆங்கிலம் தொடர்பு மொழியே தவிர வேறு ஏதும் இல்லை என்பதை உணர்த்திய தருணமது.

vietnam
கடைகோடி கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் போய் சேர்ந்துள்ள வியட்நாம்.

அங்கு ஒரு மருத்துவ மாணவனின் படிப்புச் செலவு வெறும் 35,000 டங்கள் மட்டுமே. இது இந்தியாவை காட்டிலும் மிகவும் குறைவு. நாங்கள் சபாவில் ஒரு வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். அந்த அனுபவம் கண்களுக்கு இயற்கை கொடுத்த விருந்து. நாங்கள் மூன்று மலைகளைக் கடந்துதான் அந்த வீட்டிற்கு சென்றோம். மலையின் கடைக்கோடியிலும் மின்சாரம், சாலை, பள்ளி, ஆப்டிக் கேபிளுடன் கூடிய இன்டர்நெட் வசதி என மக்களுக்கு அனைத்தும் சென்று சேர்ந்திருக்கிறது.

இதைப் போன்றே மும்பையில் உள்ள பிரபல மலையேற்றம் ஒன்றிற்கு சென்ற போது அங்கும் மலையில் ஒரு பள்ளி இருந்தது, ஆனால் பத்து ஆண்டுகளாக பூட்டப்பட்ட நிலையில். மக்களுக்கு தேவையான அத்தியாவசியத்தை கொடுப்பதுதான் அரசாங்கத்தின் கடமை. அங்கும் வறுமை இருக்கிறது. ஆனால் அத்தியாவசியங்களை தடுக்கும் நிலைமையில் அல்ல. போரிலிருந்து மீண்ட ஒரு நாடு இன்று இப்படி எல்லா வளங்களுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பது வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள்

வியட்நாம் போராளிகள் அனைவரும் அந்த மண்ணின் மைந்தர்கள். உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்திய அரசிடம் அடிமைப்படாமல், “சுதந்திரம் மட்டுமே எங்கள் கனவு” என முழங்கிய வியட்நாம் போர், வரலாற்றில் மனித இனத்தை மீட்டு எடுத்து இருக்கிறது.

மக்களின் நம்பிக்கையாய் திகழ்ந்த ஹோ சி மின்-ன் வார்த்தைகள் அவர்களை அதிகாரத்தையும், வன்முறையும் தோற்கடித்து; சமூகநீதியையும், சுதந்திரத்தையும் நிலைநாட்டச் செய்திருக்கிறது. வரலாறு மக்களுக்கானது மக்களே அவற்றை உருவாக்குகிறார்கள். கொண்டாடுவோம் மக்கள் போராட்டத்தின் 50-ம் ஆண்டு வெற்றி விழாவை !

சிந்துஜா சமூக ஆர்வலர்.

7 மறுமொழிகள்

  1. தோசை திங்கறதுக்கும், பீட்சா கடிக்கிறதுக்கும் உலக நாடு சுற்றுலா போற காலத்துல மக்களோட சுதந்தரப் போராட்டத்தை நினைவுபடுத்துற உங்க சுற்றுலா கட்டுரை உள்ளபடியே நல்லாருக்கு அம்மணி!

  2. மிக அருமையான கட்டுரை. மிக்க மகிழ்ச்சி. சில முக்கிய இடங்களின் புகைப்படத்தையும் இணைத்திருந்தால் அப்படியே மனதில் மையாய் ஒட்டிக்கொள்ளும்.
    நன்றி

  3. மக்களின் வருமானம் கல்வி மருத்துவம் ஆகியவை அரசால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. தொலைதூர மலை கிராமத்திற்கும் கல்வி மருத்துவம் மற்றும் தொலைதொடர்பு சென்றடைந்துள்ளது. நம் நாடு எப்போது இம்மாதிரி வளர்ச்சியை எட்டும் என்று ஏக்கமடைய வைக்கிறது.
    அருமையான கட்டுரை.
    வாழ்த்துக்கள் சிந்துஜா….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க