Saturday, August 13, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் இராம அடையாளமும் தலித்துக்களின் நூற்றாண்டு துயரமும்

இராம அடையாளமும் தலித்துக்களின் நூற்றாண்டு துயரமும்

-

ட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகர் இராய்பூரில் இருந்து 250 கி.மீ தொலைவிலுள்ள சில கிராமங்களில் நீல நிறம் பூசப்பட்ட சிதிலமடைந்த வீடுகளையும் அவற்றை இணைக்கும் உடைந்து போன சாலைகளையும் காணலாம். அங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் தலித்துக்கள் – பார்ப்பனிய இந்துமத சாதியமைப்பில் கடைக்கோடியிலிருக்கும் சாதிப்பிரிவினர்.

60 வயதான தானி ராம் சன்வானி, சார்போரா கிராமத்தில் ஒரு சிதிலமடைந்த வீட்டில் வசிக்கும் விவசாயி. “உரிமைகள் ஏதுமற்ற தலித்துக்கள் ஆதிக்கச்சாதியினரால் அடக்கியொடுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்பட்டனர். நாங்கள் சமர் என்றும் “அக்கூட்” [தீண்டத்தகாதவர்கள்] என்றும் மோசமாக விளிக்கப்பட்டோம். எங்களது முன்னோர்கள் விலங்குகளை விட மோசமான நிலையில் நடத்தப்பட்டனர். கோயில்களிலும் அவர்களால் நுழைய முடியாது” என்று அவர் கூறுகிறார். இப்படிக் கூறும் சன்வானியின் முகத்திலும் உடலிலும் இந்துக் கடவுளான இராமனின் பெயர் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது. அவர் மட்டுமல்ல அவரது ஊரைச் சேர்ந்தவர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்று இதில் பேதமேதுமில்லை.

“கடவுளின் பெயர் எங்கள் மீது பச்சைக் குத்தப்பட்டிருக்கும் போது எங்களுக்கு கோயில் எதுவும் தேவையில்லை. கோயிலில் மட்டுமல்ல கடவுள் எங்கும் இருக்கிறார். எங்களது ஊருக்கருகில் ஒரு கோயில் இருக்கிறது. எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் அதனுள்ளே ஒருபோதும் சென்றதில்லை. அந்தக் கோவிலில் எந்தக் கடவுளின் உருவம் இருக்கிறது என்பதே எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களது முன்னோர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது போல எங்களது நிலைமை தற்போது இல்லை தான் ஆனாலும் பார்ப்பனிய இந்துமதச் சாதியமைப்பின் ஏற்றத்தாழ்வு முற்றிலுமாக நீங்கும் வரை இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

பரசுராம் பரத்வாஜ் என்பவரால் 1890-களில் தொடங்கப்பட்ட இராம்நமி சமாஜ் என்ற சமய மறுமலர்ச்சி இயக்கத்தை அங்கிருக்கும் தலித்துக்கள் பின்பற்றுகிறார்கள். சட்டிஸ்கரைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் கோயிலில் நுழைய அவர் மறுக்கப்பட்டதன் எதிர்வினையாகத் தான் இந்த இயக்கத்தை அவர் தொடங்கினார். இது குமரி மாவட்டத்தின் அய்யா வழிபாட்டின் மூலவர் வைகுண்டநாதரின் வரலாற்றைப் போன்றது.

1901 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட தலித் மக்களை ஒருங்கிணைத்து முதன்முறையாக இராம்நமி மேளாவைப் பரசுராம் தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிலாஸ்பூர் மற்றும் இராய்பூர் மாவட்டங்களில் தலித் மக்களின் பங்கேற்புடன் இராம்நமி மேளா நடைபெறுகிறது.

வரலாறு நெடுகிலும் உழைக்கும் மக்களின் விழுமியங்களையும் கலாச்சராங்களையும் பார்ப்பனிய இந்து மதம் அங்கீகரித்ததில்லை மாறாக நசுக்கியே வந்துள்ளது. இராம்நமி மேளாவில் தலித்துக்கள் ஒன்றுகூடுவதை ஆதிக்கச்சாதி இந்துக்கள் வெறுத்தது மட்டுமல்லாமல் இராமனின் பெயரைப் பயன்படுத்துவதையும் எதிர்த்துக் கடுமையாக அவர்களைத் தாக்கியிருக்கின்றனர். இராமாயண புராணபுரட்டு இராமனல்ல எங்களது கடவுள், மாறாக நெருப்பு, சூரியன் மற்றும் சந்திரன் போன்ற இயற்கையின் கூட்டுத்துவம் தான் எங்கள் நாயகன் என்று பரசுராம் அறுதியிட்டு கூறினார். ஆனாலும் இராமனின் பெயரும் ஹரிஜன அடையாளமும் தலித் மக்களைப் பீடித்திருக்கும் நோய்கள் என்பதை ஏனையோரை விட தலித்மக்களே இன்று நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

உருவ வழிபாட்டில் நம்பிக்கையின்மை, இயற்கைக்கு மாறான எதிலும் நம்பிக்கை கொள்ளாமை, புனித கங்கை நீர் பாவத்தைப் போக்கும் போன்ற மூடப்பழக்கங்களில் நம்பிக்கைக் கொள்ளாமை, கோயிலுக்குச் சென்று இந்துக்கடவுளை வழிபடாமை, பார்ப்பனர்களின் மேலாதிக்கம் மற்றும் அவர்களது புனித நூல்களான மனுஸ்மிரிதி மற்றும் இராமசரிதமானஸ் போன்றவற்றை ஏற்காமை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தில் நம்பிக்கைக் கொள்ளல் போன்றவை இராம்நமி மகா சபாவின் கொள்கைகளாக இருந்தன.

முந்தையக் காலங்களில் இராம்நமி சமூக மக்கள் தங்களது திருமணத்திற்கு பிறகு பச்சைக் குத்தி கொண்டனர். முன்பு இச்சமூகத்தினருக்குப் பொதுவாக 11-14 வயதிற்குள் திருமணம் நடைபெறும். பச்சைக் குத்திக்கொள்ளும் இந்தக் கலாச்சாரம் இதேபோல இனி இருக்காது. ஏனெனில் பச்சைக் குத்திக்கொள்ளும் செயல்முறையானது மிகவும் வலி நிறைந்தது. புகைக்கரியுடன் தண்ணீரைச் சேர்த்து தயாரிக்கப்படும் மையைக்கொண்டு பச்சைக் குத்தப்படும் இந்த நடைமுறையைப் பெரும்பாலும் பெண்களே முன்பு செய்தார்கள்.

தனது 13 வது வயதில் திருமணம் நடந்த மறுகணமே தனக்கு பச்சைக் குத்தப்பட்டதை நினைவு கூறுகிறார் படே சிபட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 71 வயதான சாமுந்து பாய். “எனது கணவர் அவருடைய உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டிருந்தார். இராமனது பெயரைப் பச்சைக் குத்திக் கொள்ளுதல் எங்களது சமூகத்தின் சமயம் மற்றும் கலாச்சராம் தொடர்புடையது என்பதால் எனது முகத்தில் பச்சைக் குத்திக்கொள்ளுமாறு கணவர் என்னை வலியுறித்தினார். பச்சைக் குத்திக்கொள்ளும் போது ஏற்பட்ட வலியானது ஒரு கெட்ட கனவு. ஒரு ஆறு மாதத்திற்கு என்னால் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் முடியவில்லை.” என்று அவர் கூறுகிறார்.

இராம்நமியைப் பின்பற்றும் இளைஞர்கள் இனி ஒருபோதும் பச்சைக் குத்திக்கொள்ள போவதில்லை. இன்றும் பெரும்பான்மையான இடங்களில் சாதி அடக்குமுறை கோலோச்சும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறையானது அவர்களது சாதி அடையாளத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களைப் பின்னுக்கு இழுப்பதாகும் என்று ஜன் ஜக்ராம் சமிதி (மக்கள் விழிப்பு சமூகம்) அமைப்பின் தலைவரான விபிஷன் பட்ரே கூறுகிறார்.

தேசியகீதத்தைப் பாடினால் காவல்துறை அடிக்காது என்பது போல இராமன் பெயரை உடம்பில் பச்சைக் குத்திக்கொண்டால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கை ஒன்றும் அகண்ட பாரதத்தில் பயனளிக்காது என்பதைத் தலித் மக்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள்.

பார்ப்பன எதிர்ப்பை அடிநாதமாக கொண்டுத் தொடங்கப்பட்ட இராம்நமி இயக்கம் பின்னாளில் வெறுமனே பக்தி இயக்கமாக ஒடுங்கிவிட்டதில் யாதொரு வியப்புமில்லை. இராம்நமி சமாஜ் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய சமய சீர்திருத்தங்கள் பெரும்பாலும் ஒன்று பார்ப்பனியத்தால் அழிந்துபடும் அல்லது அதனால் செரிக்கப்பட்டு பொருளற்ற வெற்றுச்சடங்குகளாகிவிடும். பார்ப்பனியத்தின் அடக்குமுறையால் தனிச்சமயமான அய்யாவழி வழிபாடும் இன்று வெறும் சடங்கு ரீதியாகவே தொடர்கின்றது.

இந்தியச் சமூகப் அமைப்பின் ஆணிவேரான சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் பார்ப்பனியத்தை வெட்டி வீழ்த்தாமல், நில உரிமையில் பங்கு இல்லாமல் தலித்துக்களுக்கு விடுதலை என்றுமே கிடையாது. இராம்நமி இயக்கமானது தொடங்கப்பட்டக் காலத்தில் இருந்து பார்ப்பனியத்திற்கு ஒரு பிரச்சினையாக அது இருந்ததில்லை.  அதாவது மையரீதியான பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பது சாத்தியமில்லை என்ற நிலையில் தனது அடையாளத்திற்கான தனி வழிபாடு, சடங்கு என மட்டும் ஏற்படுத்திக் கொண்டது. அதுவும் பின்னர் பக்தி பெருமூச்சாக மட்டுமே வரலாற்றில் தொடர்கிறது. இன்றைக்கு தமிழக நாட்டுப்புற  சாமிகளை செரிக்க  முயலும் இந்து மதவெறி அமைப்புக்கள் இத்தகைய சாதிக்கேற்ற தனிக்கடவுள், வழிபாடுகளை ஆதரிக்கின்றன. அப்போதுதான் பெருந்தெய்வ வழிபாட்டில் பார்ப்பனர்களை தவிர்த்து யாரும் உள்ளே நுழைய முடியாது.

பீமா-கரோகான் நினைவுத்தூனும் இராய்ப்பூரின் நீல நிற வீடுகளும் பார்ப்பனிய இந்துமத எதிர்ப்புச்சின்னங்களாக இன்றும் நம் கண்முண்ணே இருக்கின்றன. இவையிரண்டுமே பார்ப்பனியத்திற்கு எதிரான தலித் மக்களின் வெஞ்சினம் தான். ஆனால் முன்னது சமரசமில்லா வீரியமான போராட்டத்தினால் பார்ப்பனியத்தை வீழ்த்தி எதிர்காலத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் காலத்தை வென்று நிற்கிறது. ஆனால் பின்னது பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராக தோன்றினாலும் தீண்டாமை அடையாளங்களுடன் சிதிலமடைந்த நீலநிற சுவர்களுடன் சேரிகளுக்குள் முடங்கிவிட்டது.

இருப்பினும் இந்தியாவின் பார்ப்பனிய எதிர்ப்பு வரலாற்றை அதுவும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முதல் முறையாக ஐந்து வயதில் பச்சைக் குத்தப்பட்டதைப் பற்றி சரஸ் கேளா கிராமத்தைச சேர்ந்த 71 வயதான இராம் நிவாஸ் விவரிக்கிறார். “ராம் என்ற பெயரை என் நெற்றியில் எனது தந்தை 4 முறை பச்சைக் குத்தினார். எனக்கு 30 வயது முடிந்தபோது முகம், கைகள் மற்றும் கால்கள் அனைத்திலும் பச்சைக் குத்திக்கொண்டேன்” என்று அவர் கூறினார். அதே போல அவருடைய 4 பிள்ளைகளுக்கும் அவர்கள் இளம்வயதாக இருந்த போது 4 முறைப் பச்சைக் குத்தினார். “ஆனால் அவர்கள் நாட்டின் பிற மாநிலங்களில் வேலை செய்வதால் உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொள்ள விரும்பவில்லை. பச்சைக் குத்திக்கொள்வது தீண்டத்தகாதச் சமூகத்தைச்[முன்பு இப்படி தான் தலித்துக்கள் அறியப்பட்டனர்] சேர்ந்தவர்கள் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் என்பதால் என் பிள்ளைகள் இதை விரும்பவில்லை” என்று அவர் விளக்கினார். “என் பேரக்குழந்தைகளுக்கு பச்சைக் குத்தப்படவே இல்லை” என்கிறார்.

ஜவாலி கிராமத்தில் தன்னுடைய வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறார் 60 வயதுடைய தன்பாய். தலித் உரிமைகளுக்கான இயக்கத்துடன் நீலநிறத்திற்கு தொடர்பிருப்பதால் இங்கே பெரும்பாலான வீடுகளுக்கு நீலநிறம் பூசப்பட்டு இருக்கிறது. நீலநிறம் என்பது அமைதி, வீடு பேறடைதல், தூய்மை மற்றும் தேற்றுதல் ஆகியவற்றைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பல்கலைக்கழக பேராசிரியரான கோல்டி எம் ஜார்ஜைப் பொருத்தமட்டில் இந்த வண்ணப்பூச்சு கலாச்சாரம் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கருடன் தொடங்கியது. பாபாசாகேப் என்று பிரபலமாக அறியப்படும் அம்பேத்கர் ஒரு இந்தியச் சட்ட நிபுணர், பொருளாதாரவாதி, அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். தலித் புத்த இயக்கத்திற்கு (Dalit Buddhist Movement) ஊக்கமளித்த அவர் சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.

சாமுந்து பாய்க்கு 75 வயதாகிறது. கணவரின் வற்புறுத்தலினால் தன்னுடைய 13 வது வயதில் முகத்தில் பச்சைக் குத்திக்கொண்டார். அதனால் ஏற்பட்ட கடும் வலியினால் ஆறு மாத காலம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் முடியாமல் தவித்ததை அவர் நினைவு கூறுகிறார்.

என்னுடைய அப்பா மற்றும் தாத்தா இருவரும் தங்களது உடல் முழுவதும் கடவுள் இராமன் பெயரைப் பச்சைக் குத்திக்கொண்டார்கள். ஆனால் நான் வேலைக்குச் செல்ல என்னுடைய தந்தை விரும்பியதால் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். அதனால் எனக்கு பச்சைக் குத்தவில்லை. நான் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். நான் பச்சைக் குத்திக் கொள்ளவில்லை என்றாலும் என்னுடைய இராம்நமி (Ramnami) அடையாளத்தை நான் விரும்புகிறேன். இராம்நமி சமாஜ் இயக்கத்தை பின்பற்றுபவர்கள் அணியும் கலாச்சார உடையையே பெரும்பாலான நேரங்களில் நான் உடுத்துகிறேன். அந்த உடையில் இராமன் பெயர் எழுதப்பட்டு இருக்கிறது. நான் இந்த சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று 65 வயதான கோல்பரா இராம்நமி கூறுகிறார்.

“எங்களது உடலில் பச்சைக் குத்தியிருப்பதை மக்கள் பார்க்கும் போது எங்களைப் பெயர்சொல்லி (வயதான பெரியவர்கள் உட்பட) சில நேரங்களில் அழைப்பார்கள். ஆனால் வெளிப்படையாக சொல்வதானால் இது ஒரு பெரிய விடயமில்லை. என்னுடைய கடவுளின் பெயரை உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொண்டதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று 68 வயதான செட் பாய் கூறுகிறார்.

பெரும்பாலான இராம்நமி சமாஜ் சமூக மக்கள் வறியநிலையில் இருக்கிறார்கள். பிற நிலவுடைமை சாதியினரின் நிலங்களில் கூலி வேலை செய்கிறார்கள்.

“நான் கடவுள் இராமனுக்காக பஜனைகள் பாடுவதில் பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கிறேன். என்னுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு பச்சைக் குத்தப்படாததில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இராம்நமி சமாஜ்ஜை எப்படி பின்பற்ற வேண்டுமென்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம்” என்று 64 வயதான சாகிப் இராம் குரே கூறுகிறார்.

85 வயதான படும் இராம் பாரதியின் கைகள் மற்றும் கால்களில் பச்சைக் குத்தப்பட்டுள்ளது. “நீங்கள் பார்த்ததிலேயே என்னுடைய மனைவிதான் மிகவும் அழகானவராக இருப்பார். என்னுடைய முகத்தில் நான் பச்சைக் குத்திக்கொண்டால் என்னை விட்டு விலகிவிடுவேன் என்று அவர் பயமுறுத்தியதாக கூறினார். அவருக்காகத் தான் என்னுடைய முகத்தில் நான் பச்சைக் குத்திக்கொள்ளவில்லை என்று கூறுகிறார்.

இராம்நமி சமாஜ்ஜை பின்பற்றுபவர்கள் உருவ வழிபாட்டை நம்புவது இல்லை. அவர்கள் இராமனின் பெயரைப் பாடி வழிபடுகிறார்கள்.

பச்சைக் குத்தப்பட்டதால் பேறுபெற்றதாக 76 வயதான நகு இராம் குர்ரே கூறுகிறார். அவருடைய நெற்றி, கைகள் மற்றும் கால்களில் பச்சைக் குத்தப்பட்டுள்ளது.

தலித் தலைவரான பரசுராம் பரத்வாஜ் மூலம் 1890 ஆம் ஆண்டுகளில் உடல்களில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறை இராம்நமி சமாஜ் சமூகத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

13 வயதான பூமிகா நிரலாவும் அவளுடைய 10 வயது தம்பியும் வீட்டிற்கு வெளியே இருக்கிறார்கள். “நான் என் உடலில் ஒருபோதும் பச்சைக் குத்திக் கொள்ளமாட்டேன். உயர்கல்வி கற்க கிராமத்தை விட்டு வெளியே செல்ல விரும்புகிறேன்” என்று பூமிகா கூறுகிறாள். “என்னுடைய சாதியை வைத்து மக்கள் என்னை அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. உடலில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் ஒரு ஆசிரியராக என் சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே விரும்புகிறேன்” என்று மேலும் கூறுகிறாள். பள்ளிக்குச் செல்லும் இவர்கள் இருவருக்கும் காலணிகள் கிடையாது.

தன்னுடைய இராம்நமி அடையாளம் குறித்து பெருமை கொள்கிறார் 70 வயதான இராம் பகத் மகிலேஞ்சு. சட்டீஸ்கர் மாநிலத்தின் வறுமைமிகு பகுதியியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 35 வது வயதில் முகம், காதுகள் உள்ளிட்டு உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொண்டார்.

பெரும்பாலும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பின்பற்றப்படும் இராம்நமி சமாஜ் என்பது ஒரு சமய மற்றும் சமூக சீர்திருத்த இயக்கமாகும்..

“என்னுடைய உடலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கடவுள் ராமனின் பெயரைப் பெருமையாக சுமந்து வருகிறேன். அவர் என்னோடு இருக்கிறார். நாங்கள் உள்ளே நுழைய கோயில்கள் தடுக்கலாம் ஆனால் எங்களுடன் கடவுள் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்று ஜம்காஹா கிராமத்தில் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருக்கும் 77 வயதான மஹேத்தர் இராம் டாண்டன் கூறுகிறார்.

– நன்றி அல்ஜசிரா
தமிழாக்கம்: சுந்தரம்

மூலக்கட்டுரை: In the name of Ram: Tattoos in India’s Dalit community

  1. நன்றி அல்ஜசிரா ?!

    சிறப்பான கட்டுரை ! ஆனாலும் இது போன்ற இந்திய கலாச்சார போராளிகளை பற்றியும் , அவர்களின் வழிமுறையும் வரலாற்றையும் வெளி நாட்டு பத்திரிக்கைகள் தான் வெளியிடுகின்றன . சாதிய அமைப்பில் வளரும் ரிப்போர்ட்டர்கல கண்களுக்கு இவை தெரிவது இல்லை

  2. “அக்கூட்” [தீண்டத்தகாதவர்கள்] – அது “அசூத்” ஆகும்.
    ஜன் ஜக்ராம் சமிதி (மக்கள் விழிப்பு சமூகம்) -அது “ஜன் ஜாக்ரண் சமிதி” ஆகும்.

    சினிமா விரும்பி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க