இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
கோரத் தாண்டவமே கொரோனா ! – இறுதிப் பகுதி

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பகுதி 3 : பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
பகுதி 4 : இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!

இறுதிப் பகுதி :

கொள்ளை நோய்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாகிறது?

இதுவரை தற்கால முதலாளித்துவ உற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறையினால் எப்படி மனிதர்களை தொற்றும் புதுப்புது வைரஸ்கள் உருவாகின்றன, பரிணாமமடைகின்றன என்பதையும் நவீன விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்களின் இலாபவெறியால், எங்ஙனம் புதிய தொற்று வைரஸ்கள் உருவாகின்றன என்பதையும் பார்த்தோம். மேலும், அவை உலகளாவிய கொள்ளை நோயாக உருவாக இந்த உலகளாவிய முதலாளித்துவ உற்பத்திமுறையே (உற்பத்தி, வாணிபம் வலைப்பின்னல், வினியோகம்) எங்ஙனம் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றன என்பதையும் கவனித்தோம்.

ஆனால், எந்த தொற்றுகிருமிகளும் அவை தொற்ற ஏதுவான சமூகத்தை எதிர்கொள்ளாமல் கொள்ளைநோயாக உருவெடுப்பதில்லை. அப்படிப்பட்ட சமூகத்தை – ஊட்டச் சத்தற்ற, உடல்ரீதியிலும் மனரீதியிலும் பலவீனமான, பொதுச் சுகாதாரமற்ற, சமூக பாதுகாப்பற்ற மக்கள் சமூகத்தை – முதலாளித்துவம் எப்படி படைக்கின்றது என்பதை அதன் மூலம் கொள்ளைநோய்களுக்கு ம்க்கள் கொத்து கொத்தாக பலியாவதற்கு எப்படி காரணமாகின்றது என்பதையும் இனி பார்ப்போம்.

ஆரம்பகால முதலாளித்துவத்தில் மக்களின் உடல்நிலை எவ்வாறு நலிவுறுகிறது, அதற்கு முதலாளித்துவத்தின் உற்பத்திமுறையே எப்படி காரணமாக இருக்கிறது என்பதை ஏங்கெல்ஸ் தனது இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை என்ற புத்தகத்தில் விளக்குகிறார்.

“… ஆனால் சமூகமானது பல நூற்றுக்கணக்கான பாட்டாளிகளை இத்தகைய நிலையில் இருத்திவைக்கும்போது, அவர்கள் தவிர்க்கவியலாமல் மிகவும் இளமையிலும், இயற்கைக்கு மாறான முறையிலும் மரணங்களைச் சந்திக்க நேரிடுகிறது. இது, வன்முறையால் ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு அல்லது வாள் வெட்டுக்குப் பலியாவதைப் போன்ற மரணமாகும். இது, ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் தேவைகளைப் பறித்துக் கொள்ளும்போது, அவர்களை வாழவே முடியாத நிலைகளின் கீழ் இருத்தி வைக்கும்போது சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது, மரணங்கள் தவிர்க்கவியலாத விளைவு என்று உறுதியாகும் வரை அவர்களை இத்தகைய நிலைமையிலேயே தொடர்ந்து இருக்குமாறு வைத்திருக்கும்போது இத்தகைய நிலைமைகளால் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அழிந்தே போக வேண்டும். இருப்பினும், இத்தகைய நிலைமைகள் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்படுகின்றன.

இத்தகைய செயலானது, நிச்சயமாகவே, ஒரு தனிநபரின் செயலைப் போன்றதொரு அப்பட்டமான கொலையே ஆகும். இது, பொய்வேடமிட்ட, தீங்கிழைக்கும் கொலை; இந்தக் கொலைக்கு எதிராக யாரும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் முடியாது. அது கொலையாகவும் தெரிவதில்லை. ஏனென்றால், எந்தவொரு மனிதனும் கொலைகாரனைப் பார்க்க முடிவதில்லை. (ஏனென்றால், ஒவ்வொருவரும் இந்தக் கொலைக்குப் பொறுப்பாகிறார்கள்; இருப்பினும் யாரும் இதற்குப் பொறுப்பாளியுமல்ல)… இது சமூகப் படுகொலையைப் பண்படையாளப் படுத்துகிறது…”26

பெரிய நகரங்களில் மக்கள் தொகையைக் குவித்து மையப்படுத்துவதானது, ஒரு சாதகமற்ற சூழலைச் செயல்படுத்துகிறது. இங்கிலாந்தின் கிராமப்புறத்தில் நிலவும் காற்றைப் போல, லண்டன் நகரின் வளி மண்டலம் ஒருக்காலும் தூய்மையாகவும், ஆக்சிஜன் நிறைந்ததாகவும் இருக்க முடியாது. மூன்று முதல் நான்கு சதுர மைல் பரப்பளவில், நெருக்கமாக உயிர்வாழும் 25 லட்சம் ஜோடி நுரையீரல்களும், 2,50,000 எரிவிசை எந்திரங்களும் (ஆலைகளிலுள்ள டீசல் என்ஜின்கள், நிலக்கரி அடுப்புகள் மற்றும் மோட்டார் வாகனங்கள்) ஏராளமான ஆக்சிஜனை உட்கிரகிக்கின்றன. இதனால் ஆக்சிஜன் சிரமத்துடன்தான் மாற்றீடு செய்யப்படுகிறது. ஏனென்றால், நகரங்களைக் கட்டியமைக்கும் முறையானது, காற்றோட்டத்திற்கு இடையூறாக இருக்கிறது.

படிக்க :
♦ அதிகாரவர்க்கத்தின் துணையோடு விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ் !!
♦ வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !

சுவாசத்தாலும், ஆலைகளின் எரிவிசை எந்திரங்களாலும் கார்போனிக் அமில வாயு விளைவிக்கப்படுகிறது. அதன் ஈர்ப்பு விசையின் எடையால் (Specific Gravity) இந்த வாயு தெருக்களில் தங்கி விடுகிறது. பிரதான காற்றின் ஓட்டமானது நகரத்துக் கட்டிடங்களின் கூரைகளுக்கு மேலாகச் செல்கிறது. இதனால், நகரங்களில் வாழ்வோரின் நுரையீரலானது, போதிய அளவுக்கு ஆக்சிஜனைப் பெறத் தவறி விடுகிறது. இதன் விளைவாக, குறைந்த உயிர்ச்சக்தியும், மன ரீதியாக உடல் ரீதியாகக் களைப்பும் ஏற்படுகிறது.

இந்தக் காரணத்தினால் சுதந்திரமான, இயல்பான சூழலில் வாழும் கிராமப்புற மக்கள்தொகையை விட குறைவாகவே, நகரங்களில் வாழ்வோர் மிகக் கடுமையான (acute) நோய்க்கும், குறிப்பாக அழற்சி (inflammatory) நோய்க்கும் ஆளாகின்றனர். ஆனால், நகர்ப்புற மக்கள் நாள்பட்ட நோயினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். பெருநகரங்களில் வாழ்க்கையானது, தன்னுள்ளேயே, உடல் நலத்திற்குக் கேடு விளைப்பதைக் கொண்டிருக்கிறது என்றால், தொழிலாளி வர்க்கத்தினரின் குடியிருப்புகளில் நிலவும் தீங்கு விளைவிக்கும் அசாதாரணமான சுற்றுச்சூழலின் தாக்கமானது, இன்னும் எவ்வளவு பெரியதாக இருக்கும்? அங்கே, நாம் ஏற்கெனவே பார்த்ததைப் போல அனைத்துமே இணைந்து காற்றை நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன.”27.

இதன் பிறகு டைபஸ், காலரா போன்ற கொள்ளைநோய்கள் உருவாக கூடிய இடங்களாக தொழிலாளர்களின் குடியிருப்புகள் எப்படி உள்ளன; எங்ஙனம் தொழிலாளர்கள் அவற்றுக்கு பலியாகின்றனர் என்பதை விளக்கிச் செல்கிறார். ஏங்கெல்ஸின் கூற்று இன்றைக்கு அப்படியே பொருந்தாவிட்டாலும் (பின் தங்கிய ஏழை நாடுகளுக்கு பொருந்தும்), முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர்களின் நிலைமை குறிப்பாக வாழ்நிலைமை எங்ஙனம் அவர்களை பலவித நோய்களுக்கும், கொள்ளை நோய்களுக்கும் பலியாகுபவர்களாக ஆக்குகிறது என்பதை இன்றும் பொருத்திப்[ பார்த்து புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக, கோவிட்-19 போன்ற கொள்ளை நோயால் உடல்ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரண உழைக்கும் மக்கள்தான். அவர்கள் மீது முதலாளித்துவ வர்க்கம் நிகழ்த்தும் நேரடியான மற்றும் சமூகரீதியான கட்டுபாடற்ற சுரண்டல்கள் அவர்களை உடல்ரீதியில் பலவீனமானவர்களாக்குகிறது.

கொள்ளைநோயியலாளர்கள் (Epidemologist) இந்நோய்களை பற்றி பேசும்போது “அடிப்படை மறுவுற்பத்தி எண்” (basic reproduction number, Ro) பற்றி குறிப்பிடுகின்றனர். இந்த எண்ணை எப்படி கணக்கிடுகின்றனர் என்பதை முதலில் பார்க்கலாம். Ro-எனும் அடிப்படை மறுவுற்பத்தி எண்ணைக் கணக்கிட முதலில் சமூகத்தில் யாருக்கும் அந்நோய்க்கெதிராக நோயெதிர்ப்பு சக்தி இல்லை (நோயெதிர்ப்பு சக்தி எண் (A) பூஜியம்என்று கருதிக் கொள்ளப்படுகிறது. அப்படியிருக்கும்போது, அந்நோய் எவ்வளவு மக்களை தாக்கும் என்பதை குறிக்கும் எண் தான் Ro.

அதாவது, Ro என்பது நோயை ஏற்படுத்தும் வைரஸ் / நோய்க்கிருமியின் வீரியத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. இந்த Ro எண் ஒன்றுக்கும் குறைவாக இருந்தால் அந்நோயின் பரவல் சிறிது காலத்தில் நின்றுவிடும். Ro ஒன்றுக்கும் மேல் இருந்தால் அது மேலும் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. கோவிட்-19 வைரஸுக்கு Ro எண் 2.0 முதல் 2.5 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வேறுவகையில் பார்த்தால், ஒரு வைரஸ் எவ்வளவுதான் வீரியமிக்கதாக இருந்தாலும் ஒரு சமூகத்தின் நோயெதிர்ப்பு சக்தி எண் (A) அதிகமாக இருந்தால் அவ்வளவுக்கு கொள்ளைநோயின் பரவல் குறைவாக இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளலாம். ஆக, நடைமுறையில் (நோயெதிர்ப்பையும் சேர்த்துக் கணக்கிடும்போது) இந்த R எண் ஒன்றுக்கு கீழ் இருக்குமா என்பது தொற்றும் வைரஸை பொருத்தது மட்டுமல்ல, அக்கொள்ளைநோயை எதிர்கொள்ளும் சமூகத்தின் ஆரோகியத்தையும் பொருத்ததாகும்.

ஒரு சமூகம் அனைத்து வகையிலும் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது மக்களின் நிலையான வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, பொது மருத்துவம் மற்றும் சுகாதாரம், மக்களின் ஊட்டச்சத்து நிலை இன்னும் பலவற்றைச் சார்ந்தது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் புதியதாராளவாதக் கொள்கைகள் என்பது மேலே கூறிய அனைத்திற்கும் எதிராக வேலைச் செய்கிறது.

மேலும், 2008ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாத முதலாளித்துவம் மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை ஏவியுள்ளது. வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளில் கூட ஓய்வூதிய வெட்டு, சம்பளக் குறைப்பு, வேலைவாய்ப்பின்மை, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதிகளை குறைப்பது போன்றவற்றை அமல்படுத்தியதன் விளைவாக அந்த சமூகத்தின் ஆரோக்கியம் வெகுவாக வீழ்த்தப்பட்டது. அதன்மூலம் அச்சமூகங்களில் இக்கொள்ளை நோய் பரவுவதற்கான தளத்தை முதலாளித்துவம்தான் விரிவுபடுத்தி கொடுத்துள்ளது.

உதாரணமாக, இத்தாலியை எடுத்துக் கொள்வோம். இத்தாலி நாட்டில் தேசிய மருத்துவ சேவை அமலில் இருந்து வந்தது; அதன்படி எல்லா இத்தாலிய குடிமக்களும், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினரும் தங்களுக்கான மருத்துவ சேவையை இலவசமாக பெற்று வந்தனர். 2000ம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் இத்தாலிய மருத்துவத் துறையை உலகிலேயே இரண்டாவது சிறந்த மருத்துவ சேவை (முதலாவது பிரான்ஸ்) என்று பாராட்டியது. ஆனால், 2012-ம் ஆண்டில் அரசுக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடியின் காரணமாக சிக்கன நடவடிக்கையை அறிவித்தது;

அதன்படி 2012-ல் இத்தாலிய அரசு மருத்துவத்திற்கான தனது நிதி ஒதுக்கீட்டை 90 கோடி யூரோ குறைத்தது, 2013-ல் மேலும் 180 கோடி யூரோ குறைத்தது, 2014-ல் மேலும் 200 கோடி யூரோ குறைத்தது. தனது குடிமக்களின் மருத்துவத்திற்கான நிதியை தொடர்ச்சியாக குறைத்துக்கொண்டு வந்துள்ளது. இதனால், 2015-ல் 1.22 கோடி இத்தாலியர்கள், அதாவது ஐந்தில் ஒரு பங்கு இத்தாலியர்கள், மருத்துவ வசதி அற்றவர்களாக்கப்பட்டனர்; மேலும் 78 லட்சம் இத்தாலியர்கள் தங்களது மொத்த சேமிப்பையும் மருத்துவத்திற்காக செலவிட வேண்டிய நிலையில் அல்லது கடன் வாங்க வேண்டிய நிலையில் அல்லது இரண்டையும் செய்யக் கூடிய நிலையில் உள்ளனர்28.

இவையல்லாமல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வேலையிழப்பு, சம்பள வெட்டு, வேலையின்மை, கடன் நெருக்கடி போன்றவற்றையும் நினைத்து பார்த்தால் அம்மக்களின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம். இந்நிலைமைகள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டால், இத்தாலியில் கோவிட்-19 முதலாம் அலையில் ஏன் அவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளிலும் இதே நிலைதான். முதல் 20 சதவீத பணக்காரர்களின் வருமானம் மற்றும் கடைசி 20 சதவீத மக்களின் வருமானம் ஆகியவற்றுக்கு இடையிலான விகிதம் இத்தாலியில் 2007-ல் 5.5 ஆக இருந்தது 2016-ல் 6.5 ஆக உயர்ந்துள்ளது; ஸ்பெயினில் 2007-ல் 5.4 ஆக இருந்தது 2016-ல் 6.6 ஆக உயர்ந்துள்ளது; இதுவே கிரீஸில் 2007-ல் 5.3 ஆகவும் 2016-ல் 6.2 ஆகவும் உள்ளது. மேலும் இந்நாடுகளின் சிக்கன நடவடிக்கைகள் எவ்வாறு ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்திருக்கிறது என்பதை ஆக்ஸ்பாம் அறிக்கை (2018) விளக்குகிறது.

ஸ்பெயின் நாட்டின் மொ..(2013-ல் இருந்து) பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு அதிகரித்த போதிலும் 1.3 கோடி அல்லது 28 சதவீத ஸ்பெயின் குடிமக்கள் வறுமையிலும் சமூக விலக்குக்கு ஆட்பட்ட நிலையிலும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன29. ஸ்பெயினின் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வறுமையில் உள்ளனர். மேலும் ஸ்பெயினின் பல ஆயிரக் கணக்கான மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர்; வீட்டுக்கான வாடகை இரண்டு மடங்கு அதிகரித்து செலவழிக்க கூடிய வருமானத்தை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008 நெருக்கடிக்கு பின், பல ஐரோப்பிய நாடுகளின் நிலைமை இதுதான். அமெரிக்காவிலும் மக்களுக்கான மருத்துவ ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன; அங்கு கோவிட்-19னால் இறந்தவர்களில் பெரும்பான்மையோர் கருப்பினத்தவர்கள் தான் என்று பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளிலோ (வளர்ந்த நாடுகளில் இருப்பது போல) சமூக பாதுகாப்போ, வேலை பாதுகாப்போ இல்லை. இந்தியாவின் குழந்தைகளில் 40 முதல் 50 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர். மொத்த வேலைவாய்ப்பில் கிட்டதட்ட 80 சதவீதம் வேலைகளை முறைபடுத்தபடாத துறைகள் வழங்குவதால், அத்தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பும் அற்றவர்களாக உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடனே வெளிப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போராட்டங்களையும் நெடும் பயணங்களையும் பற்றிய செய்திகளே பார்த்தாலே போதும், இது போன்ற கொள்ளைநோய்களால் நம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஏதுவாகத்தான் நம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பு உள்ளதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

படிக்க :
♦ தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் !
♦ கோயிலை சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளை அகற்ற முயற்சிக்கும் யோகி அரசு !

மேலும், முதலாளித்துவ உற்பத்திமுறை சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மக்களை நாட்பட்ட நோய்களுக்கு தள்ளிவிடுவதால், கொள்ளைநோய்களில் இறப்பது சுலபமாகிவிடுகிறது. கோவிட்-19-னால் இறப்பவர்கள் ஏற்கெனவே உடல்நல பிரச்சினை உள்ளவர்களும் அதனால் இயல்பாகவே வயதானவர்களும்தான் என்று செய்திகளில் கூறப்படுகிறது. ஆனால், அந்த உடல்நல குறைபாடு ஏன் மக்களுக்கு ஏற்படுகிறது என்பதைதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். “நகரங்களில் வாழ்கின்ற மக்கள்நாள்பட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறுகிறார் எங்கெல்ஸ்.

2003-ல் வெடித்த சார்ஸ் நோயின் இறப்பு விகிதம் (mortality) மற்றும் நீண்டகால பாதிப்பிற்கும் (morbidity) காற்று மாசு குறியீட்டிற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுகள் வந்துள்ளன. காற்றுமாசு அதிகரிக்க அதிகரிக்க சார்ஸினால் ஏற்பட்ட இறப்பு விகிதமும் அதிகரித்தது. குறைந்த காற்றுமாசு குறியீடு உள்ள இடத்தில் உள்ள சார்ஸ் இறப்பு விகிதத்தை விட மத்தியதர காற்றுமாசு உள்ள இடத்தில் சார்ஸ் இறப்பு விகிதம் 84 சதவீதம் அதிகமாக இருந்தது. இதுவே அதிக காற்றுமாசு குறியீடு உள்ள இடத்தில் 200 சதவீதம் அதிகமாக சார்ஸ் இறப்பு விகிதம் இருந்தது 30.

தற்போதை கோவிட்-19 கொள்ளை நோய்க்கு வட இத்தாலிய பகுதி ஏன் அதிகமாக ஆளாகியுள்ளது என்பதை இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, காற்றுமாசு அதிகரிக்க அதிகரிக்க நாள்பட்ட நோய்கள் அதிகமாவதும் அதனால் அதிக அளவில் கோவிட்-19 தொற்று ஏற்படுத்தியிருப்பதையும் எடொர்டோவும் அவரது குழுவும் எடுத்துக்காட்டுகிறது31. அமெரிக்காவை சேர்ந்த இன்னொரு அறிவியலாளர்கள் குழு32 , ஏற்கனவே காற்றுமாசினால் ஏற்பட்டுள்ள நோய்வாய்ப்பட்ட தன்மை கோவிட்-19ன் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதாக கூறுகிறது. ஒரு கனமீட்டரில் ஒரு மைக்ரோ கிராம் (1 µg/m3) அளவிற்கு காற்றுமாசு அதிகரித்தால் கோவிட்-19ன் இறப்பு விகிதம் 15 சதவீதம் அதிகரிப்பதாக கணக்கிட்டுள்ளது.

000

ஆக, முதலாளித்துவ சமூக அமைப்பு மக்கள் மீது அனைத்து வழிகளிலும் தாக்குதல் தொடுத்துள்ளதன் ஒரு வெளிப்பாடே இக்கொள்ளைநோய் தாக்குதல். முதலாளித்துவத்தில் மக்களின் மேற்கூறிய நிலைமைகள் தான் தற்போதைய கொள்ளைநோயான கோவிட்-19ன் இறப்பு விகிதத்திற்கு காரணம் என்பதை இப்படித்தான் நாம் விளக்க முடியும். இது ஏங்கெல்ஸ் கூறியது போல, முதலாளித்துவத்தால் நடத்தப்படும் சமூகக் கொலை. கொரோனாவைரஸ் மக்களை காவு வாங்குதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தது முதலாளித்துவ சமூக அமைப்பும் முதலாளிகளின் இலாபத்திற்கான வெறியுமேயாகும். எனவே, இந்த முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கியெறிவதும், லாபவெறியில்லாத விரிவாக்கப்பட்ட உற்பத்தியை அதாவது சோஷியலிச உற்பத்திமுறையை நிலைநாட்டப் போராடுவதும்தான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

முற்றும்..

தொடரின் அனைத்துப் பகுதிகள் :

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பகுதி 3 : பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
பகுதி 4 : இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!
இறுதிப் பகுதி : கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?

26 இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, எங்கெல்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள், ஆங்கிலம், தொகுதி-4, பக். 393-4
27 இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, எங்கெல்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள், ஆங்கிலம், தொகுதி-4, பக். 394-5
28 Rossella De Falco, Death by a million cuts: what future for the right to health in Italy? August 22, 2018
29 Eurostat, 2017. Statistics on Income and Living Conditions (t_ilc)
30 Yan Cui, Zuo-Feng Zhang, Air pollution and case fatality of SARS in the People’s Republic of China: an ecologic study, 2003
31 Edoardo Conticini, Bruno Frediani, Dario Caro, Can atmospheric pollution be considered a co-factor in extremely high level of SARS-CoV-2 lethality in Northern Italy?, March, 2020.
32 Xiao Wu MS, Rachel C. Exposure to air pollution and COVID-19 mortality in the United States, updated on April 5, 2020.

தங்கம்

1 மறுமொழி

 1. ஒரு தொற்று நோய்,
  உலகளாவிய கொள்ளை நோயாக உருவாக
  இந்த உலகளாவிய முதலாளித்துவ உற்பத்திமுறை (உற்பத்தி, வாணிபம் வலைப்பின்னல், வினியோகம்) எங்ஙனம் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றன என்பதையும்,

  ஆனால், எந்த தொற்றுகிருமிகளும் அவை தொற்ற ஏதுவான சமூகத்தை எதிர்கொள்ளாமல் கொள்ளைநோயாக உருவெடுப்பதில்லை. அப்படிப்பட்ட சமூகத்தை –
  ஊட்டச் சத்தற்ற,
  உடல்ரீதியிலும், மனரீதியிலும் பலவீனமான, பொதுச் சுகாதாரமற்ற,
  சமூக பாதுகாப்பற்ற
  மக்கள் சமூகமாக – முதலாளித்துவம் எப்படி படைக்கின்றது என்பதையும்,
  அதன் மூலம் கொள்ளைநோய்களுக்கு
  ம்க்கள் கொத்து கொத்தாக
  பலியாவது எப்படி சாத்தியமானது என்பதையும்… கட்டுரை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது .

  . மருது பாண்டியன் –
  பத்திரிகையாளர், ( உசிலம்பட்டி )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க