ஸ்விகி நிறுவனம் தற்போது புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து ஸ்விகி ஊழியர்கள் சென்னையில் ராயபேட்டை, T.நகர் உள்ளிட்ட பல ஸ்விகி மண்டலங்களில் கடந்த 5 நாட்களாக போராடி வருகிறார்கள்.
ஏற்கனவே ஸ்விகி, சொமாடோ ஊழியர்கள் இருந்த ஸ்லாட் முறை அடிப்படையில் 12 மணி நேரம் வேலை, அத்துக்கூலி சம்பளம் கொடுத்து அட்டை உறிஞ்சுவது போல ஸ்விகி ஊழியர்களை இந்த ஸ்விகி நிறுவனம் பெரும் மூலதனமின்றி சுரண்டி கொழுக்கின்றது.
இதற்கு முன்னதாக இருந்தமுறை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ULTRA TIME, 11 TO 11 FULL TIME, இரவு 7 முதல் அதிகாலை 3 மணி வரை இதுபோன்று மூன்று FULL TIME SLOT முறைகளும் மற்றும் கல்லுரி மாணவர்களுக்கான PART TIME SLOT முறைகளும் இருந்தன. இந்த அனைத்து SLOT முறைகளையும் ஒழித்துக்கட்டிவிட்டு, இப்பொழுது புதிய SLOT முறையை கொண்டுவந்துள்ளது ஸ்விகி நிறுவனம்.
படிக்க : பெங்களுரு: போராடும் டெலிவரி தொழிலாளர்கள் – கண்டுகொள்ளாத ஸ்விகி!
அதன்படி, இயங்கினால் விடியற்காலை 5 மணி முதல் தொடக்கி இரவு 11 மணி வரையிலும் இரு சக்கர வாகனத்துடன் தன்னையும் இணைத்து கொண்டு இயந்திரம் போல் ஓடிக் கொண்டியிருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்கள் கூட எரி பொருள் தீர்ந்துவிட்டால் நின்றுவிடும் ஆனால் ஸ்விகி தொழிலாளர்கள் வயிற்றை கட்டிகொண்டு சோத்து பொட்டலங்களை சுமந்து கொண்டு ஓடிக் கொண்டுயிருக்கிறார்கள்.
இப்பொழுது இதற்கு கொடுக்கும் அத்துக்கூலி என்பதோ வெறும் 7000 தான். இதை வைத்து கொண்டு இன்று இருக்கு விலைவாசிக்கு எப்படி குடும்பம் நடத்த முடியும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.
டெலிவரித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த பைக்குகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்த பைக்குகளுக்கான பெட்ரோல், பழுது பார்ப்பது, பராமரிப்பது, டெலிவரிக்கான தங்கள் தொலைபேசியையே பயன்படுத்துவது மேலும் நிறுவனத்தால் வழங்கப்படும் டி-ஷட்டுகள், போன் ஸ்டாண்டுகள், போன் கவர்கள் என அனைத்துக்கும் தொழிலாளர்கள் தங்கள் பணத்தைத்தான் செலவழிக்க வேண்டும்.
பயன்படுத்தும் வரை ஒட்டச் சுரண்டிவிட்டு, பயன்பட்ட பின்னர் வீதியில் தூக்கி வீசுவதை எளிமைப் படுத்தியிருக்கிறது, சொமாடோ, ஸ்விகி நிறுவனங்கள் பின்பற்றும் இத்தகைய வேலைமுறை. இதனை கிக் தொழிலாளர் முறை என்று குறிப்பிடுகின்றனர் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள்.
தொழிலாளர்களுக்குச் சுதந்திரமான வேலைமுறை என்பதுபோல முன்னிறுத்தப்படும் இந்த வேலைமுறை உண்மையிலேயே நிறுவனங்களின் சுரண்டலை அதிகரித்துக் கொள்வதற்கான முறையாகும். எவ்வித பெரும் மூலதனமுமின்றி முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான எளிய வழிமுறைதான் இந்த கிக் பொருளாதாரம்.
போக்குவரத்து வாகனம் முதல், பெட்ரோல், பராமரிப்பு என அனைத்தும் தொழிலாளியின் பொறுப்பு. அற்ப கூலியைக் கொடுத்துவிட்டு எவ்வித பொறுப்பும் ஏற்கத் தேவையின்றி சுரண்டலை மட்டும் தீவிரமாக நடைமுறைப் படுத்துகிறது.
படிக்க : தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
இந்தியாவில் கிக் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம், தொழில் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை உறவுகளை கையாளும் விதிகள், சட்டங்கள் ஏதும் அரசிடம் இல்லை.
தமிழகத்தில் சொமாடோ, ஸ்விகி டெலிவரித் தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுவதற்கும் ஏமாற்றப்படுவதற்கும் எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவதற்கும், இத்தகைய தொழிலாளர்களுக்கான தொழில் பாதுகாப்பு சட்டங்களைக் கொண்டு வருவதற்கும் சங்கமாக திரண்டு போராடுவதை தவிர வேறு வழியில்லை.
ஆகாஷ்