அசாம் : ஒரே ஆண்டில் 51 போலி என்கவுண்டர் கொலைகள் செய்த கொலைகார போலீசு !

இந்த காவல் கொலைகளை ஆதரித்து பேசும் அம்மாநில முதல்வர் சர்மா உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் காவி - கார்ப்பரேட் பாசிச குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதற்கு இந்த போலி என்கவுண்டர்கள் ஓர் துலக்கமான சான்று.

0
2021-ம் ஆண்டு அசாம் போலீசுத்துறை, 51 பேரைக் கொன்றுள்ளது என்று அம்மாநில அரசு கடந்த ஜூன் 21 அன்று கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆரிப் ஜவாடர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பாக பதில் அளிக்க உள்துறை அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, “2021 மே முதல் மே 31, 2022 வரை – போலீசு விசாரணை – போலீசு காவலின்போது 51 இறப்புகள் மற்றும் 139 பேருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் மாநிலத்தின் 31 மாவட்டங்களில் தொடர்புடையவை” என்று அசாம் அரசு வாக்குமூலம் அளித்துள்ளது.
***
அசாமில், போலீசின் துப்பாக்கிச் சூடு அதிகரிப்பு குறித்து சுதந்திரமான விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த டிசம்பரில் வழக்கறிஞர் ஜவாடர் கோரிக்கை விடுத்தார். மே 2021 முதல் டிசம்பர் 2021 வரை இதுபோன்ற 80-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டினார். இந்த காலகட்டத்தில் “போலி என்கவுண்டர்களில்” 28 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயமடைந்தனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
“என்கவுண்டர் நடந்தபோது, பாதிக்கப்பட்ட அனைவரும் நிராயுதபாணிகளாகவும் கைவிலங்கிடப்பட்டவர்களாகவும் இருந்தனர்” என்று ஜவாடர் தனது மனுவில் கூறினார். போலீசுத்துறையினருக்கு “கொலை செய்வதற்கான உரிமம் இல்லை” என்றும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், அவர்களைக் கொல்வதற்கு அல்ல என்றும் வழக்கறிஞர் ஜவாடர் கூறினார்.
படிக்க :
♦ பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !
♦ உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !
“இதுபோன்ற என்கவுண்டர் கொலைகள், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்கான உரிமையைப் பறிக்கிறது. இது ‘சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை’ தவிர மறுக்க முடியாது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மனித உரிமை நீதிமன்றங்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், என்கவுண்டர்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
***
அசாம் அரசு கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 31 மாவட்டங்களில் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசுத்துறையின் நடவடிக்கையால் இறப்பு அல்லது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூன் 21 அன்று நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த போலீசுத்துறையின் குற்றங்கள் தொடர்பாக கடந்த மார்ச் 15 அன்று, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநில சட்டசபையில் போலீசுத்துறை நடவடிக்கையை ஆதரித்து பேசினார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 30% குறைந்துள்ளது; இது குற்றவாளிகளுக்கு எதிரான போலீசுத்துறையின் கடுமையான நடவடிக்கைகள் செயல்படுவதை காட்டுகிறது என்றார்.
“என்கவுண்டர்களுக்காக நாங்கள் பலமுறை சபையில் விமர்சிக்கப்படுகிறோம். போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஆனால், அப்படி சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும்போது, ​​பலாத்காரம் செய்தவருக்கு அனுதாபம் காட்ட வேண்டுமா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்” என்று சர்மா கூறினார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா, அசாம் சட்டமன்றத்தில், போலீசு காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறப்பது மாநிலத்தில் புதிதல்ல என்று கூறினார். அசாம் போலீசுத்துறையின் கையேட்டில் என்கவுண்டர் என்ற வார்த்தையே இல்லை. “ஒரு குற்றவாளி தப்பிக்க அல்லது போலீசுத்துறையைத் தாக்க முயன்றால், அவர்கள் காயமடையலாம் அல்லது கொல்லப்படலாம்” என்று ஹசாரிகா கூறினார்.
அசாம் போலீசுத்துறைக்கு அம்மாநில அரசு எல்லையற்ற சுதந்திரம் வழங்கி இருக்கிறது என்பது இந்த காவல் கொலைகள் மூலம் அம்பலமாகிறது. இந்த காவல் கொலைகளை ஆதரித்து பேசும் அம்மாநில முதல்வர் சர்மா உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் காவி – கார்ப்பரேட் பாசிச குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதற்கு இந்த போலி என்கவுண்டர்கள் ஓர் துலக்கமான சான்று.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க