31.08.2023

காவிரி நீர் விவகாரம்:
இந்த அநீதிக்கு விடிவு எப்போது?

பத்திரிகை செய்தி

வ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெறுவது என்பதே மிகப்பெரிய துயரமான நிகழ்வாக உள்ளது. ஒரு நதியின் கடைமடை பகுதிக்கு அந்நதியின் மீதான முற்றுரிமை உள்ளது என்பது உலக நியதி. இந்த நியதியை கர்நாடக அரசும் ஒன்றிய அரசும் எப்போதும் ஏற்பதில்லை. மாறாக கடைமடை பகுதியான தமிழ்நாட்டை வடிகாலாக மட்டுமே பயன்படுத்தி, வெள்ள நீரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி தமிழ்நாட்டில் சேதமுறச் செய்வதிலேயே குறியாக உள்ளன.

2018-இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழ்நாடே ஒருமுகமாய் போர்க் குணத்தோடு போராடியது. அப்படி போராடி பெற்ற மேலாண்மை வாரியமோ தமிழ்நாட்டுக்கு துரோகம் விளைவிக்கிறது. 25 ஆயிரம் கன அடி நீர் இல்லாமல் தமிழ்நாட்டின் நெற்பயிர்களை காப்பாற்ற முடியாது என்ற தமிழ்நாட்டின் வாதம் நிராகரிக்கப்பட்டு, காவிரியில் நான்கு அணைகள் கட்டியுள்ள கர்நாடகத்தின் வாதம் ஏற்கப்பட்டு , தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி  நீர் திறந்து விட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அந்த 5,000 கன அடி தண்ணீரையும் திறந்து விடக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த   இனவெறியர்கள் மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் சென்று இன வெறியைத்தூண்டி போராடி வருகின்றனர்.

ஒரு மாநிலத்துக்கு கொடுக்க வேண்டிய நீரை முறையாக கொடுக்க வேண்டும். நீர் குறைவாக உள்ள போது முறையாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டிய ஒன்றிய அரசு அப்பட்டமாக கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது.


படிக்க: மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்கப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!


காவிரி நீர் பிரச்சனையில் இன வெறியோடு செயல்படும் பாஜகவை கண்டிக்கத் துப்பில்லாத எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸையும் திமுகவையும் கண்டிக்கிறார். கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சி செய்யக்கூடிய தவறைப் பற்றி காங்கிரசின் தலைமை எதுவும் கேள்வி கேட்காது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா  உள்ளிட்ட தேசிய கட்சிகள் அனைத்தும் கர்நாடகத்தில் உள்ள தங்கள் கட்சியின் இனவெறி நிலைப்பாட்டை பற்றி கொஞ்சமும் பேசுவதில்லை. எந்த ஒரு தேசிய கட்சியும் கர்நாடகத்தில் அங்கே உள்ள மக்களிடம் சென்று தமிழ்நாடு தான் காவிரியின் கடைமடை பகுதி, தமிழ்நாட்டுக்கு தான் காவிரி மீதான முழு உரிமையும் உள்ளது என்று கூறுவதில்லை.

இந்த அரசு கட்டமைப்பிற்குள் ஒரு மாநிலத்தின் நீர் உரிமையை ஒருபோதும் பெற முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றங்களுக்கு பல வழக்குகளை போன்று இதுவும் ஒரு வழக்கு மட்டுமே. ஆனால் அது தமிழ்நாட்டுக்கு உயிர் நாடியான ஒரு பிரச்சனை.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என அனைத்து விவகாரங்களிலும் ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருகின்றன  தமிழ்நாட்டின் உரிமைகள். நம்முடைய தமிழ்நாட்டின் உரிமைகளை மறந்து துறந்து விட்டு தான் ஒன்றிய அரசின் பெருமைகளை தலையில் தூக்கி சுமக்க வேண்டுமா?

தமிழ்நாட்டின் உரிமைகளை ஏற்காத அங்கீகரிக்காத ஒரு ஒன்றிய அரசுடன் இணக்கமாக தமிழ்நாடு ஏன் இனியும் வாழ வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழாமலா இருக்கிறது?


படிக்க: மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!


உன்னுடன் நான் வாழ வேண்டுமென்றால் நீ என்னுடைய ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்பது மிகச் சாதாரணமான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை கூட அங்கீகரிக்காத இந்த மோடி அரசின்,  கர்நாடக அரசின் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு போராட வேண்டும் என்பதைத் தாண்டி வேறு எந்த விடிவும் நமக்கு இப்போது கண் முன்னே கிடையாது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வராத வரை தமிழ்நாட்டில் இருந்து எவ்விதமான வரியும் எவ்விதமான பொருளும் ஒன்றிய அரசுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் கொடுக்க முடியாது என்ற நிலையை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் எடுக்க வேண்டும்.

இதுபோன்ற தமிழ்நாட்டின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களே காவிரி நீரைப் பெற்றுத் தரும்; சடங்குத்தனமான போராட்டங்கள் அல்ல என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க