விருத்தாச்சலம் அருகே கச்சிராயநத்தம் என்றொரு கிராமம் இருக்கிறது. முழுக்க விவசாய கிராமம், சாதாரண எளிய மக்கள். இந்த சின்னஞ்சிறிய ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் இருக்கிறார்கள். யாரும் வாழ்ந்து முடித்தவர்கள் அல்ல. சராசரி வயது 35 தான் இருக்கும். நான்கைந்து வயதில் இரண்டு குழந்தைகளுடன், வாழ்க்கையை ஓட்டத் தடுமாறி, ‘விதவை’ என்ற ஊராரின் ஏளனப் பேச்சுக்கு ஆளாகி… அந்தப் பெண்கள் அடையும் துயரத்தின் அடர்த்தி சொல்லி மாளாதது.

டாஸ்மாக் எப்படி தமிழக குடும்பங்களைச் சீரழித்து நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது என்பதற்கு கச்சிராயநத்தம் – ரத்தமும், சதையுமான உதாரணம். அவர்களிடம் ஒரு மணிநேரம் பேசினால் மனம் நடுங்கிப் போகிறது. இத்தனை துயரங்களுடன் ஒரு வாழ்வை வாழ முடியுமா என அச்சம் வருகிறது. எனினும், தங்கள் பிள்ளைகளின் முகத்துக்காக ஏதோ வாழ்கிறார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகளும் வளர்ந்து வந்து குடிக்கத் தொடங்கும்போது அவர்கள் நிலைகுலைந்து போகின்றனர். வாழ்வின் மீதான பிடிப்பே அற்றுப்போகிறது. மரணத்துக்காக காத்திருப்பதே வாழ்வாகிப் போகிறது. இது கச்சிராயநத்தம் பெண்களின் கதை மட்டும் அல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் பல்லாயிரம் கிராமங்களில் வாழும் இலட்சக்கணக்கான பெண்களின் துயர நிலை இதுதான்.

உண்மையில், தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்திருப்பது ஒரு மாபெரும் மக்கள் பேரழிவு. இலங்கை இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை விட, டாஸ்மாக் மதுவால் கொல்லப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை அதிகம். இலங்கைப் போரில் உருவான விதவைகளை விட, டாஸ்மாக் மூலம் தமிழக அரசு மக்கள் மீது நடத்திக் கொண்டிருக்கும் சாராய யுத்தத்தில் உருவான விதவைகள் அதிகம். இலங்கை அரசு வீசிய கொத்துக் குண்டுகளில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கையைவிட, டாஸ்மாக் மது மூலம் விபத்துகளில் சிக்கி, உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஒப்பீடு கவன ஈர்ப்போ, மிகைப்படுத்தலோ அல்ல. நடைமுறை உண்மை.

சற்று மனமூன்றி சிந்தித்துப் பாருங்கள்… மனிதர்களின் உடலும், மனமும் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் எப்போதேனும் சீரழிக்கப்பட்டிருக்கிறதா? ஓர் அரசு நிறுவனம், இத்தனை அதிக எண்ணிக்கையிலான மனித உடல்களை, தன் ஏதேனும் ஒருநடவடிக்கையில் என்றைக்கேனும் இணைத்துக்கொண்டிருக்கிறதா? நிச்சயமாக இது ஒரு வரலாறு காணாத பேரழிவு என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தப் பேரழிவை நிகழ்த்திக் கொண்டிருப்பது அரசு. நாம் வாக்களித்து தேர்வு செய்த அரசு. நமக்கு நல்லது செய்வார்கள் என நம்பி நாம் தேர்வு செய்தவர்கள், நம் வாழ்வை நாசமாக்குவதையே முழு நேர வேலைத்திட்டமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த டாஸ்மாக் மூலம் நாம் இழப்பது கொஞ்சம், நஞ்சம் அல்ல. விலை மதிப்பற்ற நமது உடல் நலிவடைகிறது. மூளை சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறது. பகுத்தறிவு பறிபோகிறது. சுய மரியாதை காலாவதி ஆகிறது. மொத்தத்தில் குடிபோதை, நம்மை மனதை நிலையில் இருந்து விடுவித்து மிருகநிலைக்கு இட்டுச் செல்கிறது.

இது, இதற்கு மேலும் சகித்துக்கொள்ள முடியாத தீங்கு. ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் மதுக் கடைகள் தொடர்ந்து இருக்கும் என்றால், இன்னும் பிறக்காத நம் அடுத்த தலைமுறைக்கான ஒரு விஷக் கடையை நாம் விட்டு வைத்திருக்கிறோம் என்று பொருள். இனிமேலும் வேண்டாம் டாஸ்மாக் கடைகள். நமது எதிர்ப்புகளை எண்ணங்களில் இருந்து செயலுக்கு மாற்றுவோம். தனிநபர்களாய் அல்லாமல், கூட்டாக இணைந்து எதிர்ப்பைப் பதிவு செய்வோம். நம் வாழ்வைக் கெடுக்க, நம் வீட்டு உயிர்களை எடுக்க, நம் வீட்டு வாசலில் திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை விரட்டி அடிப்போம். (முன்னுரையில் நூலாசிரியர்…)

கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்களைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், அவற்றில் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம். காவிரி நீருக்கான போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், பாலாறு, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு எதிரான போராட்டங்கள், மதுரையில் ‘கிரானைட் குவாரிகள்’ என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டுவதற்கு எதிரான போராட்டம், தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களின் கடலோரத்தில் தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், ‘இறால் பண்ணை ‘ என்ற பெயரில் கடலோரங்களைச் சுடுகாடாக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டம், ‘மீத்தேன் வாயுத் திட்டம்’ என்ற பெயரில் விவசாய நிலங்களைப் பாழ்படுத்துவதற்கு எதிரான போராட்டம், கெயில் நிறுவனக் குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டம், கவுத்தி வேடியப்பன் மலையைக் காவு கொடுப்பதற்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம்… என நம் கண்ணுக்கு எட்டிய வரையிலும் போராட்டங்களால் நிறைந்திருக்கின்றன நமது கடந்த காலமும் நிகழ்காலமும்.

படிக்க:
பத்திரிகையாளர்களும் நடுநிலைமையும் – வீடியோ
நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !

இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் அநீதியை எதிர்த்து, இந்த மக்கள் திரள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால், இது மட்டுமே இவற்றுக்கு இடையிலான ஒற்றுமை அல்ல. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் புதிய கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை. ஒரு தொழிற்சாலையோ, பாலமோ, பள்ளிக்கூடமோ, கல்லூரியோ கேட்டு மக்கள் போராடவில்லை. இருப்பதையும் பிடுங்காதீர்கள்’ என்றுதான் போராடுகின்றனர். இந்த அடிப்படை வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘எங்கள் ஆறுகளில் மணல் அள்ளாதீர்கள். நாங்கள் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்கிறோம்’ என மன்றாடுகின்றனர். ‘தாது மணல் அள்ளாதீர்கள். நாங்கள் கடலுக்குப் போய் பிழைத்துக்கொள்கிறோம்’ என்கிறார்கள். மக்களின் இந்தக் கோரிக்கைகளை காதுகொடுத்தும் கேட்கத் தயார் இல்லாத அரசு, மக்கள் விரோதத் திட்டங்களை முழுவீச்சுடன் செயல்படுத்திவருகிறது. இதே வரிசையில்தான் டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டமும் வருகிறது. இதுவரை எங்கள் வளங்களை விட்டுவிடுங்கள்’ என முறையிட்ட மக்கள், இப்போது ‘எங்களை உயிரோடாவது விடுங்கள்’ எனப் போராடுகிறார்கள். இதுவரை நடந்தது பிழைப்பதற்கான போராட்டம்; இது உயிருக்கான போராட்டம். (நூலிலிருந்து பக்.178-179)

நூல்:குடி குடியைக் கெடுக்கும்
ஆசிரியர்: பாரதி தம்பி

வெளியீடு: விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 42634283.
மின்னஞ்சல் : books@vikatan.com

பக்கங்கள்: 192
விலை: ரூ 130.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: nhm | noolulagam

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க