ன்பார்ந்த வாசகர்களே!

புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக, புதிய ஜனநாயகம் வாசகர்கள் அனைவருக்கும், உழைக்கும் மக்களுக்கும் எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நவம்பர் 7, 1917 – ரசியாவில் பாட்டாளி வர்க்க ஆட்சி மலர்ந்த நாள். பூமிப் பரப்பில் ஐந்தில் ஒரு பங்கில் உழைக்கும் மக்களின் ஆட்சி நிறுவப்பட்ட நாள். ஏகாதிபத்தியம் காகிதப் புலியே என நிரூபித்துக் காட்டி, ஒடுக்கப்பட்ட நாடுகளின் – மக்களின் மனங்களில் புரட்சிக் கனலை மூட்டிய நாள். முதலாளித்துவ சகாப்தம் முடிந்து சோசலிச சகாப்தம் தொடங்கிவிட்டதை உலகறியப் பறைசாற்றிய நாள். ரசியாவில் முதல் சோசலிச அரசு உதித்த அந்த நவம்பர் புரட்சிக்கு இன்று 108-வது ஆண்டு பிறந்த நாள்.

முதல் உலகப் போருக்குப் பிறகு ஏகாதிபத்திய நாடுகளில் கூட வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடியபோது, அவற்றின் வாடைகூட இல்லாமல் சோசலிச ரசியா மண்ணுலக சொர்க்கமாக மலர்ந்தது. கொள்ளைச் சுரண்டலும் கொடூர அடக்குமுறையும் முதலாளித்துவ நாடுகளில் தலைவிரித்தாடியபோது, அச்சுரண்டல் அமைப்பை ஒழித்து, பாட்டாளிகளையே நாட்டின் எஜமானர்களாக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டி வளர்த்தது சோசலிசம். ஏகாதிபத்தியச் சீரழிவுகளுக்கு எதிராக, சமத்துவம், மனிதநேயம், பொதுநலம் என உழைப்பின் உன்னதத்தை, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர கலாச்சாரத்தை சோசலிச ரசியா உலகிற்கு வழங்கியது.

உலகப் புரட்சியின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த சோசலிச ரசியா, தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய முதலாளித்துவப் பாதையாளர்களால் சீரழிக்கப்பட்டு பின்னர் சிதைந்து போனது.

இவற்றைக் காட்டி ‘கம்யூனிசம் தோற்றுவிட்டது’ என்று எக்காளமிட்ட ஏகாதிபத்தியவாதிகள், தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் உலகிற்கு வழங்கியவை என்ன? போர்கள், இனப்படுகொலைகள், பஞ்சம், பட்டினி, வேலையின்மை, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு, வரைமுறையற்ற இயற்கை சுரண்டல், பேரழிவுகள், கொடிய தொற்று நோய்கள், பாலியல் கலாச்சார சீரழிவுகள்… என்று நாம் வாழும் இந்த உலகையே அழியும் நிலைக்குக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர் ஏகாதிபத்தியவாதிகள்.

இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் என்ன?

உலக மக்களின் எதிரியான அமெரிக்க வல்லரசானது, ஒருபக்கம் உக்ரைனை பதிலியாக வைத்துக் கொண்டு ரஷ்யாவுக்கு எதிரானப் போரை நடத்தி வருகிறது. இன்று, இசுரேலுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டு காசா மீது ஒரு பயங்கரவாத – இன அழிப்பு, ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்துள்ளது. இந்தியாவும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளும் இஸ்ரேலின் இந்தப் போரை ஆதரிக்கின்றன. ரசியா, சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் பாலஸ்தீன மக்கள் மீதான இப்போரை எதிர்ப்பதாகத் தெரிவித்தாலும், இசுரேலுக்கு நெருக்கடி கொடுத்து, போர் நிறுத்தத்தைக் கொண்டுவர எவ்வித உருப்படியான நடவடிக்கையிலும் ஈடுபடத் தயாராக இல்லை.

பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் தொடுத்துள்ள இந்தப் போரை இசுலாமிய நாடுகள் மட்டும்தான் எதிர்ப்பதாக, இந்தியா உள்ளிட்டு பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ஜால்ரா ஊடகங்கள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால், உண்மை நிலையோ வேறானது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலேயே பாலஸ்தீன மக்கள் மீதான இசுரேலின் போரை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளை நிரப்புகிறார்கள். பல நாடுகளில் அமெரிக்கா, இசுரேல் தூதரகங்கள் முற்றுகையிடப் பட்டிருக்கின்றன; சில இடங்களில் தாக்குதல்களும் அரங்கேறியுள்ளன.


படிக்க: நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!


நமது நாட்டிலும் பல்வேறு இயக்கங்களும் மக்களும் போர் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவிலான உழைக்கும் மக்களின் காத்திரமான போராட்டங்கள் மட்டுமே பாலஸ்தீன மக்களைக் காப்பாற்றும் ஒரே அரணாக உள்ளது. இவையனைத்தும் ஏகாதிபத்திய வல்லரசுகளையும் அதன் அடிவருடிகளையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது.

அந்தவகையில், இந்த பச்சை இனப்படுகொலையைக் கண்டித்து, தொடர்ந்து பிரச்சாரம் செய்வதும், ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்களில் இறங்குவதும் மோடி அரசு இசுரேலுக்குக் கொடுத்துவரும் ஆதரவைத் தடுத்து நிறுத்துவதும் அவசியமானதாக உள்ளது.

இன்னொருபக்கம், ஏகாதிபத்திய உலகக் கட்டமைவு மென்மேலும் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கித் திணறுகிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றன, உலக ஏகாதிபத்தியங்கள். குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளில் உழைக்கும் மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு நடைபெற்ற “நேட்டோ கூட்டணி”க்கு எதிரான பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள், இப்போது பாலஸ்தீனத்தின் மீதான போர் விசயத்தில் அமெரிக்காவின் போர்வெறியைக் கண்டித்து நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்குப் புதிய தெம்பூட்டும் நிகழ்வுகளாகும்.

மற்றொருபுறம், மோடி-அமித்ஷா தலைமையிலான பாசிசக் கும்பல் தொடர்ந்து அரசியல் ரீதியாக தோல்வி முகத்தில் உள்ளது. குஜராத் படுகொலை தொடர்பான பி.பி.சி. ஆவணப்படம்; அதானியின் பங்குச் சந்தை மோசடியை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை; 7.5 லட்சம் கோடி ஊழலை வெளிக்கொண்டுவந்த சி.ஏ.ஜி. அறிக்கை; அதைத் தொடர்ந்து சி.ஏ.ஜி. அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது; கடந்த ஒன்பதரை ஆண்டு காலத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு 25 இலட்சம் கோடி ரூபாய் அளவில் பிணையில்லா கடன்களை அள்ளிக் கொடுத்து, அதைத் ‘தள்ளுபடி’ செய்துள்ளது; அதிகரித்துவரும் வேலையின்மை, விலையேற்றம், பொருளாதார திவால் நிலைமை – இவை எதனையும் தீர்க்க வக்கற்றுப்போய் போலியான புள்ளி விவரங்களை அள்ளிவிடுவது – போன்ற பல்வேறு நிகழ்வுகளும் அடுத்தடுத்து அம்பலமாகி மோடி கும்பலின் முகத்திரையைக் கிழிக்கின்றன.

“சனாதனத்தை ஒழிப்போம்” என்று உதயநிதி பேசியது, பீகாரில் வெளியிடப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் ஆகியவை பார்ப்பன பாசிசக் கும்பல் போர்த்திக் கொண்டிருந்த ‘இந்து’ப் போர்வையை அம்பலப்படுத்துவதாக அமைந்தன. சந்திரயான்-3 விண்கலம், ஜி-20 மாநாடு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா – என தனது பிம்பத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பாசிசக் கும்பல் பல வகைகளில் முயற்சித்தாலும், அவை அனைத்தும் பிசுபிசுத்துப் போகின்றன. இதனால் வெறிபிடித்துப்போய், எதிர்க்கட்சிகள், புரட்சிகர இயக்கங்கள், பாசிச எதிர்ப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மீது கொடிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவது என்ற உத்தியைக் கையாளுகிறது. “நியூஸ் கிளிக்” செய்தி நிறுவனத்தின் மீதான ரெய்டும் அதன் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மீது ஏவப்பட்ட ஊபா கருப்புச் சட்டமும் இதற்கான சான்றுகளாகும்.

இச்சூழலில், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியோ, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது என்ற வரம்பில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தி.மு.க. அவை முன்னவர் துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசும்போது, ‘பா.ஜ.க.வை வீழ்த்துவதுதான் எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்சத் திட்டம்’ என்று வெளிப்படையாகக் கூறினார். இதுதான் “இந்தியா” கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் கருத்துமாகும். ஆக, இவர்கள் மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தை முன்வைத்துச் செயல்படப் போவதில்லை. நாளை தேர்தல் நேரத்தில், இந்தக் கூட்டணியினர் ஒரு அறிக்கை வெளியிட்டாலும் அது வெற்று வாக்குறுதிகளாகவே இருக்கும். இத்தகைய கேடுகெட்ட சந்தர்ப்பவாத கூட்டணியாக இருப்பதால், தற்போதைய ஐந்து மாநிலத் தேர்தல்களிலேயே இவர்களுக்குள் சீட்டுப் பிரச்சினை முன்னிலைக்கு வந்து முறுகல் நிலை முற்றிவிட்டது. இவ்வாறாக, பா.ஜ.க.வை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்துவதற்கும் முடக்குவதற்கும் கிடைத்த வாய்ப்புகளைக்கூட பயன்படுத்தத் தகுதியற்றவையாகவே எதிர்க்கட்சிகள் உள்ளன.


படிக்க: பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!


மற்றொரு பக்கம், பா.ஜ.க.விற்கு எதிராக, உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அடையாளப் போராட்டங்களை நடத்திவரும் சி.பி.எம்.யை எதிர்க்கட்சி கூட்டணியினர் ஆதரிக்கத் தயாராக இல்லை. அதேவேளையில், கேரளத்தில் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்களை சி.பி.எம். கூட்டணி ஆட்சி ஒடுக்கி வருகிறது.

மக்கள் போராட்டங்களின் மூலமாக பா.ஜ.க.விற்கு நெருக்கடி கொடுத்துவிடக் கூடாது; மக்கள் போராட்டங்கள் எந்த வகையிலும் வளர்ந்துவிடக் கூடாது, ஆனால், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று மிகவும் இழிந்த நிலைக்கு எதிர்க்கட்சிகள் சென்றுவிட்டன.

பா.ஜ.க.வை வீழ்த்துவது இன்று மக்கள் முன் இருக்கும் முதன்மையான கடமையாக இருந்தாலும். எதிர்க்கட்சிகளால் அதனை எந்தவகையிலும் சாதிக்க முடியாது; உழைக்கும் மக்கள், இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தாலும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்குக் கூட இந்தக் கட்சிகள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை நிலைமையாகும்.

இந்த நிலைமையானது, பா.ஜ.க.வை வீழ்த்தும் மொத்தக் கடமை உழைக்கும் மக்களின் தோள்களிலேயே சுமத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, தேர்தலுக்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பலைத் தொடர்ந்து தற்காப்பு நிலைக்குத் தள்ளி, அடுத்தடுத்து பின்னடைவுகளை உருவாக்கி, சிதைத்து சிதறடிக்கும் நிலைக்குத் தள்ள வேண்டுமெனில், பாசிச கும்பலுக்கு எதிரான ஒரு உறுதியான மக்கள் எழுச்சி இன்றைய உடனடியான தேவையாக உள்ளது. அந்த மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதும், அதன் வளர்ச்சிப் போக்கில் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை” அமைப்பதும் நமது கடமையாகும்.

ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கத்திற்கு எதிராக, அமெரிக்காவின் போர்வெறி, ஆக்கிரமிப்புவெறிக்கு எதிராக போராடும் அதேவேளையில், இன்று, பாலஸ்தீனத்தின் மீதான போரைத் தடுத்து நிறுத்தவும், அதன் விடுதலைக்காகப் போராடுவதன் ஊடாகவும்; நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்கப் போராடும் அதேவேளையில், இன்று, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதுடன், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்னிலைக்குக் கொண்டுவருவதன் ஊடாகவும் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்!

உலகில் மீண்டும் நவம்பர்கள் தோன்றும்; ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படும்; செங்கொடி உயர்ந்தோங்க கம்யூனிசமே வெல்லும்!


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க