நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!

பட்டினிக் குறியீட்டில் 111-வது இடத்தில் மோசமான நிலையில் இருக்கும் இந்தியாவில்தான் அதானியும், அம்பானியும் உலகப் பணக்காரர் வரிசையில் இடம்பிடிக்கிறார்கள். 22 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியாவில்தான் பாசிச மோடி அரசு கடந்த ஒன்பதரை ஆண்டுக் காலத்தில் 25 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.

வம்பர் 7, 1917 ரசியாவில் பாட்டாளி வர்க்க ஆட்சி மலர்ந்த நாள். பூமிப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கில் உழைக்கும் மக்கள் ஆட்சி நிறுவப்பட்ட நாள். ஏகாதிபத்தியம் காகிதப் புலியென நிரூபித்துக் காட்டி, ஒடுக்கப்பட்ட நாடுகளின் – மக்களின் மனங்களில் புரட்சிக் கனலை மூட்டிய நாள். முதலாளித்துவ சகாப்தம் முடிந்து, சோசலிச சகாப்தம் தொடங்கி விட்டதை உலகறிய பறைசாற்றிய நாள். ரசியாவில் முதல் சோசலிச அரசு உதித்த அந்த நவம்பர் புரட்சிக்கு தற்போது 107-வது பிறந்தநாள்.

முதல் உலகப்போருக்குப் பிறகு ஏகாதிபத்திய நாடுகளில் கூட வறுமையும், வேலையின்மையும் தலைவிரித்தாடியபோது அவற்றின் வாடை கூட இல்லாமல் சோசலிச ரசியா மண்ணுலக சொர்க்கமாக மலர்ந்தது. கொள்ளைச் சுரண்டலும், கொடூர அடக்குமுறையும் முதலாளித்துவ நாடுகளில் தலைவிரித்தாடிய போது அச்சுரண்டல் அமைப்பை ஒழித்து பாட்டாளிகளையே நாட்டின் எஜமானர்களாக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டி வளர்த்தது சோசலிசம்.

ரசியப் புரட்சியின் சாதனைகள்:

  • உலகில் முதல்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை
  • பெண்களுக்கான உண்மையான சமத்துவம்
  • 8 மணி நேர வேலைக்கு முதன்முறையாக சட்ட அங்கீகாரம்
  • அனைவருக்கும் கல்வி, வேலை, வீடு
  • முதலாளிகளின் சொத்துக்குவிப்புக்கான அடிப்படை ஒழித்துக் கட்டப்பட்டதன் மூலம் உபரி முழுவதும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், முதியோர் நலன், என உழைக்கும் மக்களின் நலன்களுக்கே பயன்படுத்தப்பட்டு, வறுமை ஒழித்துக் கட்டப்பட்டது.
  • சோவியத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் சுயநிர்ணய உரிமை
  • பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தேசிய விடுதலைப்போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு, இதன் மூலம் விடுதலை சாத்தியமானது.
  • ரசியப் புரட்சியைப் பார்த்து அஞ்சி, முதலாளித்துவ நாடுகளே வேறுவழியின்றி மக்களுக்கு சலுகைகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன.
  • சோசலிச அரசு சோவியத் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள், வளர்ச்சிகள் அம்மக்களின் நாட்டுப்பற்றை வளர்த்தெடுத்தது. இதன் உச்சமாக இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர், முசோலினி பாசிசக் கும்பலை ஒழித்துக் கட்டியது செம்படை. 2 கோடி சோவியத் மக்கள் தன்னுயிர் ஈந்து, உலகையே காத்தனர்.

படிக்க: அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்


ரசியப் புரட்சியின் தாக்கம் உலகெங்கும் விடுதலைப் போராட்டங்களில் பிரதிபலித்தது. அது இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கங்கள்

  • 1923 தொழிலாளர் இழப்பீடு சட்டம்
  • 1926 தொழிற்சங்க சட்டம்
  • 1936 கூலி வழங்கல் சட்டம் அறிமுகம்
  • 1947 தொழில் தகராறு சட்டம் அறிமுகம்
  • 1948 குறைந்த பட்ச ஊதிய சட்டம், இ.எஸ்.ஐ சட்டம், தொழிற்சாலைகள் சட்டம்

இப்படி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே ஒரு புரட்சியை தற்காலிகமாக தடுக்க பல்வேறு வழிகளில் சட்டத்திருத்தங்கள், சலுகைகளை வழங்கி மக்கள் நல அரசு என்ற முகமூடியை முதலாளித்துவம் அணிந்து கொண்டது.

ஏகாதிபத்திய சுரண்டல், கொள்ளை, சீரழிவுகளுக்கு எதிராக சமத்துவம், மனிதநேயம், பொதுநலம் என உழைப்பின் உன்னதத்தை, பாட்டாளி வர்க்க புரட்சிகர கலாச்சாரத்தை சோசலிச ரசியா உலகிற்கு வழங்கியது.

ஆனால் ஏகாதிபத்திய முதலாளித்துவம் இத்தனை ஆண்டுகளில் இந்த உலகிற்கு வழங்கியுள்ளது என்ன? போர்கள், இனப்படுகொலைகள், பஞ்சம், பட்டினி, வேலையின்மை, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு, வரைமுறையற்ற இயற்கைச் சுரண்டல், பேரழிவுகள், கொடிய தொற்றுநோய்கள், பாலியல் கலாச்சார சீரழிவுகள் என்று நாம் வாழும் இந்த உலகையே அழிவுநிலைக்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளது ஏகாதிபத்திய முதலாளித்துவம்.

இன்று அமெரிக்க ஏகாதிபத்திய பயங்கரவாதம் தனது லாபவெறி, ஆதிக்கவெறி நோக்கத்திற்காக உலகம் முழுக்க போர்களைத் தூண்டி விடுகிறது. தனது ஏவல்நாய் இஸ்ரேலின் மூலம் பாலஸ்தீனத்தில் நடத்திக் கொண்டிருக்கும் இன அழிப்புப்போர் ஆயிரக்கணக்கில் பாலஸ்தீன மக்களை அன்றாடம் கொலை செய்து கொண்டிருக்கிறது.

ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, உக்ரைன் என அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டி விடப்பட்ட போர்களின் கொலைப்பட்டியல் தொடர்கிறது.

உலக மக்கள் தொகையில் 240 கோடி பேர், அதாவது 29.6 சதவிகிதம் பேருக்கு தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. 78.3 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர். ஐந்து வயதிற்குட்பட்ட 14.8 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏகாதிபத்திய நாடுகளிலேயே பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக ஆயிரக்கணக்கான உணவு வங்கிகள் திறக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. முதலாளித்துவத்தின் சொர்க்கங்களில் ஒன்றாக வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்தில் மட்டுமே 40 லட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். இதுதான் நிரந்தரமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டு திணறும் உலக முதலாளித்துவத்தின் யோக்கியதை.


படிக்க: பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!


இன்னொரு பக்கம் உலகின் பொருளாதாரம் விரல் விட்டு எண்ணக்கூடிய நிதி மூலதனக் ஆதிக்க கும்பலின் கைகளில் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.

தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் மூலம் ஏகாதிபத்திய சுரண்டலின் பிடியில் வலுவாகச் சிக்க வைக்கப்பட்டுள்ள இந்தியாவிலோ ஆர்.எஸ்.எஸ், பிஜேபி – அம்பானி, அதானி பாசிச கும்பல் உழைக்கும் மக்கள் மீது கொடூர சுரண்டலையும், அடக்குமுறைகளையும் ஏவி விட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் மீது கார்ப்பரேட் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கேற்ப சர்வாதிகாரமான முறையில் நூற்றுக்கணக்கான சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக 44 தொழிலாளர் சட்டங்களையும் செல்லாக் காசாக்கி, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது ஒரு போரை ஏவியுள்ளனர்.

ஒரு பக்கம் பட்டினிக் குறியீட்டில் 111-வது இடத்தில் மோசமான நிலையில் இருக்கும் இந்தியாவில்தான் அதானியும், அம்பானியும் உலகப் பணக்காரர் வரிசையில் இடம்பிடிக்கிறார்கள். 22 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியாவில்தான் பாசிச மோடி அரசு கடந்த ஒன்பதரை ஆண்டுக் காலத்தில் 25 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் லாபத்தை மொத்தமாக விழுங்கியிருக்கிறது. இன்னொரு பக்கம் கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லாத் துறைகளையும் தனியார்மயமாக்குவதன் மூலம் தங்குதடையின்றி மக்களை கொள்ளையடிப்பதற்கு ஏற்ப மொத்தக் கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது.

நாட்டின் முதுகெலும்பு என அழைக்கப்படும் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படாமல் விவசாயத்துறையில் அதானியின் சாம்ராஜ்யம் விரிவுபடுத்தப்படுகிறது.

பெட்ரோல் மீது 57 சதவிகித வரி, ஒரு மாதத்திற்கு 1.75 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, மக்கள் நலத்திட்டங்களுக்கு அடியோடு மானிய வெட்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வரிச்சலுகை என இந்திய அரசு கார்ப்பரேட்டுகளின் அரசுதான் என மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.

கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றுகின்றனர். செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர், மக்கள்.

இன்னொரு பக்கம் தலித் மக்கள் மீதான சாதிவெறியாட்டம், தீண்டாமை, சிறுபான்மையினர் மீதான கும்பல் படுகொலைகள், கலவரங்கள் ஆகியன காவி பாசிச கும்பலால் திட்டமிடப்பட்டு தீவிரமாக நடத்தப்படுகின்றன. மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியாவை இந்த காவி பாசிஸ்டுகள் மாற்றிக் கொண்டிருக்கி்ன்றனர்.

கார்ப்பரேட்டுகளின் அடியாட்கள்தான் இவர்கள் என அம்பலப்பட்டு நிற்கும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி – அம்பானி, அதானி பாசிச கும்பலை வீழ்த்துவதற்கான மக்கள் எழுச்சியை நாம் உடனடியாக கட்டியமைக்க வேண்டும். அதன் மூலம் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்க வேண்டும். இதுதான் உண்மையான தீர்வு.


தோழர் பரசுராமன்,
பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 24/KRI,
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்,
97880 11784

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க