பாலைவனமாக மாற காத்திருக்கும் தமிழக காவிரி!

கர்நாடகாவின் இருந்து காவிரி நீர் வரவில்லையென்றால், தமிழகத்தில் ஓடும் காவிரி ஆறு வற்றிப்போய்விடும். இதனால், காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் தஞ்சை உட்பட பல மாவட்டங்கள் பாலைவனமாக மாற்றமடையும்

0

மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அணையின் தற்போதைய தண்ணீர் திறப்பு விகிதத்தின் படி, வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி வரைக்கும்தான் தண்ணீர் இருப்பு இருக்கிறது என்று ஆங்கில இந்துநாளிதழ் ஜூலை 19 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, ஜூலை 18, காலை நிலவரப்படி தண்ணீர் இருப்பு 36.145 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும் (டி.எம்.சி) அணையின் தண்ணீர் மட்டம் 73.9 அடியாகவும் இருந்தது.

குறைந்தபட்ச இருப்பு (dead storage) மற்றும் குடிநீர் தேவைக்காக தலா 5 டிஎம்சி வீதம் ஒதுக்கினால், பாசனத்திற்கு கிடைக்கும் நீரின் அளவு சுமார் 25 டிஎம்சி அடி குறையும். தற்போது ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி அடிக்கும் சற்று குறைவாகவே வெளியேற்றப்படுகிறது. ஜூலை 18 அன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 142 கன அடியாக இருந்தது.

படிக்க : மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!

பிலிகுண்டுலுவில் பதிவு செய்யும் மத்திய நீர் ஆணையத்திடம் உள்ள தரவுகளின்படி, ஜூன் 1 முதல் ஜூலை 16 வரை காவிரியில் சுமார் 3.6 டிஎம்சி அடி நீர் எடுக்கப்பட்டது. இது கடந்த காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 25.3 டிஎம்சி யுடன் ஒப்பிடும் போது 21.7 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.

குறிப்பிட்ட அளவு பற்றாக்குறையை பூர்த்திசெய்தால் மட்டுமே ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதியில் பாசனத்துக்கான நீர் திறப்பை தமிழகம் தொடர முடியும் என்பது தெளிவாக தெரிகிறது.

கடந்த ஜூலை 14 அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (Cauvery Water Regulation Committee (CWRC) கூட்டத்தில் இந்த பிரச்சினை முன்வைக்கப்பட்டது. ஆனால், தென்மேற்கு பருவமழை குறைவாக உள்ளதால், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நதிநீர்ப் பிரச்சினை தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளின்படி, அதன் நீர்த்தேக்கங்களில் போதுமான அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை என்று கர்நாடகா காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவில் தெரிவித்தது.

கர்நாடகாவின் பிரதிநிதி, எங்கள் மாநிலத்தில் வெளியேற்றப்படும் அனைத்து தண்ணீரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே என்று கூறினார். இந்த நிலைமையை மறுஆய்வு செய்ய மீண்டும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஜூலை 31 அன்று கூடவிருக்கிறது.

காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்கக் கூடாது என்பதில் கர்நாடகவின் அனைத்து கட்சிகளும் ஒரே நிலைபாட்டில் இருக்கின்றன. தமிழகத்தில், காவிரி உரிமைக்காக போராடுவதை போல் நாடகமாடுகிறது பிஜேபி. காவிரி உரிமையைப் பற்றி பேச பிஜேபி-க்கு எவ்வித அருகதையும் கிடையாது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக்கட்டினால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று தமிழ்நாட்டு விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள். ஆனால் மேகேதாட்டு அணை கட்ட அடிக்கல்நாட்டப்பட்டுவிட்டது. விரையில் அணைக்காட்டப்படும். இதையே கார்ப்பரேட் முதலாளிகள் விரும்புகிறார்கள்.

படிக்க : மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!

கர்நாடகாவின் இருந்து காவிரி நீர் வரவில்லையென்றால், தமிழகத்தில் ஓடும் காவிரி ஆறு வற்றிப்போய்விடும். இதனால், காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் தஞ்சை உட்பட பல மாவட்டங்கள் பாலைவனமாக மாற்றமடையும். அதன் பிறகு காவிரி படுகைகைக்கு அடியில் இருக்கும் மீதேன், ஹைட்டோ கார்ப்பன், நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு கனிமங்களை தோண்டி எடுத்து இலாபம் இட்டுவதுதான் கார்ப்பரேட்டுகளின் திட்டம். காவிரி டெல்டாவில் ஏற்கனவே இத்திட்டங்கள் பகுதியளவில் அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஓடம்போன காவிரியில் ஒட்டகம்போகுமோ என்று குமுறும் தமிழக விவசாயிகள், காவிரி உரிமைக்காக போராட்டத்தை மீண்டும் கட்டியமைக்க வேண்டியதன் அவசியத்தையே மேட்டூர் அணையின் தண்ணீர் தட்டுப்பாடு நமக்கு உணர்த்துகிறது.

கல்பனா
செய்தி ஆதாரம்: ஆங்கில இந்து நாளிதழ் (19.07.2023)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க