ழுத்தாளரும் கல்வியாளருமான ஆனந்த் தெல்தும்டே மும்பை விமான நிலையத்தில் வைத்து பிப்ரவரி 2-ம் தேதி புனே காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பீமா கொரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த நான்கு வார கால அவகாசத்தை பொருட்படுத்தாது அவரை கைது செய்தது போலீசு. சட்ட விதிமுறைகளை மீறி கைது செய்யப்பட்ட தெல்தும்டே-வை சில மணி நேரங்களில் புனே சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

தனது கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் தெல்தும்டே, சுதந்திரத்துக்குப் பிறகு அரசு தனது குடிமக்களுக்கு எதிராக செய்யும் படுபயங்கரமான திட்டம் இது என தெரிவித்தார். அவசர கதியில் தன்னை கைது செய்தது, நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பிப்ரவரி 2-ம் தேதி தனது கைதின் போது என்ன நடந்தது என்பது குறித்து அவர் விளக்கினார். “அன்று கொச்சினிலிருந்து மும்பை வந்துகொண்டிருந்தேன்.  இங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். மும்பை விமான நிலையத்தில் காத்திருக்கும்போது, எவ்வித நடைமுறைகளும் இல்லாமல் என்னைக் கைது செய்ய போலீசு நெருங்கியது; கைது செய்தது.  என்னுடைய குடும்பத்துக்கோ நண்பர்களுக்கோ தொலைபேசியில் அழைத்து தகவலை சொல்வதற்குக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. அது அவமதிப்பிற்குரிய அனுபவம்”.

2018-ல் நடந்த பீமா கொரேகான் நினைவு விழாவில் வன்முறையை ஏவியதாகக் கூறி புனையப்பட்ட வழக்கில் ‘அர்பன் நக்ஸல்’ என முத்திரை குத்தப்பட்டு, செயல்பாட்டாளர்கள் – வழக்கறிஞர்கள் ஒன்பது பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் கைதான பத்தாவது நபர் தெல்தும்டே.

எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் தனி நபர்களின் ஜனநாயக உரிமை மீது நடத்தப்பட்ட தெளிவான தாக்குதலாகத்தான் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன என்கிறார் தெல்தும்டே. “இந்த அரசுக்கு எனக்கு எதிராக எதுவும் கிடைக்கவில்லை. இது எதிர்ப்புக்கு எதிராக மட்டுமே உருவாக்கப்பட்டது. இன்று நான், நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.” என்றவர், ‘அர்பன் நக்சல்’ குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

படிக்க:
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
நானும் ஒரு நகர்ப்புற நக்சல்தான் – அருந்ததி ராய் !

“அர்பன் நக்சல் என்று எதுவும் இல்லை.  இப்படியொரு பெயர் வைத்திருப்பதே ஏமாற்று வேலைதான். பொருளற்ற பதம் அது”. மாவோயிஸ்டுகள் எழுதியதாக கைப்பற்றப்பட்ட கடிதங்களில் ‘காம்ரேட் ஆனந்த்’ என குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பேசிய தெல்தும்டே, “அவை அனைத்தும் ஆதாரமற்றவை. கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. அவர்களே எதையாவது ஜோடித்து, உங்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது என சொல்லிக்கொள்வார்கள்.  மறைமுக செயல்பாடுகளில் ஈடுபடுகிற எவரும் அத்தகைய கடிதங்களை எழுத முடியாது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும்” என தெரிவித்தார்.

கோவாவில் உள்ள கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே, தனது கைது நடவடிக்கையை தடுக்கும் வகையில் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுக இருக்கிறார்.

தான் இன்னமும் இந்திய நீதித்துறையை நம்புவதாக, குறிப்பாக இந்தியாவின் அரசியலமைப்பை நம்புவதாக அவர் தெரிவிக்கிறார். “என்னுடைய பிரார்த்தனைகள் கேட்கப்படும்; நீதி கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்கிறார் தெல்தும்டே.

மக்கள் நலனுக்காக குரல் எழுப்பும் ஆனந்த் தெல்தும்டே போன்றவர்களை ‘ஜனநாயக’ சர்வாதிகாரிகள் ஆள் தூக்கி சட்டங்களை பயன்படுத்தி சிறையில் அடைக்கப் பார்க்கிறார்கள். இந்துத்துவ காவிகளின் ஆட்சியில் ஜனநாயகத்துக்கு கல்லறை எழுப்பப்பட்டுவிட்டது என்பதை செயல்பாட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள் காட்டுகின்றன.


கலைமதி
நன்றி: த வயர்


இதையும் பாருங்க …

முசோலினியை, இட்லரை மறந்து போனதா…? தருணமிது விழித்துக் கொள்ளடா….