கடந்த மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்து சமூக செயற்பாட்டாளர்களை டெல்லி சிறப்பு போலீசு கடத்தி சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. சாதாரண உடையில் வந்து செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கேட்டு அவர்களை வாகனத்திற்குள் தள்ளி கண்களைக் கட்டி கடத்திச் சென்று தாக்கியுள்ளது. டெல்லி போலீசு ஒரு கூலிப்படையைப் போல இக்கடத்தலை அரங்கேற்றியுள்ளது. செயற்பாட்டாளர்களை பாலியல் ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து தலித் செயற்பாட்டாளரான சிவகுமார் கூறுகையில், “அவர்கள் என்னை நிர்வாணமாக ஆடையைக் களையச் செய்து, கால்களை அகல விரிக்குமாறு கட்டாயப்படுத்தி, எனது அந்தரங்க உறுப்பில் பெல்ட்டால் அடித்தார்கள்” என்று அம்பலப்படுத்தியுள்ளார். மேலும், பல மணி நேரம் தலைகீழாகத் தொங்கவிட்டு இடுப்புக்குக் கீழே ரப்பர் தடியால் தாக்கியுள்ளனர். காலணிகளால் பாதத்தை நசுக்குவது; கடத்தி வைத்திருந்த காலம் முழுவதும் விலங்கிட்டிருந்தது என சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
23 வயதான இலக்கியா கூறுகையில், “அவர்களின் துன்புறுத்தல் மிகவும் பாலியல் ரீதியான கருத்துகளை மையமாகக் கொண்டிருந்தது” என்றார். மேலும், இந்தத் தலைமுறை வெவ்வேறு நபர்களுடன் உறவுகொள்ளத் தயாராக இருக்கிறது என்பது போன்ற இழிவான கருத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
அதேபோல், அவினாஷ் என்ற செயற்பாட்டாளர் கன்னத்தில் அறையப்பட்டதாகவும், உதைக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும், அவரது பாலியல் நோக்குநிலை குறித்து கேலி செய்யப்பட்டதாகவும் தெரிவித்ததுடன், “வன்முறை அச்சுறுத்தலின் கீழ், மற்றொரு கைதியுடன் சேர்ந்து இழிவான செயல்களில் ஈடுபடுமாறு அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தினர்” என்றும் அம்பலப்படுத்தியுள்ளார்.
19 வயதான செயற்பாட்டாளர் ருத்ரா, நிர்வாணப்படுத்தப்பட்டு பிறப்புறுப்பில் தாக்கப்பட்டுள்ளார், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவரை ரப்பர் தடியால் தாக்கியதுடன், கால்களால் மார்பில் எட்டி உதைத்துள்ளனர். செருப்பை முத்தமிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும், அவரை கொலை செய்துவிட்டு தற்கொலை என பொதுவெளியில் திரித்துவிடுவோம் என்றும் போலீசு மிரட்டியுள்ளது.
படிக்க: வக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு !
மற்றொரு மாணவர் ஆர்வலரான கௌரவும் நிர்வாணமாக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சாதி ரீதியாக இழிவாகப் பேசப்பட்டுள்ளார். கௌரவையும் ருத்ராவையும் ஆபாசமான செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தி அதனை காணொளி எடுத்துள்ளனர். பொய்யான வாக்குமூலம் கொடுக்க மறுத்ததற்காக கௌரவின் தலையைப் பலமுறை சுவரில் மோதி தாக்கியுள்ளனர்.
மஸ்தூர் அதிகார் சங்கத்துடன் தொடர்புடைய செயற்பாட்டாளர் மன்ஜீத் குமார் நிர்வாணமாக்கப்பட்டு, குப்புறப் படுக்க வைக்கப்பட்டு, அதிகாரிகள் அவரது முதுகில் அமர அவரது பாதங்களின் அடிப்பகுதியில் தாக்கியுள்ளனர். அதிகாரி ஒருவனால் பாலியல் செயலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டதுடன், கடுமையான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் தலித் என்பதை அறிந்தவுடன் அவரை நிர்வாணமாக அறைகளைச் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தி சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது சாதிவெறி போலீசு.
டெல்லி போலீசின் இந்தக் கடத்தல் நடவடிக்கை பொதுவெளியில் அம்பலமாகி எதிர்ப்பு கிளம்பியது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்துதான் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கு விசாரணையின் போது செயற்பாட்டாளர்கள் அனைவரையும் விடுவிக்காமலேயே விடுவித்துவிட்டதாக அப்பட்டமாக நீதிமன்றத்தில் பொய்யுரைத்தது டெல்லி போலீசு.
இடதுசாரி-முற்போக்கு மாணவத் தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் கடத்தி உடல் ரீதியான துன்புறுத்தலுக்கும் பாலியல்-சாதிய வன்கொடுமைக்கும் உள்ளாக்குவதை டெல்லி போலீசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. கடந்தாண்டில் ஜூலை மாதத்திலும் “பெருநிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான மன்ற”த்தை (FACAM) சேர்ந்த செயற்பாட்டாளர்களைக் கடத்தி இதேபோன்ற வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. அதேபோல, ரவுடிகளை போல கல்வி நிலைய வளாகத்திற்குள் புகுந்து போராடும் மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிடுவதையும் டெல்லி போலீசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிரான குரலை ஒடுக்கிவிடலாம் என டெல்லி போலீசும் பா.ஜ.க. கும்பலும் கனவு காண்கிறது. இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











