Saturday, January 23, 2021
முகப்பு செய்தி இந்தியா பாஜக உதவியுடன் பஞ்சாப் வங்கியை சூறையாடிய நீரவ் மோடி !

பாஜக உதவியுடன் பஞ்சாப் வங்கியை சூறையாடிய நீரவ் மோடி !

-

ஞ்சாப் தேசிய வங்கிக்கு பட்டை நாமம் சாற்றிய நீரவ் மோடி, பிரதமரின் நண்பர் மற்றும் முகேஷ் அம்பானியின் உறவினர் (அம்பானிகளின் சகோதரியின் மகளைத்தான் நீரவ் மோடியின் தம்பி மணம் புரிந்துள்ளார்). தன்மேல் வழக்குப் பாயும் சாத்தியக் கூறுகளை “எப்படியோ” முன்னுணர்ந்து கொண்ட நி.மோ (நீரவ் மோடி), கடந்த மாதமே பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறி விட்டார். நிமோ மட்டுமின்றி அவரது தொழில் கூட்டாளிகளாக இருந்த மனைவி உள்ளிட்ட உறவினர்களும் பாதுகாப்பான நாடுகளுக்குச் சென்று விட்டனர். மேலதிகமாக அய்யா நீரவ் மோடி தனது குடியுரிமையையே மாற்றிக் கொண்டு என்.ஆர்.ஐயாக அவதரித்துவிட்டார். தப்பிச் சென்ற அவரது  குடும்பத்தினர் பலரும் ஆளுக்கொரு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்கின்றனர்.

முதற்கட்டமாக வெளியான செய்திகளின் படி சுமார் 11 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கி உத்திரவாதப் பத்திரங்களை வைத்து மோசடி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மோசடியின் பரிமாணம் அதற்கும் கூடுதலாக இருக்கும் என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் காலப்பகுதி வரை பல்வேறு வங்கிகள் நீரவ் மோடி மற்றும் அவரது தொழிற் கூட்டாளிகளுக்கு வழங்கியிருந்த கடன் உத்திரவாதப் பத்திரங்களின் மதிப்பு மட்டும் சுமார் 17,632 கோடி எனவும், அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் வழங்கப்பட்ட பத்திரங்களின் மதிப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 19 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் எனவும் வருமான வரித்துறை ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செய்திக் குறிப்பில் இருந்து தெரிய வருகின்றது. வெளிநாடுகளில் இருந்து நீரவ் மோடி நகைகளை இறக்குமதி செய்வதற்கு கடன் வாங்க முனைந்த போது, இந்த வங்கிகள்தான் அவருக்கு உத்திரவாத பத்திரத்தை அளித்திருக்கின்றன. இந்த உத்திரவாத சான்றுகள் எவையும் இந்திய வங்கிகளின் மைய ஆவணப்பதிவுகளின் பதிவு செய்யப்படாமல் தந்திரமாக நேரடியாக வெளிநாட்டில் இருக்கும் இந்திய வங்கிகளுக்குச் சென்றிருக்கின்றன.

இது தவிற மேற்படி ஆசாமிகளுக்குச் சொந்தமான நிறுவனங்கள் செய்த மொத்த வர்த்தகத்தின் மதிப்பை விட அவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு (நகை, வைரம் வாங்கியதற்காக) அளித்த ரசீதுகளின் மதிப்பு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுவிசயமாக முறையான விசாரணைகள் நடக்கும் பட்சத்தில் பல பத்தாயிரம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது அம்பலமாகும் வாய்ப்பு உள்ளது. அதாவது போலியான சொத்து மதிப்புகள், வர்த்தக நடவடிக்கைகள், இறுதிக் கணக்குகளை நீரவ் மோடி குரூப் தயாரித்துள்ளது.

எனினும், பாரதிய ஜனதா அரசு “சோட்டா” மோடியின் திருட்டு விவகாரத்தை கையாளும் விதத்தைப் பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நியாயமான விசாரணை நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

நீரவ் மோடி வங்கிகளுக்குப் போட்ட பட்டை நாமம் குறித்து நியாயமாக பேசி இருக்க வேண்டியது சம்பந்தப்பட்ட துறையைக் கையாளும் மத்திய நிதியமைச்சகமும் அதன் அமைச்சருமான அருண் ஜேட்லியும் தான். ஆனால், இத்துறைக்குச் சம்பந்தமே இல்லாத மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைக் களமிரக்கி விட்டுள்ளது மத்திய பாரதிய ஜனதா அரசு.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீரவ் மோடியின் நிறுவனம் ஒன்று வாடகைக்கு எடுத்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர்களில் காங்கிரசுத் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வியின் மனைவியும் அடக்கம் என்பதால் இந்த ஊழலில் காங்கிரசுக்கும் தொடர்பு உள்ளது என்கிற வினோதமான தர்க்கம் ஒன்றை நிர்மலா சீதாராமன் முன்வைத்தார்.

அதுவரை எந்த திசையில் பாய்வது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் மற்றும் டைம்ஸ் நவ் உள்ளிட்ட பாரதிய ஜனதாவின் ஊடகச் செல்லப் பிராணிகளுக்கு திசை என்னவென்பதை நிர்மலா சீதாராமன் தெளிவாக உணர்த்தினார். இதையடுத்து, நீரவ் மோடியின் கடைகளில் எந்தெந்த காங்கிரசு தலைவர்கள் என்ன தொகைக்கு நகைகள் வாங்கினர் என்கிற “விவரங்களை” கையில் வைத்துக் கொண்டு கம்பு சுத்த துவங்கின பாரதிய ஜனதாவின் அடிப்பொடி ஊடகங்கள். அதாவது அபிஷேக் சிங்வியின் பான் கார்டு, இதர அடையா அட்டைகள், நகை வாங்கிய ரசீதுகளை மாபெரும் ஆவணங்கள் போல அர்னாப் கும்பல் டெரர் காட்டுகிறது.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில் பிடிபட்ட ஆவணங்கள் மற்றும் ரசீதுகளில் தெரிவு செய்யப்பட்டவை மட்டும் இந்த ஊடகங்களின் “புலனாய்வுப் பிரிவுக்கு” கிடைத்த விதமே இதன் பின் இருந்த உள்நோக்கங்களை வெட்ட வெளிச்சமாக்குகின்றன. இருப்பினும், அபிஷேக் சிங்வி தான் வாங்கிய நகைகளுக்கு செக் மூலம் பணம் கொடுத்திருப்பதும், தனது கட்டிடங்களை வாடகைக்கு விட்டதாலேயே குடியிருந்தவர்களின் ஊழலை தன்னுடையாதக எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். ஊடகங்களில் அர்னாப்பின் புலனாய்வு கண்டுபிடிப்புகள் தற்போது பெரும் கண்டனங்களை பெற்று வருகின்றன.

நீரவ் மோடியின் ஊழல் காங்கிரசின் கடந்த ஆட்சிக்காலத்தின் போதே துவங்கி விட்டதெனவும் தமது அரசே அதைக் கண்டுபிடித்ததெனவும் பாரதிய ஜனதா எழுதிய திரைக்கதையை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையே கிழித்துப் போட்டது.

சுமார் 11,400 கோடி அளவுக்கான மோசடிகள் 2017 – 18 காலகட்டத்திலே நடந்ததாக மேற்படி முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிப் புகார்கள் பிரதமர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், குற்றவாளி நாட்டை விட்டுக் கம்பி நீட்டிய நிலையில் டாவோசில் பிரதமர் கூட்டிய தொழிலதிபர்கள் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நீரவ் மோடி எப்படிக் கலந்து கொண்டார் என்கிற கேள்விக்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து எந்த விளக்ககமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

இதற்கிடையே, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கோரிப் பெற்றுள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. இதன்படி கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் தேசிய வங்கிகளில் மட்டும் சுமார் 8,670 வங்கி மோசடிப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு சுமார் 61,260 கோடியாக இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

20 வங்கிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு அதற்கு 15 வங்கிகளிடம் இருந்து மட்டும் கிடைத்த பதில்களின் மூலம் மட்டும் இந்த மோசடி விவரங்கள் அம்பலமாகியுள்ளது. மற்ற தேசிய வங்கிகள், தனியார் வங்கித் துறை மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் என கணக்குப் போட்டால் சூறையாடப்பட்ட மக்களின் சேமிப்பு பணத்தின் அளவு சில பல லட்சம் கோடிகளாக இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது.

இது சட்டவிரோத முறையில் நடந்த மோசடியின் கணக்கு மட்டும் தான். சட்டப்பூர்வமாகவே பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் வலுக்கட்டாயமாக வங்கி வலைப்பின்னலுக்குள் கொண்டு வரப்பட்ட லட்சக்கணக்கான கோடி மக்களின் பணத்தை என்ன செய்தார்கள் என்கிற விவரமும் வெளியாகும் போது தான் வங்கித் துறையில் நடந்துள்ள மோசடிகளின் முழு பிரம்மாண்டமும் நமக்குத் தெரியவரும்.

பணமதிப்பழிப்பு வந்த போது காவி பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் ஊளையிட்டார்கள்? இனி யாரும் ஊழல் செய்ய முடியாது, எல்லாம் வங்கி – டிஜிட்டல் பரிவர்த்தனையில் வந்து விட்டதால் கருப்புப் பணம், திருட்டும் பணம், ஊழல் பணம் அனைத்தும் ஒழிந்து விடும் என்றார்கள். இன்றைக்கு அதே டிஜிட்டல் – வங்கி மூலம்தான் நீரவ் மோடி எனும் கொள்ளையர் சாதனை படைத்திருக்கிறார்.

நடந்து கொண்டிருப்பது ஆட்சியல்ல – ஓநாய்களின் கறி விருந்து. இன்றைக்குத் தமது லாபவெறிக்காக மக்களின் சேமிப்புப் பணத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த ஓநாய்கள் நாளை அவை தீர்ந்து போன பின் நேரடியாகவே நம்மீது பாயப் போகின்றன. அதற்கு முன் இவர்களை நாம் முறியடிக்கப் போகிறோமா அல்லது மண்ணாந்தைகளாகவே இருக்கப் போகிறோமா?

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க