துரை ஒத்தக்கடை பகுதியில் எவர்சில்வர் பட்டறை தொழில் பல நூறு குடும்பங்களுக்கு வாழ்க்கையை வழங்கி வருகிறது. இன்று உலகம் முழுவதும் கொரானா வைரஸின் தாக்கம் அதன் தொடர்ச்சியாக 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கும் இத்தகைய நிலைமையில் எவர்சில்வர் தொழிலாளிகளின் வாழ்க்கை நிலைமையை அறிய அவர்களின் வீடுகளுக்கு சென்றோம்.அதன் அனுபவம்.

எவர்சில்வர் தொழிலில் உற்பத்தி செய்யப்படும் பாத்திரம் பல பிரிவு தொழிலாளர்களின் கையில் சென்றுதான் முழுமையான பொருளாக உருவாகிறது. அதில் வெல்டர் – டிங்கர், பாலிசர், கட்டர், ஸ்பின்னர், ப்ரோக்கன் என பிரிந்து தொழிலாளர்களாகவும், தொழிற்சங்கங்களாகவும் செயல்படுகின்றனர். ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களையும் பார்ப்பதற்கு திட்டமிட்டுக்கொண்டோம். முதலில்
வெல்டர் – டிங்கர் தொழிலாளர்களையும் அதன் பின் ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களையும் சந்தித்தோம்.

முதல் சந்திப்பே ஒரு தொழிலாளி நகையை அடகு வைத்ததாகவும் வீட்டில் குழந்தைகளுக்கு வாங்கக் கூடிய பாலின் அளவை குறைத்துவிட்டதாகவும் கூறினார். அடுத்து வந்தவர் நகையை அடகு வைத்த கையோடு பணத்துடன் வந்தார் “இது தான் என் மனைவியிடம் இருந்த கடைசி தோடு இன்னும் சில மாதங்கள் ஊரடங்கு நீடித்தால் நானும் எனது குடும்பமும் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்” என கூறி கவலையுடன் சென்றார். பல தொழிலார்களின் நிலைமையும் அடகு வைப்பது கடன் வாங்குவது என சித்தரவதையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில தொழிலாளர்களை பார்க்கும் போது காய்கறி விற்பது, டீ விற்பது என மாற்று வேலையை உருவாக்கியுள்ளனர். 100, 200 சம்பாதிக்கவே படாத பாடு படுகின்றனர்.

ஒரு குடும்பம் தினசரி முட்டை வியாபாரம் செய்ய 30கிலோமீட்டர் வரை தள்ளு வண்டியை இழுத்துக்கொண்டு 150ரூ சம்பாதிக்க நடையாய் நடக்கிறார்கள்.
மாற்று வேலை இல்லாதவர்கள் வேலை கேட்டு அலைகின்றனர். சமீபத்தில் அரசின் சில ஊரடங்கு தளர்வுகளால் கட்டிட வேலை ஏதாவது கிடைக்குமா என தவியாய் தவித்து அழைகின்றனர். எல்லோரிடத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை தங்கள் வயிற்றை சுறுக்கிக்கொள்வது மட்டுமே.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அரசின் புழுத்துப்போன அரிசியும், 1000ரூ பணமும் எப்படி எங்களை காப்பாற்றும் என பலரும் கேள்வியெழுப்பினர். வேலையிழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு 1000-ரூ நிதி வழங்கப்படும் என அறிவித்தார்கள். நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பிக்காதவர்களுக்கு நிவாரணம் இல்லை என சொல்லிவிட்டார்கள். புதுப்பித்து வைத்துள்ளவர்களுக்கும் பணம் கொடுக்க 30 நாட்களாகுமாம் அதிலும் 500ரூ தான் வருமாம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அரசின் அடாவடித்தனத்தை பாருங்கள்.

மக்கள் கடன் வாங்கி, அடகு வைத்து, அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் பணமும் போதாமல் திண்டாடும் போது அரசோ 68 ஆயிரம் கோடி பணத்தை 50 கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்தது மக்கள்மனதில் விழுந்த பெரிய இடி. இப்போது தெரிகிறது இந்த அரசுக்கு வேண்டியவர்கள் யார்? வேண்டாதவர்கள் யாரென்று?

இந்த ஊரடங்கு முடிந்தால் கூட பட்டறை தொழிலின் நிலைமை மோசமாக இருக்கும் என்கிறார்கள். தொழிற்சங்கங்களின் உரிமைக்கான வேலை நிறுத்தங்கள் 2 மாதம் நடந்தால் அதன் பிறகு வேலை மீண்டும் சரியாக இயங்க 2மாதம் ஆகும் என்கிறார்கள். ஆனால் கொரானா பிரச்சனை முடிந்த பிறகும் வேலை சரியாக இயங்க எவ்வளவு மாதங்கள் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்கிறார்கள். காரணம் கேட்டால் “பாத்திரங்கள் செய்வதற்கான உலோகங்கள் சென்னை, மும்பையிலிருந்து தான் வர வேண்டும். பாத்திரம் செய்ய பயன்படும் கார்ப்பேட் கல் சீனாவிலிருந்து தான் வர வேண்டுமாம். இது போக திருவிழாக்கள் திருமணங்கள் என்றால் தான் அதிகமான பாத்திரங்கள் சந்தையில் விற்பனையாகும் கொரானா முடியும் வரை அதற்கும் வழியில்லை. ஏற்கனவே உள்ள திறமையான தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு செல்கிறார்கள். வேலை ஆரம்பித்தால் கூட சரியான வருமானம் இருக்காது. அதனால் வேலைகளுக்கு வர மாட்டார்கள். புதியவர்களும் வர வாய்ப்பில்லை ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிவிடும்” என கூறுகிறார்கள் பட்டறை நடத்தும் நிர்வாகிகள்.

படிக்க:
♦ டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா

இது போக தொழிலாளர்களின் வீட்டு வாடகை பிரச்சனை உருவெடுத்து வருகிறது. சில வீட்டுக்காரர்கள் கொரானா பிரச்சனை முடிந்தவுடன் வாடகையை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளனர். சிலரோ நகையை அடகு வைத்தாவது இப்போதே கொடுங்கள் என நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். எப்படியும் கொரானா பிரச்சனை முடிந்தவுடன் இந்த வீட்டுவாடகை பிரச்சனையுடன் கடன்காரர்கள் பிரச்சனை, தொழில் முடக்கம் என தீரா நெருக்கடியை நோக்கி தொழிலாளர்களை இழுத்துச் செல்கிறது.

இப்படிப்பட்ட நிலைமையில் மக்களை பாதுகாக்க இந்த அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்ற கேள்வி நம்மை அச்சுருத்தும் அதே வேளையில் மோடிக்கு வழி சொன்ன 50 வருமான வரித்துறை அதிகாரிகளின் கதை நம்மை மேலும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கும். 50 வருமான வரித்துறை அதிகாரிகள் 1கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களிடமிருந்து 40%வரி வசூலிக்கலாம், கார்ப்பரேட்களிடமிருந்து கூடுதலாக 4%வரி வசூலிப்பதன் மூலமாக வரும் பணத்தை வைத்து கொரானா பிரச்சனையை சரி செய்யலாம் என சொன்னதற்கு மோடி அரசு “நீங்கள் தவறான கருத்துக்களை மக்கள் முன்பு தூண்டுகிறீர்கள் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்திருக்கிறார்கள். இருப்பவர்களிடமிருந்து கொஞ்சம் அதிகமாக வாங்கி மக்களை காப்பாற்ற வக்கற்ற இந்த அரசு இருப்பவர்களுக்கே 68,000கோடி பணத்தை தள்ளுபடி செய்ததை என்னவென்று சொல்வது?

மக்கள் பசியால் செத்தாலும் பரவாயில்லை. கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் ஒரு மயிரைக்கூட இழக்க விடாமல் பாதுகாக்கிறது இந்த அரசு. மக்கள் கொடும் துன்பத்தை அனுபவித்து வரும் நேரத்திலும் அரசின் நிலை இதுவென்றால் சாதாரண நாட்களில் யோசித்துப்பாருங்கள்.

இதையெல்லாம் விட ஒருபடி மேலே போய் இந்த அரசு செய்யும் கொடுமை மிக கொடூரமானது. காய்கறி மளிகைப்பொருட்களின் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம் உயர்வு, சிறப்பு ரயிலில் வெளியூர் செல்லும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூல். டாஸ்மாக் சாராய வசூல் என மக்களை கொள்ளையிட தீவட்டிக்கும்பலைவிட மோசமாக களத்தில் இறங்கியுள்ளது இந்த அரசு.

இந்த நிலைமையில் எவர்சில்வர் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

  • கேரளா, டில்லியைப்போல் மாதம் நிவாரணத்தொகை வேண்டும். கொரானா பிரச்சனை முடிந்த பிறகும் 6 மாதம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்கின்றனர்.
  • அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. -களின் பாதி சொத்துக்களை பிடுங்கி மக்களை பாதுகாக்க பயன்படுத்த வேண்டும்.
  • பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும்.
  • ரேசனில் முறையாக நல்ல அரிசி வழங்க வேண்டும். முறைகேடில்லாமல் மற்ற பொருட்களையும் வழங்க வேண்டும் என்கின்றனர்.

மக்கள் பொது இடங்களில் எப்போதும் வாழ்வாதாரப்பிரச்சனையைப் பற்றித்தான் விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற்றத்துடன் உள்ளனர். தன்னார்வளர்கள் மட்டும் உதவி செய்து மக்களை காப்பாற்ற முடியுமா என கேட்டால்; அரசு நினைத்தால் மட்டும் தான் மக்களை காப்பாற்ற முடியும் என தடுமாறாமல் கூறுகின்றனர். அரசை பணிய வைக்காமல் நமக்கு வாழ்க்கை இல்லை அதற்கு போராட்டமே ஒரே மருந்து.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை. தொடர்புக்கு : 82200 60452.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க