தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கேயின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தனது விசுவாசியான அருண் மிஸ்ராவை தலைவராக நியமித்திருக்கிறது பாசிச மோடி அரசு.

படிக்க :
♦ ராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்
♦ “கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு

உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதே, பா.ஜ.க. கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மிஸ்ராவை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அன்றைய மத்திய காங்கிரசு அரசு மறுத்தது. மத்தியில் பாஜக ஆட்சியமைந்த பிறகே, உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார் மிஸ்ரா. பா.ஜ.க. அரசுக்கு சிக்கலான வழக்குகள் எல்லாம் இவரது அமர்வுக்கு அனுப்பப்பட்டு, சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா

நரேந்திர மோடி இலஞ்சம் பெற்ற சகாரா ஊழல் வழக்கு விசாரணையில், ஆதாரங்களைக் கொண்ட டைரிகளை வருமானவரித்துறை கைப்பற்றியபோது, அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தவர் இந்த மிஸ்ரா. குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டே கொலை வழக்கில், மறு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, குற்றம் சாட்டப்பட்ட அமித்ஷாவை காப்பாற்றியதும் இதே மிஸ்ரா தான்.

அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நீதிபதி லோயா ‘மர்ம மரணம்’ தொடர்பான வழக்கை விசாரிக்குமாறு, இதே அருண்மிஸ்ராவிடம் ஒப்படைத்தார் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. இது உட்பட தீபக் மிஸ்ராவின் மோடி ஆதரவு செயல்பாடுகளை கண்டித்துதான், ரஞ்சன் கோகாய், செல்லமேஸ்வரர், மதன் லோகூர், ஜோசப் குரியன் ஆகிய நீதியரசர்கள், ‘நீதியைக் காப்பாற்றுமாறு’ பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தனர். இவர்களின் எதிர்ப்பையும் மீறி அருண்மிஸ்ரா தலைமையில் அவ்வழக்கை விசாரித்து, அமித்ஷாவுக்கு ஆதரவான தீர்ப்பையும் வழங்கினார்.

ஜனவரி 2020-இல், 24 நாடுகள் பங்குகொண்ட “பன்னாட்டு நீதித்துறை மாநாட்டில்” அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியிலிருந்த அருண் மிஸ்ரா, “பிரதமர் மோடி உலகம் போற்றும் தொலைநோக்குப் பார்வை உடைய ஆளுமை, துடிப்புமிக்க பேரறிவாளர், சர்வதேச அளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்துபவர்” என்று புகழ்பாடி தனது விசுவாசத்தை காட்டியவர்.

இவ்வாறு நீதிபதியாக இருந்த காலம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவாக மனித உரிமைகளுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் எதிராக செயல்பட்டு வந்த அருண் மிஸ்ராவை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக கொல்லைப்புற வழியில் நியமித்திருக்கிறது மோடி அரசு.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கான சட்டம் இயற்றப்பட்ட போது, அந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே நியமிக்கப்பட வேண்டும் என்ற விதி (ஐ.நா மனித உரிமை ஆணையத்தினால் அமைக்கப்பட்ட தேசிய மனித உரிமை நிறுவனங்களின் பன்னாட்டு கூட்டமைப்பு தேசிய மனித உரிமை ஆணையங்களின் செயற்பாடுகள் குறித்து வகுத்துள்ள பாரிஸ் கோட்பாட்டின்படி) உருவாக்கப்பட்டிருந்தது.

2019, ஜூலை மாதம் மோடி அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில், தனக்கு விசுவாசமான பெருச்சாலிகளை நுழைப்பதற்காக, “ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி” என்ற பெரிய ஓட்டையைப் போட்டது மோடி அரசு. அதன்படி, தகுதி உடைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் 5 பேர் இருந்தும், முதன் முறையாக தலைமை நீதிபதி அல்லாத தனது விசுவாசியான அருண்மிஸ்ராவை மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமித்திருக்கிறது பாசிச பாஜக கும்பல். இவ்வாணையத்தில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் தனக்கு விசுவாசமான – ரத்தத்தில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தச் சாக்கடை ஊறிய – சங்கிகளை பின்வாசல் வழியாகவே நியமித்து வருகிறது மோடி அரசு.

உலகம் முழுவதிலும் மனித உரிமை அமைப்புகள், அரசுகளால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக சரித்திரமில்லை. அனைத்து இடங்களிலும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவே இந்த மனித உரிமை கமிசன்கள் செயல்பட்டுவருகின்றன. இந்தியாவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கெதிராக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை.

எதிர் கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, “மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தலித்துகள் அல்லது பழங்குடியினர்கள் பிரிவை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்” என்று கூறுகிறார். பல் பிடுங்கப்பட்ட ஒரு அமைப்பில் தலித்துகள், பழங்குடியினரை அமரச் செய்தாலும், ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பில் இருந்து கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பதுதான் எதார்த்தம்.

பெரும்பாலும், மனித உரிமை மீறல்களில் போலீசு மற்றும் இராணுவத்தினர்தான் அதிக அளவில் ஈடுபடுகின்றன. இதற்கு எதிராக மக்கள் வெகுண்டு எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்தகைய அமைப்புகள் செயல்படுகின்றன. இவை மக்களைக் காத்திருக்கச் செய்து பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்கின்றன.

அப்படி பல் பிடுங்கப்பட்ட அமைப்பிலும் கூட, தமக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் துடிப்பாக இருக்கிறது, சங்க பரிவாரக் கும்பல். அதனால் தான் அருண் மிஸ்ரா போன்ற தமக்கு ஆமாம் சாமி போடும் நபர்களை அதன் தலைவராக நியமித்திருக்கிறது மோடி அரசு.

இக்கும்பலிடம் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது ‘காளை மாட்டிடம் பால் கறந்து விடலாம்’ என்பதை விட முட்டாள்தனம் இல்லையா?

படிக்க :
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
♦ ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !

அரசின், ‘ஜனநாயக’ நிறுவனங்களின் மீது 7 ஆண்டுகளாக மோடி அரசு நடத்திவரும் தாக்குதல்களை நாம் அறிவோம்.அந்த வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீது தற்போது தொடுக்கப்பட்டிருக்கும் இத்தாக்குதலானது, நாடு முழுவதும் காவி வெறியர்களால், தலித்துகள், இசுலாமியர், பெண்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும், மக்கள் மீதான அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகளையும் பதிவிலிருந்தே நீக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.


சாதனா
செய்தி ஆதாரம் :
The Wire

1 மறுமொழி

  1. எங்காவது தனக்கான நீதி கிடைத்து விடாதா ? – என தவிக்கும் ஊமை ஜனங்களுக்கு இனி கானல் நீராகி விட்ட்து. தனக்கு வாக்களித்த விரல்களையும் வெட்டிக் கொண்டே வரும் பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சி, தானே முடிய வாய்ப்பில்லை. “மயிலே..மயிலே இறகு போடு என்றால் போடாது.. போடு..போடு என்று போட்டால் தான் போடும்”

    – மருது பாண்டியன் –
    பத்திரிகையாளர் ( உசிலம்பட்டி )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க