சி பட்டினியோடு குடிமக்கள் துயரப்படுகிறார்கள் என்று ரேஷன் கடைகளில் அரிசி கூடுதலாக வழங்க உத்தரவிடவில்லை, மாறாக குடிமகன்கள் துயரப்படுகிறார்கள் என்று டாஸ்மாக் கடையைத் திறக்க மத்திய அரசுடன் அனுமதி வாங்கி உத்தரவிடுகிறார் ‘தாயுள்ளம் கொண்ட ஆட்சி’யின் தனயன் எடப்பாடி அவர்கள்.

மே 7 ந் தேதி சென்னை மாநகராட்சி தவிர தமிழகம் முழுமைக்கும் டாஸ்மாக் கடைகள் நெஞ்சில் ஈரமின்றி திறக்கப்பட்டன. ‘கொரோனா வீரர்களின்’ துணையோடு “கடமை, கண்ணியம், கட்டுபாடு” குறையாமல் 40 நாட்களுக்கு மேலாக இவர்களின் அனுமதியில்லாமல் எந்த வீட்டு வாசலிலும் கூட்டிப் பெருக்கி வாசலில் தண்ணிர் தெளிக்க முடியாத அளவுக்கு அதிகாரமும் தடிக்கம்பும் கொஞ்சம் நீண்டதாகவே இருந்ததை அனைவரும் பார்த்தோம்.!சரிதானே???

சேர் போட்டு, குடைப்பிடித்து, ஆறு அடி இடைவெளியை உறுதிசெய்தல் தொடங்கி கிட்டிவாசல் (டாஸ்மாக் வாசலில் கம்பு கட்டி கடையை சீரோடு நடத்துவதற்கு) கட்டி குடிமக்களின் ஜனநாயகப் பூர்வமான வரிசையை ஒழுங்கு படுத்துதல் வரை கூடுதல் அதிகாரமாக (ஸ்பெஷல்பவர்) வழங்கும் அதிகாரமும் கொரோனா வீரர்களுக்கு அரசு கண்ணியத்துடன் வழங்கியது. அவர்களும் கடுகளவுகூட கெளரவம் குறையாமல் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் இவர்களின் மொய்க் கணக்கு பொய்க்கணக்காக போகும் விதமாக தாய்மார்கள் தயாராகினார்கள். தமிழகமே தயாரானது. தாய்மார்கள் தலைமையில் ஆங்காங்கே போராட்டம் தன்னெழுச்சியாக விழாக்கோலம் பூண்டது. அதில் மதுரை செல்லூர் பகுதி மக்களின் போராட்டம் ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது.

மதுரை மக்களை விழாக்கோலத்திலும் சரி போராட்டக் களத்திலும் சரி சற்றும் பின்னுக்கு தள்ளி பார்க்க முடியாது என்றே சொல்லலாம். 2019 பிக்பாஸ் தேர்தலும் (பாராளுமன்றத் தேர்தல்) அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் ஒரேநாளில் வந்தது. பதறிப்போன சில தேர்தல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தலைத் தள்ளிவையுங்கள் யாரும் வாக்களிக்க வரமுடியாத போக்குவத்து சிரமும் வரும். இதையெல்லாம் தாண்டி மக்கள் வாக்களிக்க வர ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என்று முறையிட்டார்கள். ஆனாலும் இரண்டும் ஒரே நாளில் நடந்தது. மக்கள் அனைவரும் ஆத்துக்குப் போனார்களே தவிர பூத்துக்குப் போகவில்லை. வாக்கு சதவீகிதம் சற்றுக் குறையத்தான் செய்தது. தேர்தல் நம்பிக்கையை விட திருவிழா நம்பிக்கை ஓரளவுக்கு வென்றது எனச் சொல்லலாம்.

சரி சங்கதிக்கு வருவோம். இப்போதும் கொரோனாவை அடக்கி ஒடுக்கிக் கட்டுப்படுத்த தடிக்கம்பில் அதிகாரம் தரிக்க முச்சந்தியில் நின்றார்கள் கொரோனா வீரர்கள். கையில் கிடைக்கும் முள்ளுக்கம்பையெல்லாம் உடைத்து வைத்துக்கொண்டு பால், தண்ணி, பலசரக்கு வாங்கப் போனவர்கள் எல்லாரிடமும் அதிகாரம் செலுத்தி அவமானப்படுத்திய துன்பங்களையெல்லாம் மக்கள் கொரோனாவிற்காகக் பொறுத்துக் கொண்டார்கள்.

வீட்லயிருக்கச் சொன்ன ‘தாயுள்ளம் கொண்ட’ ஆட்சியாளர்கள் ரேஷனில் போட்ட அரிசியில் புழுத்துப்போன அரிசிக்கும் புழுவுக்கும் பஞ்சமில்லை. கையில காசுமில்ல. நல்லது பொல்லது வாங்கித் திண்ணவும் கடையில்ல. யார்கிட்டையும் கைய நீட்டி கடனும் கேட்க முடியல. அக்கம் பக்கத்துலயும் அதே நிலைதான். தன்மானம் தடுக்குது. பிள்ளைக ஆசப்பட்டுக் கேட்டத எதுவும் வாங்கிக் கொடுக்க காசுமில்ல கடையுமில்ல. புள்ளைக மூஞ்சி வீங்கிப் போறதையும் பாக்க முடியல.
இந்த துயரப் பட்டியல் நீண்டது. பட்டப்பாடும் கொடியது. தீப்பட்டு வெந்துப்போன நிலையில் உள்ள மக்களிடம் சிறிது மகிழ்ச்சின்னா அது வூட்ல உள்ள ஆளுக தான். குடிக்காமல் சண்டை தண்ணியில்லாமல் இருப்பதே போதும் என்கிற நிம்மதியில் மக்களின் துயரம் சற்று இளைப்பாரியது.

படிக்க:
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

வெந்தப்புன்னுல வைக்கல வச்சுத் தேச்சு விடுவது போல இருந்தது டாஸ்மாக் திறப்பதற்கான அறிவிப்பு.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் அலங்காநல்லூரை மையம் கொண்டு தமிழத்தை பற்றிய போது மதுரை செல்லூர் பகுதி மக்களும் ஓடும் ட்ரெயினில் ஏறிக்கொண்டு ரயிலை நிறுத்தி மறியல் செய்தார்கள்.

அதே செல்லூர் பகுதியில்தான் டாஸ்மாக் போர் எந்த இயக்கங்களின் தூண்டுதலுமில்லாமல் தன்னெழுச்சி என்பதைவிட, தன்னுணர்வோடு தயாராகினாா்கள். கடை திறக்கும் முதல்நாள் இரவே கர்ணன் என்பவரும் மற்றொருவரும் இணைந்து பகுதி மக்களிடம் கூடிப் பேசி முழக்கங்கள் தயாராகின. “உணவு கொடு, மருந்து கொடு, போதையை கொடுக்காதே! இளைஞர்களை சீரழிக்காதே!” எனும் முழக்க அட்டைகளுடன் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே முற்றுகையிட்டனர். முன்னணியில் நின்ற பெண்கள் 55 வயதுக்கு மேலான முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள்தான் ஷட்டரை இழுத்து சாத்தியவர்கள்.

சிறிது நேரத்தில தனி அதிகாரமும் அடாவடித்தனமும் நிறைந்த “டெல்ட்டா போர்ஸ்” டீம் வந்தது. ஆம் புதியதாக திருமணம் முடித்திருந்த டயர் தொழிலாளி விவேகானந்தனை கொன்ற அதே டெல்ட்டா தான். “மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின்” வழக்கறிஞர் தோழர்கள் போராடியும், மேநாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்களும் இணைந்து கொண்டு டெல்ட்டா போர்ஸ் ஒரு ‘சட்ட விரோத துறை’ இதை நீக்குங்கள்! என்று குரல் கொடுத்தார்களே! அதே டெல்ட்டா கும்பல்தான்.

பேச்சுவார்த்தையில் ஒரு போலிசுமட்டும் பழைய உளுத்துப்போன டயலாக்கைப் பேசினார். “ஏம்மா இங்கே வந்து போராடுரீங்க, உங்க பிள்ளைகளையும் வூட்டுக்காரனையும் ஒழுங்கா குடிக்க வராம வூட்லயே இருக்கச் சொல்லுங்கம்மா” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே இரு ஆண்களை மட்டும் நேக்கா கைது செய்கிறோம் என வண்டியில் ஏத்த, அங்கேயிருந்த மக்கள் “எங்களையும் கைது செய்யுங்கள்” என்று வண்டியில் ஏற அது ஒரு போராட்டமாக மாறி டெல்ட்டா பின்வாங்கியது. “அனைவரும் கலைந்து செல்லுங்கள்… கடையைத் திறக்க மாட்டார்கள்..” என வாக்குறுதியோடு மக்களை மடைமாற்றியது.

ஒரு நெல்லிக்காய் வியாபாரம் பார்க்கும் பெண் தொழிலாளி கூறினார். நெல்லிக்காய் வியாபாரத்தை ஒரு ஓரத்தில எங்க வண்டியை (இருசக்கர வாகனம்) நிறுத்தியிருந்ததற்கு போலீசு புடிச்சுட்டுப்போய் ஊரடங்குப் போட்ருக்கோம் உங்கள யாரு வண்டிய ரோட்ல நிறுத்தச் சொன்னது என்று பேசி 2000 ரூபாயை புடுங்கிகிட்டுத்தான் விட்டாங்கப்பா., ஏன் இந்த சாராயக் கடைய திறந்து எல்லாரும் முண்டியடிச்சிட்டுத்தான் நிக்கிறாங்க இங்க கொரோனா வராதா என்னா?? நம்மள எல்லாப்பேரும் ஏமாத்துறாங்கப்பா என்றார். ஒட்டு மொத்த அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் மீது நம்பிக்கையற்றுப் பேசினார் அந்தப்பெண் தொழிலாளி.

அவன் 40 நாள் வூட்லையே கிடந்தான். கடை திறந்ததுலயிருந்து போனவன்தான் இன்னமும் ஆளேக்காணோம். எப்ப வருவானோ எப்புடி வருவானோ என்று வயித்தெறிச்சலுடன் புலம்பினாா். வருமானமில்லை இருந்த காசும் வூட்டு செலவுக்கே காலியாப் போச்சு. கடையத் திறந்தா குடிக்க காசு குடுன்னு கேப்பானுக. நான் எங்கேயிருந்து கொடுக்குறது. காசு இல்லையின்னா வூட்ல சாமான்களை எடுத்துட்டுப் போயி வித்து குடிப்பாங்க. எதிர்த்து கேட்டா அடிப்பானுக..
என்றார்.

யாரும்மா உங்கப் பையனா? என்று கேட்டதற்கு இல்லப்பா வூட்டுக்காரர் என்றார் அந்தம்மா. மேலும், அலங்காநல்லூர்ல தாயும் பிள்ளையும் மண்ணெண்ணெய ஊத்திக் கொளுத்திக்கிட்டாங்களாமே? இனி எல்லா வூட்லையும் அதானப்பா நடக்கப்போகுது என்றார். சமூகப் பதற்றத்தை உருவாக்கிய அரசின் டாஸ்மாக் ஏற்படுத்திய விளைவுகளை, கவனித்த துயரத்தை கவலையுடன் தாய் உள்ளத்துடன் பகிர்ந்தார் அந்தப் பெண் தொழிலாளி.

இதே ஏரியாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர், வான்புகழ் பெற்ற செல்லூர் ராஜூ உள்ளார். அவர்தான் ‘தாயுள்ளம் கொண்ட’ அம்மாவின் புனித ஆத்மாவின் ஆட்சியை நேரடியாக வைகை ஆத்துக்கே இறக்கி வந்து ஆட்சி செய்பவர். அவர் டாஸ்மாக் திறக்கும் முடிவு குறித்த பேட்டியில் “இந்த முடிவை அரசு விரும்பி செய்யவில்லை, மதுப்பிரியர்களின் நலன்கருதியும் பொருளாதாரத்தை சரிசெய்யவும் எடுத்த முடுவு” என சிலாகித்துப் பேசிவிட்டு, கொரோனா சமூகப் பரவுதலை தடுக்கும் நோக்கத்துக்கு தடை போட்டுள்ளோம். ஆகையால் தனித்திருங்கள், வீட்டிலேயேயிருங்கள், ஊரடங்கு நீட்டிக்கக் கூடாதென்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று கொரோனா போதனை வேற கூறிவிட்டு பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

ஆனால் மக்கள் கண்ணை மூடிக் கடவுளை வேண்டவில்லை, கண்ணைத் திறந்து விழிப்புடன் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு சொல்கிறார்கள் “மூடு டாஸ்மாக்கை!” என்று. இந்த விழிப்புதான் டாஸ்மாக்கை மூடும். இந்த விழிப்பைப் பற்றிப் படரச்செய்வோம்!ஆட்சியாளர்களின் உறக்கத்தைக் கெடுப்போம்! விழிப்பை விரிவுப்படுத்துவோம்!

மக்கள் அதிகாரம்

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை ஒத்தக்கடைப்பகுதி.

5 மறுமொழிகள்

  1. “மக்கள் ஆத்துக்குப் போனார்களே தவிர பூத்துக்கு போகவில்லை”…இந்த கட்டுரையை எழுதிய தோழருக்கு வாழ்த்துக்கள்…மக்களின் அன்றாட வாழ்நிலையின் யதார்த்த நிலையைக் கொண்டே கட்டுரை முழுவதும் பயன் படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகம் அருமை…

  2. தங்கள் வீடுகளுக்குள் இருக்கும் குடிகாரர்களைத்திருத்த வக்கில்லாமல் தெலைக்காட்சித்தெடர்களில் மூழ்க்கிடக்கும் குடும்பக்குத்துவிளக்குகள், தெருவில் நின்று
    மதுக்கடைகளை மூடச்சொல்வது….. என்பிள்ளை திருடன்தான் உன்வீட்டுத்தென்னைமரத்தில் முள்வைத்துக்கட்டு என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.

  3. தெருவில் நின்று “மூடு டாஸ்மாக்கை” என்று அரசியல் போர் தொடுக்கும் எம் சகோதரிகளின் வீரம் வாழ்க…பெயரில் மட்டும் “வீர”மிருக்கும் பாண்டியன் சாருக்கு இது புரிய வாய்ப்பில்லைதான்….

  4. நெப்போலியனுக்கு நன்றி , நான் ஒரு கோழை என்பதை ஒப்புக்கொள்கிறேன்,நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க