ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார், விவசாய சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து மனுவை பெற மாட்டார், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்றால், இப்படிப்பட்ட ஆளுநருக்கு இனியும் தமிழ்நாடு அரசு எவ்வித நிதியும் வழங்கக்கூடாது.

29.11.2022

ஆன்லைன் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி!
ஆண்டுக்கு பல கோடி தண்டச்செலவு!
இனியும் வேண்டாத தசைப் பிண்டத்தை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

பத்திரிகை செய்தி

மிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி,  பணத்தை இழந்ததால் 30-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அக்டோபர் 1-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

27 நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்ட மசோதா பற்றி வாயை திறக்காத ஆளுநர் ரவி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) கடிதம் அனுப்பினார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

படிக்க : ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!

இதனிடையே, தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் பகுதியில் வசித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சடத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் நேற்று (நவம்பர் 28) காலாவதியிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நன்றாக உண்டு, உறங்கி சொகுசாக வாழ்க்கையை கழிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் எதிரான எல்லா விதமான உளவாளி மற்றும் மக்கள் விரோத வேலைகளை திறம்பட செய்து வருகின்ற ஆர்.என்.ரவி, வேண்டுமென்றே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுக்கிறார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கக்கூடிய, எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்னும் கும்பலாக இருக்கக்கூடிய மோடி, நிர்மலா சீதாராமனின் நோக்கத்துக்கு தமிழ்நாடு அரசு இந்த தடைச் சட்டம் தடையாக இருக்கும் என்பதாலேயே ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களால் பலமுறை வலியுறுத்தப்பட்ட, தமிழ்நாட்டு அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு இந்த ஆளுநர் ஒப்புதலளிக்கவில்லை என்றால், இப்படிப்பட்ட ஆளுநர் தமிழ்நாட்டுக்கு எதற்கு என்ற கேள்வியை நாம் உரக்க எழுப்ப வேண்டும்?

இதுவரை ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு அரசின் 36 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். எந்த வேலையை செய்ய ஒருவர் நியமிக்கப்பட்டாரோ, அந்தப் பணியை செய்ய மறுக்கும் பொழுது அவரை அப்பணியில் இருந்து வெளியேற்றுவதே நலம். அதன்படி மக்கள் நலன் வேலையை செய்யாமல் மக்கள் விரோதி வேலைகளை செய்யும் இந்த ஆளுநர் வெளியேற்றப்படுவதே சரியானதாக இருக்கும்.

சென்னையில் உள்ள ராஜ்பவன் 156.14 ஏக்கர் பரப்பிலும், உதகை ராஜ்பவன் 86.72 ஏக்கர் பரப்பிலும் அமைந்துள்ளன. இந்தக் கட்டடங்களைப் பராமரிக்க ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

ஆளுநருக்கான உணவு, சுற்றுப்பயணம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இதரச் செலவுகள் இதில் செய்துகொள்ள வேண்டும். இதுதவிர ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புக்கு ஃபர்னிச்சர் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம்.

தமிழக ஆளுநர் மாளிகைக்கான ஆண்டுச்செலவு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய். இப்படி எல்லாம் சல்லாபமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆளுநர் தன் விருப்பம்போல ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவக் கொள்கைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்.

படிக்க : ‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார், விவசாய சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து மனுவை பெற மாட்டார், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்றால், இப்படிப்பட்ட ஆளுநருக்கு இனியும் தமிழ்நாடு அரசு எவ்வித நிதியும் வழங்கக்கூடாது.

ஆளுநர் மாளிகை தொடர்பான செலவுகள் உள்ளிட்ட எதற்கும் தமிழ்நாடு அரசு நிதி அளிக்கக்கூடாது.

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைப் போல மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் இந்த ஆளுநருடைய அடிப்படை வசதிகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

ஆளுநருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வேலை செய்யக்கூடிய அனைத்து பணியாளர்களையும் தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.

ஆளுநரை வெளியேற்றுவற்காக அனைத்து கட்சிகளுடனும் மக்களோடும் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம் 
தமிழ்நாடு – புதுவை
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க