கடந்த சில பத்தாண்டுகளாக இல்லாத வகையில் காவிரியின் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெறும் 35 அடிக்கும் கீழே இறங்கியது. தமிழ்நாட்டுக்கு முறையாகத் தரவேண்டிய நீரையும் திறந்து விடாமல் கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்து வந்தது. அணைகளில் போதிய நீர் இல்லை என்று பொய்யான விளக்கமளித்துக் காவிரி நீர் வாரியத்துக்கு மறுப்பு கடிதம் எழுதிக் கொண்டு இருந்தது. எதிர்பாராத விதமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த திடீர் கன மழையினால் அணைகள் நிரம்பி வழிய, உபரி நீரை திடீரென திறந்து விட்டு காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்தது கர்நாடக அரசு.
கர்நாடகத்தின் நிலைமை இதுவெனில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணையில் 35 அடியாகக் குறைந்து போயிருந்த நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நான்கைந்து நாட்களிலேயே முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பிறகும் தொடர்ந்து 2 இலட்சம் கன அடிக்கும் மேற்பட்ட நீர் வந்து கொண்டிருந்தது. உபரியாக வந்த நீரை தேக்க முடியாத நிலையில் மேட்டூர் அணையிலிருந்து அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது.
திருச்சி முக்கொம்புக்கு வந்து சேர்ந்த இரண்டு லட்சம் கன அடிக்கும் கூடுதலான நீரில் 1.5 லட்சம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதுவரை வறண்டு கிடந்த கொள்ளிடம் ஆற்றின் வழியாக அணைக்கரை தாண்டி பூம்புகார் சென்று வங்கக்கடலில் கலந்து வீணானது.
திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் வந்த பெருவெள்ளத்தில் ஆற்றின் குறுக்கே செயல்பாட்டில் இருந்த பழைய பாலம் அடித்துச் செல்லப்பட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க முடியாது. இந்த வெள்ளத்திலும் உயர் அழுத்த மின்சார கோபுரம் (tower) ஒன்று மெல்ல மெல்ல அடித்துச் செல்லப்படுவதைத் தொலைக்காட்சிகளில் நேரலையில் காண வேண்டிய அவல நிலைக்கு மக்கள் ஆளாகினர்.
வினாடிக்கு 1.5 லட்சம் கன அடி வீதம் ஒரு நாளைக்கு வெளியேறிய தண்ணீரின் அளவு ஏறக்குறைய 13 டி.எம்.சி (TMC – Thousand million cubic foot) ஆகும். அவ்வாறெனில், ஐந்து நாட்களில் மட்டும் கடலில் கலந்து வீணான தண்ணீரின் அளவு 65 டிஎம்சி ஆகும். இந்த நீரின் அளவை, மேட்டூர் அணையில் தேக்கக்கூடிய அதிகபட்ச நீரின் அளவு 93 டிஎம்சி மட்டுமே என்பதுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு காவிரி நீர் கடலில் கலந்து வீணாவது, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போதைய ஆளும் திமுக அரசு காவிரி நீருக்காக ஒரு பக்கம் கர்நாடக அரசுடன் காகிதச் சண்டை போட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் இவ்வளவு நீர் கடலில் கலந்து வீணாவது பற்றி எந்த அக்கறையும் செலுத்தாமல் இருந்து வருவது அதிர்ச்சியையும் கோபத்தையும் தூண்டக்கூடிய உண்மையாகும்.
படிக்க: காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்? | தோழர் மருது
கொள்ளிடம் ஆற்றின் நெடுகிலும், கடைமடைப் பகுதியான சீர்காழி வரையிலும் உள்ள விவசாய மக்களும் விவசாய சங்கங்களும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் கடலில் கலந்து வீணாகும் நீரை தடுத்து நிறுத்த முடியும்; கொள்ளிடம் ஆற்றில் சுமார் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட முடியும்; ஆங்காங்கே உள்ள ஏரி குளங்களும் நிரம்பும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும், விவசாயம் செழிக்கும் என்று ஏராளமான போராட்டங்களின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். எத்தனையோ சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீர் மேலாண்மை வல்லுநர்களும் இந்த தடுப்பணைகளின் அவசியத்தை அரசுக்கு எடுத்துச் சொல்லி இருக்கின்றனர்.
ஆனால் அதிமுக, திமுக அரசுகள் அணை கட்டுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
முன்னதாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, குடிகாடு அருகே கதவணை ஒன்று கட்ட 450 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2018 இல் சந்தப்படுகையில் தடுப்பணை கட்ட 110 கோடி ஒதுக்கி அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால் எல்லாமும் வெற்று அறிவிப்புகளாக இன்று வரையிலும் அப்படியே இருந்து வருகின்றன. அந்தந்த சமயங்களில் ஏதாவது சில திட்டங்களை அறிவிப்பது பின்னர் அப்படியே கிடப்பில் போட்டு விடுவது என்று தொடர்ந்து மக்கள் ஏமாற்றப்பட்டே வந்தனர்.
அதிமுக, திமுக என்று எந்த ஆட்சியிலும் இதில் மாற்றம் எதுவுமில்லை.
இந்த கொள்ளிடம் தடுப்பணை விவகாரத்தை கண்டும் காணாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதை கவனித்துப் பார்த்தால், காவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்றிடும் கார்ப்பரேட் திட்டங்களுக்கு தமிழ்நாடு ஆளும் கட்சிகள் துணை நின்று வருகின்றனவோ என்கிற ஐயம் இயல்பாகவே எழுகிறது.
ஒரு மழைக் காலத்தில் மட்டும் 60 டிஎம்சி தண்ணீரை வீணாக கடலில் கலப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு எப்படித்தான் மனம் ஒப்புகிறது என்று டெல்டா விவசாய மக்கள் மனம் குமுறுகின்றனர்.
படிக்க: கொள்ளிடத்தில் உடனடியாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்! மக்கள் அதிகாரம் கோரிக்கை
திருச்சியில் இருந்து பூம்புகார் வரையிலும் சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் ஓடும் கொள்ளிடம் ஆற்றின் வழி நெடுகிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. குறைந்தபட்சம் நான்கைந்து தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் விவசாயத்தில் பெரும் விளைவை ஏற்படுத்திட முடியும். மேலும் தடுப்பணைகள் என்பது அன்றாடம் பராமரிப்பு கோரக்கூடியவையல்ல. ஒருமுறை செலவு மட்டுமே. பலனடைவதோ பல இலட்சம் மக்கள்.
இந்த முறை 60 டிஎம்சி நீர் வீணாகிப் போனது போனதுதான். இனிமேலாவது காவிரி நீர் வீணாவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு அவசர காலப் பணியாக இத்தடுப்பணைகளைக்கட்டி முடிக்க வேண்டும்.
தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை நீர் மேலாண்மை வல்லுநர்கள் மற்றும் விவசாயிகளின் வழிகாட்டுதலின்படி உடனே நிறைவேற்றப்பட வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகளுக்காக தமிழ்நாடு அரசு எவ்வளவு நேர்மையாக இருக்கிறது என்பதற்கு கொள்ளிடம் தடுப்பணை பணிகள் உரைகல்லாக இருக்கட்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
After 69 years Dravidan rule they are thinking about it