உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொழிலாளர் நலச்சட்டங்களை இடைநிறுத்தம் செய்து சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளனர், அம்மாநில பாஜக ஆட்சியாளர்கள்.
தற்போது கொரோனா பாதிப்பை ஒட்டி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நாடெங்கும் போடப்பட்ட ஊரடங்கினால் பல தொழில்களும் முடங்கியுள்ளன.
“காலொடிந்த குதிரைக்கு சறுக்கியதே சாக்கு” என்பது போல, ஓராண்டுக்கும் மேலாக இருந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கான ஒட்டுமொத்தப் பழியையும் கொரோனாவின் மீது போட்டுவிட்டு “அப்பாவிப் பிள்ளையாக” சலுகைகளைக் கேட்கிறது முதலாளித்துவ வர்க்கம்.
முடங்கிப் போயிருக்கும் பொருளாதாரத்தை மீட்பதற்காகவும், புதிய தொழில்களை ஈர்க்கவும், தொழிலாளர் நலச் சட்டங்களை முடக்க முதலாளித்துவ வர்க்கம் நெடுங்காலமாகக் கேட்டு வருகிறது. இந்தக் கொரோனா நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன பாஜக ஆளும் இரு மாநில அரசுகள்.
கடந்த மே 7-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களின் பெரும்பாலானவற்றை இடைநிறுத்தும் வகையில் அவசரச் சட்டத்தை இயற்றியிருக்கிறது.
“ஒருசில தொழிலாளர் சட்டங்களிலிருந்து தற்காலிக விலக்கு – அவசரச் சட்டம் – 2020” என்ற பெயரில் யோகி அரசு கொண்டு வந்திருக்கும் இந்த அவசரச்சட்டம், 38 தொழிலாளர் சட்டங்களை நடைமுறையிலிருந்து விலக்கிவிட்டு, வெறும் 4 சட்டங்கள் மட்டுமே தொடரும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கொத்தடிமை முறை தடைச் சட்டம் (1976), கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் (1996). ஊதியச் சட்டத்தின் (1936) பிரிவு 5 மற்றும் பணியாட்கள் இழப்பீட்டுச் சட்டம் (1923) ஆகிய சட்டங்களுடன், பெண்கள், குழந்தைகள் தொடர்புடைய சில பிரிவுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளது யோகி அரசு. இவை தவிர அனைத்து பிற தொழிலாளர் சட்டங்களுக்கும் 3 ஆண்டுகள் விலக்கு அளித்துள்ளது.
படிக்க:
♦ மதுரை ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்களின் வாழ்க்கை அவலம் !
♦ அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !
“தொழிற்சாலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. மேலும் ஏற்கெனவே இருக்கும் தொழிற்சாலைகளை மீட்டெடுப்பது மட்டுமின்றி புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவேண்டிய தேவையும் இருக்கிறது.” என்று இந்த அவசர சட்டத்திற்கு நியாயமுலாம் பூசுகிறது உ.பி அரசு.
மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசு, தொழிற்சாலை சட்டம் மற்றும் மத்தியப் பிரதேச தொழிற்துறை உறவுகள் சட்டம் மற்றும் தொழிற்தகராறு சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைக் கொண்டுவரப் போவதாகக் கடந்த மே 7 அன்று அறிவித்துள்ளது. இந்த சட்டதிருத்தம் 1000 நாட்களுக்கு (கிட்டத்தட்ட 3 ஆண்டுகள்) நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்திருக்கிறது.
மேற்கண்ட தொழிலாளர் சட்டங்களில் ம.பி அரசு முன்வைத்துள்ள திருத்தங்களின் படி, தொழிலாளர்களின் வேலைநிலைமை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான எவ்வித நெறிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை.
மேலும், சுத்தமாக வைத்திருத்தல், கழிவுகளை அகற்றுதல், காற்றோட்டம், வெளிச்சம், குடிநீர், இயற்கை உபாதைகளுக்கான ஏற்பாடு, ஒய்வறைகள், உணவகம், குழந்தைப் பராமரிப்பகம், வேலை நேரம், விடுமுறை காலங்களுக்கான ஊதியம், பணிபுரியும் தொழிலாளிக்கு தொழில் தொடர்பான நோய் ஏற்பட்டால் உரிய அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பவேண்டிய நடைமுறை உள்ளிட்ட அனைத்து வகையான அவசியமான அம்சங்களில் இருந்து ம.பி-யில் புதிதாகத் தொடங்கப்படும் எந்த ஒரு தொழிற்சாலைக்கும் விலக்கு அளிக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்.
இதுகுறித்து இந்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (IFTU) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தச் சட்டதிருத்தம், தொழிற்சங்கமாக திரளுதல், கூட்டு பேர உரிமை ஆகிய அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மறுக்கிறது. வேலைநிறுத்தம் செய்யும் உரிமை, பணிநீக்கம், பணியிடமாற்றம் மற்றும் கதவடைப்பிலிருந்து பாதுகாப்பு, அரசாங்கத்திடம் தொழிற்தகராறைக் கொண்டு செல்லும் உரிமை ஆகியவற்றை பறிக்கிறது. இது பல்வேறு வார்த்தைகளில், அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எந்நேரத்திலும் தொழிலாளர்களை பணிநீக்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. தொழிலாளர் துறையிலிருந்து எவ்விதத் தலையீடும் இருக்காது” என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அனைத்து தொழிலாளர் நலச்சட்டங்களையும் 4 தொகுதிகளாக சுருக்கி தொழிலாளர்களை சட்டப்பூர்வ கொத்தடிமையாக மாற்றுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி அச்சட்டத் திருத்தத்தை மாநில அளவில் அமல்படுத்தி வெள்ளோட்டம் பார்க்கின்றன.
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாக்கத் தவறினால், ஆலைத் தொழிலாளி முதல் ஐ.டி. தொழிலாளிவரை அனைவரும் இனி சட்டப்பூர்வ கொத்தடிமைகளே !
– நந்தன்
நன்றி : நேஷனல் ஹெரால்ட்.
கம்யூனிஸ்ட்கள் என்றாலே போலித்தனம் நேர்மையின்மை, கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் சீனாவில் ஒரு தொழிலாளர் சங்கமாவுது உள்ளதா ?
ஆனால் இந்தியாவில் தொழிலாளிகளுக்காக போராடுகிறோம் என்று சொல்லி கொண்டு தொழில் நடத்தவிடாமல் தடுப்பது, போராட்டம் என்ற பெயரில் தொழிலாளிகளுக்கு இருக்கும் வேலைகளையும் இல்லாமல் செய்வது போன்ற காரியங்களை தான் இவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள், உண்மையில் கம்யூனிஸ்ட்கள் உழைக்கும் வர்க்கத்தினரின் எதிரிகள்.
சீனா பாகிஸ்தானுக்காக நம் நாட்டை நாசம் செய்ய தயங்காதவர்கள்.
//உங்கள் மறுமொழி மட்டறுத்தலுக்காக காத்திருக்கிறது//
ஹி ஹி வழக்கம் போல் கருத்துரிமையை நசுக்கும் காரியங்களில் மீண்டும் கம்யூனிஸ்ட்கள் இறங்கி இருக்கிறார்கள்.
ஐயோ மணிகண்டா, கம்யுனிசம்னா என்னன்னு தெரியாமலே பெருசா கருத்து சொல்ல வந்துட்ட…… இதுக்கு ஒனக்கு எவ்வளவு காசு வரும்? சீ! இதெல்லாம் ஒரு பொழப்பு !
நன்றாற்றலலிலும் தவறுண்டாம் அவரவர் பண்பரிந்தாற்றாக் கடை… என்ற அறிஞரின் வாக்குக்கினங்கப் பொதுவுடைமை தத்துவத்தின் சாரம்சமே விளங்காமல் சவடால் அடிக்கும் அறியாமையை என்னவென்று அறிவுறுத்துவது…என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?என்று தணியும் இந்த அடிமையின் மோகம்…???