Sunday, March 26, 2023
முகப்புபார்வைகளக் கணிப்புமோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்

மோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்

-

வினவு – அக்டோபர் 2017 மாபெரும் கருத்துக்கணிப்பு : பாகம் 2

மது கருத்துக்கணிப்பில் கமல்ஹாசன் குறித்த கேள்வியைத் தவிர்த்து பிற கேள்விகள் அனைத்துக்குமே மக்கள் ஏதோவொரு வகையில் பாரதிய ஜனதாவைப் பொறுப்பாக்கி பதிலளித்ததை பார்க்க முடிந்தது. நீட் தேர்வு-அனிதா மரணம் தொடர்பான கேள்விக்கும் சரி தமிழகத்தில் நிலவும் அரசியல் சீரழிவுப் போக்கிற்கும் சரி பாரதிய ஜனதாவே குற்றவாளியென மக்கள் கருதியதை உணர முடிந்தது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மோடி குறித்த அபிப்பிராயங்களைப் பற்றிய கேள்விகளின் போது மக்கள் கொந்தளித்து விட்டனர். கேள்விகளில் எந்த வகையிலும் பக்கச்சார்பு வெளிப்பட்டு விடக்கூடாது என்பற்காகவே விடைகளில் மோடி பக்தர்கள் தெரிவு செய்யக்கூடுமெனக் கருதி அதற்கான வாய்ப்புகளையும் வைத்திருந்தோம்.

எனினும், “மோடி பற்றி..?” என்கிற கேள்விக்கு பதிலளித்த மக்கள் ஏகோபித்த வகையில் அவர் ஒரு “ஏமாற்றுப் பேர்வழி” என்கிற பதிலையும் “கார்ப்பரேட் முதலாளிகளின் கையாள்” என்கிற பதிலையுமே தெரிவு செய்தனர். கருத்துக் கணிப்புக்காகச் சென்ற நமது செய்தியாளர் குழுவின் காதுகளே கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தனர்.

கேள்வி : மோடி பற்றி..?

 • சொன்னதைச் செய்த திறமைசாலி
 • ஏமாற்றுப் பேர்வழி
 • கார்ப்பரேட் முதலாளிகளின் கையாள்
 • நல்லவர்தான் ஆனால் திறமையில்லை

மக்கள் கருத்து : மோடி பற்றி..?

 • சொன்னதைச் செய்த திறமைசாலி – 8.8% (109 – பேர்)
 • ஏமாற்றுப் பேர்வழி – 39.5% (488 – பேர்)
 • கார்ப்பரேட் முதலாளிகளின் கையாள் – 36.9% (457 – பேர்)
 • நல்லவர்தான் ஆனால் திறமையில்லை – 14.8% (183 – பேர்)

முசுலீம்கள் தான் என்றில்லை. “அவன் ஒரு பொறம்போக்கு சார்” எனத் துவங்கிய குட்டி யானை ஓட்டுனர் ஒருவர் தொடர்ந்து வட தமிழக மண்ணுக்கே உரித்தான வார்த்தைகளில் திட்டத் துவங்கி விட்டார். அவரது ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

“ஏங்க என்ன இருந்தாலும் நம்ம நாட்டோட பிரதமருங்க… எனக்கும் கூட அவர் மேல வருத்தம் இருக்கு தான்.. அதுக்காக இப்படியெல்லாம் திட்டறது அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களையே அவமானப்படுத்தற மாதிரி இல்லையா? என்று கேட்டோம்.

“சார் எல்லாம் போச்சி சார்… ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு சொன்னான்.. அப்பத் தான் விழுப்புரத்துல வூட்ட வித்து சொந்தமா ஆட்டோ வாங்க கைல காசு வச்சினு இருந்தேன். ஒருவாரம் சார்.. கையில லச்ச ரூபாய்க்கு மேல் காசு இருந்தும் துன்றதுக்கு சோறு இல்லாம அலைஞ்சேன். மூணு வாரம் கழிச்சி ஒத்தன் நுப்பது பர்சண்டு கமிசன் வாங்கினு காசெல்லாம் மாத்திக் குடுத்தான். வந்த காசு வண்டி விலைக்கு பாதி தான் தேறுச்சி. பொண்டாட்டி நகைய அடமானம் வச்சியும் சேட்டு கிட்ட கடன் வாங்கியும் இந்த வண்டிய வாங்கி தண்ணிக் கேணு போட்டுனு இருந்தேன். அதுக்குள்ற ஜி.எஸ்,டி கொண்டாந்துட்டான்.. தண்ணிக் கேனு வாங்கற கம்பெனிக்காரங்க ஜி.எஸ்.டி நெம்பரு இருந்தா வா இல்லாட்டி போயினே இருன்றாங்க. ரெண்டு மாசமா ட்யூ கட்டல சார்… சேட்டு வேற போன் மேல போனு போட்டுனு இருக்கான்.. வாழ்றதா சாவறதான்னே தெரியல” எனச் சொல்லச் சொல்ல அவரது கண்கள் குளமாகின.

கேள்வி : மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்கு பாதிப்பு ?

 • கருப்புப் பணமுதலைகள்
 • சாதாரண பொதுமக்கள்
 • சிறு வணிகர்கள்
 • கருப்புப் பண முதலைகள்
  தவிர அனைவருக்கும்

மக்கள் கருத்து : மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்கு பாதிப்பு ?

 • கருப்புப் பணமுதலைகள் – 10.9 % (135 – பேர்)
 • சாதாரண பொதுமக்கள் – 60.6% (750 – பேர்)
 • சிறு வணிகர்கள் – 6.2% (77 – பேர்)
 • கருப்புப் பண முதலைகள்
  தவிர அனைவருக்கும் – 22.2% (275 – பேர்)

அரசியல் பேசுதவற்கு வழியில்லாத பிரிவினராக கருதப்படும் பெண்கள் கூட மோடியின் மீது கடும் வெறுப்பைக் கொண்டிருந்தனர். மோடியின் மூன்றாண்டு குறித்த பேச்சுவந்த போது, “அக்கா, மோடி இன்னும் எத்தனை வருசத்துக்கு பிரதமரா இருப்பார்?” என்று கேட்டார்கள் இரண்டு இளம் பெண்கள். இன்னம் இரண்டு ஆண்டுகள் என்றதும் “என்னது இரண்டு வருசமா, எப்பக்கா நம்ம பிரச்சனை தீரும்” என்றார்கள்.

வெகு சொற்பமானவர்கள் மோடியை ஆதரித்தனர். அவர்களும் அவருக்காக திறமையற்றவர் என்கிற பதிலையே தெரிவு செய்தனர். அரசு ஊழியரான ஒரு பெண், “மோடியை பத்தி ஒருவரில எல்லாம் சொல்ல முடியாதுங்க.. வேணும்னா காமெரா கொண்டாங்க நல்லா சொல்றேன்” என்கிறார். சமீப மாதங்களில் குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அதில் எதைக் குறைத்துக் கொள்வது எனத் தெரியாமல் தவிப்பதாகத் தெரிவித்தார்.

கேள்வி : ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்குப் பிறகு உங்கள் செலவு கூடியிருக்கிறதா ?

 • ஆம்
 • இல்லை

கேள்வி : ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்குப் பிறகு உங்கள் செலவு கூடியிருக்கிறதா ?

 • ஆம் – 89.7% (1110 – பேர்)
 • இல்லை – 10.3% (127 – பேர்)

மோடியின் மீதான ஆத்திரத்திற்கு அவர் முன்னெடுத்த இரண்டு முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளான பணமதிப்பழிப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையே காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தக் கேள்விகளுக்கு மக்கள் எவ்வாறு பதிலளித்தனர்?

கடற்கரையில் சுண்டல் பொறி விற்பவர் ஒருவரிடம் ஜி.எஸ்.டியால் விலைகள் குறைந்துள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சொல்கிறாரே என்றோம்.

“எப்டி சார் குறைஞ்சிருக்கு? 250 ரூபா வித்த பொரி மூட்டை இப்ப 300 ரூபா. 80 ரூபாவுக்கு வித்த மிச்சர் பாக்கெட் இப்ப 120 ரூபா. ஆனா நாங்க இன்னும் பழைய விலைக்குத் தான் வித்துகிட்டு இருக்கோம். விலைய கூட்டினா மக்கள் வாங்க மாட்றாங்க சார். தோ இன்னிக்கு பீச்சை பாருங்க, ஞாயித்துக் கிழமை மாதிரியா இருக்கு? சனிக்கிழமை அளவுக்குத் தான் கூட்டமே இருக்கு. மத்த நாள்ல இதுவும் இல்லாம காத்து வாங்குது. நாங்கெல்லாம் எப்படி சார் பொழைக்கிறது? என்கிறார்.

கேள்வி : மோடியின் 3 ஆண்டு ஆட்சியில் யாருக்கு பலன் அதிகம் ?

 • கார்ப்பரேட் முதலாளிகள்
 • விவசாயிகள்
 • தொழிலாளர்கள்
 • வணிகர்கள்
 • யாருமில்லை

மக்கள் கருத்து: மோடியின் 3 ஆண்டு ஆட்சியில் யாருக்கு பலன் அதிகம் ?

 • கார்ப்பரேட் முதலாளிகள் – 74.7% (924 – பேர்)
 • விவசாயிகள் – 1.5% (18 – பேர்)
 • வணிகர்கள் – 1.5% (18 – பேர்)
 • தொழிலாளர்கள் – 1.4% (17 – பேர்)
 • யாருமில்லை – 21% (260 – பேர்)

கார் பைக்குகளுக்கு சீட் கவர் விற்பனை செய்யும் சிறு வணிகர் ஒருவரிடம் பேசினோம். “ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு சொன்னப்ப வியாபாரம் படுத்தது தான் இன்னும் எழுந்துக்கவே இல்லைங்க” என்றார். கடையில் இப்போது நடக்கும் வியாபாரம குறித்து கேட்ட போது, “பூட்டியிருக்கிறதும் திறந்திருக்கிறதும் ஒன்னு தான் சார்” என முடித்துக் கொண்டார்.

“முன்னே எல்லாம் மதியம் 80 ரூபா இருந்தா பிரியாணியே சாப்பிடலாம். இப்ப ஜி.எஸ்.டிக்கு அப்புறம் பிரியாணி விலை 20 ரூபா கூடியிருக்கு. ஒவ்வொரு ஓட்டல்லயும் 15லேர்ந்து 20 ரூபா வரைக்கும் விலை கூட்டியிருக்காங்க. அதுக்காகவே இப்ப நான் மதியம் சாப்பிடறதை நிப்பாட்டிட்டேன். ஒரு டீயும் பிஸ்கட்டும் தான்” என்றார் ஒரு பெயிண்டர். இவரது நாள் கூலி 500 ரூபாய். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வேலை கிடைத்தால் அதிர்ஷ்டம். வாரம் 1500ல் இருந்து 2000 ரூபாய் கிடைக்கலாம். இதில் இவர் ஒருவரின் ஒரு வேளை சாப்பாட்டுக்கே 70 – 100 ரூபாய் செலவழித்து விட்டால் வாரச் சம்பளத்தில் 500ல் இருந்து 700 வரை துண்டு விழுந்து விடும்.

மோடியின் மேல் மக்களுக்கு இருக்கும் வன்மத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தில் பாரதிய ஜனதாவின் மகளிர் அணியைச் சேர்ந்த நான்கு பெண்கள் மோடியின் சாதனைகளைக் குறித்து வீடு வீடாக பிரச்சாரம் செய்ய திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதிக்குச் சென்றுள்ளனர். பகுதி மக்கள் அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக குறிப்பிட்டனர். “பொம்பளைங்களா போயிட்டாங்க சார்.. இல்லேன்னே வேற மாதிரி ஆகியிருக்கும்” என்கிறார் மளிகை கடை நடத்தும் வணிகர் ஒருவர்

மோடியின் மூன்றாண்டுகால ஆட்சியில் பலனடைந்தது யார் என்கிற கேள்விக்கு பலர் “கார்ப்பரேட் முதலாளிகள்” என்கிற விடையைத் தெரிவு செய்தாலும், கணிசமானோர் “யாருமில்லை” என்றும் குறிப்பிட்டனர். இந்தக் கேள்வியைப் பொருத்த வரை மக்களின் பொதுபுத்தியில் மோடி கையாலாகாதவர் என்பது பதிந்து விட்டதால் அவரால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இருக்க முடியாதென மக்களுக்கே ஒரு முன்முடிவு இருந்ததைப் பார்க்க முடிந்தது. எனவே தான், மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளையும் தாண்டி மோடியால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை என பலரும் கருத்து கொண்டிருந்தனர்.

ஜி.எஸ்.டி குறித்த கேள்விக்கு பலரும் “ஏன் பாதிப்பில்லை” என்பதை ஒரு தெரிவாக வைத்துள்ளீர்கள் என நம்மிடமே சண்டைக்கு வந்து விட்டனர். இரண்டாவது கேள்விக்கான விடைத் தெரிவுகளைப் பார்த்ததும் “நீ பாதிப்பு இல்லைன்னு வேற சொல்லிடுவியா” என ஆத்திரத்தோடு கேள்வித் தாளைத் திருப்பிக் கொடுத்தனர். அவர்களிடம் “பக்கச்சார்பின்றி கருத்துக்கணிப்பு எடுக்க வேண்டிய” எமது நிலைப்பாட்டை விளக்கிக் கூறிய பின்னரே கருத்துக் கணிப்பில் மேலும் பங்கெடுத்தனர்.

பண்டிகைக் கொண்டாட்டங்களைப் பொருத்தவரை பெருவாரியாக “குழந்தைகளுக்காக கொண்டாடுவோம்” எனவும், கணிசமானோர் “கொண்டாட வருமானமில்லை” எனவும் பதிலளித்தனர். பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள கடுமையான தேக்க நிலை மக்களின் ஆன்மீக வாழ்க்கையையும் அவர்களது நம்பிக்கைகளையுமே கூட புரட்டிப் போட்டு விட்டதைப் பார்க்க முடிந்தது.

கேள்வி : இந்த வருட பண்டிகையை எப்படி கொண்டாடுவீர்கள் ?

 • மகிழ்ச்சியாகக் கொண்டாடுவேன்
 • குழந்தைகளுக்காக மட்டும்
  கொண்டாடுவேன்
 • கொண்டாட வருமானமில்லை

மக்கள் கருத்து: இந்த வருட பண்டிகையை எப்படி கொண்டாடுவீர்கள் ?

 • கொண்டாட வருமானமில்லை – 48.4% (604 – பேர்)
 • குழந்தைகளுக்காக மட்டும் – 33.8% (418 – பேர்)
  கொண்டாடுவேன்
 • மகிழ்ச்சியாகக் கொண்டாடுவேன் – 17.4% (215 – பேர்)

“குடிக்க கூழு இல்ல, கொண்டாட்டம் தானா கேடு?” என்ற நடுத்தர வயதுப் பெண்ணிடம், “தீபாவளி கொண்டாடறது மத வழக்கப்படி முக்கியமானதாச்சே?” என்றோம். “ஏம்பா சாமியா வந்து சோறு போடுது? நான் ஒழைக்கிறேன், சோறு துன்றேன். அதெல்லாம் இல்லபா.. நம்ம வீட்டுப் புள்ளைங்க அந்த நாள் அன்னைக்கு மத்தவங்கள பாத்து ஏங்கிப் போயிறக் கூடாதேன்னு தான் இருக்கு. அதுக்கோசரம் புதுத் துணி பட்டாசுன்னு வாங்கித் தொலைய வேண்டியிருக்கு” என்றவர், இந்தாண்டு பட்டாசு வாங்குவதற்கு ஆதார் எண் கேட்பதாக குறிப்பிட்டார் இது உண்மையே இல்லை என்றாலும் ஆதார் வன்முறைகளின் விளைவு மக்களை இப்படியெல்லாம் பேச வைக்கின்றது.

பொதுவில் மக்களின் மத நம்பிக்கைகளையும், கொண்டாட்டங்களையும் அதற்காக வீணாக்கப்படும் பொருளாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய வேலையே முற்போக்கு இயக்கங்களுக்கு இல்லை. அந்த வேலையை எதிர்மறையாக மோடி அரசு செய்து வருவதை இந்தக் கருத்துக் கணிப்பு தெளிவாக உணர்த்தியது. மேலும், மோடி மற்றும் பாரதிய ஜனதாவின் மேல் மக்களுக்கு இருக்கும் ஆத்திரம் அதன் உச்சத்துக்கு போயிருப்பதையும் குறிப்பாக உணர்த்துகின்றது.

மக்களின் மன ஓட்டம் இதுவென்றாலும் பாஜக அரசுக்கு வால் பிடிக்கும் ஊடகங்கள் இருக்கும் வரை, பாஜகவை போர்க்குணமிக்க முறையில் எதிர்க்கும் மக்கள் இயக்கம் உருவாகாத வரை, மோடியின் பிம்பம் வம்படியாக தொடர்ந்து ஏற்றப்படும். எனினும் அதற்கும் ஓர் முடிவு இருக்கும் என்பதை இந்த கருத்துக் கணிப்பு நம்பிக்கையுடன் விளக்குகிறது.

வினவு கருத்துக் கணிப்புக் குழு

வரைபடங்கள்: வேலன்

( 1237 மக்களிடம் 08.10.2017 அன்று எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் இறுதி பாகம். ஆன்ட்ராய்டு செல்பேசி செயலி மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்களிடம் எடுக்கப்பட்ட துல்லியமான கருத்துக் கணிப்பு இது)

இந்த கருத்துக் கணிப்பின் முந்தய பாகத்துக்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் !

வினவு – அக்டோபர் 2017 மாபெரும் கருத்துக்கணிப்பு : பாகம் 1

_____________

இந்த கருத்துக்கணிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க