Friday, December 6, 2024
முகப்புசெய்திஇந்தியா“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு

“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு

“அப்சல் எந்த வீட்டில் இருந்து வந்தாரோ அந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போவோம். அவர்கள் வீட்டில் உள்ள ஒரு கருவைக்கூட விடாமல் அழிப்போம். " என்று கூவுகிறார் ஒரு போலீசு

-

மோடி அரசாங்கத்தின் ஆறாண்டு கால ஆட்சியில் வெறுப்பு பேச்சும், வெறுப்பு பிரச்சாரமும் எல்லா இடங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதில் ‘நாங்களும் சளைத்தவர்கள் அல்ல’ என்கிறது மத்திய ரிசர்வ் போலீசு படை.

செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விவாதம் ஒன்றில் தன்னுடைய வெறுப்பு பேச்சுக்கு விருது வாங்கியிருக்கிறார் குஷ்பூ சவுகான் என்ற மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த காவலர்.

CRPF-Constable Khushboo Chauhan
குஷ்பூ சவுகான்

‘நாட்டில் உள்ள பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சியை மனித உரிமைகளுடன் திறம்பட கையாள முடியும்’ என்ற தலைப்பில் அந்த விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் குஷ்பூ பேசியதன் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

அப்படி பகிரப்பட்ட ஒரு வீடியோவில், பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறி தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவை முன்வைத்து பேசிய குஷ்பூ, “அப்சல் எந்த வீட்டில் இருந்து வந்தாரோ அந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போவோம். அவர்கள் வீட்டில் உள்ள ஒரு கருவைக்கூட விடாமல் அழிப்போம். அப்போதுதான் இன்னொரு அப்சல் உருவாக முடியாது” என ஒரு இந்துத்துவ காவியைப் போன்று பேசியுள்ளார்.

அடுத்து, 2016-ம் ஆண்டு ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட அப்சல் குருவின் முதல் தூக்கிடப்பட்ட நாள் கூட்டம் குறித்து பேசுகிறார்.

“எங்களுடன் எப்போதும் மனித உரிமை பேசுகிறவர்கள் நின்றதில்லை. ஆனால், ஜே.என்.யூ.-வில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள்… இந்தியா துண்டுதுண்டாக உடையும் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்ட போது, அப்சல்… உங்களை கொன்றவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதால் நாங்கள் வெட்கப்படுகிறோம். எல்லோரும் அவருக்கு ஆதரவாக வரிசை கட்டி நின்றார்கள்” என்கிறார்.

பிறகு, இந்திய இராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்துவது போல, “நாட்டின் தைரியமிக்க வீரர்களே, விழித்திருங்கள்… கர்ஜனையோடு, கன்னையாவின் மார்பில் மூவர்ணத்தை குத்துங்கள்” என்கிறார்.

படிக்க:
இந்தியாவில் போலீசின் மனநிலை என்ன ? கருத்துக்கணிப்பு !
♦ சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !

மனித உரிமைகளைப் பற்றி பேசுகிறவர்கள் தியாகிகளின் வயதான தாய், விதவை மனைவி மற்றும் அனாதைகளின் வலியை பார்ப்பதில்லை எனவும் என்கவுண்ட்டர் செய்யும் சினிமா போலீசு ஹீரோக்களைப் போல பேசியிருக்கிறார்.

இந்த வீடியோக்கள் சங்கிகளால் பகிரப்பட்ட நிலையில், வன்முறையை தூண்டுவிதமாக ஒரு காவலரால் எப்படி பேச முடிகிறது என்றும், அந்தப் பேச்சுக்கு அங்கீகாரம் அளித்தவர்களை என்னவென்பது..? என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“இந்த வீடியோ எப்போது, எங்கே எடுக்கப்பட்டது? எந்தப் படையைச் சேர்ந்தவர் இந்தப் பெண்? போலீசின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்? இந்திய தண்டனை சட்டம் குறித்தோ, அரசியலமைப்பு குறித்தோ இவருக்கு ஏதேனும் தெளிவு இருக்கிறதா? அது ஒன்றும் பார்த்தவுடனே கொடுக்கும் நீதியல்ல.. அதோடு, இவர் கொலை மிரட்டல் வேறு விடுக்கிறார்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான ஸ்வரா பாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலர், ‘ஆளும் மன்னர் எப்படியோ, அப்படித்தான் குடிமக்களும்’ என்றும் ‘பாசிசத்தின் பிடியில் இந்தியா ஒளிர்கிறது’ என்றும் ட்விட்டரில் எழுதினர்.

ஆனால், சில ஊடகங்களோ குறிப்பாக இந்தியா டுடே டிவி, ‘காவலரின் நெருப்பு பேச்சு’ என்ற தலைப்பிட்டு செய்தி ஒளிபரப்பியது. ‘காவலர் இந்தியாவுக்கு முன்னுரிமை தருகிறார்’ என்றும் ‘குஷ்பூ : இந்திய எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கை’ என்றும் உப தலைப்பிட்டு செய்தி வெளியானது.

இதுகுறித்து ஆல்ட்நியூஸ் ஊடகத்தின் நிறுவனர் பிரதிக் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு வெறித்தனமான வெறுப்பு பேச்சு இந்தியா டுடேவுக்கு; இந்தியாவுக்கு முன்னுரிமை தருவதாகத் தெரிகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளதோடு.

“ஒரு அதிகாரி கருவில் இருக்கும் சிசுவைக் கொல்வோம் என அழைக்கிறார், கன்னையா குமாரின் இதயத்தை துளைப்போம் என்கிறார் இதுதான் இந்தியாவை முதன்மைப் படுத்துவதா? இது எப்படிப்பட்ட இந்தியாவாக இருக்கும்? தொலைக்காட்சியில் கொலைக்கு பகிரங்க அழைப்பு விடுப்பது இதுதானா?” என்றும் கேட்டுள்ளார்.

காவலர் குஷ்பூவின் பேச்சு விவாதங்களை கிளப்பிய நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சி.ஆர்.பி.எஃப் -இன் ஊடக தொடர்பாளர் மோசஸ் தினகரன், “நாங்கள் மனித உரிமைகள் மதிக்கிறோம். அவர் புத்திசாலித்தனமாக பேசினார். அதில் சில பகுதிகள் தவிர்த்திருக்கலாம். அவருக்கு அதுகுறித்து எடுத்து சொல்லப்பட்டது. இது விவாதத்தில் பேசப்பட்டதுதான், அது தவிர அதில் பேச ஒன்றுமில்லை” என அறிக்கை விட்டுள்ளார்.

நாட்டில் மதத்தின் பெயரால் சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் கொலைகள் நடக்கின்றன என அறிக்கை விட்டதற்காக ‘தேசதுரோக வழக்கு’ பாய்கிறது. அதேசமயம், ஒரு ‘காவலர்’ கருவில் இருக்கும் சிசுவை கொல்வோம் என ‘காவலர்கள்’ நிரம்பிய மேடையிலேயே பேசுகிறார். அவரை தட்டிக்கொடுக்கிறது போலீசு. ஆக மொத்தத்தில் இந்துத்துவ பாசிஸ்டுகளின் முழு பிடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்டது இந்தியா என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.


அனிதா
நன்றி : தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க