கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?

ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்விக்கி (Swiggy), சொமேடோ (Zomato), ஊபர் (Uber), ஓலா (Ola) போன்ற இணையவழி நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இது போன்ற சட்டம் கடந்த ஜூலை 24 தேதி ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த “ராஜஸ்தான் இணையவழி அடிப்படையிலான கிக் தொழிலாளர்கள் (பதிவு மற்றும் நல்வாழ்வு) சட்டம் 2023” நிறைவேற்றியதன் மூலம் கிக் தொழிலாளர்களுக்கான சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை ராஜஸ்தான் பெற்றுள்ளது.

ஆனால்  தொழிலாளர் வர்க்கத்திற்கான எந்த ஒரு சிறு உரிமையையும் ஆளும் வர்க்கம் தனது சொந்த விருப்பார்வத்துடன் வழங்கிவிடவில்லை. வரலாறு நெடுகிலும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களால் தான் தற்போதுள்ள உரிமைகள் பெறப்பட்டுள்ளன. அதே போல் இந்த கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம் என்ற சட்டமும், இந்தியா முழுவதும் கிக் தொழிலாளர்களின் அமைப்பாக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாக இயற்றப்பெற்றதாகும். ஆனால் இந்த சட்டத்தை கிக் தொழிலாளர்களுக்காக முழு நிவாரணமாக கருதக்கூடாது. ஏனெனில் இந்த சட்டம் கிக் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளின் முழுப் பரிமாணத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் உற்பத்தி சார்ந்த மரபான தொழிலாளர் அமைப்புகள் சமகாலத்தில் எதிர்கொண்டு வரும் அரசியல் பிரச்சினைகளையும் இந்தச் சட்டம் கணக்கில் கொள்ளவில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜஸ்தான் மாநில அரசால் இயற்றப்பட்ட இந்த சட்டம் ஊபர், ஓலா போன்றவற்றில் சவாரிப் பகிர்வு செய்யும் தொழிலாளர்கள், ஸ்விக்கி, சொமேடோ போன்றவற்றில் உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்கள், பிளிப்கார்ட், அமேசான் போன்றவற்றில் பொருட்களை விநியோகம் செய்யும் தொழிலாளர்கள், மேலும் சுகாதாரம், தங்கும் விடுதி ஆகிய சேவைத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஊடக சேவைத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என அனைவரையும் உள்ளடக்குவதாக இருக்கிறது. ஆனால், இந்த தொழிலாளர்களுக்கான அமைப்பாக ஒரு “முத்தரப்பு நலவாரியம்” (tripartite welfare board) அமைப்பதாக சொல்கிறது. இந்த முத்தரப்பு நலவாரியத்தில் மாநில அரசின் பிரதிநிதிகள், குடிமை சமூக பணியாளர்கள், தொழிலாளர்கள், இணையவழி நிறுவனங்கள் ஆகியோர் அங்கம் வகிப்பர். இந்த முத்தரப்பு நலவாரியத்தில் தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தி கடுமையாக ஒடுக்கப்படும் என்பது நமக்கு சொல்லாமலே விளங்கும்.


படிக்க: ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!


கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் யதார்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கிக் தொழிலாளர்களை இணையவழி நிறுவனங்கள் “தொழிலாளர்கள்” என்று வகை படுத்துவதில்லை. அவர்களை சவாரிக்காரர்கள் (Raiders), பயனர்கள் (Users), சுயாதீனமான ஒப்பந்தக்காரர்கள், பங்குதாரர்கள் (Partners) என்ற பெயரில் வகைப்படுத்துகின்றன. இதனால் இவர்கள் நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களின் வரையறைக்குள் வருவதில்லை. இவ்வாறு தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குமான நேரடியான உறவிற்கு வெளியே தள்ளப்படுகிறார்கள் கிக் தொழிலாளர்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. கிக் தொழிலாளர்களை தொழிலாளர் நலச் சட்டங்களுக்குள் கொண்டு வராமல் அவர்களுக்கென வாரியம் அமைப்பது, அதன் மூலமாக தொழிலாளர்கள் மற்றும் இணையவழி நிறுவனங்களை பதிவு செய்வது, இவற்றிக்கு இடையிலான இணக்கத்தை கண்காணிப்பது, காப்பீடு மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வகுப்பதை மேற்பார்வை செய்வது என்று அளவில் குறுக்கிக் கொள்வது தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் செய்யாது.

“நிதி அயோக்”ன் 2022 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் 77 லட்சம் கிக் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டு 2.35 கோடியை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவும் கூட குறைமதிப்பீடாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

குறைவான ஊதியம், தன்னிச்சையாக தொழிலாளர்களது வேலைக் கணக்குகளை முடக்குதல், தன்னிச்சையாக வேலைக்கான விதிமுறைகளை மாற்றுதல், தொழிலாளர்கள் மீது நிறுவனங்களின் முழுமையான அதிகாரம் இவையெல்லாம் கிக் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினைகளாக இருக்கும் போது எப்படி சிறிய சமூகப் பாதுகாப்பு உரிமைகள் தீர்வாக இருக்க முடியும்?

’தங்களது வேலை நேரத்தை தாங்களே வடிவமைக்கும் தேர்வுச் சுதந்திரம் மற்றும் நிலையாக கணிசமான ஊதியம்’ போன்ற பெரும்பான்மையான இணையவழி நிறுவனங்களின் வாக்குறுதி கிக் தொழிலாளர்களை ஆரம்பத்தில் ஈர்ப்பதாக இருக்கிறது. ஆனால், சிறிய காலத்திலே யதார்த்த நிலை இந்த வாக்குறுதிகளுக்கு மாறானதாக இருப்பதைத் தொழிலாளர்கள் தங்களது பணியின் ஊடாக அனுபவ ரீதியாகப் புரிந்து கொள்கிறார்கள்.


படிக்க: ‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !


கிக் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 14 மணிநேரம், வாரத்தில் ஆறு நாள் வரை வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதிக மதிப்பீட்டு புள்ளிகள் வாங்கினால் தான் அடுத்தடுத்து வேலைகள் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் அதற்காக மிகுந்த நெருக்கடியில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தொழிலாளர்கள். ஒரு மாதத்திற்கு 5 ஆர்டர்களை எடுக்காமல் விட்டாலே தொழிலாளர்களின் வேலை கணக்கு முடக்கப்படுகிறது.  குறிப்பாக ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர். ஆனால் விபத்துகளில் சிக்குவதால், உடல்நலக் குறைவால், வீட்டுச் சூழ்நிலையால் ஆர்டர்களை எடுக்காமல் விடும் தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுகின்றனர்.

மேலும் நிறுவனங்கள் தொழிலாளர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் அளவுகளின் குறைந்தபட்ச வரம்பை தன்னிச்சையாக மாற்றுகின்றன. கிக் தொழிலாளர்களின் தலையாயப் பிரச்சினையாக இருப்பது, Multiple Rating System தான். இதன்படி தொழிலாளர்களின் செயல்திறன் பல்வேறு முறைகளில் இருந்து மதிப்பீடு செய்யப்படுகிறது. நுகர்வோரால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பீட்டு புள்ளிகள் (Customer’s Rating என்னும் இந்த மதிப்பீடு எதற்காக இருக்கிறது, இது எப்படி தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை பாதிக்கிறது என்று பெரும்பாலான நுகர்வோர்களுக்கு தெரியாது), தொழிலாளர்கள் நிறுவனங்களின்‌ எத்தனை அழைப்புகளுக்கு பதிலளிக்கிறார்கள் என்ற மதிப்பீடு (Response Rating), குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை வேலைகளை ரத்து செய்கிறார்கள் (Cancellation Rating) என்ற கணக்கு – என பல்முனைகளில் இருந்து மதிப்பீடு செய்யப்படுவதால் தொழிலாளர்கள் எப்போதும் நெருக்கடியிலே அதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இடைத்தரகர்களை ஒழிப்பதாக இந்த இணையவழி நிறுவனங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. ஆனால் பல நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து 15 முதல் 25 சதவிகிதம் வரை கமிஷன் அடிக்கின்றன. வெளிப்படைத்தன்மையில்லாத பிற கட்டணங்கள் தொழிலாளர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்கின்றன. பல்வேறு காரணங்களைச் சொல்லி தொழிலாளர்களின் காப்பீட்டுத் தொகைக்கான கோரிக்கைகளையும் ரத்து செய்கின்றன இந்த நிறுவனங்கள்.

இப்படி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் கிக் தொழிலாளர்களுக்கு முத்தரப்பு நலவாரியம் அமைப்பது என்பது எந்த வகையிலும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. மேலும், ஸ்விக்கி, சொமேடோ, ஊபர், ஓலா போன்ற இணையவழி நிறுவனங்கள் பன்னாட்டு நிதி மூலதனத்தின் ஈர்ப்பு மையமாக இருப்பதையும், கிக் தொழிலாளர்கள் பட்டாளம் வளர்ந்து வருவதாக இருப்பதையும் கணக்கில் கொண்டு, பெருமளவிலான தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி தான் இந்த பன்னாட்டு மூலதனத்தின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள முடியும் என்பது சொல்லாமலே விளங்கும். அமைப்பாக்கப்பட்ட கிக் தொழிலாளர்களின் போராட்டங்களால்தான் இந்த சட்டம் இயற்றப்பட்து என்பதை அரசியல் ரீதியான அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு மேலும் தொழிலாளர் வர்க்கத்திற்கான உரிமைகளை வென்றெடுக்கும் பரந்த அளவிலான போராட்டங்களை நடத்த வேண்டும்.


சீனிச்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க