சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம்: கட்டி எழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 4

2013-ல் ஈஷாவில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் சொன்ன நிலையில், 2020-ல் தமிழக வனத்துறை அப்படியே தன் நிலையை மாற்றிப் பேச ஆரம்பித்தது. 2020 ஜூன் மாதம் இந்த விவகாரம் தொடர்பான நிலை அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முதன்மை வனப் பாதுகாப்பாளர் பி.துரையரசு என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது.

படிக்க :
♦ ஜக்கி வாசுதேவை ஆதாரங்களுடன் தோலுரிக்கும் சவுக்கு !
♦ சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

அதில், ஈஷாவின் வளாகம் என்பது இக்கரை பொலுவம்பட்டியில் பிளாக்-2 காப்புக்காடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது என்றும் இது பிரபலமான யானை வாழிடம் என்றும் குறிப்பிட்டது. இருந்தபோதும், அந்தப் பகுதி யானைகள் செல்லும் பகுதியாக வரையறுக்கப்படவில்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டார் துரையரசு.

ஒவ்வொரு ஆண்டும், யானைகள் ஈஷா வளாகம் அமைந்துள்ள பகுதியை ஒட்டி செல்வது வழக்கம்தான் என்றாலும், இந்தப் பகுதி யானைகள் செல்லும் பகுதியாக வரையறுக்கப்படுவதில்லை என்றது அறிக்கை.

இக்கரை பொலுவம்பட்டி குறித்து வனத்துறை இப்படி மாற்றிப் பேசியது, ஈஷாவுக்கு வசதியாகப்போனது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன்படி, மலைப்பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரைமுறைபடுத்தலாம் என்றது. HACA அனுமதியளிக்க வேண்டிய நிலங்கள், அதாவது இக்கரை பொலுவம்பட்டியும் இதில் அடங்கும் என்றது.

“சட்டவிரோத கட்டுமானங்களை வரைமுறைப்படுத்தி ஈஷா அமைப்புக்கு உதவுவதற்காகவே இந்த விதி கொண்டுவரப்பட்டதாக கருதுகிறோம்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன்.

தாங்கள் ஏற்கனவே கட்டிய கட்டிடங்களுக்கு HACA ஒப்புதல் கேட்டு 2017-ல் ஈஷா விண்ணப்பித்த போது அப்போதைய தலைமைக் காப்பாளரான எச்.பசவராஜு இந்த விண்ணப்பம் குறித்து பரிசீலிக்க ஒரு கமிட்டியை அமைத்தார். ஈஷாவின் கட்டுமானங்கள் உள்ளூர் வனச் சூழலையும் சுற்றுச்சூழலையும் அந்தக் கமிட்டி கண்டறிந்தது. இந்தக் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றால் சில சாலைகளை அவர்கள் பயன்படுத்தக் கூடாது; ஏற்கனவே, கட்டிய சில கட்டிங்களில் மாறுதல்களைச் செய்ய வேண்டும்;

காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் எந்தக் கட்டுமானத்தையும் செய்யக் கூடாது என்று தெரிவித்தது கமிட்டி.

ஈஷா சட்டவிரோதமாக கட்டிடங்களைக் கட்டி வருகிறது என்பது 2012-லிருந்தே தெரிந்தும் அதை நிறுத்தாது ஏன்? என அதே ஆண்டு இந்திய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தமிழக வனத்துறையிடம் கேள்வி எழுப்பியது. HACA-வின் ஒப்புதல் பெறாமல் அந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதை சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியது.

ஆனால், தாங்கள் எல்லா கட்டிடங்களுக்கும் எச்.ஏசி.ஏ ஒப்புதல் பெற்றிருப்பதாக மார்ச் 16, 2017-ல் தெரிவித்தது ஈஷா. ஆனால், ஈஷா வளாகத்தில் நடந்த கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கொடுக்கலாமா என்பதை ஆராய கமிட்டி அமைக்கப்பட்டதே அதற்கு அடுத்த நாள்தான். அதாவது மார்ச் 17-ஆம் தேதிதான். இந்தக் குழு மார்ச் 29-ஆம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

ஏப்ரல் நான்காம் தேதிவாக்கில்தான் முதன்மை தலைமை வனக்காப்பாளர், ஈஷாவின் கட்டுமானங்களுக்கு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கலாம் என கடிதம் எழுதினார். இதையடுத்து நகர்ப்புற திட்டமிடல் துறை, கோயம்புத்தூரில் இருந்த மண்டல துணை இயக்குனரை வைத்து மே 3-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கச் சொன்னது. இதற்கு வனத்துறை விதிக்கும் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்பதோடு, நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும் என்று சொன்னது. அப்படி இருக்கும் போது மார்ச் 16-ஆம் தேதியே HACA எப்படி ஒப்புதல் அளித்திருக்க முடியும்?

இந்தக் கேள்விக்கும் சரி, மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் சரி ஈஷா பதிலளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக Newslaundry அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதிலளித்த ஈஷாவின் செய்தித் தொடர்பாளர், உங்களுடைய முன்அனுமானங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் ஃபவுண்டேஷனைப் பற்றி தூற்றி எழுதினால், அது உங்கள் ரிஸ்க்தான்” என்று எச்சரித்தது.

கட்டுமானங்களைக் கட்டி முடித்த பிறகு அனுமதி அளிக்கும் பிரிவு என்பது தமிழக விதிகளில் கிடையாது. நகர்ப்புற திட்டமிடல் துறையானது கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடத்தை வரைமுறைப்படுத்தலாம். ஆனால், அந்தத் துறை விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். அப்படியே வரைமுறைப்படுத்தினாலும் சுற்றுச்சூழல் அனுமதியை நகர்ப்புற திட்டமிடல் துறை அளிக்க முடியாது.

ஈஷாவின் கட்டுமானங்களுக்கு, அனுமதி அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்த பசவராஜு நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முன்வரவில்லை. அவருக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்த துரையரசு “போதுமான நிபந்தனைகளை விதித்த பிறகுதான் வரைமுறைப்படுத்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டன. அவர்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினார்களா என்பது தெரியாது. எனக்குத் தெரிந்தவரை அவர்களுக்கு HACA ஒப்புதல் இப்போதுவரை கிடைக்கவில்லை” என்றார்.

படிக்க :
♦ கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
♦ மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை

கோயம்புத்தூரின் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் HACA-வின் தலைவராக இருந்த ராஜாமணி ஈஷாவுக்கு அளிக்கப்பட்ட HACA ஒப்புதல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று சொன்னார். “நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்களோ, எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் அவர்.

***

முந்தைய பாகங்கள் :
பாகம் 1 : சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி?

பாகம் 2 : யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !
பாகம் 3 : சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க