ஹரப்பா நாகரிகம் என்பதை, சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்றும் குறிப்பிடலாம் என என்.சி.இ.ஆர்.டி.யின் ஆறாம் வகுப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், பாடப் புத்தகங்களை வடிவமைத்து வருகிறது. தற்போது, ஆறாம் வகுப்புக்கான சமூக அறிவியல் புத்தகத்தில் சில மாற்றங்கள் என்ற பெயரில் வரலாற்றை திரித்துள்ளனர்.
ஹரப்பா என்பது நிலப்பரப்பையும், ஹரப்பர்கள் என்பது, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களையும் குறிக்கும் எனக் கூறிவிட்டு அதனால், சிந்து – சரஸ்வதி நாகரிகம் உட்பட இந்தப் பெயர்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம் என சப்பைக் கட்டு கட்டியுள்ளது.
மேலும், சரஸ்வதி நதி தொடர்பாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்பு சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட நதி தற்போது இந்தியாவில் காக்கர் என்று அறியப்படுகிறது; பாகிஸ்தானில் ஹாக்ரா என்று அழைக்கப்படுகிறது என்கிறது.
முன்பு வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு தனித்தனி பாடப்புத்தகங்கள் இருந்தன. இப்போது சமூக அறிவியலுக்கு ஒரே பாடநூல் உள்ளது. சமூக அறிவியல் பல துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாடநூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ‘இந்தியாவும் உலகமும்: நிலமும் மக்களும்,’ ‘கடந்த காலத்தின் துணி,’ ‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்,’ ‘ஆட்சி மற்றும் ஜனநாயகம்,’ மற்றும் ‘நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார வாழ்க்கை.’
பழைய வரலாற்றுப் பாடப்புத்தகத்தில், “சரஸ்வதி நதி ரிக்வேத பகுதியில்” ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடப்புத்தகத்தில், இந்திய நாகரிகத்தின் தோற்றம் தொடர்பான அத்தியாயத்தில் “சரஸ்வதி நதி” பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயம் ஹரப்பா நாகரிகத்திற்குப் பதிலாக ‘சிந்து-சரஸ்வதி நாகரிகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.
பா.ஜ.க அரசாங்கம் கோடிகளைக் கொட்டித் தேடியும், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமே இன்று வரை கிடைக்கவில்லை. சங்கிகளின் ’வாட்ஸ் அப் பல்கலைக்கழக’த்தில் மட்டுமே சரஸ்வதி நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
படிக்க: காவிமயமாகும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள்: தங்களது பெயர்களை நீக்கக்கோரும் தலைமை ஆலோசகர்கள்!
அதேபோல், “கிரீன்விச் மெரிடியன் முதல் பிரைம் மெரிடியன் அல்ல” என்று புத்தகம் விளக்குகிறது. ஐரோப்பாவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்தியா தனது சொந்த பிரதான நிலநடுக் கோட்டைக் கொண்டிருந்தது; இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி வழியாக சென்றது என்று வேடிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தைப் போலவே, புதிய புத்தகத்திலும் பன்முகத்தன்மை பற்றிய அத்தியாயம் உள்ளது. இருப்பினும், அதில் சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை குறிப்பிடப்படவில்லை. புதிய புத்தகத்தில் ஒருமுறைதான் “சாதி” என்ற வார்த்தை வருகிறது. பழைய புத்தகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அவர் நடத்திய பட்டியலின மக்கள் உரிமைகளுக்கான போராட்டம், சாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த அவரது அனுபவங்கள் பற்றிய முழுப்பகுதியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பதாகக் கூறிக்கொண்டு, முகலாயர்கள், இஸ்லாம், சமூக ஏற்றத்தாழ்வு, பரிணாம வளர்ச்சி குறித்த பாடங்களை நீக்கியது பாசிச மோடி அரசு. ஆனால், நீக்கப்பட்ட பாடங்கள் கொரோனா தொற்று முடிந்த பின்னரும் மீண்டும் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படவில்லை. பாடங்களை நீக்குவது ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் அதேவேளையில், புராணப் புரட்டுகளையும் கட்டுக்கதைகளையும் சேர்த்து கல்வியைக் காவிமயமாக்கும் வேலையையும் செய்துவருகிறது பாசிச மோடி அரசு.
கல்வி என்பது மாணவரிடையே அறிவியல் மனோபாவத்தை விதைப்பதாக இருக்க வேண்டும். எனவே, இளம் பருவத்திலேயே இந்துத்துவ நஞ்சை மாணவர் மனங்களில் விதைப்பதற்கான புதிய கல்விக் கொள்கையையும், பாசிச மோடி அரசின் பாடப்புத்தகங்களைத் திருத்தும் இந்நடவடிக்கையையும் முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube