ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!

மதவெறி செல்வாக்கு, சந்தர்ப்பவாதக் கூட்டணி, குதிரை பேரம் போன்றவற்றின் மூலம் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் இணையாட்சியை நடத்திவருகிறது.

ந்துராஷ்டிரத்தை நிறுவத்துடித்துக் கொண்டிருக்கும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு, எதிர்க்கட்சிகளையும் தங்களுக்கு எதிரான போராட்டங்களையும் ஒழித்துக்கட்டுவது இன்று முக்கியப் பணியாக உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு ஆளுநர்கள் கருவியாகப் பயன்பட்டுவருகின்றனர். இந்த ஆளுநர்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இந்துராஷ்டிர லட்சியத்தை சாதிப்பதற்கு, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் காவிக் கும்பலின் அடியாட்களாக செயல்பட்டுவருகின்றனர். அந்தவகையில், தற்போது புதிய அடியாட்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் 12 ஆம் தேதி, 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்துள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏழு ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் பல முக்கியமான மாநிலங்களில் பொருத்தமான உளவாளிகளை நியமித்துள்ளது பா.ஜ.க. அரசு.

கரசேவைக்கு தரப்பட்ட வெகுமதி

தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு செய்த கரசேவையின் பலனாய், தற்போது சன்மானம் பெற்றிருக்கிறார் மேனாள் நீதிபதி அப்துல் நசீர். கடந்த ஜனவரி நான்காம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்ற இவர், ஓய்வுப் பெற்று 40 நாட்கள் கூட ஆகாத நிலையில், தற்போது ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


படிக்க : ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? | தோழர் மருது வீடியோ


குஜராத் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து மோடியைக் காப்பாற்றிய நீதிபதி சதாசிவத்திற்கு, 2014 ஆம் ஆண்டு கேரள ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. இப்போது, அப்துல் நசீருக்கு பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விற்கு ஆதரவாக, அயோத்தி நிலம் ராமர் கோயிலுக்கே சொந்தம் என்ற அயோக்கியத்தனமான தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பை வழங்கிய அமர்வில் அங்கம் வகித்த அசோக் பூஷன், ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கு ஏற்கெனவே பதவிகள் வழங்கி ‘கவுரவிக்கப்பட்டு’ விட்டது. இப்போது அப்துல் நசீருக்கு கிடைத்திருக்கிறது.

அசோக் பூஷன் ஓய்வுப் பெற்ற இரண்டு மாதங்களில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) தலைவராக நியமிக்கப்பட்டார். அயோத்தி மட்டுமல்லாமல், ரபேல் ஊழல், அசாமில் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவதற்கான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் மோடி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய மற்றொரு நீதிபதியான ரஞ்சன் கோகாய், ஓய்வுபெற்றப் பிறகு பா.ஜ.க.வால் நியமன எம்.பி.யாக பதவியில் அமர்த்தப்பட்டார்.

அப்துல் நசீர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதே பெரும் சர்ச்சைக் குறியதாகும். 2017-ஆம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய இவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றாத நிலையிலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அப்துல் நசீர் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கிறோம் என்றது மோடி அரசு. பாசிச மோடி அரசுக்கு சிறுபான்மையினர் மீது அத்துணை அக்கறையாம்! ஆனால், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் என்ற நீதிபதி ஒரு கிறித்தவர் என்பதனால் கொலிஜியம் பரிந்துரைத்து பல மாதங்கள் வரையிலும் ஒப்புதல் அளிக்கப்படாமல் வஞ்சிக்கபட்டார்.

மோடி அரசின் பூரண ஆசியுடன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அப்துல் நசீர், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பொழுதே ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான அகில பாரதிய ஆதிவக்த பரிஷத்தின் (ஏபிஏபி) 16-வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இந்திய நீதித்துறை மனு, சாணக்கியர், காத்யாயனர், பிரஹஸ்பதி, நாரதர், யாக்யவல்க்கியர் போன்றோர் உருவாக்கிய சட்ட மரபைப் புறக்கணித்து வருகிறது. காலனிய நீதி அமைப்பைப் பின்பற்றுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், தேச நலனுக்கும் எதிரானது” என்று வெளிப்படையான சங்கியாகப் பேசினார். உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரே இவ்வாறு பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இஸ்லாமியர்களை நான்காந்தரக் குடிமக்களாக நடத்தும், அம்மக்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்துராஷ்டிரத்தை அறிவிக்க வேண்டும் வெறிக்கூச்சலிடும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலுக்கு, தானும் ஒரு இஸ்லாமியன் என்ற பெயரில் சங்கியாக செயல்படும் அப்துல் நசீர், சொந்த மக்களுக்கே எதிரான துரோகி. அவரது விலைமதிப்பில்லாத துரோகத்தின் பரிசாகக் கிடைத்திருப்பதுதான் ஆளுநர் பதவி.

மேலும், அப்துல் நசீர் ஆந்திராவுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில், தென்னிந்தியாவைக் குறிவைத்து வேலைசெய்யும் பா.ஜ.க.வின் மிஷன் சவுத் திட்டமும் இணைந்திருக்கிறது.

மாநிலங்களின் மீது பாசிச உளவாளிகளின் படையெடுப்பு

மஹாராஷ்டிரா ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி கடந்த ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றார். இந்நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு ரமேஷ் பயஸ் என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உத்தரவின் பேரில் ‘வெற்றிகரமாக’ சிவசேனாவை உடைக்கும் பணியை நிறைவேற்றிவிட்டதால் இதன்பிறகு பகத்சிங் கோஷ்யாரிக்கு மஹாராஷ்டிராவில் வேலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக் துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூரின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த பி.டி.மிஸ்ரா லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரியில் இந்த அறிவிப்பு வருவதற்கு முதல்நாளே எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி, ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளார் ராதா கிருஷ்ணன். இதற்கு லடாக்கின் கொந்தளிப்பான போராட்டச் சூழலே காரணமாகும்.

2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக உடைக்கப்பட்டபோது, அதை லடாக்கின் லே பிராந்திய மக்கள் வரவேற்றனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது லடாக்கில் ஒன்றிய அரசுக்கு எதிராக, மாநில உரிமைக்காகவும் ஆறாவது அட்டவணைப்படி சிறப்பு உரிமை கோரியும் தீவிரமாக போராடி வருகின்றனர் லே பிராந்திய மக்கள். கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA), லே அபெக்ஸ் பாடி (LAB) ஆகிய கட்சிகள் மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

லடாக்கில் தீவிரமாக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்தான், பழைய ஆளுநர் மாற்றப்பட்டு, பி.டி.மிஸ்ரா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்திலேயே முன்னாள் இராணுவ அதிகாரியான அவர், லடாக்கிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மொத்தமுள்ள 8 வடகிழக்கு மாநிலங்களில் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்டு 5 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மக்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் ஆட்சிக்கு வருவது என்னமோ பா.ஜ.க.தான். கடந்த காலங்களில் சிக்கிம், மேகாலயா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறாதபோதும், பிற கட்சி ஆட்களை பேரம்பேசுவதன் மூலமும் ஆளும் கட்சியை மிரட்டி கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வைப்பதன் மூலமும் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. இந்த நிழல் பேரங்களை எல்லாம் ஆளுநர்களின் துணைக்கொண்டே நடத்திவருகிறது பா.ஜ.க. மேகாலயா தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு பாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது ஆளுநர் மாற்றம் நடைபெற்றிருக்கிறது.

0-0-0

மதவெறி செல்வாக்கு, சந்தர்ப்பவாதக் கூட்டணி, குதிரை பேரம் போன்றவற்றின் மூலம் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் இணையாட்சியை நடத்திவருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் முறைகேடு என பல்வேறு காரணங்களைச் சொல்லி எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும்; ஆட்சிக்கவிழ்ப்பு சதிவேலைகளில் ஈடுபடுவதற்கும் ஆளுநர்களை அடியாட்களாகப் பயன்படுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தமிழ்நாடு, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களின் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

இன்னொருபக்கம், தனது பாசிசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அடிமைச்சேவகம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசாகவும் ஆளுநர் பதவி உள்ளது. தற்போதைய ஆளுநர்கள் நியமனமும் அதற்கொரு சாட்சியாக உள்ளது.


துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க