டந்த அக்டோபர் 16-ஆம் தேதி, கார்ப்பரேட் வணிக ஆங்கில நாளிதழ்களில் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது.

புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவர 25 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த சட்டங்கள் அடிப்படையிலான வரைவு விதிகளை அவை வகுத்து முடித்துவிட்டன. மேகாலயா, மேற்கு வங்கம், நாகாலாந்து ஆகியவை தங்களது மாநிலங்களுக்கான விதிகளை இன்னும் வகுக்கவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு சட்டங்களாக இருந்த தொழிலாளர் சட்டங்களை நான்கு குறியீடுகளாக மாற்றியமைத்திருப்பது என்பது தொழில் வளர்ச்சி பெருகுவதில் முக்கிய பங்காற்றும் என இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளன.

தற்போது கார்ப்பரேட் ஊடகங்களின் இந்த மகிழ்ச்சியைக் காணும் போது, அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இச்சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படலாம்; மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், அதற்கான அறிவிப்புகளை பாசிச பா.ஜ.க. அரசு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பிலிருந்த 29 தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு, ஊதியச் சட்டம் 2019 (மூன்று சட்டங்களை நீக்கி உருவாக்கப்பட்டது), சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 (ஒன்பது சட்டங்களை நீக்கி உருவாக்கப்பட்டது), தொழில் உறவுகள் சட்டம் 2020 (மூன்று சட்டங்களை நீக்கி உருவாக்கப்பட்டது), பணிப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வேலைநிலைமைகள் சட்டம் 2020 (13 சட்டங்களை நீக்கி உருவாக்கப்பட்டது) ஆகிய புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை பாசிச பா.ஜ.க. எந்தவித விவாதமுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாகவும், தொழிலாளர் சட்டம் பொதுப்பட்டியலில் (Concurrent List) இருப்பதால் மாநில அரசுகள் இச்சட்டங்களை ஏற்றுக்கொண்டு இதற்கான விதிகளை உருவாக்க வேண்டியிருந்ததாலும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இச்சட்டங்களுக்கான விதிகள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தி.மு.க., சி.பி.எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் இச்சட்டங்களுக்கான வரைவு விதிகளை வகுத்து முடித்துள்ளன.

1990-களின் பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற நாசகரக் கொள்கையின் விளைவாக தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. வேலையின்மை வளர்ந்து, ரிசர்வ் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் பெருகியுள்ளது. நவீனமயமாக்கம், டிஜிட்டல்மயமாக்கத்தின் விளைவாக இந்தியத் தொழிலாளர்களின் ஊதிய சராசரி தொடர்ந்து குறைந்து வந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ஐ.எல்.ஓ.) டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனமும் (ஐ.ஹெச்.டி.) இணைந்து வெளியிட்டுள்ள “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை” தெரிவித்துள்ளது.

இந்த புதிய நிலைமைகளில், மேலும் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதற்கும் தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து வர இருக்கின்ற தாக்குதல்களுக்கும் பரந்த அடித்தளத்தை இந்த சட்டங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன.

2002-ஆம் ஆண்டில் பாசிச பா.ஜ.க-வின் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டாவது தொழிலாளர் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றுதான் 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு அல்லது ஐந்து சட்டங்களாக சுருக்குவதாகும். அன்றைக்கு பத்தாண்டுகள் ஆட்சி புரிந்த காங்கிரசு அரசு அதனை நிறைவேற்றுவதில் மந்தப் போக்கைக் காட்டியது; மோடி தலைமையிலான அரசுதான், இதில் தீவிரம் காட்டியிருக்கிறது என்று தனது கார்ப்பரேட் விசுவாசத்தை மெச்சிக்கொள்கிறது மோடி-அமித்ஷா கும்பல்.

புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால், தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளும் பறிக்கப்பட்டுவிடும். கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக்கப்படுவர்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறை, கிக் வேலைமுறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அதிகரித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என ஆகப் பெரும்பான்மையினர், தங்களுக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற அவலநிலையில் வாழ்கின்றனர். இந்நிலையில், தொழிலாளர் சட்டங்களால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கருதுவது இயல்பானதே. ஆனால், பழைய 44 சட்டங்களைப் போல தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் தொடர்பான சட்டங்கள் அல்ல, புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள்.

இந்தப் புதிய சட்டங்களின்படி தொழிலாளர்கள் சங்கம் வைப்பதற்கும் தங்களது உரிமைகளைப் பெறுவதற்குமான அனைத்து வாய்ப்புகளும் சட்டப்பூர்வமாகவே தடுக்கப்பட்டுவிடும். சங்கம் வைப்பதற்கு சட்டப்பூர்வமான உரிமை இருக்கும் இன்றைய நிலையிலேயே, ஆயிரத்திற்கும் அதிகமான சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் வைப்பதற்கு ஆலை நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை, மாநில அரசும் சாம்சங் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கவில்லை. அதைப்போலவே, ஒன்றிய அரசு வரையறுத்துள்ள குறைந்தபட்ச கூலியைவிட (Minimum Wage) குறைவான கூலியைத்தான் 80 சதவிகித தொழிலாளர்கள் பெறுகின்றனர். சட்டம் இதனை வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த புதிய நான்கு சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால், தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளும் பறிக்கப்பட்டுவிடும். கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக்கப்படுவர்.

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள், காவி – கார்ப்பரேட் – போலீசின் கும்பலாட்சியை நிறுவுவதற்கு உதவுவதைப் போல, இந்த புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களை ஆலைகளிலேயே நவீன கொத்தடிமைகளாக அடைத்து வைப்பதற்கான வழிவகைகளைச் செய்து கொடுக்கிறது.

அந்தவகையில், தொழிலாளர்களுக்கு எதிராக ஆளும் பாசிச பா.ஜ.க. அரசினால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்கள் “கார்ப்பரேட் அரசின்” ஓர் அங்கமாகும்; இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளங்களில் ஒன்றாகும்.

எனவே, இத்தகைய தொழிலாளர் விரோத சட்டத்தை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சிகள் விதிகளை உருவாக்கியிருப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.

எட்டுமணி நேர வேலை, சங்கம் சேரும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்றதாகும். இன்று, இவை சட்டப்பூர்வமாகவே பறிக்கப்படும் நிலைமைக்கு எதிராகவும் தமது உரிமைகளை மீட்டெடுக்கவும் தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.


மகேஷ்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க