கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி  நீர் கிடைக்காது!

தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை  அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, ஏகாதிபத்திய  கார்ப்பரேட் நலன் சார்ந்த சேவைத்துறைகளுக்கும், நகரமயமாக்கலுக்குமே மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முன்னுரிமை கொடுக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய சுய சார்பு விவசாயமோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில், இந்தாண்டு சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த பயிர்கள் கதிர் விடும் பருவத்தில் இருக்கின்றன. இப்பருவத்தில் நெற்பயிருக்கு அதிக தண்ணீர் தேவை. ஏற்கனவே போதிய நீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இருக்கின்ற பயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது நீர் தேவையாக இருக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த செப்டம்பர் 21 காலை நிலவரப்படி 11.36 டி.எம்.சி நீர் மட்டுமே இருக்கிறது. மேட்டூர் அணைக்கான போதிய நீர்வரத்து இல்லாத நிலையிலும், சாகுபடிக்காக அணையிலிருந்து வினாடிக்கு 6504 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதுவும், அதிகபட்சம் ஒரு வாரத்திற்கு மட்டும்தான் திறந்துவிட முடியும் என்பதே யதார்த்த நிலையாக இருக்கிறது. இந்த சூழலில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீர் கிடைக்காமல் போனால், கதிர் விட்டுள்ள பயிர்கள் பால் பிடிக்காமல் பதராகிவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். இதே நிலை நீடித்தால்  மேட்டூர் அணை வறண்டு, விவசாயத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

தமிழ்நாட்டின் இந்த அவலநிலை குறித்து கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் சிறிதும் கவலைப்படவில்லை. பருவமழைக் காலங்களில், தமிழ்நாட்டை வடிநிலமாகப் பயன்படுத்தும் கர்நாடகம், காவிரியில்  தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை அடவடியாக மறுக்கிறது. போதிய மழையில்லை என்பதை காரணமாக வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய பங்கைத் தராமல் ஏமாற்றி வருகிறது. கடந்த ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 19 ஆம் தேதி வரை வெறும் 8.39 டி.எம்.சி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிறது, இந்த காலகட்டத்தில் 39.97 டி.எம்.சி  நீரைக் கர்நாடகத்திலிருந்து கிடைத்திருக்க வேண்டும். (ஆதாரம்: செப்டம்பர் 22-ஆம் தேதி ஆங்கில இந்து நாளிதழ்)

உண்மையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரின் பங்கோ இதைவிட அதிகம். ஜூன் 9.19, ஜூலை 31.24, ஆகஸ்ட் 45 டி.எம்.சி, செப்டம்பர் 36.76 டி.எம்.சி நீரைக் கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் ஜூன்  முதல் ஆகஸ்ட் 9 வரையிலான காலகட்டத்தில் 51 டி.எம்.சி நீருக்குப் பதிலாக  வெறும் 15 டி.எம்.சி நீரை மட்டுமே திறந்துவிட்டிருக்கிறது. இந்த நீரைப் பெறுவதற்கே, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் மாறி மாறி தமிழ்நாடு அரசு கெஞ்சவேண்டியிருந்தது.

தற்போதுகூட உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தமிழ்நாட்டிற்கு  உரிய பங்கிலிருந்து  24000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் புறந்தள்ளியிருக்கிறது. அதுமட்டுமின்றி, கர்நாடகத்தின் குடிநீர் மற்றும் விவசாயத்தேவைக்காக  54 டி.எம்.சி நீர் மட்டுமே இருக்கிறது என்ற கர்நாடகத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்டு, 15 நாட்களுக்கு 5000 கன அடி நீரைத் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட  வேண்டுமென்று அநீதியாக உத்தரவிட்டிருக்கிறது. இதுவரை காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய நீரைக் கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக எந்த  கண்டனத்தையோ, நடவடிக்கையையோ உச்சநீதிமன்றம் மேற்கொண்டதில்லை. கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி நீர் பங்கீட்டு இறுதித் தீர்ப்பிலும்,  உச்சநீதிமன்றமானது பெங்களூரின் சர்வதேச முக்கியத்துவத்தைக் காரணமாகக் காட்டி தமிழ்நாட்டிற்குரிய நீரில் 4.75 டி.எம்.சி நீரை கர்நாடகத்திற்கு பிடுங்கிக் கொடுத்து அநீதி இழைத்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு எதிராக காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


படிக்க: காவிரி நீர் விவகாரம்: இந்த அநீதிக்கு விடிவு எப்போது?


உச்சநீதிமன்றமானாலும், காங்கிரசு, பா.ஜ.க எந்தக் கட்சியாக இருந்தாலும் கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக தமிழ்நாட்டின் உரிமையைப் பறிப்பதில் ஒன்று சேர்ந்துகொள்கின்றன என்பதே வரலாறு. தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதற்கான கூடுதல் நிரூபணம். தற்போதைய உச்ச நீதிமன்றத்தைத் தீர்ப்பையும் கர்நாடகம் நடைமுறைப்படுத்தாமல் போனாலும் உச்ச நீதிமன்றமோ, காவிரி மேலாண்மை வாரியமோ, ஒன்றிய அரசோ கர்நாடக அரசை நிர்ப்பந்திப்பதோ அல்லது நடவடிக்கை எடுப்பதோ எதுவும் செய்யப் போவதில்லை. ஏனெனில் இதுவரை கர்நாடகாவுக்கு எதிராக எந்தத் துரும்பையும் எடுத்துப் போட்டதில்லை என்பதே வரலாறு.

கர்நாடகாவில், காங்கிரசும், பா.ஜ.க-வும், கன்னட இனவெறியைத் தக்க வைத்துக் கொண்டு, ஓட்டு அறுவடைக்காகவே காவிரி விவகாரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. மற்றபடி, மாநில உரிமை, சர்வதேச நீர்ப் பங்கீட்டு விதி என எதையும் மயிராய்க்கூட மதிப்பதில்லை. கார்ப்பரேட் நலனுக்கு முன்னால் இவையெல்லாம் கழிப்பறைக் காகிதம்கூட கிடையாது.

தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசு, பா.ஜ.கவோ இதுகுறித்து வாய்திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கின்றன. தமிழ்நாடு  தனக்குரிய பங்கைத் தான் கேட்கிறது என்றும்,  காவிரி நீர் குறித்து ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு முறையிட்டால், தமிழ்நாடு  பா.ஜ.க துணை நிற்கும் என்றும், மேகதாது அணை கூடாது என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது என்றும் பல்வேறு சமயங்களில் கூறும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, காவிரி நீர் தரக்கூடாது என கர்நாடகத்தில் போராடும் தனது சொந்தக் கட்சியினரைக் கண்டிக்கவில்லை. கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் போது, மேக தாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதியளித்ததற்காக தனது கட்சித் தலைமைக்கு எதிராகவும், ஒன்றிய அரசுக்கு எதிராகச் சிறு முணுமுணுப்பைக்கூட அண்ணாமலை செய்யவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்டவர் போல வெற்றுச் சவடால்களையும், பொய்களையும் புளுகி வருகிறார்.

காங்கிரசு கட்சியின் யோக்கியதையோ பா.ஜ.கவிற்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்குவதற்காக தமிழ்நாட்டின் உரிமையை ஆதரிக்கிறது, அதே சமயம் கர்நாடகத்தில் ஓட்டு வாங்குவதற்காக காவிரி நீர் தரக்கூடாது என்பதையும் ஆதரிக்கிறது, காங்கிரசு தலைமையோ இது இரு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினையாக சுருக்கிப்பார்க்கிறது.

தமிழ்நாட்டின் உரிமையை ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் அடிமை அ.தி.மு.க.விற்கு, பா.ஜ.கவுடன் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்வதிலும், சொந்தக் கட்சியினரை பா.ஜ.க-வுக்கு எதிராக பேசாமல் பார்த்துக் கொள்வதுமே போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதில் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பற்றியெல்லாம் சிந்திக்க முடியாது, அது அவர்களுக்கு அநாவசியமானது கூட.


படிக்க: பாலைவனமாக மாற காத்திருக்கும் தமிழக காவிரி!


தி.மு.க அரசோ,  மேல்முறையீட்டுக்கு மேல் மேல்முறையீடு, காவிரி ஒழுங்காற்றுக்குழு, காவிரி மேலாண்மை வாரியம்,  உச்ச நீதிமன்றம் என ஒவ்வொரு படிப்படியாய் ஏறி கெஞ்சிக் கொண்டு சட்டப் போராட்டத்தில் மூழ்கிக் கிடக்கிறது. தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் போல, தனது சொந்தக் கட்சியினரைக் கொண்டு கர்நாடக அரசுக்கு எதிராகவோ அல்லது ஒன்றிய அரசுக்கு எதிராகவோ போராட்டம் நடத்தலாம், ஆனால் அத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கெல்லாம் திமுக தயாராக இல்லை.  நீட்டுக்கு எதிரான தி.மு.க  இளைஞரணியின் போராட்டம்கூட பெயரளவிற்கானதாகத்தான் இருக்கிறது. தனது சொந்தக் கட்சியினர் மட்டுமல்ல, பிற மக்களும், விவசாயிகளும் தங்களது உரிமைக்கான போராட்டம் நடத்தக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறது தி.மு.க. தி.மு.க ஆதரவு அறிவுஜீவிகளும், ஜனநாயக சக்திகளும்கூட தமிழ்நாட்டின் உரிமைப் போராட்டத்தை தி.மு.க.விடம் ஒப்படைத்துவிட்டு  தி.மு.கவிற்கு உறுதுணையாக இருப்போம் என்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.

அதுமட்டுமின்றி, 1990-களிலிருந்து தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைதான் இந்திய அரசின் கொள்கையாக இருக்கிறது. ஒட்டுமொத்த ஓட்டுக் கட்சிகளும் இந்தக் கொள்கையைத்தான் தாங்கள் ஆட்சியில் இருக்கும்போது நிறைவேற்றுகின்றன. இக்கொள்கைகளை  அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, ஏகாதிபத்திய  கார்ப்பரேட் நலன் சார்ந்த சேவைத்துறைகளுக்கும், நகரமயமாக்கலுக்குமே மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முன்னுரிமை கொடுக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய சுய சார்பு விவசாயமோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில், நகரமயமாக்கமும், சேவைத்துறையும் அசுர வேகத்தில் வளர்ச்சிக் கண்டிருக்கின்றன. இந்திய விவசாயமோ குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறது. ஒருபுறம், நகரமயமாக்கத்தால், ரியல் எஸ்டேட் தொழில்  பெருமளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியிருக்கின்றன. தற்போது தீவிரப்படுத்தப்படும் மறுகாலனியாக்கக் கொள்கையால் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகளும், விவசாய நிலங்களும், நீர்நிலைகளும்தான் குறி வைக்கப்படுகின்றன.

மற்றொருபுறம், நகரமயமாக்கலால், இயற்கை வளங்களான மணல், குன்றுகள், மலைகள் ஆகியவை கட்டுமான தேவைகளுக்காகத் தொடர்ச்சியாக சூறையாடப்படுகின்றன. இந்த ரியல் எஸ்டேட் தொழிலும், மணல் குவாரி, கல் குவாரி அமைப்பதிலும் தி.மு.க, அ.தி.மு.க என கட்சியினரே கொடிகட்டி பறக்கின்றனர். ஆளுங்கட்சி எந்தக் கட்சியோ, அந்த காலங்களில் இத்தொழிலில் அவர்களது ராஜ்ஜியம்தான் என்பதே யதார்த்தமாக  இருக்கிறது. தற்போது தி.மு.க ஆட்சி என்பதால், இந்த பொருளாதாரச் சார்பும் காவிரி விவகாரத்தில் குறிப்பிட்ட அளவு வினையாற்றவே செய்கிறது. இதனால்தான், மழை வந்தால் காவிரிப் பிரச்சினையைக் கிடப்பில் போடுவதும், மழையில்லாவிட்டால், பெயரளவுக்கு காவிரி பிரச்சினையைக் கையிலெடுப்பதுமாக இருக்கிறது, தி.முக. அதுவும் கூட, காவிரிப் படுகையின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமாக இருப்பதாலும், தமிழ்நாடு  மக்களின் அழுத்தத்தாலும் இந்த சடங்குத்தனமான சட்டப் போராட்டமும் நடக்கிறது.

எனவே தமிழ்நாடு  மக்களும், விவசாயிகளும் தி.மு.க வை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட முடியாது என்பதை  நீட் போராட்டம் ஏற்கனவே நமக்கு உணர்த்திவிட்டது. காவிரி நீருக்குத் தடையாக இருக்கின்ற கார்ப்பரேட் திட்டங்களையும், அதற்கு ஆதாரமான மறுகாலனியாக்கக் கொள்கையையும் எதிர்த்து தமிழ்நாடு  மக்கள் தங்களது சொந்த பலத்தில் மீண்டும் ஒரு மெரினா (ஜல்லிக்கட்டு)  போராட்டம் நடத்தாமல் காவிரி நீர் தமிழ்நாட்டிற்குக் கிடைக்காது. எனவே, தொடங்குவோம் மீண்டுமொரு டெல்லிக்கட்டு. வேண்டாம் பி.ஜே.பி!  வேண்டும் ஜனநாயகம்! வேண்டும் காவிரி நீர் என்று முழங்குவோம்.


வாகைசூடி



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க