அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

பழைய உலகம் அற்பவாதிக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால் நாம் பயந்து பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது.

பழைய உலகம் அற்பவாதிக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால் நாம் பயந்து பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது.

– கார்ல் மார்க்ஸ் (Marx, Engels, Collected Works, Vol. 3, Moscow, 1975, p. 134.)

ம், அற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும் போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமாவது அற்பவாதியின் உலகத்தைக் கண நேரம் பார்ப்பது பயன் தரும். மார்க்சின் மேதாவிலாசம் பூத்துச் செழித்த பின்னணியை அதிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்குக் குறைந்த பட்சமாக அந்த உலகத்தைப் பற்றிய நுண்சித்திரத்தையாகிலும் தருவது பயனுள்ளது.

ஜெர்மன் அற்பவாதம் பிரபலமானது; ஏனென்றால் ஹேய்னெயின் புண்படுத்துகின்ற கிண்டலும் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் தப்ப முடியாத ஏளனமும் அதன் தோலை உரித்துக் காட்டியிருக்கின்றன. சுய திருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில்-தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில்-எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.

ஆனால், அற்பவாதம் எவ்விதத்திலும் ஒரு தேசியக் கண்டுபிடிப்பு அல்ல. அது குட்டிமுதலாளி வர்க்க சுய திருப்தி, போலியான மத ஆசாரம், இதயத்தில் கைக்கூலித்தனத்தை வைத்திருக்கின்ற முன்னாளைய கைக்கூலியின் அடிமைப் புத்தி ஆகியவற்றின் இயற்கையான விளைவு.

“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற “மனிதாபிமான” கோஷத்தை உபயோகித்து மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மக்களைப் பணத்துக்கு அடிமைகளாக்கி விட்டு அதை மனிதகுலத்தின் மாபெரும் “சாதனை’ என்று கூறுகின்ற சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவு.

அற்பவாதம் பல்வேறு நாடுகளில் அவற்றின் வரலாற்று நிலைமைகளுக்கும் தேசிய குணாம்சத்துக்கும் ஏற்றவாறு வளர்ச்சியடைந்தது. ஜெர்மன் அற்பவாதம் அதற்கே உரிய மணத்தைக் கொண்டிருந்தது. அதற்கு விசேஷமான காரணங்கள் இருந்தன.

அக்காலத்தில் படாடோபமாகச் சொல்லப்பட்ட “ஜெர்மன் தேசிய இனத்தின் புனித ரோமானியப் பேரரசு’’ 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில நூறு “தன்னுரிமை” கொண்ட அரசுகளைக் கொண்டிருந்தது. இவற்றில் பெரிய அரசுகள் (பிரஷ்யா மற்றும் ஆஸ்திரியா), மிகச் சிறிய இராஜ்யங்கள், சிற்றரசுகள், எலேக்டரேட்கள், மற்றும் சுதந்திரமான பேரரசு நகரங்கள் இருந்தன. அவை அனைத்தும் கணிசமான அளவுக்கு அரசியல் சுதந்திரத்தைக் கொண்டிருந்தன; சக்கரவர்த்தி மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு மட்டுமே கீழ்ப்படிந்தன; சில சமயங்களில் அந்த அதிகாரம் வெறும் கற்பனையாக மட்டுமே இருந்தது. இதன் விளைவாக எங்கும் உள்நாட்டுச் சண்டைகளும் குழப்பமும் கலவரமும் நிலவின.

படிக்க : மார்க்ஸ்-ன் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும் || தோழர் ஏங்கெல்ஸ்

ஒவ்வொரு குட்டி அரசரும் தன்னுடைய குடிமக்களிடம் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அரசவை அதிகாரம் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் இருந்தது. பிரெடெரிக் எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியதைப் போல அவர்கள் எசமானருடைய கஜானாவை நிரப்ப வேண்டும், அவருடைய ‘அந்தப்புரத்துக்குப்’ போதுமான அழகிகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு முழு நடவடிக்கைச் சுதந்திரமும் எல்லா ஆபத்துக்களிலுமிருந்து முழுக் காப்பும் வழங்கப்பட்டிருந்தது.

பணம் திரட்டுகின்ற அற்பவாதிகள், முதலாளி வர்க்கத்தினர் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது சுலபம் என்ற நம்பிக்கையில் தாங்கள் ஒடுக்கப்பட்டு அவமதிக்கப்படுவதை ஏற்றுக் கொண்டார்கள்; தொடர்ச்சியான சமூகக் குழப்பத்தில் செல்வத்தின் வற்றாத ஊற்றுக்களைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் மக்களோடு ஒன்று சேர்ந்திருந்தால் ஆங்கில முதலாளி வர்க்கம் 1640-1888ம் வருடங்களுக்கு இடையில் ஓரளவுக்குச் செய்ததைப் போல, அந்த சமயத்தில் பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருந்ததைப் போல பழைய ஆட்சியதிகாரத்தைத் தூக்கியெறிந்து பேரரசை மாற்றியமைத்திருக்கக் கூடும்.

ஆனால் ஜெர்மன் முதலாளி வர்க்கத்தினருக்கு அந்தச் சக்தி இல்லை, அதற்குரிய துணிச்சல் இருப்பதாக அவர்கள் ஒருபோதும் பாசாங்கு செய்யவுமில்லை. “விவசாயிகள், கைவினைஞர்கள், சிறு தயாரிப்பாளர்கள் இரத்தத்தை உறிஞ்சுகின்ற அரசாங்கம் மற்றும் மோசமான வர்த்தகத்தின் இரட்டைத் தாக்குதலை உணர்ந்தார்கள். பிரபுக்களும் சிற்றரசர்களும் தங்களுக்குக் கீழே இருப்பவர்களை எவ்வளவு கசக்கிப் பிழிந்தாலும் தங்களுடைய செலவுகள் அதிகரிப்பதற்குத் தகுந்தாற் போல வருமானங்களைப் பெருக்க முடியாது என்பதைக் கண்டார்கள். எல்லாமே மோசமாக இருந்தது.

நாடு முழுவதும் பொதுவான அதிருப்தி நிலவியது. கல்வியறிவு இல்லை, பெருந்திரளான மக்களின் அறிவைத் தூண்டக் கூடிய சாதனங்கள் இல்லை, சுதந்திரமான பத்திரிகைகள் இல்லை, பொது மக்களின் கருத்து இல்லை, மற்ற நாடுகளுடன் விரிவான வர்த்தகம் கூடக் கிடையாது. ஒரு அற்பமான, கோழைத்தனமான, பரிதாபகரமான பெட்டிக்கடை நடத்தும் உணர்ச்சி மக்கள் அனைவரிடமும் நிலவியது.” (மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுதி நூல்கள் -ஆங்கிலத்தில் 6-வது தொகுதி – பக்கம் 17)

கேதே எழுதிய ஃபாவுஸ்டு நாடகத்தில் “நாட்டின் நலிந்த நிலைமையைப்” பற்றி சக்கரவர்த்தியிடம் சான்சலர் தருகின்ற படப் பிடிப்புடன் இது மிகவும் பொருந்துகிறது. எங்கும் வேதனை, துன்பம், ஒரு தீமை மற்றொன்றை உருவாக்குகிறது என்று அவர் புகார் செய்கிறார்:

இந்தச் சிகரத்திலிருந்து நாடு முற்றும் எவர் பார்த்தாலும் அது சிதைந்த கனவே. ஒரு குறை அடுத்ததைப் படைக்கிறது; சட்ட விரோதச் செயல்களைச் சட்டமே தூண்டுகின்ற தவறுகளின் சகாப்தம்!…..

…..நல்ல மனிதர் புகழ்ச்சியாளர்,
லஞ்சம் தருவோரிடம் பணிகின்றனர்;
நீதிபதியோ தண்டிப்பதில்லை,
குற்றவாளியுடன் கூடிக் குலவுகிறார்,

நான் கறுப்புச் சித்திரம் தீட்டினாலும்
அங்கே நடப்பவைக்கு இது மேல். (J. W. Goethe, Faust, Vol 2, the Second Part, Boston. and New York, 1871, pp. 10-11)

திடீரென்று பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது: அழுத்தமான தூக்கத்திலும் தேக்க நிலைமை பின் நச்சாவியிலும் நிறைந்த உலகத்தை வானத்திலிருந்து விழுந்த இடியைப் போலத் தாக்கியது. நிராசையும் நம்பிக்கையற்ற நிலைமையும் மறைந்து எங்கும் உத்வேகம் பீறிட்டது. ஜெர்மனியின் மிதவாத முதலாளி வர்க்கத்தினர் “கட்டுமீறிய கலக’’ நடவடிக்கைகளைச் செய்யவும் துணிந்தார்கள். அவர்கள் மதுபான விருந்துகளில் Marseillaise ஐ (மர்சேல் கீதம்) உணர்ச்சியோடு பாடினர்கள்; பிரெஞ்சு தேசிய சபைக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார்கள். ஜெர்மன் கவிஞர்கள் பிரெஞ்சு மக்களைப் போற்றிப் பாடினார்கள். புரட்சியைக் கோருகின்ற ஜாக்கொபின் ஆதரவாளர்கள் ஜெர்மனியிலும் தோன்றினார்கள்.

படிக்க : ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

ஆனால் மேற்குத் திசையிலிருந்து வந்த இடி முழக்கத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த காதல் மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடித்தது. ஜாக்கொபின்வாதிகளின் பயங்கர நடவடிக்கைகளைக் கண்டு ஜெர்மன் முதலாளி வர்க்கம் பீதியடைந்தது. தனியார் முயற்சிக்குச் சுதந்திரத்தைப் பற்றியும் கோமகன்களுடனும் பிரபுக்களுடனும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பற்றியும் கனவு காணத் தொடங்கிய கெளரவமான அற்பவாதிகள் இப்பொழுது பிரான்சிலிருந்து வந்த செய்திகளைப் பேடித்தனமான நடுக்கத்துடனும் சீற்றத்துடனும் கேட்டனர். சமீப காலம் வரை பிரெஞ்சுப் புரட்சியைத் தீவிரமாக ஆதரித்தவர்கள் அதன் எரிச்சலான, வெறிபிடித்த எதிரிகளானார்கள்.

பின்னால் நெப்போலியன் தன்னுடைய இராணுவத்துடன் ஜெர்மானியப் பிரதேசங்கள் மீது படையெடுத்தார். புறநிலையாகப் பார்க்கும் பொழுது ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் அவர் புரட்சியின் பிரதிநிதி; ஏனென்றால் அவர் அதன் கோட்பாடுகளைப் பரப்பினார், அவர் பழைய நிலப்பிரபுத்துவ மரபுகளை ஒழித்து விட்டுத் தன்னுடைய – சந்தேகத்துக்கிடமில்லாமல் அதிக முற்போக்கான-சட்டங்களை நிறுவினார், உளுத்துப் போன பேரரசை ஒழித்தார், பெரிய அரசுகளை ஏற்படுத்தி சிறிய அரசுகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்.

ஆனால் ஜெர்மானியர்கள் நெப்போலியனிடம் குறிப்பிடத்தக்க முறையில் நன்றி பாராட்டவில்லை. அது புரிந்து கொள்ளப்படக் கூடியதே. இராணுவத் தோல்விகளில் அவர்களுடைய தேசிய கெளரவம் புண்படுத்தப்பட்டிருந்தது. “தகாத வழியில் அதிகாரத்தைப் பெற்ற நபர் நிலப்பிரபுத்துவத்தின் அழுகிப்போன (அற்பவாதியின் இதயத்துக்கு மிகவும் இனிமையான) சேர்ப்புகளை ஒரே காலுதையில் ஒழித்துவிட்டதும் மற்றொரு காரணமாகும். ஜெர்மன் அற்பவாதி தன் எசமானருக்கு விசுவாசம் காட்டுவதை நிறுத்துவதைக் காட்டிலும் மரணத்தையே மேலென்று கருதுவார்.

ஜெர்மனி “கிளர்ச்சியற்ற மந்த நிலைமையிலிருந்து மிகவும் முரட்டுத்தனமான முறையில் விழிக்கும்படி செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் அந்த நிலைமைக்குத் திரும்பக் கூடிய வாய்ப்பை அது நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நெப்போலியன் தோல்வியடைந்த பிறகு அந்த வாய்ப்பு ஏற்பட்டது. எங்குமே பிற்போக்குவாதம் ஆட்சி செலுத்தியது. ஜெர்மன் சிற்றரசர்களில் ஒருவர் பிரெஞ்சுக்காரர்களின் புனிதமற்ற கரங்களால் வெட்டிவிடப்பட்ட இராணுவவீரர்களின் சடைகளை மறுபடியும் ஏற்படுத்துகின்ற அளவுக்குக் கூடச் சென்றார்.

அரசர்கள் மத்தியில் கூட முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்கின்ற சிலர் இருந்தார்கள். வுர்டம்பர்க் அரசர் தன் மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொடுப்பதென்று முடிவு செய்தார். நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவதற்கு அந்தச் சட்டம் வழி வகுத்தது. அந்த நோக்கத்துடன் அவர் சமூகப் பிரிவுகளின் பிரதிநிதிகளை ஒன்றாகக் கூட்டினார், ஆனால் அப்பொழுது நடைபெற்ற சம்பவம் ஜெர்மனியில் மட்டுமே நடைபெற முடியும். சமூகப் பிரிவுகளின் பிரதிநிதிகள் அரசரின் மிதவாத முற்போக்கை நிராகரித்தார்கள், “பழங்காலத்திய நல்ல சட்டங்களை’ மறுபடியும் ஏற்படுத்துமாறு கோரினார்கள்.

ஹேய்னெ எழுதிய சீனச் சக்கரவர்த்தியைப் போல புரட்சியிலிருந்து விடுதலையடைந்த மஞ்சூ பிரபுக்கள் “அரசியல் சட்டம் எமக்கு வேண்டாம், பிரம்படியே எமக்கு வேண்டும்” என்று முழங்கினார்கள்!’’ (The Poems of Heine, London, 1878, p. 175.)

இத்தகைய நிலைமைகளில் சற்றுத் தொலைவான தீவிரவாத அரசியல் இயக்கம் கூட எப்படித் தோன்ற முடியும்? மக்கள் தங்களுடைய நாட்டின் விதியில் தலையிடுவார்கள், தங்களுடைய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவார்கள் என்று எந்த நம்பிக்கையாவது ஏற்பட முடியுமா?

ஜெர்மன் முதலாளி வர்க்கம் பிரஷ்ய முடியாட்சியிடம் தன்னுடைய எல்லா நம்பிக்கைகளையும் ஒப்படைத்திருந்தது. நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் மத்தியப்படுத்தலே ஏற்படுத்தக் கூடிய ஒரே சக்தி அது மட்டுமே என்று கருதியது. அப்பொழுது நிலவிய உள்நாட்டுச் சண்டைகளுக்கும் மோதல்களுக்கும் இடையில் ஒற்றுமையான முதலாளித்துவ அரசு என்ற இலட்சியம் ஜெர்மன் அற்பவாதியின் தேசிய விருப்பார்வங்கள் மற்றும் நம்பிக்கைகளின் தெய்வமாக மாறியது. “அரசின் இந்த நிலைமை அரசாங்க எழுத்தரின் கடமையுணர்ச்சி-அதைப் போல வேறு எங்குமே பார்க்க முடியாது-ஜெர்மனியில் அரசைப் பற்றி நிலவுகின்ற எல்லா பிரமைகள் ஆகிய இரண்டையுமே விளக்குகின்றது.” (Marx, Engels, Collected Works, Vol. 5, Moscow, 1976, p. 195.)

ஜெர்மன் அற்பவாதி ஆட்சியில் இருப்பவர்களிடம் அடிமையாக இருந்ததோடு திருப்தியடையவில்லை; அவர் ‘தன்னுடைய இதயத்தில் வைத்திருந்த” கடவுளுக்கும் அடிமையாக இருந்தார். சமய சீர்திருத்தவாதம் மற்றும் புரோட்டஸ்டென்ட் இயக்கத்தின் பிறப்பிடம் ஜெர்மனி, அங்கே மதபக்தி மிகவும் பலமாக இருந்தது. அது “அறநெறித் தூய்மையையும்’’, கடவுள் பக்தியையும் கோரியது.

படிக்க : என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !

அடிமைத்தனம் (அதன் எல்லா வடிவங்களிலும்) மற்றும் போலி ஆசாரத்தைக் கொண்ட மதத்தின் முறைப்படியான வழித்தோன்றலாகிய அற்பவாதி தன்னுடைய குறுகிய நெற்றியில் இரண்டு பெற்றோர்களின் முத்திரையையும் தாங்கியிருக்கிறார், அவர் பல பாத்திரங்களையும் தாங்கி நிற்பவர்; எசமானராக அல்லது ஊழியனாக, சாதாரணக் கந்தலாடைக்காரனாக அல்லது மலினமான கருத்துக்களை விற்பனை செய்பவனாக அவர் இருக்க முடியும்.

எல்லா உதாரணங்களிலுமே தன்னுடைய மேலதிகாரியிடம் தன்னை வேலைக்கு வைத்திருப்பவர், அரசர் அல்லது கடவுளிடம்- மண்டியிடுவதும் அடிமையாவதும் அவரிடமுள்ள குறிப்பிடத்தக்கப் பண்பாகும். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கெட்டியாகவுள்ள இந்த அடிமைத்தனம் அற்பவாதிக்கு, அவருடைய உளவியலுக்கு, அவருடைய ஆன்மீக உலகத்துக்கு ஒரு உள்ளீடான, உணர்வில்லாத அவசியமாக இருக்கிறது.

அவருடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் வறட்டுக் கோட்பாடுகள் என்ற திரைகள் மறைக்கின்றன; அவர் தன்னுடைய இதயத்திலும் தலையிலும் விலங்குகளைச் சுமந்து செல்கிறார், ஆகவே அவற்றை மதிக்கிறார், சில சூத்திரங்கள் இல்லாமல், மேலே இருந்து வருகின்ற சுற்றறிக்கைகளும் உத்தரவுகளும் இல்லாமல் அவரால் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிக் கற்பனை செய்யக் கூட முடியாது.

சுதந்திரமாகச் செயலாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற பொழுது அவர் சங்கடமடைகிறார். அவருக்குத் தேர்வுச் சுதந்திரம் கொடுத்தால் அவர் சுதந்திரத்தை ஒருபோதும் தேர்ந்தெடுக்கமாட்டார்.

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க