ந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கொடுமைகளில் முக்கியமானது “சாதிய பிரிவினை”, அதிலும் மிகக் கொடுமையானது தீண்டாமைக் கொடுமை. அந்த வகையில், சில சாதியைச் சேர்ந்த மக்களை ஒடுக்கி அவர்களது சமூக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்திற்குள் முடக்கி வைக்கிறபோக்கு இன்றளவும் இந்தியாவில் நிலவி வருகிறது.

சாதி ஆதிக்கத்தால் அதிகம் நசுக்கப்படுபவர்கள் பழங்குடி மக்களும், ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுமே ஆவர். இவர்களில் குறிப்பாக சாக்கடைக் குழிகள் மற்றும் மலக் குழுகளோடு காலங்காலமாக, பரம்பரை பரம்பரையாக வாழ நிர்பந்தப்படுத்தப்பட்டு கிடக்கின்ற ஒரு சமூகம் “துப்புரவுத் தொழிலாளர்” பணி செய்கின்ற சமூகத்தினர். இவர்களை பற்றி பேசுகிற நாவலே இந்த “கழிசடை”.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா
♦ நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா

தமிழில் கழிசடை என்றால் “மிகக் கேவலமான” அல்லது “கீழ்த்தரமான” என்று பொருள்படும். அப்படி சமூகத்தால் கீழ்த்தரமாக பார்க்கப்படும், அனுமந்தையா என்ற துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கைதான் இந்த கதை.

அவன் மனைவி கொண்டம்மா, வெட்டியான் சுடலை, முனிசிபல் அலுவலகத்தின் ஒட்டுண்ணிகளான ஆய்வாளர் தியாகராஜன், ராகவலு மற்றும் மொய்தீன் மேஸ்திரிகள், வட்டிக்கடை மாணிக்கம், சாராயக்கடை ஜோசப்பு மற்றும் அனுமந்தையாவின் சக துப்புரவுத் தொழிலாளிகளான இயேசு ரத்தினம், சுப்பையா, நாகையா , அந்தோணி, யாகூப், ஐசக் போன்றவர்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் அறிவழகன்.

நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும், அவனது ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்க வட்டிக்கடை மாணிக்கத்திடம் பணம் வாங்குகிறான் அனுமந்தையா.

வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் போய்விட, மாணிக்கத்தைச் சரிக்கட்ட அனுமந்தையாவின் மனைவி கொண்டம்மா தன்னையே அவனுக்குத் தாரை வார்ப்பது போன்ற கதை ஓட்டம், சமூகத்தில் வட்டிக்கு காசு கொடுத்து பிழைப்பு நடத்தும் கிரிமினல்களின் இழிவாழ்க்கையையும் சுட்டிக் காட்டுகிறது.

தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்ட மனைவி கொண்டம்மா, மாணிக்கத்துடன் உறவு வைத்திருப்பதை பார்த்ததும் வேதனையுடன் குடித்துவிட்டு வந்து அவளை கடுமையாக  அடித்து நொறுக்குகிறான். அடியை வாங்கிக் கொண்ட கொண்டம்மா, ஏனய்யா! “அவன்கிட்ட ஆசைப்பட்டா படுத்தேன்”, அவனுக்கு வட்டிப்பணம் கொடுக்க முடியாததால் அவன் உன்னை கஷடப்படுத்துவதை தடுக்க எனக்கு வேறு வழி இல்லாமல் தானே இப்படி நடக்க வேண்டியிருக்கிறது என்று கூறும்போது, அவளின் பரிசுத்தமான அன்பையும் அரவணைப்பையும் நினைத்துப் அனுமந்தையா புலம்புகிறான்.

தினமும் பசியோடும், நோயோடும் மற்றும் (வேலை போய்விடும் என்ற) பயத்தோடும் வாழும் அனுமந்தையாவின் வாழ்க்கை அவனுக்கு மனப்போராட்டத்தையே கொடுக்கிறது. அவன் மலக்குழியை சுத்தம் செய்துவிட்டு அவ்வழியாக செல்லும் சாக்கடை நீரிலே முகத்தையும் கழுவி விட்டு, பசியைப்போக்க “அம்மா” சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்பது, இன்றும் இந்த நிலைதான் துப்புரவுப் பணியாளர்களின் நிலையாக உள்ளது என்னும் அவலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய மறுக்க முடியாத உண்மை.

கோப்புப் படம்

தனது மகன் சீனய்யாவை தான் செய்யும் வேலைக்கு அனுப்பக்கூடாது வேண்டும் ஆசைப்படும் அனுமந்தையா, மகன் அதே வேலையைச் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது வேதனையால் குமைவதும், மனம் கலங்குவதும் ஒரு நல்ல தந்தைக்குரிய பண்பை அடையாளம் காட்டுகிறது. தன்னைக் குடிக்க வேண்டாம் என்று தடுக்கும் மனைவி கொண்டம்மா, மகன் மலக்குழிக்குள் வேலை செய்கிறான் என்று தெரிந்து கொண்டு, அந்தச் சுழலுக்குப் பழகிக் கொள்ள “சாராயம்” வாங்கி வந்து கொடுக்கும் போது, வேண்டாம் என்று தடுக்க நினைக்கும் அனுமந்தையாவால், அது முடியாமல் போய்விடும்போது பரிதாபமாக இருக்கிறது.

அனுமந்தையாவின் மனைவி கொண்டம்மா, இந்த நாவலின் அற்புதமான பாத்திரப்படைப்பு. வெட்டியான் சுடலையை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டு அனுமந்தையாவை திருமணம் செய்து கொள்வதும், தன் குடும்பத்திற்காக தன்னையே சிதைத்துக் கொள்வதும், தள்ளாத வறுமை நிலையிலும் குப்பைத் தொட்டியில் கிடந்த அனாதைக் குழந்தை லட்சுமியை தனது முத்த மகளாக எடுத்து வளர்ப்பதும், பரிசுத்தமான அன்பு, உழைக்கும் வர்க்கத்திடம் தான் அதிகம் இருக்கிறது என்பதை பறை முழங்குகிறது.

அதேபோல், வெட்டியானாக வரும் சுடலையும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறான். தொழிலின் மீதான அவனது நேர்த்தி, அர்ப்பணிப்பு, பிணம் எரிக்க வருபவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் உதவுவது என மனிதத்துவத்தை அற்புதமாக வெளிக்கொணருகிறான்.

சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலைக்கு கூட பினாமிகள் இருப்பதும், அவர்களுக்கும் சுடலை பங்கு கொடுக்க வேண்டியதிருப்பதும், வெட்டியான் வேலையில் கூட ஊழல் மலிந்திருப்பதை அறிவழகன் மிகவும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்.

கொண்டம்மா தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதால் பைத்தியமாகிப்போன சுடலை, பின்னர் நலமடைந்து தொழிலுக்கு திரும்பி, கிடைத்த வாழ்க்கையை திருப்தியாக வாழ்வதும், அனுமந்தையாவை தன்னை வென்ற ஒரு போட்டியாளனாக கருதாமல் அவனுடன் இயல்பாக பழகும் விதமும் அற்புதமானது. உழைக்கும் மக்களிடம் இருக்கும் வஞ்சனையற்ற மனதை, இக்கதாபாத்திரங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் அறிவழகன்.ஒரு வெட்டியானின் வாழ்க்கையை இதைவிட யாரும் அழகாக கூறவில்லை என்றே கருதுகிறேன்.

அனுமந்தையாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வரும் உயர்அதிகாரி குமாரசாமி, தனது பால்ய நண்பன் ராசப்பன்தான் அனுமந்தையா என்று தெரிந்து கொண்டு, அவன் மீது அதே நட்பை வெளிப்படுத்தி அரவணைக்கிறார் குமரசாமி.

அனுமந்தையா தனது நண்பரிடம் மகன் சீனய்யாவிற்கு தோட்டி வேலை கொடுக்கும் படி கோரிக்கை வைக்கிறான். அவரும் அந்த வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அதுவே சீனய்யாவின் மரணத்திற்கும் காரணமாகி விடுகிறது. ஒரு மலக்குழியையை சுத்தம் செய்யும்போது சீனய்யா விஷவாயுவினால் தீ விபத்து ஏற்பட்டு இறக்கிறான். இறுதியில், அனுமந்தையாவின் வாழ்க்கையில் சோகமே மிஞ்சுகிறது.

அறிவழகன் இந்த நாவலின் மூலம் மிக அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல், அந்தோணி, ஐசக் என்று கிறித்துவனாக மாறினாலும், யாகூப் என்று இஸ்லாமியனாக மதம் மாறினாலும் அவர்களை இந்த சமூகம் தோட்டியாகவே பார்க்கும் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.

அவர் இந்த நூலின் முன்னுரையில், “தங்களைப் பற்றியே உணராமல் இச்சமுதாயத்திற்காக சேவை செய்யும் இவர்களது வாழ்க்கை யாரையும் பிரமிக்க வைப்பது. உடலால் தூய்மையற்றவர்களாகயினும் உள்ளத்தால் கள்ளங் கபடமற்ற தூய்மையானவர்கள். இழி நோக்கம் அறியாதவர்கள். குடும்பத்தினர்களுக்குள்ளேயும் குரோதம் பாராட்டத் தெரியாதவர்கள். இச்சமுதாயத்திற்காக செருப்பினும் இழிவாய் சேவை செய்யக் கடமைப் பட்டவர்கள் எனும் மனோநிலையில் இயல்பாகவே தங்களைத் தியாகித்துக் கொண்டவர்கள். சாதி, சமய, இணைப் பாகுபாடின்றி அனைவருக்காகவும் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களாததால் மற்ற சாதியினரினும் உயர்ந்தவர்கள்” என்று மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.

படிக்க :
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை
கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

நான் இந்த “கழிசடை”யை தமிழில் வெளிவந்த நூறு சிறந்த நாவலுக்குள் ஒன்றாக கருதுகிறேன். ஆனாலும், துப்பரவுத் தொழிலாளிகள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் பற்றித்தான் இந்த நாவல் பேசுகிறதேயொழிய, அடக்குமுறைக்கு எதிரான அவர்களின் எழுச்சியையும், தேவையையும் முன்னிறுத்தவில்லை என்ற குறைபாட்டையும் காண்கிறேன். அந்த குறைபாட்டை தகழியின் “தோட்டியின் மகன்” என்ற மலையாள நாவல் நிறைவு செய்கிறது.

இந்த நாவலை வாசித்து முடிக்கும் வரை அனுமந்தையாவுடன் நானும் வாழ்ந்தேன் என்பதையும், அவன் இறங்கிய மலக்குழிகள் மற்றும் சாக்கடைக்குள் நானும் நுழைந்து வேலை செய்து வெளியேறிய உணர்வும் எனக்கு ஏற்பட்டது என்பதை மறக்காமல் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். “கழிசடை” ஒரு அற்புதமான படைப்பு.

நூல் : கழிசடை
ஆசிரியர்: அறிவழகன்
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள் : 248
விலை : ரூ .160

நூல் அறிமுகம் : சு.கருப்பையா

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க