ந்திய துணைக் கண்டத்தின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறாக மனித நேயத்துக்கு எதிரான சாதியம், சாதி முறையின் தீண்டாமை கொடுங்கோன்மை இன்றும் தொடர்கிறது. சாதி சமூக அமைப்பின் தோற்றம் – சாதியத்தின் இருப்பு – சாதி எதிர்ப்புப் போராட்டக் களங்கள் – சாதி ஒழிப்பு – ஆகியவை குறித்த ஒரு ஆய்வு தேவைப்படுகிறது.
இந்திய சமூக அமைப்பில் வரலாற்றுக் களங்கமாக உள்ள சாதி சமூக அமைப்பை வேரறுத்து, சமத்துவ விடுதலை நோக்கி பயணிப்பதற்கான ஒரு சித்தாந்த உருவாக்கத்திற்கு இத்தகைய ஆய்வு முறைகள் இன்றைய தேவையாக இருக்கிறது.
இந்தியாவின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நீண்ட இன்றும் நம்மை அச்சுறுத்தி வருகின்ற சாதிய ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் தீண்டாமைக் கொடுமையையும் மிகவும் ஆழமாகவும் பொறுமையாகவும், பல்வேறு தரவுகள், சான்றாதாரங்களை முன்வைத்தும் இந்த நூலின் மூலம் ஒரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் சங்கையா.
♠ சாதியத்தின் தோற்றம்
♠ வேத காலமும் அதன் பின்னரும்
♠ சாதியும் மதமும்
♠ தீண்டாமை வன்கொடுமைகள்
♠ ஆலய நுழைவுப் போராட்டங்கள்
♠ சமூக நீதி போராளிகள்
♠ சாதி ஒழிப்பு
பல்வேறு தலைப்புகளில் 34 கட்டுரைகளாக சாதியத்தின் அனைத்து பரிமாணங்களையும், ஏராளமான வரலாற்று விவரங்களுடன், பல்வேறு சான்றாதாரங்கள் எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் தொகுத்து அளித்துள்ளார் தோழர் சங்கையா.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்களை கொண்ட வர்ணாசிரம தர்மத்தில் முதல் மூன்று வருணத்தார் மார்பில் பூணூல் அணியும் உரிமை பெற்றவர்கள், இவர்கள் இரு பிறப்பாளர்கள் என்று கருதப்பட்டனர். சூத்திரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை இல்லை. இந்த வருணாசிரம முறைக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்ணர்கள் – பஞ்சமர்கள் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர். சாதியத்துக்கு உரிய அம்சங்களான பிறவியின் அடிப்படையில் தொழில், திருமண உறவுக் கட்டுப்பாடு, சாதிய படிநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய சனாதான கோட்பாடுதான் பார்ப்பனியத்தின் வெற்றி.
படிக்க :
நூல் அறிமுகம் : 1947 || ச. தமிழ்ச்செல்வன் || சு. கருப்பையா
நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
ஒவ்வொரு சாதியும் சாதிப் படிநிலை அமைப்பில் மேல் நிலைக்குச் செல்ல விரும்புகிறது. அதே நேரத்தில் தன் கீழ்உள்ள சாதிகளுக்கு உரிய நியாயமான விருப்பத்தை கடுமையாக மறுக்கிறது. ஏறி மிதிக்க தனக்கு கீழே ஒருவன் இருக்கிறான் என்பதுதான் சாதி ஆதிக்க உளவியல்.
சாதி அமைப்பு என்பது அடிமை முறையின் இந்திய வடிவமாகும். ரோமாபுரியின் அடிமை முறையை எதிர்த்து எழுந்த மாவீரன் ஸ்பார்ட்டகஸ் போல் இந்தியாவிலும் சூத்திர, பஞ்சம ‘ஸ்பார்ட்டகஸ்கள்’ பலர் இருந்திருக்க வேண்டும். சாதி அடிமை முறைக்கு எதிரான போராட்ட வரலாறுகள் பார்ப்பனியத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன.
இந்து மதம் என்ற பார்ப்பனிய மதம் பல்வேறு எதிரெதிரான கருத்துகளை ஏற்று ஜீரணித்து தன்வயம் ஆக்கிக் கொள்ளும் நெளிவு சுழிவு யுக்தி கொண்டதாக உள்ளது. சமூக ஏற்றத்தாழ்வு பார்ப்பனத் தலைமை ஆகிய அடிப்படைகளை விட்டுத் தராமல் சமத்துவத்தை மறுக்கும் பிராமண ஆளுமை இந்து மதத்தின் அடிப்படையாக உள்ளது. இந்து மதத்தின் ஆன்மா இறைநம்பிக்கை அல்ல, மாறாக சதுர்வர்ணம் சனாதன தர்மம் தான் இந்துமதத்தின் ஆன்மா.
சாதியத்தின் தோற்றம் – வேத காலமும் அதன் பின்னரும் – சாதியும் மதமும் – கிருத்துவத்தை தின்று செரிக்கும் சாதியம் – இஸ்லாமும் சாதியம் என்று மூன்று கட்டுரைகளில் இந்துமத சிறைக் கூடத்தில் இருந்து தப்பியோடி மதம் மாறியதற்கு பிறகும்கூட சாதிய இழிவு தொடர்கதையாக ஒடுக்கப்பட்ட மக்களை துரத்தும் அவலத்தை தோலுரித்துக் காட்டியுள்ளார்.
எளிய நடையில் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து தோழர் சங்கையா இந்நூலில் இதனை நிறுவுகிறார். “இவன் சாதி கிறிஸ்தவன்; இவன் சாதியில்லா கிறிஸ்தவன் இவர்களில்  யாரை ரட்சிக்க இயேசு பிறந்தார்” என கிறிஸ்துவத்தை பார்த்து கேள்விக் கணைகளைத் தொடுத்தார் அயோத்திதாச பண்டிதர். கிறிஸ்துவ மதத்திலும் சாதி சமத்துவத்துக்காக நடைபெற்ற போராட்டக்களங்களை இந்த நூலின் ஆசிரியர் சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளார்.
சாதிப் படிநிலை அமைப்பின் கோர வடிவமான தீண்டாமை வன்கொடுமைகள் பற்றிக் கடந்தகால நிகழ்கால மனிதநேயமற்ற கொடுமைகளை சான்றாதாரங்கள் முன்வைத்து சாதியத்தின் கோரமுகத்தை திரைகிழித்துக் காட்டியுள்ளார்.
கோயில்கள் தான் சாதியத்தின் கலங்கரை விளக்குகளாக திகழ்கின்றன. அதனால்தான் கோவில்களை மீட்போம் என இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். கும்பல் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகக் கூவி வருகின்றன. ஆண்டவனை வழிபட யாருக்கு என்னென்ன தகுதி? யார் யாருக்கு அனுமதி, யார் யாருக்கு அனுமதி இல்லை என சாதி அளவுகோல் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பார்ப்பனியத்தால், சாதி ஆதிக்க வெறியர்களால் மறுக்கப்பட்ட ஆலய வழிபாட்டு உரிமை அதற்கு எதிரான போராட்டக் களங்கள், இந்தக் கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
தில்லைவாழ் அந்தணர்களால் எரித்துக் கொல்லப்பட்ட நந்தன், கழுவேற்றி கொல்லப்பட்ட காத்தவராயன், மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட மதுரை வீரன், முத்துப்பட்டன் என அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் சாதி ஆதிக்க வெறியர்களின் கோரத்தாண்டவம். திருவரங்கம் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் பற்றிய செய்திகளையும் இதில் தொகுத்து இருக்கலாம். கோயிலுக்குள் நுழையும் உரிமையை விட தீண்டத்தகாத மக்களுக்கு விடுதலையை கல்வி பொருளாதார மேம்பாட்டின் மூலமே தீர்மானிக்க முடியும். கல்வி – வேலை – பொருளாதாரம் முதலியவற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் மேன்மை அடையும் பொழுது ஆலயக் கதவுகள் தானாகவே திறக்கும் என்றார் அம்பேத்கர். இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தார் என்ற விவரங்கள் இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மார்க்சிய அறிஞர் லியூஷோஷி, மனிதனின் வர்க்கப் பண்பு (Class Character of man) என்ற நூலை எழுதினார். இதைப் போலவே இந்திய துணை கண்டத்தில் மனிதனின் சாதி பண்புகள் (Caste Character of Man) குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவுடமை சிந்தனையாளர் சிங்காரவேலர் தீண்டாமை ஒழிப்பு, ஆலய பிரவேசம், பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமை போன்றவற்றிற்கு விடுதலைக்குத் தரும் முக்கியத்துவத்தை தர வேண்டும் என்றார். கிராமத்து தீண்டப்படாத விவசாயக் கூலிகளும், நகர்ப்புற ஆலைத் தொழிலாளர்களும் சமத்துவத்துடன் சம நீதி பெற போராட வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவை இந்திய கம்யூனிஸ்டுகளின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்றார்.
சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போராட்ட வரலாற்றில் எண்ணிறந்த பொதுவுடமை புரட்சியாளர்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். தலித் மக்கள் மீதான கந்துவட்டி கொடுமை, நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை, தனித்தனி நீர் குவளை ஒழிப்பு என பொதுவுடமை புரட்சியாளர்கள் நடத்திய போராட்டக்களங்கள் வரலாற்றில் போதுமான அளவில் பதிவு செய்யப்படவில்லை.
இந்திய துணைக் கண்டத்தின் சாதிய வர்க்க சமூகத்தில், சாதிய முரண்பாடுகளும், வர்க்க முரண்பாடுகளும் கலந்து இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், வர்க்கப் போராட்டத்திற்கு இணையாகவும் – துணையாகவும் – சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. சாதிய தளத்திலான ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களை வர்க்க தளத்திலான போராட்டங்களாக விரிவுபடுத்த வேண்டும்.
பார்ப்பனியம் பூனை போன்றது எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் நான்கு கால்களையும் ஊன்றி விழும் அதன் பாதங்களில் திண்டுகள் உள்ளன. சாதி எதிர்ப்பு தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களால் மட்டும் தனித்து நின்று போராடி ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது.
படிக்க :
நூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின் கதை || பன்வர் மெக்வன்ஷி || சு.கருப்பையா
நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா
பிற சாதிகளில் உள்ள ஜனநாயக சக்திகளின் துணையோடு புரட்சிகர சக்தி இல்லாமல், வர்க்கமாக ஒன்று சேராமல் தலித் மக்களுக்கு விடுதலை என்பது இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாக பங்கேற்காமல் இந்திய நாட்டில் எத்தகைய சமூக மாற்றமும்  புரட்சியும் வெற்றி பெற போவதுமில்லை என்ற கருதுகோளை நூலின் ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார்.
இந்தியாவின் வர்க்க உருவாக்கமும் வர்க்க உணர்வின் வளர்ச்சியும் சாதிப் படிநிலை அமைப்பின் கட்டமைப்புக்குள்ளேயே நிகழ்ந்தது. அடித்தளத்தை மாற்ற வேண்டுமெனில் அதன் மேல் கட்டப்பட்டுள்ள, மேல் கட்டுமானத்தை இடித்து வீழ்த்த வேண்டும்; சமத்துவத்தை நோக்கமாகக் கொண்ட அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியில்தான் இது சாத்தியம்.
இந்த நூலின் இறுதி அத்தியாயத்தில் சாதி ஒழிப்பு எங்கிருந்து தொடங்குவது என்ற கட்டுரையின் மூலம் சமூகமாற்றம் நிகழ்வதற்கு முன் இடைக்காலமாக சில சீர்திருத்த நடவடிக்கைகளை கட்டுரையாளர் முன்மொழிந்துள்ளார். இவைகளும் விவாதத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியுள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகளை கூட வென்றெடுப்பதற்கு புரட்சிகர அரசியலை பெருந்திரளான மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் வாயிலாகதான், சமத்துவப் போராட்டத்தின் வழியில்தான் இவற்றை நாம் சாதிக்க முடியும்.
சனாதன சக்திகள் புதிய அவதாரம் எடுத்து கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலின் காவலர்களாக மாறி ஒரு கொடுங்கோல் ஆட்சியை நிறுவ எத்தனிக்கும் இந்த நேரத்தில், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்கொள்ளும் கூர்வாளாக இந்த நூல் வெளிவருகிறது.
தீவிரமான முயற்சி மேற்கொண்டு, கடின உழைப்பை நல்கி சிறப்பானதொரு கருத்து ஆயுதத்தை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருக்கிறார் தோழர் சங்கையா. புதிய முன்மொழிவுகளை துணிச்சலுடன் முன்வைத்துள்ள நூலாசிரியர் தோழர் சங்கையா அவர்கள் பாராட்டுக்குரியவர்.
நூல் அறிமுகம் : எஸ். காமராஜ்
நூல் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள்
நூலாசிரியர் : மு.சங்கையா
பக்கம் : 288
விலை : ரூ 300
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
எண் : 327 /1,
திவான் சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
ராயப்பேட்டை, சென்னை – 14.
தொடர்புக்கு : 94451 23164

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க