நாம் அனுதினம் காணும் மனிதர்களுள் ஒரு சிலரே நம் அகத்தையும் சிந்தையையும் ஒரு நிமிடம் அசைத்து வெகுவான பாதிப்பை உருவாக்கிச் செல்வார்கள். என்னை பாதித்த அப்படிப்பட்ட ஒரு பெண்மணியை பற்றியது தான் இந்த கட்டுரை.

அந்த பெண்மணிக்கு வயது 50. எனது தாயை ஒத்த வயது. அவருக்கும் என் வயதை ஒத்த ஒரு மகன் உண்டு. சிறு வயதில் இருந்தே இரண்டு காதும் சரியாக கேட்காது.
அதனால் ஏற்பட்ட மனத்தாழ்வு நிலை. காது கேளாத மனைவியை சரியாக மதிக்காத குடிகார கணவன். கசந்த திருமண பந்தம்…

கணவன் குடிக்கு அடிமையாக, காது கேளாத இந்த பெண்மணியோ மனநோய்க்கு அடிமையாகி விட்டார். சிறுவயதிலேயே சிசோஃப்ரெனியா என்ற மனநோய் ஆட்கொண்டு விட, அப்போதே கரண்ட் வைத்து சிகிச்சை அளிக்கும் எலக்ட்ரோ கன்வல்சிவ் தெரபி செய்யப்பட்டிருக்கிறார். இப்போதும் அவருக்கு அந்த பாதிப்பு இருக்கிறது.

கணவன் கைவிட்டு ஓடிவிட.. கையில் இருந்த மகனை ஒற்றை ஆளாக வளர்த்தெடுத்தால் அவனும் சேர்ப்பு சரியில்லாததால் குடிகாரனாக மாறி விட்டான்.

பெண்மணி செய்யும் தொழில் மருத்துவக்கல்லூரி வாயிலில் நோயாளிகளுக்கு தேவையான சிறு துணிமணிகள், நேப்கின், உள்ளாடை , போன்றவற்றை விற்பது. கூடவே பருத்திப்பால் செய்து விற்று வந்தார். தற்போது உடல் ஒத்துழைக்காததால் பருத்திப்பால் விற்பதில்லை.

என்னிடம் வரும் போதெல்லாம் சுமார் இருபது நிமிடம் அவர் மனதில் நினைப்பதை பேசுவார். நான் அதைக்கேட்டு தலையை அசைத்துக் கொண்டிருப்பேன்.

தன் மகன் ஒரு முறை குடித்து விட்டு வந்து நெஞ்சில் மிதித்ததை கூறி அழுவார். இன்னொரு முறை கணவன் தன்னை எப்படியெல்லாம் இளமையில் கொடுமை செய்தார் என்று கூறுவார்.

இன்னொரு முறை தான் விற்பனை செய்யும் இடத்தின் அருகில் இருக்கும் மற்றொரு குறவப்பெண்மணி தன்னை தாக்கியதை பற்றி கூறினார்.

ஏன் அவர் தாக்கினார் என்று கேட்டதற்கு..

இவர்.. உள்ளாடைகள், நேப்கின்களை குறைந்த லாபத்திற்கு விற்பதால் அந்த குறவர் இனப்பெண்மணிக்கு வியாபாரம் குறைந்து விட்டதாம். அதனால் கடுப்பாகி அந்த பெண்மணி தாக்கியிருக்கிறார்.

சமீபத்தில் கூட தான் இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய் சீட்டு போட்டு சேமித்து வைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு அந்த சீட்டு பெண்மணி ஓடிவிட்டதாக புலம்பினார். இத்தனை இன்னல்களை அனுதினமும் சந்தித்தாலும் அவர் என்னைக்கவர காரணங்கள் உண்டு..

கூறுகிறேன் கேளுங்கள்;

கடந்த ஏழு வருடங்களாக என்னிடம் மருத்துவம் பார்க்கும் அவர் ஒரு முறை கூட கடன் வைத்தது கிடையாது. மீறி சிறு கடன் ஏற்பட்டாலும் உடனே அடுத்த நாள் வந்து கொடுத்து விடுவார் என தந்தை கூறுவார்.

இன்று கிளினிக்கில் நீண்ட நேரம் அவரை காக்க வைத்து பார்க்க பத்து மணி ஆகிவிட்டது. நீரிழிவு நோயாளியான அவர்.. லோ சுகர் ஏற்பட்டதாக என்னை கடிந்து கொண்டார். நான் பணியாளர்களிடம் இருந்து மில்க் பிக்கிஸ் பிஸ்கெட் ஒரு பாக்கெட் கொடுத்தேன்.

“ஏன் சார். நீங்களே பிஸ்கட் சாப்டக்கூடாதுனு சொல்லிட்டு… இப்ப இத சாப்ட சொல்றீங்களே.. நான் வெளிய போய் இலந்த பழம் வாங்கி சாப்பிட்டேன்.. இலந்த பழம் சாப்பிடலாம்ல சார்?” என்றார்..

நான் ஆடிப்போய் விட்டேன். நம்ம வார்த்தைக்கு இத்தனை மரியாதை கொடுக்கும் ஒரு நபரா என்று உச்சி குளிர்ந்தேன். அடுத்த நினைவு சில மாதங்களுக்கு முன்பு..

நான் எழுதிய ஆரோக்கியம் 2.0 எனும் புத்தகம் வெளியான போது.. அதை பற்றிய பதாகை கிளினிக்கில் இடம்பெற்றிருந்தது. அதைப் படித்து விட்டு உள்ளே வந்த அவர்.
எனக்கு கை கொடுத்து..

புத்தகம் எழுதியிருக்கீங்களா? அருமை சார். எனக்கு ஒன்னு கொடுங்க.. படிக்கிறேன்.. என்றார்.

நானும் ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக நினைத்து தான் வழங்கினேன்.

ஆனால் வெளியே சென்ற அவர் கட்டாயம் புத்தகத்தை பணம் கொடுத்து தான் வாங்குவேன் என அடம் பிடித்து என் அப்பாவிடம் புத்தகத்திற்கான பணத்தை கொடுத்து சென்றிருக்கிறார்.

மீண்டும் அடுத்த முறை வரும் போது புத்தகத்தை பற்றிய தனது புரிதல்களைக் கூறினார். நன்றாக எழுதியிருப்பதாக பாராட்டினார்.

நான் கேட்டேன் ” உங்களுக்கு புத்தகம் படிக்க புடிக்குமா.. மா?”

“சார்.. நான் நல்லா படிப்பேன் சார். எனக்கு காது மட்டும் தான் கொஞ்சம் அவுட்டு. மத்தபடி அறிவாளி சார். என்ன எங்கம்மா படிக்க வைக்காம போய்டுச்சு சார்.” என்று வருத்தப்பட்டார்.

ஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்.

படிக்க:
♦ மரணம் ஒரு வடிகட்டி | ஃபருக் அப்துல்லா
♦ கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தம் ஏற்றம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

அந்த பெண்மணி எப்போது வந்தாலும்.. அவருக்கான நேரத்தை முழுமையாக ஒதுக்கி விடுவேன். அவர் கூறுவதை முழுவதுமாக கேட்பேன்.அவர் பேசுவதில் இருந்து அவரது எண்ண ஓட்டத்தின் அதிர்வுகளை உணர்வேன்.

உலகில் இத்தனை உன்னதமான பரிசுத்தமான ஒரு உயிர் இருக்குமா? என்று எண்ணி அகம் குளிர்வேன்.

இன்று கூட தன் மகனின் திருமணம் பற்றி பேசிய அவர்… என்னை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச்சென்றார்.

தனது மகன் குடிகாரனாக இருப்பதால் அவனுக்கு தான் வரன் பார்க்கப்போவதில்லை என்று கூறினார். இதனால் அவருக்கும் அவரது மகனுக்கு கடுமையான சண்டை வருவதாக கூறினார். தான் கட்டாயம் தனது மகனுக்கு வரன் தேட மாட்டேன் என்றும்… அதற்கு காரணம் “தான் சிறுவயதில் ஒரு குடிகாரனிடம் வாக்கப்பட்டு சீரழிந்ததைப்போல.. எனது மகனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சு இன்னொரு அப்பாவி பிள்ளைய சீரழிக்க மாட்டேன்” என்றார்.

எனக்கு கண்கள் கலங்கி விட்டது. நீதி நேர்மை எல்லாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.

தன் சாதி, தன் ஊர், தன் மகன், தன் இனம் என்றால் எந்த தவறு செய்திருந்தாலும் அதை சரியென்று சொம்பு தூக்கும் இந்த உலகில். தன் மகனாகவே இருப்பினும் ஒரு அப்பாவி உயிர் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணிய இந்த தாயை என்னவென்று சொல்வது?

இவருக்கு இறைவன் இன்னும் அதிகம் அதிகம் ஆயுளையும் நன்மைகளையும் தரட்டும் என்று வேண்டியவனாய் வழியனுப்பி வைத்தேன். என் அகத்தை அந்தத் தாயின் கண்ணீரில் ஒரு முறை கழுவி சுத்தம் செய்து கொண்டேன்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.