ருடம்தோறும் மார்க்ஸ் பிறந்தநாள் அன்று அவரின் ஆளுமை பற்றி, அவரது தத்துவ கோட்பாடுகள் பற்றி, பாட்டாளி வர்க்க விடுதலைக்கு அவர் செய்த பங்களிப்பு பற்றி அதிகம் கட்டுரைகள் எழுதப்படும்‌.

இவ்வளவு ஏன் மூலதனம்  நூலில் முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் பகுப்பாய்வு செய்து சொன்னது எங்களுக்கு இன்று முதலாளித்துவ நெருக்கடிகளை புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கிறது என்று முதலாளித்துவவாதிகளே மார்க்ஸ் பற்றி பாராட்டுக் கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி மார்க்ஸ் என்னும் ஆசான், தனிப்பட்ட மனிதன் என்ற அளவில் என் சிந்தனையில், வாழ்க்கை முறையில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்தியுள்ளார் என்பதை நான் பேச விரும்புகிறேன். நான் இங்கே மார்க்ஸ் பற்றியோ அவரது தத்துவம் பற்றியோ பருண்மையான பகுப்பாய்வை செய்யப்போவதில்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்வின் மீது அவர் செலுத்திய தாக்கம் பற்றி பேசுவதால் இதில் என்னுடைய தன்னிலை அனுபவங்களே அதிகம் இருக்கும் என்று முதலிலே சொல்லிக்கொள்கிறேன்.

இப்படி ஒரு தன்னிலை வயப்பட்ட  கட்டுரையை ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயமானதே. தான் வாழும் சமூக சூழல் பற்றிய, வாழ்க்கை பற்றிய எவ்வித அனுபவ அறிவும் இல்லாத, ஊசலாட்டமுடைய ஒரு பதின்பருவ மாணவன் மீது மார்க்ஸ் என்னும் ஆளுமை செலுத்திய ஆக்கப்பூர்வமான தாக்கம் எப்படி பின்னாளில் அவனை புரட்சிகர அரசியலை நோக்கி இழுத்துச் சென்றது என்பதை இந்த கட்டுரை முடிவில் உங்களால் கண்டுகொள்ள முடியும். அதன் முக்கியத்துவம் உணர்ந்தே இந்த முற்றிலும் தன்னிலை வயப்பட்ட கட்டுரையை எழுதுகிறேன்.

படிக்க :

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !

நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்

அப்போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்திருந்தேன். அதன் பிறகு மூன்று மாத கோடை விடுமுறை என்பதால் என்னை எனது மாமா ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் ஒரு தேர்தல் அரசியல் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் என்பதால் வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். அந்த வீட்டில் என்னைத் தவிர எல்லோரும் பெண் பிள்ளைகள் என்பதால் எனக்கு தனிமை உணர்வு அதிகம் ஏற்பட்டது. அதனை போக்கிக்கொள்ளவே ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருப்பேன். எதையும் முழுமையாக படிக்கமாட்டேன். நுனிப்புல் தான் மேய்வேன். அப்படி ஒரு நாள் ஒரு புத்தகத்தின் அறிமுக உரையை படிக்கக் நேர்ந்தது.

அதில் 1999-ம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் (Millenium) அதாவது கடந்த பத்து நூற்றாண்டுகளில் தலை சிறந்த சிந்தனையாளர் யார் என்று நடத்திய கருத்துக்கணிப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை கார்ல் மார்க்ஸ் பிடித்துவிட்டார் என்பதை பற்றி எழுதியிருந்தது. இதைப்படிக்கும் போது எனக்கு வெறும் 17 வயதுதான். மேலும் எனக்கு அறிவியல் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பதால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனக்கு மிகவும் அதர்ச்சமான மனிதர். அவரை விட யாரோ ஒருவர் சிறந்த சிந்தனையாளர் என்று அந்த முன்னுரையில் எழுதப்பட்டிருந்தது எனக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது.

நான் அந்த முன்னுரையை முழுமையாக படிக்காமலே புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். ஆனால் யார் இந்த கார்ல் மார்க்ஸ்? பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிப்படிப்பில் ஒருமுறை கூட இவர் பெயரை கேள்விப்பட்டதில்லை. இவர் தலை சிறந்த சிந்தனையாளரா? என்ற கேள்வி மட்டும் அப்போது என்னுள் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு புத்தகத்தின் முன்னுரையில் கார்ல் மார்க்ஸ் என்னும் பெயரை நான் கண்டெடுத்தது என் வாழ்வின் ஒரு அதிசயமான தருணம் என்று அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. பின்பு அடுத்த மூன்று ஆண்டுகள் அந்த பெயரை நான் மீண்டும் கேட்கவோ வாசிக்கவோ இல்லை.

மூன்று ஆண்டுகள் கழித்து, கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது, வகுப்பறை விவாதத்தில் கார்ல் மார்க்ஸ் பெயர் மீண்டும் அடிபட்டது. அவர் மூலதனம் என்னும் நூலின் ஆசிரியர் என்றும், ஏங்கெல்ஸ் என்பவரின் இணைபிரியா நண்பர் என்றும், உலக வரலாற்றில் அவர்கள் இருவரையும் “இரட்டையர்கள்” (Duo) என்று அழைப்பார்கள் என்றும் நண்பன் ஒருவன் சொல்லக் கேள்விபட்டேன்.

அதன் பிறகு தற்செயலாக என் மாமா வீட்டில் ஏங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோன்றும்” புத்தகம் இருப்பதை பார்த்தேன். அதைப்படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஏனென்றால் எப்போதும் ஒரு கேள்வி என்னை சுற்றிக்கொண்டே இருக்கும். அது என்னவென்றால், “இந்த உலகம் இயற்கையாகவே படைக்கப்பட்டிருந்தாலும் அல்லது கடவுள் நம்பிக்கையாளர்கள் நம்புவது போல் கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும், இன்னாருக்கு இந்த நிலம் இந்த சொத்து சொந்தம் என்று பிரித்து படைக்கப்பட்டிருக்காது என்பது உறுதி. அப்படியானால் இந்த சொத்துப் பிரிவினையின் தோற்றம் என்ன?”. ” குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோன்றும்” என்னும் இந்த புத்தகத்தை படித்தால் இந்த கேள்விக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

அதனால் மூன்றாம் ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் அந்த புத்தகத்தை படித்தேன். அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் என்று சொல்லமுடியவிட்டாலும் சாராம்சமாக புரிந்து கொண்டேன். அந்த புரிதல் இந்த உலக வாழ்க்கை பற்றிய என் சிந்தனைகளையே தலைகீழாக மாற்றிவிட்டது.

இந்த புத்தகம் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் என்னும் “இரட்டையர்கள்” பற்றி தெரிந்து கொள்ள மேலும் உந்துதல் தந்தது. மாமா வீட்டின் புத்தக அலமாரியில் தேடி அருணன் எழுதிய “கார்ல் மார்க்ஸ்; வாழ்வும் சிந்தனையும்” என்ற புத்தகத்தை எடுத்தேன். முழு மூச்சாக மூன்றே நாளில் அந்த புத்தகத்தை படித்துவிட்டேன். நான் அந்த புத்தகத்தை வாசிக்கும் போது பலமுறை என்னையறியாமல் அழுது விட்டேன். அந்த புத்தகத்தை மூடி வைக்கும் போது மார்க்ஸ் என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டார்.

அப்போது எனக்கு வயது இருபது. அப்போதும் எனக்கு மார்க்ஸின் தத்துவம் முழுமையாக புரிந்துவிடவில்லை. ஆனால் மார்க்ஸிய தத்துவம் ஒரு கடல் என்று புரிந்தது. அருணன் எழுதிய “கார்ல் மார்க்ஸ்; வாழ்வும் சிந்தனையும்” புத்தகம் மார்க்ஸின் சிந்தனைகள் பற்றி மிகத்துல்லியமாக இல்லாவிட்டாலும் தெளிவாகவே சொல்லியிருந்தது. மார்க்ஸ் “கம்யூனிஸ்ட் லீக்” என்னும் அமைப்பில் வேலை செய்த போதும், சர்வதேச தொழிலாளர் நிறுவனமான முதல் அகிலத்தில் வேலை செய்த போதும் மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு அதற்கென ஒரு சொந்த நிறுவனம் வேண்டும் என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்றார் என்பது தெளிவாக தெரிகிறது.

மார்க்ஸ் தன்னை ஒருபோதும் “மண்டைவீங்கி சிந்தனையாளராக” கருதிக்கொண்டதில்லை. மனிதகுல வரலாற்றின் மிகச் சிறந்த அந்த சிந்தனையாளர் தான் சார்ந்திருக்கும் அமைப்புக்கு கட்டுப்பட்டுதான் இருந்தார். தன்னை ஒரு நிறுவனத்தின் ஒழுங்கிற்கு உட்படுத்தி அதன்கீழ் தான் தனது தத்துவத்தை வளர்த்தெடுத்தார். “கம்யூனிஸ்ட் லீக்”ல் வரலாற்று சிறப்புமிக்க ஆவணமான “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” சமர்ப்பிக்கும் போதும், முதல் அகிலத்திற்காக கொள்கை வரைவுகளை முன்வைக்கும் போதும் தன்னை ஒரு நிறுவனத்தின் பகுதி என்ற அளவில்தான் அவர் பார்த்தார்.

ஆனால் மார்க்ஸ் காலத்து “அராஜகவதிகள்” முதல் இன்றைய காலத்து “மண்டைவீங்கி சிந்தனையாளர்கள்” வரை தாங்கள் தான் கட்சி என்றும், அவர்கள் இல்லாமல் இந்த உலகத்தின் சிந்தனை இயக்கம் நின்றுவிடும் என்றும் எண்ணும் அளவிற்கு சுயமோகிகளாக (Narcissists), தன்புகழ் பாடும் தாசர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் மார்க்ஸ் ஒரு பன்பட்ட கோட்பாடுகள் உடைய நிறுவனத்திற்கு கட்டுப்பட்டவராக இருந்தார். இதற்கு சிறந்த உதாரணம் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” சமர்ப்பிக்கும் சம்பவத்தை சொல்லலாம். “கம்யூனிஸ்ட் லீக்” அறிவித்திருந்தபடி அடுத்த கூட்டத்தில் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரும் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யை சம்பிக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால் ஏங்கெல்ஸ் முக்கிய வேலையாக பாரிஸ் போய் விட்டதால் மொத்த வேலையும் மார்க்ஸ் மீது விழுந்தது. இதனால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனே “கம்யூனிஸ்ட் லீக்” மார்க்ஸ்க்கு ஒரு எச்சரிக்கை செய்தி அனுப்பியது.

“கடந்த மாநாட்டில் தான் ஒப்புக்கொண்டபடி கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதி பிப்ரவரி 1 செவ்வாய்க்கிழமைக்கு முன்பு லண்டனில் கிடைக்குமாறு பிரஜை மார்க்ஸ் அனுப்பாவிட்டால் அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவருக்கு தெரியப்படுத்துமாறு பிரஸ்ஸெல்ஸ் மாவட்டக் குழுவிற்கு மத்திய குழு உத்திரவிடுகிறது. பிரஜை மார்க்ஸ் அறிக்கையை எழுதாவிட்டால் மாநாட்டின் போது அவரிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களை அவர் உடனடியாக திரும்பியனுப்ப வேண்டும் என்றும் மத்திய குழு கேட்டுக்கொள்கிறது” என்ற செய்தி மார்க்ஸை வந்து சேரும்போது அந்த உலகப்புகழ் மிக்க கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, “கம்யூனிஸ்ட் லீக்”ன் தலைமை இருக்கும் லண்டனிற்கு கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தது.

அதாவது இந்த எச்சரிக்கை செய்தி மார்க்ஸை வந்து சேரும் முன்பே மார்க்ஸ் அறிக்கையை அமைப்புக்கு அனுப்பிவிட்டார். ஆனால் ஒருவேளை அவ்வாறு செய்ய முடியாமல் போயிருந்தால் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரும் அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்பட்டிருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மார்க்ஸின் இப்படிப்பட்ட வாழ்வை தெரிந்துகொண்ட நொடியில் இருந்து நாமும் மார்க்ஸ் போல் சிறந்த கம்யூனிஸ்டாக ஒரு அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் மாமா சார்ந்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியோ ஓட்டுப் பொறுக்கி தேர்தல் கட்சி. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதத்திற்கு பெயர்போன கட்சி அது. அதனால் அதில் சேர விரும்பவில்லை.

அப்போது தான் 2016-ம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடும் போராட்டம் நடைபெற்றது. அதில் எனது உறவினர்கள் இரண்டு பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செய்தி ஊருக்கு தெரியவந்தது. அவர்களை சந்தித்து  மக்கள் அதிகாரம் அமைப்பு எத்தகைய போர்க்குணம் மிக்கது, கொள்கைப்பிடிப்புள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

ஆனால் நான் இருந்தது ஒரு குக்கிராமம் என்பதால் அவர்கள் இருவரை தவிர எனக்கு எந்த தோழர்களையும் தெரியாது. ஆனால் 2017-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்காக நகரத்திற்கு சென்றபோது தோழர்களின் அறிமுகம் கிடைத்து அமைப்பில் இணைந்து பயணிக்க தொடங்கினேன். அமைப்பில் இணைந்த சில நாட்களிலே சித்தாந்தப் பயிற்சி தொடங்கிவிட்டதால் மிக விரைவிலே நான் எப்பேர்ப்பட்ட “கற்றுக்குட்டி” என்பதையும், புத்தகங்கள் படிப்பதுடன் நடைமுறை பணி எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கற்றுக்கொண்டேன்.

இன்றளவும் நான் அமைப்பில் பயணிக்கிறேன். நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அப்போது 17 வயது பையனாக நான் கார்ல் மார்க்ஸ் பெயரை அந்த புத்தகத்தின் முன்னுரையில் படித்த அற்புத தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன். அது நடந்து 10 ஆண்டுகள் கழித்துவிட்டது. ஆனால் இன்றும் மார்க்ஸ் என்னும் மானசீக ஆசானின் வழிகாட்டுதலில் இருந்துதான் சமூக வாழ்க்கை, அமைப்பு வாழ்க்கையில் பயணிக்கிறேன். ஆனால் என் ஆசான் மார்க்ஸ் என்னிடம் கட்டைவிரலை குரு தட்சணையாக கேட்கவில்லை. என்னை புரட்சி செய்யச் சொன்னார்.

மார்க்ஸின் தத்துவம் அதன் இன்றைய காலகட்ட பொருத்தப்பாடு பற்றிய பருண்மையான ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதுவதில் இருந்து நழுவிக்கொண்டு, மார்க்ஸ் என்னும் ஆசான் பற்றிய என்னுடைய இந்த தன்னிலை வயப்பட்ட கட்டுரைக்கு என்ன நியாயம் இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம்.

பதில் மிக எளிமையானது. இன்றைய நவ தாராளவாத உலகில் நுகர்வு வெறிதான் கலாச்சாரமாக இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் மிக ஆரம்ப காலங்களிலே எல்லா வகையான நுகர்வு வெறிக்கும் ஆட்ப்பட்டு அவர்கள் வாழ்வை அதிலே தொலைத்து விடுகிறார்கள். இந்த நுகர்வு வெறி நிறுவனமயப்படுத்தப்பட்ட அளவில் மக்களின் அனைத்து தரப்பினர் மீது திணிக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பித்து சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சிலர் அரசியல் பயில வந்தாலும், அவர்களையும் பின் நவீனத்துவம், அமைப்பியல்வாதம், அடையாள அரசியல் என பல வண்ணக்கோட்பாடுகளை அவர்கள் மீது கொட்டி அவர்கள் அரசியல் உணர்வை காயடிக்கிறார்கள் (Political Castration). அதற்காகவே அரசு சாரா நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து சமூகத்தை வெவ்வேறு கருத்தாக்கங்களின் கீழ் பிரித்து வைத்திருக்கிறது.

மார்க்ஸியத்தையே கூட மேலைநாட்டு மார்க்ஸியம், கிழக்கிந்திய மார்க்ஸியம், ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம், மண்ணுக்கு ஏற்ற மார்க்ஸியம் என்று பலவகைகளில் பிரித்து மார்க்ஸியத்தை திரிபு செய்கின்றனர். பல மார்க்ஸிசய இயக்கங்களும், கட்சிகளும் கூட இந்த அரசு சாரா நிறுவனங்களின் ஏகாதிபத்திய கைக்கூலிதனத்தை கண்டுகொள்ளாமல் அவற்றுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கும் அவலம் நடக்கிறது.

இப்படி மார்க்ஸியத்தை பல வண்ணங்களில் கூறுபோட்டு அரசியல் ஆர்வம் உள்ள இளைஞர்களையும், மார்க்ஸிய இயக்கங்களையும் திசை திருப்பிவிட ஏகாதிபத்திய  நிறுவனங்களிடம் கூலி பெற்றுக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள் கல்விப்புல அறிவுஜீவிகள் மற்றும் கல்விப்புலம் சாராத அறிவுஜீவிகள்.

படிக்க :

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !

போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !

ஆனால் நமது ஆசான் மார்க்ஸ் ஒரு கல்விப்புல அறிவுஜீவி அல்ல. இந்த உலகத்தை சுரண்டலற்றதாக மாற்றும் தத்துவத்தை வளர்த்தெடுத்தவர். அவர் உலகத்தை மாற்றும் நோக்கத்தில் உலகத்தை விவரிக்கும் மொழியைக்கூட மாற்றியமைத்தார். முதலாளிகள் லாபம் என்றதை மார்க்ஸ் சுரண்டல், உபரி மதிப்பு என்றார். அரசு என்பதை ஆளும் வர்க்கத்தின் வன்முறை கருவி என்றார். அதனால்தான் மார்க்ஸை கற்றுக்கொள்ள மார்க்ஸியத்தை எந்தவித திரிபுவாதமும் இன்றி உயர்த்திப் பிடிக்கும் அமைப்பின் நடைமுறை வேலைகளின் மூலமே கற்றுக்கொள்ள முடியும் என்று சொல்கிறேன்.

இன்றைய இந்திய அரசியல் சூழலில் மதவாதம் பாசிசத்தின் வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்திய அரசியல் வானில் சூழ்ந்திருக்கும் பாசிச மேகங்களை அகற்றி ஒளி பாய்ச்சும் சக்தி மார்க்ஸியத்திற்கு மட்டுமே உண்டு. நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் பெயரை ஒரு புத்தகத்தின் முன்னுரையில் கண்டுகொண்டதை போல நீங்களும் இந்த கட்டுரையின் வழி மார்க்ஸிய தத்துவம் பற்றி கண்டுகொண்டு பாசிசத்திற்கு எதிரான அணியில் மார்க்ஸியத்தின் பெயரால் நிற்பீர்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த கட்டுரையை முடிக்க நினைக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த மார்க்ஸின் மேற்கோளுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன். இந்த வரிகள் மார்க்ஸ் வாலிபனாக இருந்தபோது எழுதியது. இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு இந்த வரிகள் பொறுத்தமாக இருக்கும். “மனிதகுலத்தின் பெரும்பான்மைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையை நாம் தீர்மானித்துக் கொண்டால் எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. காரணம், அவையெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது. நமது மகிழ்ச்சி கோடான கோடி மக்களுக்கு சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும், என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். உன்னதமான மனிதர்கள் வடிக்கும் சூடான கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்”.

ராஜன்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க