மனித உரிமை ஆர்வலரும், 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களின் நீதிக்காவும் அயராது போராடிவரும் போராளியான தீஸ்தா சீதல்வாட், மோடிக்கு எதிராக பொய்களை இட்டுக்கட்டிக் கூறியுள்ளதாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் “அரசியல்வாதியின் கருவி” என்றும் குஜராத் கலவரம் தொடர்பான அவரது குற்றச்சாட்டுகள் “நரேந்திர மோடியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும்” கூறி கடந்த ஆண்டு தீஸ்தா கைது செய்யப்பட்டார். அப்போது தீஸ்தா தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இரண்டு மாதங்கள் சிறையில் இருந்த தீஸ்தா இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு ஜூன் மாதம் மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரணை வந்தபோது அதனைக் குஜராத் நீதிமன்றம் நிராகரித்தது.
உயர்நீதிமன்றத்தில் தீஸ்தாவுக்கு எதிர்த்தரப்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர் மிதேஷ் அமீன், “மனுதாரர்(தீஸ்தா) தனது இரண்டு கருவிகளைக் (போலீஸ் அதிகாரிகள் ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட்) கொண்டு பெரிய சதி செய்யகிறார்” என்றார்.
படிக்க: தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் மறுப்பு – செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நீதிமன்றம்!
தற்போது (ஜூலை 19 அன்று) தீஸ்தாவை உடனடியாக சரணடையுமாறு கூறிய குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அவருக்கு நிபந்தனைகள் ஏதுமற்ற வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆனால் குஜராத் படுகொலையை நிகழ்த்தியதில் மோடிதான் முதன்மை குற்றவாளி என்று தீஸ்தா மட்டுமல்ல, தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தற்போது மோடி அரசின் கையாளாக வேலை செய்யும் இந்தியத் தேர்தல் ஆணையமுமே குஜராத் கலவரத்தின் போது அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்கு அதில் பங்கு இருக்கிறது என்று தனது விசாரணை அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கின்றன.
குஜராத்தில் படுகொலை நடந்தவுடனேயே முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான தேசிய மனித உரிமைகள் ஆணையம் கலவரம் குறித்து மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டதோடல்லாமல், நேரடியாகக் களத்திற்கும் சென்றது. நீதிபதி கே.ராமசாமி, நீதிபதி சுஜாதா மனோகர் மற்றும் வீரேந்திர தயாள் ஆகியோர் குஜராத் சென்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
நேரில் கண்டதாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,
“குஜராத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில், குஜராத் மக்களின் உயிர், சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் காக்க மாநில அரசு தவறிவிட்டது”.
“குஜராத் கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ. ஒரு லட்சமும், கோத்ரா இரயில் விபத்தில் பலியான இந்து குடும்பங்களுக்கு ரூ. இரண்டு லட்சமும் நிவாரணம் எனப் பாரபட்சம் காட்டியது மோடி அரசு” என்று குற்றம்சாட்டியது ஆணையம்.
படிக்க: அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
தேர்தல் சமயத்தில் குஜராத்தில் கலவரம் நடந்ததால் அங்கு தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என முடிவு செய்ய தேர்தல் ஆணையம் நேரடியாகக் களத்திற்குச் சென்றது. அது தொடர்பான அறிக்கையில், “மாநில அரசு தெரிவித்தவற்றுக்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறது. ஒருபுறம் 12 மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துவிட்டு மறுபுறம் 20 மாவட்டங்களுக்கு இலவச ரேஷன்களை வழங்கிவருகிறது” என தேர்தல் ஆணையம் அப்போது அளித்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேலும், “புகார் அளிக்கவந்த நபர்கள் எத்தனை, வழக்கு பதியப்பட்டவர்களின் விபரம், கைது செய்யப்பட்டவர்களின் விபரம், வழக்குப் பதியப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நபர்கள் பற்றிய விபரம் குறித்தான தகவல்களை வழங்குவதை மாநில அரசு தவிர்த்து வருகிறது” என்றும் தெரிவித்திருந்தது தேர்தல் ஆணையம்.
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தை விசாரிக்க நானாவதி-மேத்தா ஆணையத்தை மாநில அரசு நியமித்தது. அதே ஆணையம்தான் பின்னர் குஜராத் படுகொலை குறித்தும் விசாரணை மேற்கொண்டது.
நானாவதி-மேத்தா ஆணையமானது, கலவரத்தைத் தடுக்க அரசு நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், கோத்ரா விபத்து முன்னரே திட்டமிடப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அதுகுறித்து முன்னரே தெரிந்திருந்ததா என்ற கோணத்திலும் ஆய்வு செய்தது.
2004-ஆம் ஆண்டு ஆணையம் அதன் விசாரணையை, அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, அவரது அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதை விரிவாக ஆய்வு செய்தது.
அதேபோல், குஜராத்தில் நடந்த பெஸ்ட் பேக்கரி வழக்கில் (இக்கலவரத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்) குற்றம் சாட்டப்பட்டவர்களை மறுவிசாரணை செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வி.என். கரே, “குஜராத் அரசு மீது தனக்கு நம்பிக்கை இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு பிறகு மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கின் தீர்ப்பில், “அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் எரியும் போது நவீன கால நீரோக்கள் வேறு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். குற்றம் புரிந்தவர்களை எப்படிக் காப்பாற்றலாம் அல்லது பாதுகாக்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்” என்றது நீதிமன்றம்.
ஆக, தீஸ்தா சீதல்வாடின் வழக்கால்தான் மோடி பிம்பம் சரிகிறது என்று சங்கிகள் குற்றம்சாட்டுவது அப்பட்டமான பொய். தேர்தல் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையங்கள் ஏற்கனவே மோடியின் முகமூடியைக் கிழித்திருக்கின்றன.
தாரகை