மார்க்ஸ்-ன் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும் || தோழர் ஏங்கெல்ஸ்

அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன். அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும் !

0

லகப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக கம்யூனிச சித்தாந்தத்தை அளித்த பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்ஸ், 1883 மார்ச் 14-ம் தேதியன்று சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

ஏகாதிபத்தியம் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, மீள வழியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மார்க்சியத்தின் தேவை அனைவராலும் உணரப்படுகிறது.

பாட்டாளி வர்க்க ஆசான் கார்ல் மார்க்ஸ்-ஐ நினைவு கூர்வோம்!
வர்க்கப் போராட்டத்தினூடாக மார்க்சியத்தை கற்போம்! நடைமுறைப்படுத்துவோம்!
கம்யூனிச சமுதாயத்தைப் படைப்போம்!

சோசலிசம் நிச்சயம்! கம்யூனிசம் இலட்சியம்!!

– வினவு

0-0-0

தோழர் மார்க்ஸ் மறைவின் போது தோழர் எங்கெல்ஸ் ஆற்றிய உரை

மார்ச் 14-ம் தேதியன்று (1883-ம் ஆண்டு) பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி வந்த பொழுது அவர் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமைதியாக ஆனால் நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மகத்தான மனிதருடைய பிரிவினால் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை நாம் சீக்கிரமாகவே உணருவோம்.

அங்கக இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்; மனிதன் அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும், என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது; ஆகவே உடனடியான பொருளாயத வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருதுகோள்கள், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளர்ச்சியடைகின்றன; ஆகவே அதன் ஒளியில்தான் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

ஆனால் அது மட்டுமல்ல. மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள பூர்ஷ்வா சமூகத்தின் இயக்கத்தின் விசேஷ விதியையும் கண்டுபிடித்தார். அவர் உபரி மதிப்பைக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது; அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளி வர்க்கப் பொருளியலாளர்கள், சோஷலிஸ்டு விமர்சகர்கள் ஆகிய இரு தரப்பினரும் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.

ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்தால் கூட அந்த மனிதர் அதிர்ஷ்ட முடையவரே. ஆனால் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் அவர் பல துறைகளை ஆராய்ந்தார், ஒரு துறையில்கூட மேம்போக்கான ஆராய்ச்சி செய்யவில்லை – கணிதத்தில் கூட சுயேச்சையான கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

அத்தகைய விஞ்ஞான மனிதர் அவர். ஆனால் இது அவருடைய சாதனையில் அரைப் பங்கு கூட அல்ல. மார்க்ஸ் விஞ்ஞானத்தை இயக்காற்றலுடைய, புரட்சிகரமான சக்தியாகக் கண்டார். ஏதாவதொரு தத்துவார்த்த விஞ்ஞானத் துறையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை – அதன் செய்முறைப் பிரயோகம் எப்படியிருக்கும் என்பது இன்னும் முழுமையாகக் கற்பனை செய்ய முடியாத நிலையில் அவர் எத்துணை அதிகமான மகிழ்ச்சியுடன் வரவேற்ற போதிலும், அக்கண்டுபிடிப்பு தொழில்துறையில் மற்றும் பொதுவாக வரலாற்று வளர்ச்சியில் உடனடியான புரட்சிகர மாற்றங்களைத் தூண்டுமானால் முற்றிலும் வேறுவிதமாக மகிழ்ச்சி அடைந்தார். உதாரணமாக, மின்சாரத் துறையில் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை அவர் நுணுக்கமாகக் கவனித்தார். சமீப காலத்தில் மார்செல் டெப்ரேயின் ஆராய்ச்சிகளைப் பற்றியும் அப்படியே செய்தார்.

ஏனென்றால் மார்க்ஸ் முதலில் ஒரு புரட்சிக்காரர். ஏதாவதொரு வழியில் முதலாளித்துவ சமூகத்தை மற்றும் அது உருவாக்கியிருக்கின்ற அரசு நிறுவனங்களை ஒழிப்பதற்கு, நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் – அதன் சொந்த நிலைகளையும் அதன் தேவையையும் உணரும்படி, அதன் விடுதலையின் நிலைமைகளை உணரும்படிச் செய்த முதல் நபர் அவரே – விடுதலைக்குப் பங்களிப்பது அவருடைய மெய்யான வாழ்க்கைப் பணியாகும். போராட்டமே அவருக்கு உயிர். அவரைப் போல உணர்ச்சிகரமாக, உறுதியாக, வெற்றிகரமாகப் போராடுவதற்கு எவராலும் முடியாது. முதல் Rheinische Zeitung (184 2), பாரிஸ் Vorwarts (1844), Deutsche-Brüsseler-Zeitung (1847), Neue Rheinische Zeitung (1848 – 1849), New-York Daily Tribune (1852 – 1861) இதழ்களிலும் போர்க் குணமிக்க பிரசுரங்களிலும், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டன் ஸ்தாபனங்களிலும் அவருடைய பணி; இறுதியாக, எல்லாவற்றுக்கும் சிகரமாக சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அவர் வேறு ஒன்றையும் செய்யாதிருந்தால் கூட இந்தச் சாதனையைப் பற்றி மட்டுமே நிச்சயமாகப் பெருமை அடைய முடியும்.”

ஆகவே மார்க்ஸ் தம் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூறு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். எதேச்சதிகார அரசாங்கங்கள், குடியாட்சி அரசாங்கங்கள் ஆகிய இரண்டுமே அவரைத் தம்முடைய நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர், அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதி தீவிர ஜனநாயகவாதிகளோ – மார்க்ஸ் மீது அவதூறுகளைக் குவிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இவை அனைத்தையும் அவர் ஒட்டடையைப் போல ஒதுக்கித் தள்ளினார். அவற்றைப் புறக்கணித்தார்; இன்றியமையாத அவசியம் நிர்ப்பந்தித்தால் மட்டுமே அவற்றுக்குப் பதிலளித்தார். சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் எல்லாப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான புரட்சிகர சகதொழிலாளர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக அவர் மரணமடைந்த பொழுது அவர்கள் கண்ணீரைச் சொரிந்தார்கள். அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.

அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும் !

– மார்ச் 17, 1883-ல் லண்டன்,
ஹைகேட் இடுகாட்டில் பி. எங்கெல்ஸ் ஆங்கில மொழியில் நிகழ்த்திய உரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க